நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலை மறியல் என்னும் பயங்கரவாதம்

நம் நாட்டில் ஒவ்வொரு நாளும், எங்கேனும் ஓரிடத்திலேனும் நடைபெறக் கூடியதாக ஒரு நிகழ்வைக் கூற வேண்டுமானால் அது சாலை மறியல்

News image
Updated On :7 ஏப்ரல் 2014, 8:23 pm

சா. பன்னீர் செல்வம்

நம் நாட்டில் ஒவ்வொரு நாளும், எங்கேனும் ஓரிடத்திலேனும் நடைபெறக் கூடியதாக ஒரு நிகழ்வைக் கூற வேண்டுமானால் அது சாலை மறியல் என்பதாகத்தான் இருக்கும். சட்டம் படித்த சட்ட நடைமுறையை வலியுறுத்தி வழக்காடுகிற வழக்குரைஞர்கள், சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் கடமையுள்ள காவல் துறையினர் உட்பட, மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டிய உள்ளாட்சி அமைப்பு - சட்டப்பேரவை - நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை, சாலை மறியலில் யாரும் விலக்கல்ல. அண்மையில் புது தில்லியில், மாநில முதல்வரே முற்றுகைப் போராட்டம் நடத்தியது உச்சகட்ட சாதனை.

சட்டத்தின் ஆட்சி என்பதன் பொருள் அல்லது நடைமுறை என்ன? யாரும் மற்றவர் நலனைப் பாதிக்கக் கூடாது. பாதிக்கப்படுபவர் பாதிப்பை ஏற்படுத்தியவர் மீது சட்டபூர்வ நடைமுறையை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பதுதானே? அங்ஙனமாகவும் பாதிப்புக்குத் தொடர்பில்லாதவர்களைத் தொல்லைப்படுத்துதல் சட்டத்தின் ஆட்சியில் அன்றாட நிகழ்ச்சியாகின்றது.

சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தும் பொறுப்புள்ள அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் சட்ட ஒழுங்கு பற்றி வாய்கிழியப் பேசும் அரசியல்வாதிகளும் சமூக நலன் குறித்து முழக்கமிடுகிற சமூக ஆர்வலர்களும், பொறுப்புணர்வைக் கற்பிக்கும் பொறுப்பிலுள்ள ஆசிரியர்களும் சாலை மறியலைச் சட்டபூர்வ ஜனநாயகப் போராட்டமாக நடத்துதல் எப்படி?

பொதுவான முறையில் சாலை மறியல்களை இருவகைப்படுத்தலாம். ஒன்று, சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி, ஆற்றுப்பாலம் முதலான ஓர் ஊரின் பொதுத் தேவைக்காகச் சட்டப்படியான முறையீடுகள் செய்தும், தீர்வு ஏற்படாத நீண்டநாள் கோரிக்கைகளுக்காக நடைபெறுவன.

இன்னொரு வகையாவன, சாலை விபத்தில் உயிரிழப்பு, மருத்துவமனையில் சரியான கவனிப்பின்மையால், தவறான சிகிச்சையால் ஏற்படும் உயிரிழப்பு அல்லது உடல் நலப் பாதிப்பு, இருசாராரிடையே ஏற்பட்ட மோதல், அதிகாரிகளின் அதிரடியான நடவடிக்கைகள் அத்துமீறிய செயல்கள்போல எதிர்பாராமல் நடைபெறும் நிகழ்வுகளுக்காக நடைபெறுவன. பயணியுடன் அல்லது இன்னொருவருடன் ஓட்டுநர் அல்லது நடத்துநருக்கு ஏற்படும் மோதலுக்காக பஸ்கள் சாலை மறியலும் நடைபெறுகிறது.

இங்கே எழுகின்ற கேள்வி ஒன்றேயொன்றுதான். சாலை மறியலுக்குக் காரணமாகும் பிரச்னை வழிப்பயணக்காரர்களால் ஏற்பட்டதா? இல்லையென்பதே விடையாகின்றது. பிரச்னைக்குத் தொடர்பில்லாதவர்களைத் தொல்லைப்படுத்துதல் நேர்மையாகுமா ?

பாதிப்புக்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அல்லது அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அதிகாரியிடம் முறையிட வேண்டும். ஒருவராக - ஒரு சிலராக முறையிட்டும் பலன் இல்லையென்றால், சாலை மறியலுக்குத் தயாராகும் அவ்வளவு பேரும் சேர்ந்து செல்லட்டும்.

அதற்காக எங்கே செல்ல வேண்டுமோ அங்கே அவ்வளவு பேரும் செல்லட்டும். சாலை மறியலால் ஏற்படும் பலன் இந்த முறையாலும் ஏற்படும். பெரும்பாலான சாலை மறியல்களின் பலன் என்னவாகிறது? காவல் துறையினர் அல்லது தொடர்புடைய அலுவலர் சிலர் சாலை மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்து, கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதிகூற, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்படுகிறது.

இந்த வாக்குறுதியைப் பெற அவ்வளவு பேரும் அவ்வளவு தொலைவு செல்வானேன் என்னும் முறையில் சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். அதாவது, நாம் ஏன் அங்கே செல்ல வேண்டும்? அதிகாரிகள் இங்கே வரட்டும் என நினைக்கிறார்கள். ஆனால், சாலை மறியல் என்பது அதிகாரிகளை வரச் செய்து, தங்களின் முயற்சியைக் குறைத்துக் கொள்வதாக மட்டும் அமையவில்லை. தங்களின் பாதிப்புக்குத் தொடர்பில்லாதவர்களைத் தொல்லைப்படுத்தித் தங்களின் முயற்சியைக் குறைத்துக் கொள்வதாகவும் முடிகின்றது.

இந்த இடத்தில், ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சட்டப்படியான முறையீடுகளுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், பொறுப்புணர்வற்ற அலட்சிய மனப்பான்மையாலும், வேறு வேறு உள்வயணங்களாலும் உரிய நடவடிக்கையைத் தவிர்த்தல் அல்லது பிரச்னையைத் தள்ளிப் போடுதல் என்பதே மக்களின் கொந்தளிப்புக்குக் காரணமாகிறது என்பதில் ஐயமில்லை.

ஆண்களும், பெண்களுமான போராட்டக்காரர்கள் அவ்வளவு பேரும் சேர்ந்து தொடர்புடைய அதிகாரி இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். காவல் நிலையங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் பெருந்திரளாகச் செல்லுதலே போதுமானது. அதற்கு மேலும் வன்முறையாகும் நடவடிக்கைகள் தேவையில்லை.

உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்கள், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்கிற மக்கள் பிரதிநிதிகள் எதற்காக இருக்கிறார்கள்? திட்ட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செய்து கொள்வதற்கு மட்டும்தான் மக்கள் பிரதிநிதிகளா?

பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குறையுள்ளவர்கள் பிரச்னைக்கு ஏற்றவாறு தத்தம் பகுதிக்குரிய உள்ளாட்சி அமைப்பு - சட்டப்பேரவை - நாடாளுமன்ற உறுப்பினர்களை முற்றுகையிடட்டும். இதற்கு மாறாக, சாலை மறியலில் மக்கள் பிரதிநிதிகளும் சேர்ந்து கொள்ளுதல் வெட்கக் கேடான கேலிக்கூத்தன்றி வேறல்ல.

"நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' என்றான் சங்ககாலப் புலவன். நமக்காக - நமது நலனுக்காக அடுத்தவர் தொல்லைப்பட வேண்டாம் - நட்டப்பட வேண்டாம் என்னும் மனப்பான்மையை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொண்டால், தனிமனித மோதல் - சமூக மோதல் என்பன மிகப் பெருமளவில் மறைந்தொழியும்.

அதற்கு நேரெதிர் மனப்பான்மை வளரவும் வலுப்படவுமான முறையில், தமக்காக - ஆமோதித்தல் சமூக அமைப்பை - அதற்கும் மேலாக மனிதத் தன்மை என்பதையே வேரறுக்கின்ற கொடுமையாகும். மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி - என்றார் வள்ளுவர். அடிப்படை மனப்பான்மையில் ஊனத்தை ஆமோதித்துக் கொண்டு, அதன் விளைவை வெளுப்பதில் பொருளுமில்லை, பயனும் இல்லை.

இன்னொன்று, வேலை நிறுத்தம் என்பது சட்டபூர்வமான முயற்சிகள் அனைத்தும் பயன் தராத நிலையில், இறுதிக்கட்டமாக, அதுவும் முன்னறிவுப்புடன் செய்ய வேண்டியதாகும். ஆனால் வழக்குரைஞர் உட்பட திடீர் வேலைநிறுத்தம் செய்தலும் முற்றிலும் அடாவடித்தனமான மக்கள் பயங்கரவாதமாகக் கொள்ள வேண்டும்.

அவ்வாறே போராட்டம், ஆர்ப்பாட்டம் என்னும் பெயரால் அல்லது ஏதேனும் ஒன்றுக்கு எதிர்ப்பைக் காட்டுதல் என்னும் பெயரில் வாகனங்கள், கட்டடங்கள், உடைமைகள் மீது கல்லெறிதல், அவற்றை உடைத்து நொறுக்குதல் என்பனவும் மக்கள் பயங்கரவாதமன்றி வேறல்ல.

இந்த இருவகையான பயங்கரவாதங்களையும் தடுக்கவும், செய்பவர்கள் தண்டிக்கப்படவும் நாம் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறோம்? ஒருவர் அல்லது ஒரு சிலர் செய்தால் தவறு, கூட்டமாகச் செய்தால் தவறில்லையா? அல்லது கொல்லுதல் மட்டுமே தப்பு - மற்றபடி என்ன செய்தாலும் தவறில்லையா? மக்களுக்காக - மக்களின் நலனுக்காக மக்களால் நடத்தப்படுவது மக்களாட்சி என்கின்றனர்.

மக்களே மக்களைத் தொல்லைப்படுத்துதல் மக்களாட்சி முறைமையாகாது. அது மக்கள் பயங்கரவாதமன்றி வேறல்ல. தமக்குள்ளாகவே பயங்கரவாதத்தைப் பின்பற்றுவோர், அதனை ஆமோதிப்போர் எவருக்கும் மற்ற பயங்கரவாதங்களைக் கண்டிப்பதற்கும் தண்டிப்பதற்கும் தகுதியும் இல்லை; உரிமையும் இல்லை.

கொலை, கொள்ளை பாலியல் வன்முறை என்பன தனிமனிதரால் தனிமனிதருக்கு ஏற்படும் பாதிப்புகள். சாலை மறியல் என்பது ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துதல். சமூக மோதலுக்கு, சமூகக் கலவரத்திற்கு ஒப்பானது. லஞ்ச ஊழல் பேர்வழிகள் சட்டத்தை ஏமாற்றுகிறார்கள்.

சாலை மறியல் செய்வோர் சட்டத்தை, சமூக ஒழுங்கை, மனிதத் தன்மையைச் சிதைக்கிறார்கள். அவையெல்லாம் தண்டனைக்குரிய குற்றங்களாகும்போது சாலை மறியலும் தண்டனைக்குரிய குற்றச்செயல்களன்றிச் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உரியதல்ல.

மொத்தத்தில் போராட்டம் எதுவானாலும், போராட்டத்தின் நோக்கம் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் எந்தவொரு போராட்டமும் சட்ட ஒழுங்கிற்கு உட்பட்ட முறையிலும் தனிப்பட்டோர் சொத்து மற்றும் பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவிக்காத வகையிலும் நடைபெற வேண்டும்.

இதற்கு மாறான முறைமை மக்களாட்சி முறையல்ல. காரணம், அது மிருகத்தனமன்றி மனிதத்தனமல்ல. மக்கள்  - மனிதர்கள் என்பதற்கு மாறான முறை மக்களாட்சி முறையாதல் எப்படி?

இதுபற்றிய உரத்த சிந்தனையும், வலுத்த வாதமும் சமூக ஆர்வலர்களிடையே பெருக வேண்டும். அகிம்சை யென்னும் காந்தியம் பேசுவோர் இதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நலனுக்காகவே பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சியினர் தமக்குத் தாமே சுயக்கட்டுப்பாடு விதித்துக் கொள்ளுதல் மிகச்சிறந்த நாட்டுநலப் பணியாக அமையும்.

சாலை மறியல் என்கிற மக்கள் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் முனைப்பின்றி, மக்களாட்சி, சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாத ஒழிப்பு என்று கூறுவதெல்லாம் அறுந்த வலையாகிற சமூக மனப்பான்மையால் ஆற்று வெள்ளமாகிற பயங்கரவாதத்தைத் தடுக்கும் முயற்சியாகவே பயனற்றுப் போகும்.

கட்டுரையாளர்: தமிழாசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.