சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பெருமை கொள்ள வைத்தவர்

இயற்கை வளமும், மனித வளமும், பண்பட்ட கலாசார பாரம்பரியச் சிறப்பும் மிக்கது நம்

Updated On :20 ஜனவரி 2013, 8:26 pm

இயற்கை வளமும், மனித வளமும், பண்பட்ட கலாசார பாரம்பரியச் சிறப்பும் மிக்கது நம் பாரத நாடு. இங்கு பிறந்ததற்காக நாம் பெருமைப்படுகிறோம். துடிப்பான நம் இளைஞர்கள், உலகெங்கும் சென்று தங்களது அறிவாலும், திறமையாலும் நம் நாட்டின் பெருமையை நிலைநாட்டி வருகிறார்கள். அவர்கள் அவ்வாறு சென்று நமக்குப் பெருமை சேர்த்திட வித்திட்டவர் சுவாமி விவேகானந்தர்.

 ராமகிருஷ்ணரின் பிரதம சீடராக நரேந்திரன் என்னும் விவேகானந்தர் விளங்கினார். வானில் உள்ள ஏழு முனி நட்சத்திரக் கூட்டத்தில் தவம் செய்து கொண்டிருந்த ஒருவரே, தன் கொள்கைகளைப் பரப்ப நரேந்திரனாகத் தோன்றினார் என பரமஹம்சரே ஒரு முறை  குறிப்பிட்டுள்ளார். சிவாம்சம் உடையவரே நரேன் என்பது அவரது அமுத வாக்கு. 

 நரேந்திரனின் வாலிப வயதில் நடந்த ஒரு சம்பவம் அவரது திட இறை மனதை எடுத்துரைப்பதாக இருந்தது. வசதியாக வாழ்ந்த நரேனுடைய குடும்பம் அவருடைய தந்தையின் திடீர் மரணத்தால்  வறுமையில் உழன்றது. வேகவைத்த வாழைக்காய்க்கு உப்பு வாங்கக் கூட வசதியில்லாமல் போனது அவர் குடும்பம் என்றார் பரமஹம்சர். அந்தக் கடுமையான நெருக்கடி காலத்தில் பணக்கார இளம் விதவை ஒருவர் நரேந்திரனைத் தன்வயமாக்க முயன்றார். அவரது வறுமையின் சோகச் சுவடுகளை தான் துடைத்தெறிவதாக  சொல்லியும் அனுப்பினார். ஆனால், துறவியாக வேண்டும் என்ற லட்சிய தாகத்துடன், கண்களில் காந்த சக்தியுடன் வாழ்ந்த அந்த வீரத் திருமகனாகிய நரேன் பெண்ணுக்கும், பொன்னுக்கும் அடிமையாக ஆசைப்படவிலை என்று நிராகரித்துவிட்டார். அவர் பெண்களைச் சகோதரிகளாகவும், தாயாகவுமே எண்ணினார்.

 விவேகானந்தர் மேலலைநாடுகளுக்குச் சென்ற போது அங்கே பலர் அவரிடம், "நீங்கள் இந்திய நாட்டுத் துறவியா, அப்படியெனில் ஏதாவது சித்து வேலை தெரியுமா?' என்று கேட்டார்கள். "சித்திகளுக்கும், மெய்யான ஆன்மிகத்துக்கும் சம்பந்தமேயில்லை' என்று பதில் தந்தார் விவேகானந்தர். ஆனால், உண்மையில் விவேகானந்தர் ஒரு சித்த புருஷரே.  மேலை நாட்டினர் ஒருவர் தனது வீட்டுக்கு விவேகானந்தரை விருந்துக்கு அழைத்தார்.  சிறிது நேரம் அவரோடு வரவேற்பறையில் அமர்ந்து பேசிவிட்டு திடீரென்று வெளியே சென்று, அந்த அறைக்கதவைப் பூட்டி விட்டார். சற்று நேரத்தில் தனது இல்லத்தின் பிரதான அறையில் மற்ற விருந்தினர்களோடு விவேகானந்தர் அமர்ந்து உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

 "பூட்டிய அறையிலிருந்து இவர் எப்படி வெளியே வந்தார்?' என்று வியப்போடு ஓடிச் சென்று, வரவேற்பறையைத் திறந்து பார்த்தார். உள்ளே இன்னொரு விவேகானந்தர் அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டு வியந்தார்.

நம்மைப்பற்றி நாமே தாழ்வாக எண்ணிக் கொண்டிருந்த காலத்தில் விவேகானந்தர் தோன்றி நம் நாட்டின் பெருமையை உலகறியச் செய்தார். விவேகானந்தரின் சிகாகோ உரைதான்  ஆன்மிகச் சக்தியும், அரசியல் சக்தியும், சமுதாய சக்தியும், தேசிய சக்தியும் உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.

 அழிந்து விட்ட கலாசாரம், அழிந்து விட்ட சமுதாயம், அழிந்த விட்ட ஆன்மிகம் என உலகத்தார் ஹிந்துக்களைப்பற்றி எண்ணியிருந்த வேளையில், ""பாரத மாதா சிம்மாசனத்தில் அமர்ந்து இந்த உலகை ஆட்சி செய்வதை நான் பார்க்கிறேன்'' என்றார் விவேகானந்தர்.

 கடவுள் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்பது பழைய மரபு. ஆனால், தன் மீது நம்பிக்கை இல்லாதவனே நாத்திகன் என்று முழங்கிய பெருமகனார் அவர். கடவுளை வழிபடுவதிலிருந்து, பணம் சம்பாதிப்பது வரை எந்தச் செயலைச் செய்தாலும் மன ஒருமைப்பாடு அவசியம் என்று ஒரு மாபெரும் உளவியல் பேருண்மையைத் தன் அனுபவத்தின் மூலம் இளைஞர்களுக்கு எடுத்துக் காட்டினார்.

இந்தியப் புனித மண்ணில் தோன்றிய மகான்களுள் சுவாமி விவேகானந்தரைப் போல உலக அறிஞர்களைக் கவர்ந்தவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இந்தியா ஒரு அடிமை  நாடு, பாமரர்கள், அறிவில்லாதவர்கள் வாழும் நாடு என்று உலகம் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், சிகாகோ சர்வசமய மாநாட்டில் சுவாமிகள் ஆற்றிய உரை மூலம் அனைவரின் அன்புக்கும் பாத்திரமானார்; ஹிந்து மதம் போல வேறெந்த மதமும் பார்வையாளர்களையும் மக்களையும் கவரவில்லை என்று அமெரிக்கப் பத்திரிகைகள் எழுதும் அளவுக்கு அவருடைய பேச்சும் செயல்களும் அமைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.