அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அரசுகளின் தீராத "வருவாய் போதை'

எல்லா மாநில அரசுகளும் ""மக்களுடைய நல்வாழ்வுதான் எங்களுடைய முதல் லட்சியம்'' என்று முழங்குகின்றன. மது குடிப்பதை ஊக்குவிக்கக்கூடாது என்பதால்தான் மதுபானங்கள் மீதான

Updated On :27 பிப்ரவரி 2013, 11:37 pm

எல்லா மாநில அரசுகளும் ""மக்களுடைய நல்வாழ்வுதான் எங்களுடைய முதல் லட்சியம்'' என்று முழங்குகின்றன. மது குடிப்பதை ஊக்குவிக்கக்கூடாது என்பதால்தான் மதுபானங்கள் மீதான உற்பத்தி வரி, விற்பனை வரியை உயர்த்துகிறோம் என்று அறிவித்து ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் நம்மை நம்பவைக்க முயல்கின்றன. ஆனால் உண்மையில், "மக்கள் நிறைய குடிக்க வேண்டும், அதன் மூலம் நமக்கு வருமானம் பல மடங்கு பெருக வேண்டும்' என்றே உள்ளூர நினைக்கின்றன.

 அரசின் மதுபானக் கொள்கையை விமர்சிப்பவர்கள்கூட துரதிருஷ்டவசமாக இத்தகைய வரி உயர்வுகளை, "நல்ல நோக்கம்' என்று கருதி ஆதரிக்கின்றனர். "மதுபானங்களின் விலை உயர்வது நல்லதுதானே,அப்போதுதானே குடிக்காமல் இருப்பார்கள் அல்லது குடியைக் குறைப்பார்கள்' என்று கூறுகின்றனர்.

 ஆனால் உண்மையில் இந்த வரி உயர்வுகளால் குடிகாரர்களின் எண்ணிக்கையும் குறைவதில்லை, குடியளவும் குறைவதில்லை. எல்லா அரசுகளுமே குடிகாரர்கள் அதிகரிப்பது குறித்தோ, குடிக்காக அவர்கள் அதிகம் செலவழிப்பது குறித்தோ உண்மையில் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.

வருமானத்தில் பெரும்பகுதியைக் குடிக்கே செலவழிப்பதால் மக்களுடைய உடல் நலம் கெடுவது குறித்தோ, குடும்பங்கள் சீரழிவது குறித்தோ அவற்றுக்குச் சிறிதும் அக்கறை இல்லை. மத்திய, மாநில அரசுகளின் நோக்கமெல்லாம் அரசுக்கு அதிக வருவாயை "எப்படியாவது' சம்பாதித்தாக வேண்டும் என்பதுதான்.

வெள்ளமெனப் பெருக்கெடுக்கும் சாராய உற்பத்தி:

 கடந்த 15 ஆண்டுகளில் சாராய உற்பத்தி நாட்டில் அபரிமிதமாகப் பெருகியிருக்கிறது. இதை "இந்திய ஆல்கஹால் கொள்கைக் கூட்டணி' (அச்சப்படாதீர்கள் அரசியல் கூட்டணி அல்ல, ஆல்கஹால் தொழில் தொடர்பான அமைப்பின் பெயர்தான்!) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. தெற்காசிய நாடுகள் மொத்தமாகத் தயாரிக்கும் சாராயத்தில் இந்தியாவில் தயாராகும் அளவு மட்டும் 65 சதவீதம்! உள்நாட்டில் தயாரிப்பது போதாதென்று வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதிலும் இந்தியாவின் பங்கு 7 சதவீதம்.

 1992-93-இல் இந்தியாவின் சாராய உற்பத்தி அளவு 8,872 லட்சம் லிட்டர்கள். 1999 - 2000-த்தில் இது 16,540 லட்சம் லிட்டர்கள்! இப்போது 70,000 லட்சம் லிட்டர்கள் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

 "அசோசேம்' அமைப்பு சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மதுபானம் குடிப்பது ஆண்டுதோறும் 30 சதவீதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் குடிக்கப்படும் சாராயத்தின் அளவு ஆண்டுக்கு 1,90,000 லட்சம்  லிட்டர்களாக இருக்கும் என்று தெரிகிறது.

 ரம், விஸ்கி, பிராந்தி, பீர், ஒயின் உள்ளிட்ட "அன்னிய ரக' மதுபானங்களின் உற்பத்தி மதிப்பு இப்போது 50,700 கோடி ரூபாயாக இருக்கிறது. 2015-இல் இது 1.4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துவிடும் என்று மதிப்பிடப்படுகிறது.

கல்லா நிரம்பி வழிகிறது:

 மதுபானங்களின் விலையை உயர்த்துவதாலோ அவற்றின் மீதான வரிகளை உயர்த்துவதாலோ மது குடிப்பதைக் குறைத்துவிடுவார்கள் அல்லது விட்டுவிடுவார்கள் என்பதெல்லாம் வெறும் மாயை என்பது புள்ளிவிவரங்களிலிருந்து தெளிவாகிறது.

 அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்கும் மொத்த வரி வருவாயில் 13 சதவீதம், மதுபானங்களிலிருந்து மட்டும் கிடைத்துவிடுகிறது. அதிலும் எரிசாராயத்தை அடிப்படையாகக் கொண்ட அன்னிய ரக இந்திய மதுபானங்களின் (ஐ.எம்.எஃப்.எல்.) பங்கு 95 சதவீதமாகும். சில மாநிலங்களில் விற்கப்படும் கள் மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவு. (அதனால்தான் கள்ளுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்பதில் சில மாநிலங்கள் அசாத்திய உறுதி காட்டுகின்றனவோ?) இந்தத் தகவலை மத்திய நிதியமைச்சகம் திரட்டிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 மாநில அரசுகளுக்கு விற்பனை வரியை அடுத்து அதிக வருவாயைத் திரட்டித்தரும் ஒரே இனம் மதுபான வகைகள் மீதான வரிதான்.

 இந்தியாவில் தயாராகும் அன்னிய ரக மதுபானங்களில் 70 சதவீதம் ஒன்பதே மாநிலங்களில்தான் அதிகம் விற்பனையாகின்றன. கேரளம், ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மேற்கு வங்கம் ஆகியவைதான் அந்த 9 மாநிலங்கள்.

 கேரளம் (16%), பஞ்சாப் (14%) ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் 30% மதுபானங்கள் செலவாகின்றன. எஞ்சிய 7 மாநிலங்கள் 40% மதுபானங்களை நுகர்கின்றன. இந்த 7 மாநிலங்கள் மட்டும் 2012-13-ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.48,756 கோடியை மதுபான விற்பனை மூலம் வரி வருவாயாகப் பெற்றன. நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் வரி வருவாயாகக் கிடைத்த தொகையில் இது 58.92% ஆகும்.

 "அசோசேம்' அறிக்கை, சாராயச் சந்தையின் ஒட்டுமொத்த அளவையும் காட்டிவிட்டதாகக் கூற முடியாது. அனைத்து மாநிலங்களின் சாராய உற்பத்திவரி வசூல் மட்டும் ரூ.82,000 கோடியாகும். உற்பத்தி வரியைத் தவிர விற்பனை வரி, இதரவகை சுங்கங்கள் என்றும் இவற்றின் மீது வரிகள் விதிக்கப்படுகின்றன. ஆகையால் நம்மால் கணிக்க முடியாத அளவுக்கு இந்த சாராய வர்க்கங்கள், காமதேனுவாக மாநில அரசுகளுக்கு வருவாயைத் தந்துகொண்டிருக்கின்றன.

 இது ஒரு பக்கம் என்றால் - கள்ளச்சாராயம், கணக்கில் காட்டப்படாத அன்னியவகை மதுபான விற்பனை - என்று அவைவேறு தனியாக சந்தையில் கிடைக்கின்றன. இவையெல்லாம் மாநிலங்களின் "அரசியல் செல்வாக்கு' மிக்கவர்களால் நடத்தப்படுகின்றன. இந்தச் சந்தையின் மதிப்பு, அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ள ரூ.82,000 கோடியில் சரிபாதியாக இருக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்!

 அதாவது - மதுக்கடைகளை அனுமதித்த பிறகும்கூட, கள்ளச்சாராயத்தை அரசுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை (அல்லது விரும்பவில்லை). சட்டப்பூர்வமான சாராயத் தயாரிப்பிலேயே பல தகிடுதத்தங்கள் நடக்கின்றன. மதுபான ஆலையில் உற்பத்தி செய்து, அரசுக்கு வரி கட்டாமல், அரசால் ஏலம் விடப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட கடைகள் மூலமே சரக்குகள் விற்கப்படுகின்றன. ஆந்திர மாநிலத்தில் இந்தக் கடைகளை "பெல்ட் ஷாப்புகள்' என்று அழைக்கின்றனர். இவற்றின் எண்ணிக்கை மட்டும் சுமார் 3 லட்சம்! அதாவது 70 வீடுகளுக்கு ஒரு மதுபானக் கடை.

 மதுபானங்கள் கணக்கில் காட்டப்படாமல் தயாரிக்கப்படுவதும், விற்கப்படுவதும் தங்களுக்குத் தெரியவே தெரியாது என்று எந்த மாநில அரசும் கூற முடியாது; சாராய ஆலை அதிபர்களுக்கும் அரசின் மூத்த அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இதில் "முக்கியப் பங்கு' இருக்கிறது. அவர்களுடைய (முறையற்ற) கூட்டுறவால்தான் இந்த வியாபாரம் செழிக்கிறது.

 பல அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே சாராய ஆலைகளை நடத்துவதுடன் வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர். அதாவது செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவும் பங்களிப்பும் இதில் அதிக அளவில் இருக்கிறது.

 சாராயத்திலிருந்து கிடைக்கும் "வருவாய் போதை' எல்லா மாநில அரசுகளின் சித்தத்திலும் ஏறியிருக்கிறது. எனவே மாநில அரசுகள் சாராய விற்பனையைப் படிப்படியாகக் குறைத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் என்பதெல்லாம் பகல் கனவே. அவர்களுடைய கவலையெல்லாம் இதிலிருந்து எப்படி மேலும் மேலும் சம்பாதிப்பது என்பதைப்பற்றித்தான். எனவேதான் போதைக்கு சாதகமான விஷயங்களை அனுமதிக்கிறார்கள்.

 திரைப்படங்களில் இடம்பெறும் - சின்னத்திரைகளில் அடிக்கடி காட்டப்படும் - குடிக்கும் காட்சிகள் எல்லாம் நகைச்சுவைக்காக அல்ல, குடியை ஊக்குவிப்பதற்காகவே.

 இப்போது குடிப்பவர்கள் மட்டும் குடித்தால் போதாது, புதிதாக பலரும் குடிக்க வேண்டும். பெண்களும் இளைஞர்களும் குடிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் குடிகாரச் சந்தை பெருகும். அதற்கான ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன.

 கடந்த பத்தாண்டுகளில் "டீன்-ஏஜ்' (13 வயது முதல் 19 வயதுவரையில் உள்ளவர்கள்) குடிகாரர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் உயர்ந்திருக்கிறது. பெருநகரங்களில் பனிரெண்டாவது வகுப்பு படிக்கும் மாணவர்களில் 45 சதவீதம் பேர் "அளவுக்கு அதிகமாகவே' குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஒரு "சர்வே' தெரிவிக்கிறது. (மற்றவர்களெல்லாம் அளவோடு குடிக்கிறார்களா?). சாராயப் பணத்துக்காக, தெரிந்தே நாம்  நம்முடைய இளைய சமுதாயத்தைப் பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

 விலையை அதிகப்படுத்தினாலும் குடிப்பது குறைவதில்லை என்பதை நன்கு தெரிந்துகொண்டு, ஆண்டுதோறும் மதுபானங்களின் விலையை அதிகப்படுத்துவதுடன் வரிகளையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன மாநில அரசுகள்.

  இதனால் லட்சக்கணக்கான குடும்பங்களின் வருமானம் சாராயக் கடைக்கே அதிகம் போய்க்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்திலும் சாராயச்செலவு கூடிக்கொண்டே போகிறது. இதனால் குழந்தைகளின் சாப்பாடு, படிப்பு, வைத்தியச் செலவுக்குக் குடும்பங்களில் பணம் போதாமல் அவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

 குடிப்பதை மக்கள் குறைக்கவேண்டும் என்கிற உண்மையான அக்கறை அரசுக்கு இருந்தால் சாராய உற்பத்தியைக் குறைக்க வேண்டும். விற்பனையகங்களின் எண்ணிக்கையையும் விற்பனை நேரத்தையும் குறைக்க வேண்டும். சாராய விற்பனை மூலம் வரும் வருவாயைக் கைவிடத் தயாராக வேண்டும்.

 சமூகநல திட்டங்களுக்கு நிதிதிரட்டத்தான் இந்த வருவாயைப் பயன்படுத்துகிறோம் என்று  மாநில அரசுகள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. சமூகத்தின் ஒட்டுமொத்த நலனை சீரழித்துக்கொண்டு ஏதோ ஒரு சில தாற்காலிக நன்மைகளை அளிப்பதற்காக இதை ஊக்குவிப்பது பெருங்கேடான செயலாகும். மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிட வேண்டிய அவசியமே இல்லை. இந்த நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் - ஏன் அரசுகளுக்குமே தெரியும்.

 எனவே குடும்பங்கள் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ, குடும்பத் தலைவன் தறிகெட்டுப்போகாமல் இருக்க, பூரண மதுவிலக்கை அரசுகள் கொண்டுவர வேண்டும். மதுவை அனுமதித்து அதன் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாய் மூலம் சமூகத்துக்கு நன்மைகளைச் சிறிதளவு செய்வதைவிட, மதுவை ஒழித்து ஒட்டுமொத்த சமூகத்துக்கும் நிரந்தரமான, மிகப்பெரிய, அழிவில்லாத நன்மையை அரசு  செய்ய முடியும்.

 "மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய்தான் பெரியது, கணிசமானது' என்ற போதையிலிருந்து அரசுகள் விடுபடவேண்டும். பூரண மதுவிலக்கு தேவை என்ற இயக்கத்துக்கு மக்களிடமிருந்துதான் மிகப்பெரிய ஆதரவு அலையலையாக எழ வேண்டும். "இது நம்முடைய குடும்பத்துக்கு, சமுதாயத்துக்கு, மாநிலத்துக்கு, நாட்டுக்கு மிக அவசியம்' என்ற உணர்வு அனைவரிடத்திலும் ஏற்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.