மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொடுத்திருக்கும் சொத்துக் கணக்கைப் படிக்கிற யாரும் இந்தியா ஏழை நாடு என்பதனைச் சத்தியமாக நம்பமாட்டார்கள். அவர்களில், 921 பேர் அதாவது 28 விழுக்காடு கோடீஸ்வரர்கள். எல்லாக் கட்சியிலும் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்.
தலைவர்களின் பரப்புரைகளுக்கு அமைக்கப்படும் மேடைகள், மின்விளக்கு அலங்காரங்கள், கொடிக் கம்பங்கள், அலங்கார வளைவுகள், தலைவர்களின் கட் அவுட்டுகள், தொண்டர்கள் வரும் வாகனங்கள், தலைவர்கள் பயன்படுத்தும் வானூர்திகள் இவற்றிற்கு ஆகும் செலவு பல கோடிகள். கட்சிகள் கோடிக்கணக்கில் செலவுசெய்து நடத்தும் கோலாகலத் தேசியத் திருவிழாவாகத் தேர்தல் காட்சியளிக்கிறது.
ஒரு கட்சியின் சார்பாகப் போட்டியிடுவதற்கே அக்கட்சிக்குள் போட்டா போட்டி. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து விண்ணப்பம் பெற வேண்டும். நேர்முக தேர்வில் தன் பண பலம், சாதி பலம், வெற்றி வாய்ப்பு ஆகியவற்றைக் கட்சித் தலைமைக்கு விளக்கிக் கட்சி வேட்பாளராக வேண்டும். பணத்தை வாரி இறைத்துக் கொளுத்தும் வெயிலில் தெருத் தெருவாகக் கூலிக்குப் பணியாற்றும் தொண்டர்கள் புடைசூழச் சுற்றிவந்து, தொண்டை கிழியப் பரப்புரை செய்ய வேண்டும்.
"உங்களுக்குத் தொண்டு செய்ய எங்களுக்கு வாக்களியுங்கள்' என்று கைகூப்பி வேண்டி வெற்றி பெறுபவர்களில் பலர், பலநாள் மன்றத்திற்கே போகாதவர்களாகவும், ஒருநாள்கூட வாய்திறக்காதவர்களாகவும், வினா எழுப்புவதற்குக் கையூட்டு வாங்குபவர்களாகவும் இருப்பதே அவர்கள் மக்களுக்குத் தொண்டாற்றுபவர்கள் அல்லர் என்பதனைக் காட்டும். தேர்தலில் நிற்கும் பலரின் நோக்கம் அதிகாரத்தைப் பெற்றுச் சொத்தினைக் குவிப்பதும், தங்கள் அளவற்ற சொத்துகளுக்கு ஆபத்து வராமல் காத்துக்கொள்வதும், தேவைகளை எளிதில் நிறைவேற்றிக் கொள்வதும், பதவி சுகங்களை அனுபவிப்பதும்தான்.
நாடாளுமன்ற, சட்டமன்ற இன்றைய உறுப்பினர்களையும் முன்னைய உறுப்பினர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அரசியல் எவ்வளவு பாதாளத்தில் வீழ்ந்துள்ளது என்பது தெரிகிறது.
முனைவர் நெ.து. சுந்தரவடிவேலு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் அவரை விடுதியில் சந்தித்தார். அம்முதியவர் நின்றவாறே, தன் கையில் இருந்த பையைத் திறந்து அட்டைப் பெட்டிகளை எடுத்து வைத்துவிட்டுத் தன் முகவரி அட்டையைப் பணிவோடு நீட்டினார். அதில், "குருசாமி, எம்.எல்.சி. பல்லாவரம்' என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. நெ.து.சு. அமரும்படி வற்புறுத்தியும் அவர் இருக்கையில் அமரவில்லை.
தம்மை அருந்ததியர் சாதியின் சட்டமன்றப் பிரதிநிதியாக ஆளுநர் ஐந்தாண்டுகளுக்கு நியமித்துள்ளதாகவும் அந்தப் பதவியை நம்பிச் சொந்தத் தொழிலைக் கைவிட்டுவிட்டால், பின்னர் மற்றவர்களை அண்டிப் பிழைக்க நேரிடும் என்பதால், பரம்பரைத் தொழிலை விடாமல் செய்துவருவதாகவும் தெரிவித்தார். அவரது தொழில் குறித்து வினவியபோது பல ஆண்டுகளாகவே தோலை வாங்கிச் சென்று "பூட்ஸ்' தைத்துப் பெரிய மனிதர்களிடம் கொண்டுபோய் விற்பதாகவும் அப்படி அறிமுகமான வெள்ளைக்காரத் துரைகளில் ஒருவர் தம்மைப் பற்றி ஆளுநரிடம் தெரிவித்ததால் அப்பதவி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நெ.து.சுவின் கால் அளவை எடுத்துக்கொண்டு போய்ச் சில நாள்களுக்குப் பின் காலணி தைத்து எடுத்துக்கொண்டு வந்தார். அன்றும் எவ்வளவு சொல்லியும் அமராமல் நின்றுகொண்டே, "வயதானவன் சொல்கிறேன். வருத்தப்படாதீர்கள். நான் உங்களை நாடி வந்திருப்பது சட்டமன்ற உறுப்பினராக அல்ல, சிறு வியாபாரியாக. அப்படி வரும்போது உட்கார்ந்து விற்க மாட்டேன். எதற்கும் வரம்பு வைத்துக் கொள்ள வேண்டும். தயவுசெய்து இதை இறுமாப்பு என்று நினைத்துவிடாதீர்கள்' என்று பணிவோடு வேண்டினார்.
தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த கக்கன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழக அரசில் அமைச்சராகவும் இருந்தவர். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவர் தந்தையார் தாம் செய்து வந்த வருவாய்த் துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார். கக்கனுக்குச் சொந்தமாக வீடு இல்லை; கார் இல்லை. இறுதிக் காலத்தில் பேருந்தில் நின்றுகொண்டே பயணித்தார்.
ஒருமுறை தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மதுரை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தம் கட்சிக்காரரைப் பார்க்கச் சென்றார். அங்கு கக்கன் பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதைக் கேள்வியுற்று அவரைச் சந்தித்தார். அவரது வறுமை நிலையைக் கண்டு உதவிசெய்ய முன்வந்தார். தம்மைப் பார்க்க வந்ததே மகிழ்ச்சி அளிப்பதாகக்கூறி அதனைப் பண்போடு மறுத்துவிட்டார், அந்தக் கறைபடாத கதர்ச்சட்டைக்காரர்.
பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த ஜீவானந்தம் எளிமையின் சின்னம். ஒருமுறை அவர் தொகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள காரில் சென்ற முதலமைச்சர் காமராஜர் அவரையும் அழைத்துச் செல்ல அவர் வீட்டுக்குச் சென்றார். ஜீவானந்தம் கால்சட்டையோடு வீட்டில் அமர்ந்திருந்தார். அவரிடம் காமராஜர், "என்ன ஜீவானந்தம், கூட்டத்திற்குப் புறப்படவில்லையா' என்றார். "நீங்கள் செல்லுங்கள் நான் வருவதற்கு அரைமணி நேரம் ஆகும்' என்றார் ஜீவா. காரணம், கொடியில் அவரது சட்டை காய்ந்து கொண்டிருந்து. இப்படி மாற்றுச்சட்டை கூட இல்லாமல் ஒரு சட்டமன்ற உறுப்பினர்.
ஒன்பதாண்டுகள் தமிழக முதலமைச்சராகவும் ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் கு.காமராஜர். அவர் நேருவுக்குப் பின் லால்பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்குப் பின் இந்திரா காந்தியையும் தலைமை அமைச்சர்கள் ஆக்கியவர். அவர் மறைந்தபோது விருதுநகரில் உள்ள பூர்வீக சொத்தான வீட்டினைத் தவிர வேறு சொத்து இல்லை. கடைசிவரை திருமலைப்பிள்ளை சாலையில் வாடகை வீட்டிலேயே இருந்தார்.
உறவினர்கள் யாரேனும் சென்னைக்குத் தம்மைக் காண வந்தால், தம் வீட்டில் ஓரிரு நாள்களுக்கு மேல் தங்க அனுமதிப்பதே இல்லை காமராஜர். தம் பதவியைப் பயன்படுத்தி யாரும் எந்தச் சலுகையும் பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். விருதுநகரில் தம் வயது முதிர்ந்த தாய்க்கு வசதியாக இருக்கட்டுமே என்று அமைச்சர் ஒருவர் தண்ணீர்க் குழாயை வீட்டின் முன் அமைத்ததை அறிந்து அதனைத் தன் தாய்க்குச் செய்யப்பட்ட சலுகையாகக் கருதி விரைந்து இணைப்பைத் துண்டிக்க ஆணையிட்டார். அந்தக் கர்ம வீரர் இறந்தபோது அவருடைய உடைமையாக ஏழு எட்டுக் கதர்ச்சட்டைகளும் வேட்டிகளும் வங்கியில் இருப்பாகச் சில நூறு ரூபாய்களுமே இருந்தன.
1978 முதல் 1988 வரை திரிபுரா முதலமைச்சராக இருந்தவர் நிருபன் சக்கரவர்த்தி. அவர் முதலமைச்சர் இல்லத்திற்குள் ஒரு சிறிய இரும்புப்பெட்டியோடு நுழைந்தார். அவரது ஆட்சி முடிந்த பின் அதே பெட்டியோடு ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிச் சட்டமன்ற விடுதி அறையில் குடியேறினார்.
இந்தியாவின் இடைக்காலத் தலைமையமைச்சராக இருமுறை இருந்த குல்சாரிலால் நந்தா தொண்ணூற்று எட்டு வயதுவரை வாழ்ந்தவர். அவர் நண்பர்களின் வற்புறுத்தலால் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்குத் தரப்படும் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து மாதாமாதம் ரூபாய் 500 பெற்றார். இதுபோல லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், ராஜாஜி, அண்ணா போன்றவர்கள் எளிமையைப் போற்றி நேர்மையோடு வாழ்ந்துள்ளார்கள்.
தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைபவர்கள் இந்தச் சேற்றில் மலர்ந்த செந்தாமரைகளைப் பின்பற்றினால் நாடும் முன்னேறும், தாங்களும் புகழ்மணம் பரப்பி வரலாற்றில் இடம் பெறுவார்கள். செய்வார்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

