தமிழர்களின் தலையாய கடமை!

மத்திய அரசின் கேந்திரியப் பள்ளிக்கூடங்களில், தற்பொழுது ஜெர்மன் மொழி மூன்றாவது மொழியாகப் பயிற்சி தரப்படுகிறது.

மத்திய அரசின் கேந்திரியப் பள்ளிக்கூடங்களில், தற்பொழுது ஜெர்மன் மொழி மூன்றாவது மொழியாகப் பயிற்சி தரப்படுகிறது. அதற்குப் பதில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதம் இருக்கும் என்று சென்ற மாதம் (நவம்பர் 14), மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் வரலாற்றில், 19-ஆவது நூற்றாண்டின் துவக்கத்தில் ஆங்கில மொழியை மக்கள் கற்பதற்கான வழி ஆரம்பித்தது. இது ஒரு வரலாற்று முக்கியமான சம்பவம் ஆகும்.

ஆயினும் இந்திய மக்களுக்கு அரசு கல்வியறிவு தர வேண்டும் என்று இங்கிலாந்து அரசு தந்த உத்தரவின்படி, அப்பொழுது இந்தியாவில் இருந்த ஆங்கில அதிகாரிகள் இந்துக்களுக்கு சம்ஸ்கிருத மொழியிலும், இஸ்லாமியர்களுக்கு உருது மொழியிலும் பள்ளிகளை ஆரம்பித்தார்கள்.

இதை ராஜா ராம்மோகன் ராய் மிகவும் கடுமையாகக் கண்டித்து கவர்னர் ஜெனரல் ஆம்ஹெர்ஸ்ட்டுக்கு 11 டிசம்பர், 1823 தேதி ஒரு மனு அனுப்பினார்.

சம்ஸ்கிருத - உருது பள்ளிகளை அமைப்பதன் மூலம், இந்திய மக்களை என்றென்றைக்கும் அறியாமையில் வைத்திருப்பதுதான் இங்கிலாந்தின் நோக்கம் என்று தோன்றுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இருந்த நிலைமைக்கு இந்திய மாணவர்களைத் தள்ளுகிறது.

இங்கிலாந்தும் மற்ற மேலை நாடுகளும் வளர்ச்சியடைந்திருப்பதற்கான முக்கியமான காரணம், விஞ்ஞானம், கணிதம், தத்துவம், தொழில் முறைகள், ஆராய்ச்சி அறிவு ஆகியவையாகும். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆங்கில மொழியில்தான் கல்வி தரப்படவேண்டும். அவர் எழுதிய கடிதம் கவர்னர் ஜெனரல் அலுவலகத்தில் எத்தகைய கவனத்தையும் ஏற்படுத்தவில்லை.

மாறாக, இந்து தர்மத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ராஜா ராம்மோகன் ராய் ஈடுபட்டிருப்பதாக அவதூறுகள் பல எழுந்தனவாம். எதற்கும் அஞ்சாமல், 1816-இல் அவரது சொந்த முயற்சியில் ஆங்கிலக் கல்வி தரும் இந்து காலேஜ் ஆரம்பிக்கப்பட்டது. அதில் பெருவாரியான மாணவர்கள் சேர்ந்தார்கள்.

மோகன் ராய் போன்று, ஆங்கில அரசின் உயர் அதிகாரியாக இருந்த ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவரும் இந்தியர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். அவரும் ஆங்கிலப் பள்ளிகளைத் தமது பணத்திலிருந்து உருவாக்கினார்.

அப்பொழுது நிலவிய கவர்னர் ஜெனரல் ஆட்சியில் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அவர் வெளிப்படையாக கண்டித்ததோடு, தமது பதவியை விட்டு, 1885, டிசம்பர் 28 - 30 தேதிகளில் பம்பாயில் இந்திய தேசிய காங்கிரûஸ உருவாக்கினார், மேலும் 1885 முதல் 1906 வரை அவர் தேசிய காங்கிரஸ் அமைப்பின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.

ஆங்கிலக் கல்வியின் மூலமாகத்தான் இந்தியாவில் தேசிய உணர்வும் விடுதலைப் போராட்டமும் வளர்ச்சி அடைந்தன என்பதை தீவிரமான சுதந்திரப் போராட்டத் தலைவராக விளங்கிய லோக்மான்ய பாலகங்காரத் திலகர், 1885-இல் எழுதிய கட்டுரையில் தெரிவித்தார். இன்று நாம் தேசிய உணர்வுடன் செயல்படுகிறோம் என்றால், அதற்கு முதன்மையான காரணம் ஆங்கில மொழிப் பயிற்சிதான்.

1920 முதல் மகாத்மா காந்தி துவக்கிய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களில் பெரும்பாலோர் ஆங்கில மொழியில் சிறப்பான பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர்.

இந்திய அரசியலில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு சமுதாய - அரசியல் அமைப்புகள் தோன்றி தத்தம் பண்பாடு - கலை - மொழி உரிமைகளுக்குப் போராடியதற்கு ஆங்கிலக் கல்வி உதவியிருக்கிறது.

தமிழ்நாட்டில் 1937-இல் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ஹிந்தி மொழியைப் பள்ளிகளில் பாடமாக்க கட்டாயப்படுத்திய பொழுதுதான், ஹிந்தி எதிர்ப்பு இயக்கம் தோன்றியது.

அதில் காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலரும் ஒருங்கிணைந்து போராடினார்கள். காலப்போக்கில் தேசிய ஆட்சி மொழியாக ஹிந்தி வருவதற்கு தமிழ்நாட்டிலும், தென் மாநிலங்களில் மட்டுமல்லமால் இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடுமையான எதிர்ப்பு வளர்ந்தது.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி, 1965 ஜனவரி 26 முதல் ஹிந்தி மட்டும்தான் ஆட்சி மொழியாக ஆகும் என்பதை அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜாரி லால் நந்தா அறிவித்தார்.

அப்பொழுது நான் திமுக சார்பில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினனாக இருந்தேன். கழகத் தலைவராக இருந்த அண்ணா முன்கூட்டியே 1965 ஜனவரி 8-இல் கழகத்தின் செயற்குழுவைக் கூட்டி விவரமாக விவாதித்தார். 1965 ஜூன் 26 அன்று துக்க தினமாகக் கருப்புக் கொடிகளை ஏற்றி, தமிழ்நாட்டின் கண்டனத்தைத் தெரிவிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதனையொட்டி. 1965 ஜனவரி 17-ஆம் நாள் திருச்சியில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதற்கு கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமை வகித்தார். மாநாட்டைத் துவக்கி வைத்தவர் ராஜாஜி.

அவர், "என்னுடைய உள்ளத்திலேகூட பிரிவினை உணர்வு தோன்றிவிட்டது. பிரிவினை கூடாது என்று மத்திய அரசு முன்பு சட்டம் போட்டது. இப்பொழுது பிரிவினை மனப்பான்மையை உண்டாக்குவதற்குச் சட்டம் போட்டுள்ளது. ஹிந்தியை ஆட்சிமொழி ஆக்குவதற்கு வழி செய்கிறது. அந்த விதிமுறையைத் தூக்கிக் கடலில் போடுங்கள்' என்றார்.

ராஜாஜிக்கே உரிய அமைதி, அழுத்தம், நுண்ணறிவு மாநாட்டில் பெரும் ஆரவாரத்தையும் முழக்கத்தையும் ஏற்படுத்தியது. கடைசியில் மாநாட்டிற்கு வந்திருந்த செய்தியாளர்கள் ராஜாஜியைச் சந்தித்துக் கேட்டார்கள், "நீங்கள்தானே 1937-இல் கட்டாய ஹிந்தியைத் தமிழ்நாட்டில் கொண்டு வந்தீர்கள்' என்று. அதற்கு மிகவும் அமைதியுடன் ராஜாஜி பதிலளித்தார் "ஒரு செயல்பாடு தவறு என்று தெரிந்ததும் அதை விட்டு நல்வழிக்குச் செல்வதுதான் நல்ல பண்பாடு'.

1965 ஜனவரி 25 இரவில் அறிஞர் அண்ணா உள்பட பல்லாயிரக்கணக்கானவர்கள் தமிழ்நாட்டில் சிறையில் தள்ளப்பட்டனர்.

1956 ஜூலை மாதத்தில் ஹிந்தி ஆட்சி மொழி ஆவதற்கான முடிவுகளை எடுத்திட மகாராஷ்டிர முதலமைச்சராக இருந்த பி.ஜி.கெர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் உறுப்பினராக இருந்த டாக்டர் சுநீதி குமார் சட்டர்ஜி, கெர் குழுவின் முடிவுகளை எதிர்த்து தமது மாறுபட்ட கருத்தை வெளியிட்டார்.

அவர் குறிப்பிட்டதாவது: "ஹிந்தி ஆட்சிமொழியாக ஏற்கப்பட்டால், இந்திய மக்கள் இரண்டு பிரிவுகளாக ஆகிவிடுவார்கள். ஹிந்தி மொழியினர் முதல் தர வகுப்பினர், இந்தி பேசாத மக்கள் இரண்டாம் தர வகுப்பினர் என ஆகிவிடுவார்கள்.

அகில இந்திய வேலைவாய்ப்புகளில் ஹிந்தி பேசுபவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு ஹிந்தி அறியாத மக்களுக்குக் கிடைக்காது. ஹிந்தி மொழியைவிட வளர்ச்சி அடைந்த, நீண்ட கால இலக்கியப் பண்பாடுகளை உடைய பல மொழிகள் இந்தியாவில் இருக்கின்றன.

தமிழ்நாட்டிலிருந்து உறுப்பினராக இருந்த டாக்டர் சுப்பராயனும் தமது கண்டனத்தைத் தெரிவித்தார். ஆங்கிலத்தைப் புறக்கணித்து இந்தியா வளர்ச்சி அடையாது. அதன் அடிப்படை சட்டமான அரசமைப்புச் சட்டம், போடப்படும் அன்றாடச் சட்டங்கள், நீதித் துறையில் தரப்படும் தீர்ப்புகள் எல்லாம் ஆங்கிலத்தில்தான் தரப்படவேண்டும்.

இன்றுள்ள நிலைமையில் மாநிலங்களுக்கும் - மத்திய அரசுக்கும் உள்ள தொடர்புக்கும், உலகளாவிய செயல்பாடுகளுக்கும் ஆங்கிலம் தேவையான ஒன்று.

கெர் குழுவில் இருந்த குஜராத் வித்யா பீடத்தின் தலைவர் மகன்பாய் தேசாய், மேற்கு வங்க முதல்வர் டாக்டர் பி.சி. ராயைச் சந்தித்து, ஹிந்திதான் ஆட்சி மொழி என அரசமைப்புச் சட்டத்தில் முடிவாகிவிட்டது. அதை எதிர்ப்பதில் என்ன பலன்? உடனடியாக டாக்டர் பி.சி. ராய், நீங்கள் சொல்கிறபடி ஆட்சி மொழியாக ஹிந்தி கட்டாயமாக ஆக்கப்பட்டால், நான் இந்திய தேசத்திலிருந்து பிரிந்துவிடத் தயங்கமாட்டேன் என்றார்.

1959, ஆகஸ்டு 7, மக்களவையில் ஆட்சிமொழி பற்றிய விவாதத்தில், பிரதமர் ஜவாஹர்லால் நேரு, மொழிப் பிரச்னையில் கட்டாயம் என்பது இருக்காது. ஹிந்தி பேசாத மக்கள் முடிவு எடுக்கும்வரை தற்பொழுதுள்ளபடி ஆங்கிலம் நீடிக்கும் என்ற உறுதிமொழியைத் தந்தார்.

1965-ஆம் ஆண்டிலும் மேற்குறிப்பிட்ட உறுதிமொழியிலிருந்து தாம் மாற்றம் அடையவில்லை என்று சொன்னார்.

மகன்பாய் தேசாய், கெர் ஆட்சிமொழிக் குழுவின் அறிக்கையில் டாக்டர் பி.சி.ராய் பெயரைக் குறிப்பிடாமல், ஒரு மாநில முதல்வர் ஆட்சி மொழியாக ஹிந்தி கட்டாயப்படுத்தப்பட்டால், இந்தியாவை விட்டு பிரிந்துவிடத் தயங்கமாட்டேன் என்று கூறியதாக எழுதி இருந்தார். எனினும், பி.சி.ராய் பெயரை வெளிப்படையாக்கியவர் டாக்டர் சுநீதி குமார்தான்.

பி.சி. ராய் இங்கிலாந்து சென்று எப்.ஆர்.சி.எஸ்., எம்.ஆர்.சி.பி. ஆகிய உயர்மட்ட அறுவை - மருத்துவப் பட்டங்களைப் பெற்றார். அவ்வாறு இரு முனைகளிலும் ஒருவரே உயர் பட்டங்கள் பெறுவது கடினம்.

இந்தியாவுக்குத் திரும்பியதும், காங்கிரஸ் கட்சியில் இணைந்து, மகாத்மா காந்தியின் நண்பராகவும் மருத்துவராகவும் ஆனார். 1930-இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு அலிப்பூர் சிறையில் வைக்கப்பட்டார்.

1947 சுதந்திர இந்தியாவில் காந்தியாரின் சொற்படி, மேற்கு வங்க முதல் மந்திரியாக ஆனார். 1961-இல் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 80-ஆவது வயதில் அவர் இறந்தார்.

இந்த அளவுக்கு விளங்கிய பி.சி.ராய் ஹிந்தி மொழி கட்டாயம் ஆக்கப்பட்டால், இந்தியாவிலிருந்து பிரிந்துவிடுவேன் என்று கூறியது மத்திய ஆட்சியினரிடமும், ஹிந்தி மொழியினரிடமும் பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

1957 ஆகஸ்டு 4, தமது ஆங்கில வார ஏடான "ஹோம்லாண்ட்' தலையங்கத்தில் அண்ணா ஒரு நாட்டுக்கு அதன் தாய்மொழி எவ்வளவு முக்கியமானது என்பது பற்றி எழுதினார்.

ஐரீஷ் நாட்டின் சுதந்திரத்தை நிலைபெறச் செய்த டி வாலேரா சொன்னதாவது: "இந்த உலக வாழ்விலிருந்து நான் சென்றுவிட்டால், அயர்லாந்து மக்களுக்கு ஒன்று கூறுவேன் உங்களுடைய அயர்லாந்து நீடிக்கவேண்டும் என்றால், ஐரீஷ் மொழியைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளுங்கள்' (ஆங்கிலத்தில் எழுதப்பட்டதின் தமிழ் மொழி பெயர்ப்பு).

அதைப்போல் தமிழ்நாடு நீடிக்கவேண்டும் என்றால், தமிழ்மொழியைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டியது தமிழர்களின் தலையாய கடமை ஆகும்.

கட்டுரையாளர்:

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com