அமெரிக்காவில் அரசுத் துறை நிறுவனங்கள் மூடப்பட்ட பிரச்னை ஒருவழியாக 16 நாள்களுக்குப் பிறகு அக்டோபர் 16-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. தாற்காலிகமாக வேலையிழந்து தவித்த 8 லட்சம் ஊழியர்களுக்கும், ஒபாமா அரசுக்கும் இது பெரிய நிம்மதியைத் தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது விட்டுச் சென்ற அச்சமும் அதனுடைய தாக்கமும் அமெரிக்காவுடன் இருந்துவிடப் போவதில்லை. அமெரிக்கப் பொருளாதார சேவை நிறுவனமான "ஸ்டாண்டர்ட் அண்டு புவர்' நிறுவனத்தின் கணிப்பின்படி, அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு சுமார் 24 பில்லியன் (ஒரு பில்லியன் - 100 கோடி) டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரம் மூழ்கிவருகிறது. அதன் விளைவாக உலக அரங்கில் அதன் பங்களிப்பின் முக்கியத்துவம் குறைந்துவருவது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால், அமெரிக்க அரசுத் துறைகள் மூடலின் தாக்கம் அமெரிக்க எல்லையைத் தாண்ட வாய்ப்பில்லை என்றும் கருதப்படுகிறது. ஆனால், ஆழமாக ஆய்வு செய்தோமானால், இந்த எண்ணம் அடிப்படை ஆதாரமற்றது என்பது நிரூபணமாகும்.
2007-08 பொருளாதார மந்த நிலையில் இருந்தே அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது என்பது உண்மைதான். எதிர்பார்ப்பைவிட மிகவும் குறைவான வேகத்திலேயே பொருளாதாரம் மீண்டு வருகிறது. 2013 செப்டம்பரில் மிகவும் அதிகபட்சமாக 7.3 சதவீதம் பேர், அதாவது 1.13 கோடி பேர் அமெரிக்காவில் வேலையில்லாமல் இருந்துவருகின்றனர். வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களின் (ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைவான வருமானம் உடைய குடும்பங்கள்) எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் 2 மடங்காகி 2011-ல் 15 லட்சம் குடும்பங்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் மந்த நிலையை பல்வேறு அறிகுறிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
பெரியண்ணனின் வலிமை
இவை எல்லாம் ஒருபுறம் இருப்பினும், இன்னமும் உலகின் மிகப் பெரிய தனி தேசியப் பொருளாதாரமாக அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து இருந்துவருகிறது. உலக மக்கள் தொகையில் 4.45 சதவீதம் மக்களே அமெரிக்காவில் வசித்துவருகின்றனர். இதன் காரணமாக, அமெரிக்காவில் தனிநபர் வருமானம் என்பது மிக அதிகமாக உள்ளது. சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) கணிப்பின்படி, 2013 ஜூனில் அமெரிக்காவின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 16.6 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் - ஒரு லட்சம் கோடி) டாலராக உள்ளது. இது உலக ஜிடிபியில் நான்கில் ஒரு பங்காகும்.
1960-களில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் உலகின் ஜிடிபியில் அமெரிக்காவின் பங்கு குறைந்தது 30 சதவீதமாக இருந்தது. அது இப்போது சற்று குறைந்துள்ளபோதும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஜிடிபியில் அமெரிக்காவின் பங்கு இப்போதும் அதிகமாகவே உள்ளது.
அதேபோல, அமெரிக்காவில் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் வளம் அபரிமிதமாக உள்ளது. அற்புதமான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. உலகின் மிகப் பெரிய 500 நிறுவனங்களில் 132 நிறுவனங்களின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ளன. எந்த நாட்டிலும் இந்தளவுக்கு மிகப் பெரிய நிறுவனங்கள் இல்லை. ஏன், இதில் பாதியளவு கூட இல்லை.
அமெரிக்காவில் காணப்படும் வேலைவாய்ப்புகள் உலகில் உள்ள மற்ற நாட்டினரை வெகுவாக ஈர்த்துள்ளன. அதன் காரணமாக அயல்நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சீனாவின் சவால்
கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் சிரமப்பட்டே - ஒவ்வோர் ஆண்டும் இரண்டு சதவீதத்துக்கும் குறைவான அளவில் - வளர்ந்து வருகிறது. மறுபுறம், அதே காலகட்டத்தில் சீனாவின் பொருளாதாரம் ஒவ்வோர் ஆண்டும் 10 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் வளர்ந்து கொண்டே வருகிறது. எனவே, 2018-இல் அமெரிக்கப் பொருளாதாரத்தை சீனப் பொருளாதாரம் முந்திவிடும் என்று கருதப்படுகிறது. அமெரிக்கப் பொருளாதாரக் குழப்பங்களால் ஏற்படும் எதிர்விளைவை ஈடுசெய்யும் வலிமை சீனாவுக்கு உண்டு என்றும் நம்பப்படுகிறது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி அபாரமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சீனப் பொருளாதாரத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, உலக ஜிடிபியில் 1991-இல் வெறும் 1.8 சதவீதமாக இருந்த அதன் பங்களிப்பு இப்போது சுமார் 10 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. 96 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு உள்ள சீனா, புவியியல் பரப்பு ரீதியில் உலகின் 4-ஆவது மிகப் பெரிய நாடாக விளங்கி வருகிறது. எனினும், உலக மக்கள் தொகையில் அதன் பங்கு 20 சதவீதமாக உள்ள நிலையில், பயிரிடும் நிலப்பரப்பின் பங்கோ உலக அளவில் 10 சதவீதமாக மட்டுமே உள்ளது. சீனாவுடன் ஒப்பிடும்போது தனிநபர் பயிரிடும் பரப்பின் அளவு அமெரிக்காவில் 6.375 மடங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனினும், உணவு தானிய உற்பத்தியில் சீனா தன்னிறைவை எட்ட முடியும். உலகப் பொருளாதாரத்தில் 2-ஆவது இடத்தில் சீனா இப்போது உள்ளது. இருப்பினும், பொருளாதாரத்தில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் நாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளி, வெளிப்படையாகத் தெரிவதைவிட அதிகம் உள்ளது. 2011-இல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.2 டிரில்லியன் டாலராக இருந்தது. அதே ஆண்டில் அமெரிக்காவின் ஜிடிபி 14.99 டிரில்லியன் டாலராக இருந்தது. அதாவது, அமெரிக்காவின் ஜிடிபியில் பாதிக்கும் குறைவாகவே சீனாவின் ஜிடிபி இருந்தது.
குறிப்பாகப் பார்த்தோமானால், சீனாவின் மக்கள் தொகை 136 கோடியாக உள்ளதால், அதன் தனிநபர் வருமானம் மிகக் குறைவாகவே உள்ளது. 2012-இல் ஐஎம்எப் அறிக்கையின்படி உலகில் உள்ள 188 நாடுகளின் தனிநபர் வருமானத்தில் சீனா 93-ஆவது இடத்தில்தான் இருக்கிறது. மக்கள்தொகைதான் சீனாவின் பலவீனம். அமெரிக்காவின் பலம்.
எனவே, அமெரிக்காவின் தவறான நிர்வாகத்தால் சர்வதேச அளவில் ஏற்படும் மோசமான விளைவுகளை, சீனாவின் பலமும், விரைவான பொருளாதார வளர்ச்சியும் ஈடு செய்ய முடியாது. மேலும், அமெரிக்காவுடன் உள்ள வர்த்தக உறவு காரணமாக சீனாவும் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது.
டாலரின் சக்தி
சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சர்வதேச செலாவணி நிதியத்தின் புள்ளிவிவரப்படி, 2013-இன் இரண்டாவது காலாண்டில் சர்வதேச மொத்த ரொக்க கையிருப்பில் (சுமார் 6.07 டிரில்லியன் டாலர்) 61.94 சதவீதம் (3.76 டிரில்லியன் டாலர்) அமெரிக்க டாலராக உள்ளது. இரண்டாவது முக்கிய கரன்சியாக விளங்கும் யூரோ இதில் 23.72 சதவீதமாகவும், பவுண்ட் ஸ்டெர்லிங், ஜப்பானிய யென்னின் பங்கு தலா 3.79 சதவீதமாகவும், மற்ற அனைத்து கரன்சிகளின் பங்கு 6.76 சதவீதமாகவும் உள்ளது.
சரக்கு மற்றும் சேவைகளில் அமெரிக்காவின் வெளி வர்த்தகம்தான் உலகிலேயே மிகப் பெரியதாகும். 2012-இல் 2.2 டிரில்லியன் டாலர் அளவுக்கு வெளி வர்த்தகத்தில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. 2012-இல் 16 டிரில்லியன் டாலருடன் அதிக வெளிநாட்டுக் கடன் உள்ள நாடு என்ற பெருமையையும் (?) அமெரிக்கா பெற்றுள்ளது.
வெளிநாடுகளில் அமெரிக்கர்கள் 3.3 டிரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளனர். அதே நேரத்தில் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் 2.4 மில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே முதலீடு செய்துள்ளனர்.
எனவே, அமெரிக்கப் பொருளாதாரத்தில் பிரச்னைகள் ஏற்படும்போது, அமெரிக்காவுக்கு கடன் கொடுத்தவர்கள் எப்படி பாதிக்கப்படாமல் இருக்க முடியும்? அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படும் பிரச்னைகளின் தாக்கத்தில் இருந்து மற்ற நாடுகள் விடுபட முடியாது. சர்வதேச அளவில் அதன் அதிர்வலைகளை இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், தனக்கு இருக்கும் சக்திக்கேற்ப பெரியண்ணன் செயல்படவில்லை. பிரச்னைகளை ஏற்படுத்தியதற்கு பொறுப்பானவர்கள் எந்தவிதமான அவமானத்தையும் உணரவில்லை.
ஜனநாயகத்தின் பல்வேறு உறுப்புகளை, குறிப்பாக நாடாளுமன்றத்தையும், நிர்வாகத்தையும் சரியான முறையில் வழிநடத்த அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் சில விதிமுறைகள் உண்மையான ஜனநாயக உணர்வுடன் உருவாக்கப்பட்டன. அமெரிக்க நாடாளுமன்ற முறையில் சில மோசமான குறைபாடுகள் இருப்பதை அரசுத் துறைகளின் மூடல் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. இந்தக் குறைபாடுகள் காரணமாக அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளை சில சுயநல சக்திகள் தவறாகப் பயன்படுத்தியுள்ளன.
ஆபத்தான விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் செயல்படும் நாடாளுமன்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, அரசாங்கத்தின் செலவினங்கள் மீது தங்கள் பிரதிநிதிகள் மூலம் மக்களுக்கு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் விரும்பினார்கள். எனவேதான், தகுந்த மசோதாக்கள் மற்றும் பட்ஜெட் போன்றவற்றின் மூலம் அரசின் செலவினங்களுக்கு நாடாளுமன்ற அனுமதியைப் பெற வேண்டியதை கட்டாயமாக்கினர். மக்களுடைய நலன்களைப் பாதுகாக்க இந்த அதிகாரத்தை நாடாளுமன்றம் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நலன்களுக்கு எதிராக அல்ல.
அரசுத் துறை நிறுவனங்களை மூடுவது என்பது இப்போது முதல்முறையாக நிகழவில்லை. 1976-இல் இருந்து 17 முறை இதுபோன்று நிகழ்ந்திருக்கிறது. இதுவே இறுதியானதும் அல்ல. இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள சமரசம் ஜனவரி 15 உடன் நிறைவடைகிறது. அப்போதும் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படலாம் என்பதுதான் கவலை அளிப்பதாகும்.
நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்பாட்டுக்கு அரசியலமைப்புச் சட்டம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிச்சையான செயல்பாட்டுக்கு அத்தகைய கட்டுப்பாடுகள் எதையும் விதிக்காதது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பெரிய குறைபாடாகும். அரசுத் துறை நிறுவனங்களை மூடும் அரசின் நடவடிக்கையை பெரும்பாலான மக்கள் ஏற்கவில்லை. இது தொடர்பாக அதன் பின்னர் எடுக்கப்பட்ட பல கருத்துக் கணிப்புகளின் மூலம் இது தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளுக்காக அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கருத்துக் கணிப்புகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பேர் தெரிவித்திருக்கின்றனர்.
அரசுத் துறை மூடல் பிரச்னை மற்ற விளைவுகளுடன் அமெரிக்காவின் மதிப்புக்கு பெரும் சரிவையும் உண்டாக்கியிருக்கிறது. பொருளாதார விவகாரத்தில் அவர்களது பொறுப்பற்ற நடத்தைக்கு எதிராக சுயமாக தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை உலக நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கையாகவே இது உணர்த்தியுள்ளது. ஒருவர் மிகுந்த வலிமையாக இருப்பதே அபாயகரமானது அல்ல. ஆனால், அந்த வலிமையை தவறாகப் பயன்படுத்துவது அபாயகரமானதாகும். அதைத்தான் அமெரிக்கா இப்போது செய்து வருகிறது.
உலகம் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதுதான் இப்போதைய டிரில்லியன் டாலர் கேள்வி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

