ஆன்மிகவாதியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களின் விடிவுக்கு அரசியலைப் பயன்படுத்தியவர் சுவாமி சகஜானந்தர். ஆதிதிராவிட சமூகத்தினருக்கு கல்வியைப் புகட்டிய தொண்டாளர். அத்தகைய சிறப்பு வாய்ந்த சுவாமி சகஜானந்தருக்கு சிதம்பரத்தில் அவர் வாழ்ந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு அருகே உள்ள மேல்புதுப்பாக்கம் என்ற கிராமத்தில் அண்ணாமலை - அலமேலு தம்பதியினருக்கு 1890-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி பிறந்தவர் சகஜானந்தர்.
அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முனுசாமி. தனது கிராமத்தில் இருந்த "அமெரிக்கன் ஆற்காட் புராட்டஸ்டன்ட் மிஷன்' பாடசாலையில் தொடக்கக் கல்வியைப் பயின்றார்; உயர்நிலைக் கல்வியை திண்டிவனத்தில் பயின்றார்.
அங்கு அவருக்கு "சிகாமணி' என்ற பெயர் சூட்டப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவர்களைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற பாதிரியார்கள் முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊர் திரும்பினார்.
பிழைப்புதேடி அவரது பெற்றோர் கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்கவயலுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்களோடு அங்கு சென்ற சகஜானந்தருக்கு ஆன்மிகத்தின் மீது நாட்டம் ஏற்பட்டது. தனது 17-ஆவது வயதில், சன்னியாசியாகப் போவதாக பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறினார்.
பின்னர் பல ஊர்களில் அலைந்து திரிந்து பல ஆன்மிகவாதிகளைச் சந்தித்து அவர்களிடம் மத சம்பந்தமான கல்வியைப் பெற்றார். யோகி நீலமேக சுவாமிகள், தட்சிணா சுவாமிகள் அவர்களில் அடங்குவர்.
அதிலும் குறிப்பாக சென்னை வியாசர்பாடியில் இருந்த கரபாத்திர சுவாமிகளைச் சந்தித்ததுதான் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.
அவர்தான் சகஜானந்தரை சிதம்பரத்துக்குச் சென்று, அங்கே நந்தனின் வாரிசுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும்படி அறிவுறுத்தினார்.
அ.முருகேசன் பிள்ளை 1910-ஆம் ஆண்டு சகஜானந்தரை சிதம்பரத்தில் "திருநாளைப் போவார்' தீயில் மூழ்கிய ஓமக்குளத்தின் கரையில் ஸ்ரீ ஆறுமுக சுவாமியும், பின்னத்தூர் ஸ்ரீ லட்சுமணனும் கட்டியுள்ள சிறிய சத்திரத்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து சேவை செய்யுமாறு வலியுறுத்தியதாக சுவாமி சகஜானந்தரே பின்னர் விவரித்திருக்கிறார்.
சிதம்பரத்துக்கு வந்த சுவாமி சகஜானந்தர் அங்கே ஒரு மடத்தைத் தொடங்கினார். கல்விச்சாலை ஒன்றையும் ஏற்படுத்த முடிவு எடுத்து 1916-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7-ஆம் தேதி "நந்தனார் கல்விச் சாலையை' நிறுவினார்.
நாட்டுக்கோட்டை செட்டியார்களின் நட்பு கிடைத்ததால், அவர்களுடைய ஆதரவில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று, சைவ சமயப் பிரசாரத்தை மேற்கொண்டார். அந்தப் பயணம் நந்தனார் மடத்துக்கும், கல்விச்சாலைக்கும் நிதிஉதவி பெறுவதற்கு உதவியாகவும் அமைந்தது.
சுவாமி சகஜானந்தரின் "நந்தனார் கல்விச்சாலை', கூரைக் கொட்டகையில் முதலில் 25 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. 1918-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு அப்போதைய சென்னை மாகாண உயர் நீதிமன்ற நீதிபதி சதாசிவ ஐயரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன் பிறகு ராஜகோபாலாச்சாரியார், பள்ளிக்காக 32 ஏக்கர் நன்செய் நிலத்தை அளித்தார். 1926 மற்றும் 1934 ஆகிய ஆண்டுகளில் காந்தியடிகள், நந்தனார் பள்ளிக்கு வந்து பார்வையிட்ட பின்னர் அப்பள்ளி பிரபலமானது.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி புகட்டுவதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது.
காந்தியவாதியான சகஜானந்தர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமி சகஜானந்தருக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்தவர் காட்டுமன்னார்கோவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் துரை.ரவிக்குமார்.
சகஜானந்தர் குறித்த தகவல்களை அவர் விரல் நுனியில் வைத்திருக்கிறார்.
"அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை கேட்டுப் போராடிய காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சுவாமி சகஜானந்தர். தாழ்த்தப்பட்ட மக்கள் ஜாதியக் கொடுமையிலிருந்து விடுபட பௌத்தத்தை வழியாகக் காட்டினார். ஆன்மிகவாதியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களின் விடிவுக்கு அரசியலைப் பயன்படுத்தியவர் சுவாமி சகஜானந்தர்.
இவர் 1926-ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
1932-ஆம் ஆண்டு வரை மேலவை உறுப்பினராகப் பதவி வகித்த இவர், 1936 முதல் 1947 வரை மீண்டும் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு சேவையாற்றினார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1947-இல் சட்டப்பேரவை உறுப்பினரானார். 1959-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி இயற்கை எய்தும்வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.
சட்டமேலவையிலும், சட்டப்பேரவையிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டார். இவரால் உருவாக்கப்பட்ட "நந்தனார் பள்ளி' இன்று தமிழக அரசு ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
சுவாமி சகஜானந்தர் ஆன்மிகவாதியாக மட்டுமல்லாமல் தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்தார். சமஸ்கிருதத்திலும் அவருக்கு நல்ல பயிற்சி இருந்தது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த "பயங்கரம்' சீனுவாசாச்சாரியிடம் சமஸ்கிருதம் பயின்றார்.
வ.உ.சி. எழுதிய நூல்களுக்கு சகஜானந்தர் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார். இது அவரது தமிழ்ப் புலமையை எடுத்துக் காட்டுகிறது' என்கிறார் துரை.ரவிக்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் பிரசாரம்

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லை

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

