ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மக்களாட்சியின் "அடக்கவிலை'

மக்களாட்சித் தத்துவம் பற்றிய பழைய மதிப்பீட்டில் பணமதிப்புகள் அற்பமே. ""மக்களுக்காக மக்களே

News image
Updated On :4 மார்ச் 2013, 9:52 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

மக்களாட்சித் தத்துவம் பற்றிய பழைய மதிப்பீட்டில் பணமதிப்புகள் அற்பமே. ""மக்களுக்காக மக்களே மக்களால்'' தேர்ந்தெடுக்கப்படும் அரசுப் பிரதிநிதிகள், அதாவது எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள், பணத்தைப் பாராட்டாமல் மக்களுக்குத் தொண்டு செய்த காலம் மலையேறிவிட்டது. ஏனெனில் ஜனநாயகம் விலைபோய்விட்டது. அரசியல் பெரிய வியாபாரமாகிவிட்டதால் மக்களாட்சி இலக்கணத்தைப் புரிந்துகொள்ள மக்களாட்சியின் "அடக்கவிலை'யை ஒவ்வொரு குடிமகனும் அறிய வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

 இந்த அரசியல் வியாபாரத்தில் மேன்மை பொருந்திய மக்கள் பிரதிநிதிகளின் முதலீடாகத் தேர்தலில் வெற்றிபெற அவர்கள் செலவழிக்கும் பணம் "சில கோடிகள்'. இம்முதலீடுகளின் மூலம் பெறக்கூடிய லாபம் "பல கோடிகள்'. இவை பற்றிய புள்ளிவிவரங்கள் மூலம் மக்களாட்சியின் "அடக்க விலை'யை நிர்ணயிக்கலாம்.

 அன்றைய மக்களாட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் அதிகமாக இல்லை. பணத்திற்கு "வாங்கும் சக்தி'  இருந்தது. நடுத்தர மக்கள் குறைந்த சம்பளத்தில் நிறைவாக வாழ்ந்தனர். பெரிதாகச் சொல்லும் அளவில் ஊழல் இல்லை. 21-ஆம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்த காலத்திலிருந்து பணம் இருந்தாலும், "வாங்கும் சக்தி' குறைந்தது. மதிப்பிழந்த பணத்தால் பொருளாதாரம் "மானம்' இழந்தது. பணவீக்கத்தின் மறுபெயர் - ஏழைகள் மீது "மறைமுகவரி'. இந்த "மறைமுகவரி' ஊழல்வாதிகளிடம் குவிகிறது. அரசியல் வியாபாரத்தில் கிடைத்த லாபத்தில் மாஜி மந்திரிகளும், மாசுற்ற எம்.பி., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் முதலீடு செய்த கல்வி நிறுவனங்கள் அதாவது பொறியியல் - பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு வருமானமாக மாறி வருகிறது.

 இது ஒருபக்கம். பணம் மதிப்பிழக்கும் காரணம் வரவுக்கு மேல் அரசு செலவினம் உயர்கிறது. இதைச் சமாளிக்க "ரிசர்வ் வங்கி' நோட்டடிக்கிறது. அரசு செலவினங்களுக்கு வளர்ச்சிப் போர்வை உண்டு. வளர்ச்சி மக்களுக்கா? மக்களாட்சிப் பிரதிநிதிகளுக்கா? என்று பட்டிமன்றம் நடத்தலாம். வளர்ச்சிப் போர்வையை மூடிக்கொண்டு செலவினம் வளர்க்கப்படும்போது மக்களாட்சிப் பிரதிநிதிகள் பெறும் பங்குகள் அதாவது "களவாடப்பட்ட வருவாய்', கருப்புப் பணமாகக் கைமாறி "ஸ்விஸ்' (சுவிட்சர்லாந்து) வங்கியில் சேமிப்பாவதும் இந்திய ஜனநாயக "அடக்கவிலை'யில் உண்டு.

 அரசு செலவினங்கள் உயர்வதற்குரிய முக்கிய காரணம், அரசு வருவாயில் மக்களாட்சிப் பிரதிநிதிகள் "கை'வைப்பதுதான். அரசு வருவாயில் மக்களாட்சிப் பிரதிநிதிகள் "கை'வைக்கக் காரணம், தேர்தல் செலவுக்காகப் போட்ட முதலீடுகளுக்குத் தேவையான லாபத்தை அரசு வருவாயைக் களவாடுவதன் மூலமே பெற முடியும். "மக்களாட்சித் தத்துவத்தின் இலக்கணம்' இப்படி உள்ளபோது ஊழலை எப்படி ஒழிக்க முடியும்?

 அரசு வருவாய் பெற்றெடுத்த "ஊழல் குழந்தைகளில்' நிலக்கரி பெரிதா? 2ஜி பெரிதா? சுரங்கம் பெரிதா? கிரானைட் பெரிதா? என்று நாம் திக்குமுக்காடிப் போவதற்குள் இத்தாலித் தொடர்புள்ள பழைய போபர்ஸின் புதிய வடிவாக ஹெலிகாப்டர் ஊழலை "மக்களாட்சித் தாய்' பெற்றெடுத்துள்ளார்.

 இந்திய ஜனநாயகத்தின் வரவு-செலவுத் திட்டத்தில் மக்களாட்சிப் பிரதிநிதிகள் வரவில் மட்டுமா கைவைக்கின்றனர்? செலவிலும் பங்கு உண்டு. ஒதுக்கப்படும் திட்டம் - திட்டமிலாச் செலவுகளில் ஒரு பங்கை ஒதுக்கிக் கொள்வதும் உண்டல்லவா? இவை பற்றிய மதிப்பீட்டையும் கணித்துவிட்டால் மக்களாட்சியின் "மொத்த விலை', "சில்லறை விலை' ஆகியவற்றையும் கண்டுபிடிக்கலாம்.

 தொடர்ந்து மாணவிகள் கற்பழிப்பு - கொலை தொடர்பாக அடுத்தடுத்து ஊடகங்கள் வழங்கியுள்ள செய்திகளால் அலுத்துப்போன மனதுக்குச் சின்னதாக இருந்தாலும் ஹெலிகாப்டர் ஊழல் பற்றிய செய்திகள் "புத்துணர்வு' வழங்கியிருக்கலாம். பாபா ராம்தேவ், அண்ணா ஹசாரே, கேஜரிவால் பற்றிய செய்திகள் புத்துணர்வு பெறுவது நன்று.

 மக்களாட்சியின் ஊழல் பெருக்கத்தை இம்மூவராலும் தடுக்க இயலாது என்றாலும் ""எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறது...'' என்று மற்றவர்கள் மௌனமாயுள்ளபோது ஊழலுக்கு எதிராக இம்மூவரும் குரல் கொடுப்பதை வரவேற்கலாம். எனினும், ஊழலின் ஊற்றுக்கண்ணை "லோக்பால்' சட்டத்தாலும் அடைக்க இயலாது என்றாலும்கூட, குறைந்தபட்சம் ஊழலின் ஊற்றுக்கண்ணை மக்களாட்சி "அடக்கவிலை' பற்றி யோசித்து எதுவும் விடை உண்டா என்று வழி தேடலாமே? இங்கு இந்திய ஜனநாயகத்தின் "அடக்கவிலை' நிர்ணயிக்கப்படும்போது "மொத்த விலை', "சில்லறை விலை' பற்றிய யோசனையையும் கவனிக்க வேண்டும்.

 இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடி. மொத்தம் சுமார் 40 பெரிய அரசியல் கட்சிகள் உள்ளன. 22 தேசிய மொழிக்கூட்டம். 543 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் மதிப்பு சுமார் 55 கோடி ரூபாய். ஒட்டுமொத்தமாக "லோக்சபா' தேர்தலுக்கு 30,000 கோடி ரூபாய் முதலீடு வேண்டும். மாநில அவைத் தேர்தலுக்கு மேற்கொண்டு சுமார் 30,000 கோடி ரூபாய் மக்களாட்சியின் "அடக்கவிலை'யில் சேர்க்க வேண்டும்.

 பின்னர் நகராட்சி உறுப்பினர் பதவிகள் சுமார் 1,00,000 உண்டு. ஓர் உறுப்பினரின் அடக்கவிலை 1 கோடி என்றால் 1 லட்சம் கோடி ரூபாய் செலவு உண்டு. எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்தால் 1,60,000 கோடி ரூபாய் என்ற மதிப்பீடு தேர்தல் செலவின் கணக்குதான்.

 பொதுமக்களிடம் சென்று வேட்பாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு வெல்வதற்கான தந்திரோபாயங்களின் செலவுதான் 1.60 லட்சம் கோடி ரூபாய். இச்செலவில் விளம்பரம், போஸ்டர்கள், மூங்கில், சவுக்கு, யூகலிப்டஸ் கொடிமரங்கள், ஒலி, ஒளி அமைப்பு, தொண்டர் படை, "ஆள் திரட்டி' மகாநாடு, தேர்தல் கூட்டம், வாகனச் செலவு, பெட்ரோல், டீசல், "பேட்டா', தனித்தனியாக மக்களுக்கு வழங்கப்படும் 100, 500 ரூபாய் நோட்டுகள், பிரியாணி, சாம்பார் சாதம், விருந்து கேளிக்கைகள் மட்டுமே அடங்கும்.

 இந்தியாவில் உள்ள சுமார் 40 பெரிய அரசியல் கட்சிகளின் நிர்வாகச் செலவு, உறுப்பினர் சந்தா, சுயேச்சை உறுப்பினர் செலவு அங்கீகரிக்கப்படாத பல்வேறு உதிரிக்கட்சிகள் என்று எவ்வளவோ விட்டுப்போன செலவுகளையும் கணக்கில்கொண்டு 40 லட்சம் கோடியையும் சேர்த்தால் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்.

 ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் என்ற அடிப்படையில் கவனித்தால், இந்தியாவின் மக்களாட்சியின் "அடக்கவிலை' ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் என்று அறிக. இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் இந்தச் செலவைத் தவிர்ப்பதற்கில்லை.

 தேர்தல் கமிஷனிடம் வழங்கப்படும் பெரிய அரசியல் கட்சிகள் தரும் நிதிநிலை அறிக்கையின்படி 2010 வரை அரசியல் கட்சிகளின் ஆண்டு வருமானம் 1,200 கோடியைவிடக் குறைவு. அப்படியும் இப்படியும் கணக்கில்வரக்கூடிய கட்சி வருமானம் 15,000 கோடி என்று மதிப்பிட்டால் 35,000 கோடி ரூபாய் துண்டு விழுகிறது. "ஊழல்களின் கரு' இந்தப் பணத்தில் உள்ளது. இந்தப் பணம், 2ஜி, நிலக்கரி உரிமம், சுரங்கம் என்று எவ்வாறெல்லாம் கொள்ளை அடிக்கலாம் என்ற புரிதலுடன் முன்கூட்டியே கட்சி நிதிக்கு வழங்கப்பட்டிருக்கும்.

 சினிமாப்படம் எடுக்கத் தயாரிப்பாளர்களுக்கு "ஃபைனான்சியர்கள்' உதவுவது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இதுபோன்றே எம்.பி., எம்.எல்.ஏ.க்குப் போட்டிபோடும் வெற்றி வாய்ப்புள்ள அரசியல்வாதிகளுக்குத் தொழில் நிறுவனங்கள் நேரடியாகவே "ஃபைனான்ஸ்' தரலாம் அல்லது கட்சி நிதியாகப் பணம் வழங்குவது அவர்கள் செய்யும் முதலீடு, "50,000 கோடி ரூபாய்' என்பது ஜனநாயகத்தை இயங்கச் செய்யும் ஒரு "அடக்கவிலை' மட்டுமே.

 "அடக்கவிலை' என்று ஒன்று இருக்கும்போது "மொத்தவிலை', மொத்தவிலைக்கு மேல் "சில்லறை விலை' என்று மக்களாட்சி வணிகத்தில் இல்லாமல் போகுமா?

 மக்களாட்சி வணிகத்தில் நல்லாட்சி என்ற பெயரில் "வளர்ச்சி' விற்கப்படுகிறது. வளர்ச்சியின் வரவு - செலவுத் திட்டத்தில் அரசியல்வாதிகளின் பங்கும், தொழில் நிறுவனங்களின் பங்கும் சேர்த்தால் மொத்த விலையை அறியலாம்.

 கருப்புப் பணம் பற்றிய புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதில் சிக்கல் உண்டு. சிங்கப்பூர், மலேசியா, மோரிஷஸ், துபாய் என்று பல நாடுகளில் "ஹவாலா' விவரம் வேண்டும். எனினும்  ஊக அடிப்படையில் 50,000 கோடி ரூபாய் வரை ஒவ்வோராண்டும் கணக்கில் காண்பிக்கப்படாத "கருப்பு' அல்லது "கமிஷன்' பணம் சேருமானால் மக்களாட்சியின் மொத்த விலை 1,00,000 கோடி ரூபாய் எனலாம்.

 மக்களாட்சி வணிகத்தில் மொத்த வர்த்தகம் செய்வோரிடமிருந்து சரக்கு வாங்கும் சில்லறை வணிகர்கள் 20 சதவீதம் லாபம் வைத்து மக்களிடம் விற்கும்போது ஜனநாயகத்தில் "சில்லறை விலை' 1,20,000 கோடி ரூபாய். இந்தச் சில்லறை விலையை ஏற்பவர்கள் ஏழை - நடுத்தர இந்திய மக்கள். எனினும் அடக்கவிலை 50,000 கோடிக்கு மாற்று வழி இருந்தால் 70,000 கோடி மிச்சமாகலாம். பணவீக்கம் குறைய வழி உண்டு.

 ஊழலை ஒழிக்க, மக்களாட்சியின் "அடக்கவிலை'யை ஒழிக்க முடியுமா? முடியாதபோது மக்களாட்சியையே "அடக்கம்' செய்துவிட்டு இந்திய ராணுவத்தை வரவேற்க முடியுமா? முடிவு செய்ய வேண்டியது மக்களே. வாழ்க பாரதம்.

 (கட்டுரையாளர் இயற்கை விஞ்ஞானி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.