÷உடனடியாகவும், சற்று நீடித்த காலத்திற்கும் ஏற்ற வகையில், ரூபாய் மதிப்பை உயர்த்துவதற்கு, மத்திய அரசின் கையில் அஸ்திரம் ஒன்று உள்ளது. அதுதான், வெளிநாடுவாழ் இந்தியர்களின் சேமிப்பு மற்றும் முதலீடுகளை டாலரில் இந்தியாவுக்குக் கொண்டு வரும் வகையில், "சாவரின்' அரசு பாண்டுகளை வெளியிடுவது. கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டு, வெற்றிபெற்ற திட்டம் இது. 1991-இல் ""இந்தியா டெவலப்மெண்ட் பாண்டு'', 1998-இல் ""ரிசர்ஜண்ட் (மறுமலர்ச்சி) இந்தியா பாண்டு'' மற்றும் 2001-இல் ""இந்தியா மில்லினம் டெபாசிட்'' ஆகிய மூன்று திட்டங்கள் வெற்றிகரமாக வெளியிடப்பட்டன. அவற்றில் சில குறைபாடுகள் இருந்தன என்றாலும், அவற்றில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் புதிய முதலீட்டு திட்டத்தை வெளிநாடுவாழ் இந்தியர்களை மனதில் கொண்டு வடிவமைத்து வெளியிடலாம். அத்தகைய பாண்டுகள் மூலம் 2,000 கோடி டாலர்களைத் திரட்ட முடியும் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளும் கிடைக்கும்; பெரிய அளவில் டாலர் வரத்தால், டாலர் மதிப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு உயருவதும் சாத்தியம் ஆகும் என்று நம்பலாம்.