தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஒரே ஒரு நெருடல்...!

தமிழகத்தில் தொடர்ந்து நான்காம் ஆண்டாக வரிகள் இல்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, அனைவரது மனங்களையும் குளிரச் செய்துள்ளார் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.

News image
Updated On :14 பிப்ரவரி 2014, 8:27 pm

நா. குருசாமி

தமிழகத்தில் தொடர்ந்து நான்காம் ஆண்டாக வரிகள் இல்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, அனைவரது மனங்களையும் குளிரச் செய்துள்ளார் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். புதிதாக வரிகள் ஏதும் விதிக்கப்படாததோடு, வரும் நிதியாண்டில் (2014-15) உபரி வருவாயாக ரூ. 289 கோடி கிடைக்கும் விதத்தில் இந்த நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டது இதன் தனிச் சிறப்பாகும்.

வரும் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ. 1,27,389 கோடியாக இருக்கும் என்றும், மொத்தச் செலவினம் 1,27,100 கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.289 கோடி உபரியாகக் காட்டப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால், வாக்காளர்களைக் கவரும் விதத்தில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அம்மா உணவகம், அம்மா குடிநீர் திட்டங்களைத் தொடர்ந்து, மருந்துகளை குறைந்த விலையில் விற்பதற்கான அம்மா மருந்தகங்கள் 100 இடங்களில் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.

ஏற்கெனவே கூட்டுறவுத் துறையால் நடத்தப்பட்டு வரும் 210 மருந்தகங்களுடன் புதிதாக 100 மருந்தகங்கள் திறக்கப்படவிருக்கின்றன. மாநில விலை நிலைப்படுத்தும் நிதியத்திலிருந்து இதற்காக ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மலிவு விலை மருந்தகங்களை வரும் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும்.

ஜாதி, வருமானச் சான்றிதழ்கள் பெறுவதற்காக பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலையும் நிலைமையைத் தவிர்க்கும் வகையில், அந்தந்தக் கிராமப் பகுதிகளிலேயே 2,000 பொது சேவை மையங்கள் தனியார் - பொது பங்களிப்புடன் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர்ப் பற்றாக்குறை, கால்நடைகளுக்கான தீவனத் தட்டுப்பாடு ஆகியவற்றைச் சமாளிக்க ரூ. 681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

தஞ்சாவூர், திருநெல்வேலியில் ரூ. 300 கோடியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1,500 ஆக உயர்வு, மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்கால உதவியாக ரூ. 4,000, புதிதாக 1,000 பேருந்துகள் வாங்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு ஆகியவையும் அனைவராலும் வரவேற்கப்படும்.

ஏற்கெனவே அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கும் திட்டத்துக்கும், மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கும் திட்டத்துக்கும் வரும் நிதியாண்டிலும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில், ரூ. 289 கோடி அளவுக்கு உபரியாகக் காட்டப்பட்டுள்ள போதிலும், தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.25,714 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது கவலையளிக்கும் விஷயமாகும். இந்த நிதிப் பற்றாக்குறையானது மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 2.73 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தற்போதைய வருவாய் இனங்களில் கடினமான சூழல் நிலவிய போதிலும், சமூகப் பாதுகாப்பு சார்ந்த திட்டங்களுக்காக மொத்தம் ரூ. 49,000 கோடி அளவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, பெரும் இழப்பைச் சந்தித்து வரும் மாநில மின் வாரியத்துக்கும் தொடர்ந்து நிதியுதவி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் வாரியத்துக்கு, வரும் நிதியாண்டில் ரூ. 10,400 கோடி அளவுக்கு கடனுதவி அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு பிரச்னைக்கு இன்னமும் நிரந்தரத் தீர்வு காண முடியாத நிலையில், மின் வாரியத்துக்கு கடனுதவி அளிப்பதில் குறை காண முடியாது. அதேநேரத்தில், புதிய மின் திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், மின் கட்டமைப்புகளை முறையாகப் பராமரிக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டால்தான், மின் தட்டுப்பாடு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண இயலும்.

மதுபானங்கள் விற்பனை மூலம் நிகழ் நிதியாண்டில் (2013-14) மொத்தம் ரூ. 23,401 கோடி கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த மதுபானங்கள் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை அரசு பெரிதும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது என்பது நெருடலான விஷயம்.

மணல், தாதுப் பொருள்கள், கிரானைட் கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் மூலம் வர வேண்டிய வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், மது விலக்கை படிப்படியாக அமல்படுத்த அரசு முயற்சி செய்யலாம்.

மது விலக்கை முதல்வர் ஜெயலலிதா துணிவுடன் அமல்படுத்தினால் பெண்கள் அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பர். அதோடு, நமது இளைய சமுதாயத்தை சீரழிவிலிருந்து காப்பாற்றிய பெருமையும் அவருக்கு கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.