தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

உடல்நலம் காப்போம்

தினசரி வாழ்க்கையில் எது எதற்கோ நேரம் ஒதுக்கும் நம்மால், நம் உடல் நலனுக்காக ஒரு அரை மணி நேரம்கூட ஒதுக்க முடியவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.

News image
Updated On :6 நவம்பர் 2013, 8:08 pm

இராம. பரணீதரன்

தினசரி வாழ்க்கையில் எது எதற்கோ நேரம் ஒதுக்கும் நம்மால், நம் உடல் நலனுக்காக ஒரு அரை மணி நேரம்கூட ஒதுக்க முடியவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. இரவு பகல் பாராமல் ஓடியாடி பணம் சேர்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சேமித்த பணத்தை அனுபவிக்க ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும் என்பது இவர்களின் புத்திக்கு எட்டாமல் போய்விடுகிறது.

இன்னும் ஒரு சிலரோ தங்களின் பைக் அல்லது காரில் போய் மைதானத்தில் இறங்கி, நண்பர்களுடன் அரட்டை அடித்தபடியோ அல்லது காதுகளில் மாட்டிய இயர் போனில் ஒலிக்கும் இசைக்கு ஏற்பவோ நடை போடுகிறார்கள். இதனால் எந்தவொரு பயனுமில்லை, "நானும் வாக்கிங் போனேன்' என்று பெருமைபட்டுக் கொள்வதைத் தவிர.

இதற்குப் பதில் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்று பால், பேப்பர், காய்கறி போன்ற பொருள்களை நடந்து சென்று வாங்கி வந்தால், வீட்டு வேலையோடு சேர்த்து நடைப்பயிற்சியும் செய்ததுபோல் ஆயிற்று.

இதேபோல் வீடு மற்றும் வாகனங்களைச் சுத்தம் செய்தல், துணி துவைத்தல் போன்ற சிறுசிறு வேலைகளைச் செய்தாலே போதும் நம் உடல் ஆரோக்கியத்துக்கு.

ஆனால் சிலர், ஓய்வெடுக்கிறேன் பேர்வழி என்று, எல்லா வேலைகளுக்கும் வேலைக்காரர்களை நியமித்துவிட்டு, குடும்பத்திலுள்ள சிறியவர், பெரியவர் அனைவரும் ஒன்றிணைந்து, நொறுக்குத்தீனிகளை தின்றபடி டி.வி. முன் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிப்பதால் தங்களின் உடல் மற்றும் மன நலனுக்குத் தாங்களே வேட்டு வைத்துக் கொள்கின்றனர்.

விவேகானந்தர் கூறியதைப் போல இரும்பைப் போல நம் உடலை ஆக்க வேண்டுமென்ற அவசியம்கூட இல்லை. குறைந்தபட்சம் நோய்நொடியின்றி, சேமித்த செல்வத்தைக் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிடவாவது உடல் ஆரோக்கியம் அவசியம்தானே.

குடும்பத்திலுள்ள அனைவரும் தினமும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லையே.

வீட்டிலேயே ஒரு அரை மணி நேரம் மிக எளிமையான உடற்பயிற்சியோ அல்லது யோகாவோ செய்து உடல் நலனை தக்க வைத்துக் கொள்ளலாமே?

இந்த விஷயத்தில் இளைஞர்களும், இளம் பெண்களும்கூட போதிய விழிப்புணர்வின்றியே இருக்கிறார்கள்.

உடையலங்காரத்துக்கும், சிகையலங்காரத்துக்கும் காட்டும் அக்கறையில் கொஞ்சமாவது உடல் ஆரோக்கியத்திலும் காட்ட வேண்டாமா?

ஒருபுறம் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையின்மையாலும் மறுபுறம் தீய பழக்கங்களாலும் தங்கள் உடல் நலனைச் சீரழித்துக்கொள்ளும் இளைஞர் சமுதாயத்தில், பெண்களும், ஆண்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்களிலில்லை என நிரூபித்து வருவதை மேற்கத்திய கலாசாரத்தால் சீரழிந்த வளர்ந்த நகரங்களில் கண்கூடாகவே காண முடிகிறது.

இவ்வளவு இடையூறுகளையும் தாண்டி, ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தைப் படைப்பது என்கிற சவாலான காரியம் பெற்றோர்களின் கைகளில்தான் இருக்கிறது. பெற்றோர்களின் அறிவுக்கு எட்டாத மிதமிஞ்சிய விஞ்ஞான வளர்ச்சி குழந்தைகளின் கைகளில் கைபேசியாகவும், கணினியாகவும் சிக்கியிருக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாவிடினும், அவற்றைப் பயன்படுத்தும் குழந்தைகளைக் கண்காணிக்கலாமல்லவா?

அவர்கள் தவறான பாதையில் தடம் மாறாமல் இருக்க, அதிகாலை துயில் எழும் பழக்கம், தினசரி இறை வழிபாட்டில் ஈடுபாடு, வீட்டிலேயே எளிய உடற்பயிற்சி அல்லது யோகா செய்தல் என நாமும், நம் குழந்தைகளும் பயிற்சிகளில் ஈடுபடும்போது நமது குடும்பத்தில் ஆரோக்கியம் மற்றும் நல்லொழுக்கம் தழைத்தோங்கும்.

இதுபோன்ற பயிற்சிகளை பள்ளிகளிலும் கட்டாயமாக்கி, மாணவர்களைத் தொடர்ந்து பழக்கப்படுத்தி அவர்களைச் செம்மைப்படுத்த வேண்டும்.

மேலும் ஒரு சில நாடுகளில் இருப்பதைப்போல அனைத்துக் குடிமகன்களும் தங்களின் இளமைப் பருவத்தில் கட்டாய ராணுவச் சேவை புரியவேண்டுமென சட்டமியற்றி விட்டால், அனைவரும் நாட்டுப்பற்றோடு இணைந்த கட்டுக்கோப்பான ஆரோக்கியமான, ஒழுங்கான வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டுவிடுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.