பொதுமக்களைக் கொந்தளிக்கச் செய்கின்ற மூன்று தீவிரமான சமூகப் பிரச்னைகள் அமெரிக்க ஊடகங்களில் அண்மைக்காலமாக அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல், கல்வி நிறுவனங்களில் பெண்களை மானபங்கம் செய்தல், மரண தண்டனை விதிக்கப்பட்டவரைக் கொடூரமாகக் கொல்லுதல் ஆகியவை. இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை போன்று தோன்றலாம். ஆனால், இந்த மூன்றுக்கும் பொதுவானதொரு காரணம் உள்ளது.
அண்மைக்காலங்களில் கொடூரமாக நடைபெற்ற சில கொலைச் சம்பங்களைப் பார்ப்போம்.
(1) 2013 செப்டம்பர் 16ஆம் தேதி வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் கடற்படை தளத்தில் புகுந்த 34 வயதான ஆரோன் அலெக்சிஸ் என்பவர் 12 பேரை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்தனர். (2) 2012 ஜூலை 20ஆம் தேதி, கொலராடோவில் ஆரோரா என்ற இடத்தில் உள்ள தியேட்டரில் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசிய மர்ம நபர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டதில் 12 பேர் இறந்தனர். 70 பேர் காயமடைந்தனர். (3) 2012 ஆகஸ்ட் 5ஆம் தேதி, விஸ்கான்சினில் உள்ள ஓக் கிரீக் என்ற இடத்தில் சீக்கிய குருத்வாராவில் புகுந்த வேட் மைக்கேல் பேஜ் (40) என்பவர் 6 பேரை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்தனர். ஒரு போலீஸ் அதிகாரி அவரை வயிற்றில் சுட்டவுடன், பேஜ் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். (4) 2012 டிசம்பர் 14இல் கனெக்டிகட்டில் உள்ள சாண்டி ஹூக் தொடக்கப் பள்ளியில் புகுந்த ஆடம் லான்ஸா என்ற 20 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் 20 குழந்தைகளும், 6 ஊழியர்களும் இறந்தனர். இதையடுத்து, அந்த இளைஞர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார். பள்ளிக்கு வருவதற்கு முன் தனது வீட்டில் அந்த இளைஞர் தாயை சுட்டுக் கொன்றுள்ளார். (5) 2012 டிசம்பர் 11இல் ஓரேகான் நகரில் போர்ட்லாண்ட் என்ற இடத்தில் ஒரு வணிக வளாகத்துக்குள் புகுந்த ஜேகப் டெய்லர் ராபர்ட்ஸ் என்ற 22 வயது இளைஞர் சரமாரியாக சுட்டதில் 2 பேர் இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்திலும் இளைஞர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நடந்த சம்பவங்களைப் பட்டியலிடுவது நோக்கமல்ல. பள்ளி, வழிபாட்டுத் தலம், திரையரங்கம், வணிக வளாகம், உணவு விடுதி என்று எங்கு வேண்டுமானாலும் இதுபோன்ற சம்பவம் நிகழலாம் என்பதை சுட்டிக் காட்டவே இந்த சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முறை இதுபோன்ற சம்பவம் நிகழும்போதும், துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்படுகிறது. ஆனால், சிலர் துப்பாக்கியைக் கட்டுப்படுத்துவதால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க முடியாது என்று வாதிடுகின்றனர். நாட்டில் நடைபெறும் 60 சதவீத கொலைச் சம்பவங்களில் மட்டுமே துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று "கார்டியன்' பத்திரிகையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
உலகிலேயே அதிகம் பேர் துப்பாக்கி வைத்திருப்பது அமெரிக்காவில்தான். உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்கள் 5 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால், உலகில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகளில் 35 முதல் 50 சதவீதம் அமெரிக்கர் வசம் உள்ளன.
ஆனால், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுபவர்களின் பட்டியலில் அமெரிக்கா 28-வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 2.98 கொலைகள் நிகழ்கின்றன. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஹோண்டுராஸ் (ஒரு லட்சத்துக்கு 68.43), இரண்டாம் இடத்தில் எல் சால்வடார் (39.9), அடுத்த இடத்தில் ஜமைக்கா (39.4) ஆகிய நாடுகள் உள்ளன. துப்பாக்கி வைத்திருப்பதற்கும், அதிக கொலைகள் நடப்பதற்கும் தொடர்பில்லை என்று வாதிடுவோருக்கு இந்தப் புள்ளிவிவரம் கைகொடுக்கிறது.
அமெரிக்க கல்லூரிகளிலும், பல்கலைக்கழக வளாகங்களிலும் நடைபெறும் மானபங்க சம்பவங்கள் அந் நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கி வரும் மற்றொரு விஷயமாகும். கல்லூரியில் பட்டம் பெற்று வெளிவருவதற்குள் ஐந்தில் ஒரு பெண் மானபங்கப் படுத்தப்படுகிறார் என்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் கூறுகிறார். ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்குள் 24 லட்சம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்பதே இதன் பொருள்.
துரதிருஷ்டவசமாக, பாதிக்கப்படும் பெண்கள் போலீஸில் புகார் செய்வதை கல்வி நிறுவனங்கள் ஊக்குவிப்பதில்லை. அவர்களுக்கு, பெண்களின் கண்ணியத்தைவிட தங்கள் கல்வி நிறுவனங்களின் பெயர்தான் முக்கியமாகத் தோன்றுகிறது.
மானபங்கத்தைக் கடுமையாக குற்றமாகக் கருதாமல், தங்கள் கல்வி நிறுவன வளாக விதிமீறல்களாகக் கருதி அதிகபட்ச தண்டனையாக கல்வி நிறுவனத்திலிருந்து அந்த மாணவரை நீக்குகின்றனர். அதன் காரணமாக அந்த மாணவர் மீண்டும் மீண்டும் அதே குற்றத்தை இழைக்கிறார். மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள், மாணவிகளின் உரிமைகள் விதிமீறல் போன்றவற்றை தவறாக கையாளுதல் குறித்து 55 பள்ளிகள் மீது கல்வித் துறை விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்க மக்களை மன வேதனை அடையச் செய்யும் மற்றொரு விஷயம், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அதை நிறைவேற்றும் விதமாகும். ஓக்லஹாமாவில் கிளேட்டன் லாக்கெட் என்ற கைதிக்கு அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. உயிரை சிறிது சிறிதாக எடுக்கக்கூடிய 3 மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டன. அந்த மருந்துகள் காரணமாக அவர் வேதனையால் கதறி, உடல் நடுக்கம் ஏற்பட்டு, வாய் குழறி, துடிதுடித்து 43 நிமிடங்கள் கழித்து உயிரிழந்தார். லாக்கெட் கொள்ளையடிக்கப்போன இடத்தில் அதை 19 வயதான ஸ்டெபானி நெய்மன் என்ற பெண்ணும், அவரது தோழியும் தடுத்தனர். இதில் ஆத்திரமடைந்த லாக்கெட், நெய்மனை துப்பாக்கியால் சுட்டார். அப்பெண்ணை தனது நண்பர்கள் உயிருடன் புதைத்ததைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. லாக்கெட்டுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றும் முறைக்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு பதிலாக, வலியில்லாமல் உயிரை எடுக்கும் வகையில் தண்டனை விதிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தனிநபராக இருந்தாலும் சரி, அரசாக இருந்தாலும் சரி, கொடூரமாக நடந்து கொள்வதை அமெரிக்க மக்கள் விரும்புவதில்லை என்பது இந்த விவகாரங்கள் தொடர்பாக நடக்கும் விவாதங்களில் தெரியவருகிறது.
ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்தக் கூக்குரல்களுக்கு இடையே இப் பிரச்னைகளுக்கான உண்மையான காரணம் குறித்து அலசப்படும் குரல் கேட்பதில்லை.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாகத் தோன்றும் இந்த மூன்று விதமான விஷயங்களுக்கு இடையே பொதுவான ஓர் அம்சம் உள்ளது. இந்தக் குற்றங்களுக்கும், உணர்வுபூர்வமற்ற மனப்பான்மைக்கும் ஒட்டுமொத்த சமூக சூழ்நிலையே காரணமாகும்.
இந்த சூழ்நிலை குறித்து சுருக்கமாகச் சொல்வதென்றால், சமூகத்தின் ஒட்டுமொத்த சூழ்நிலையும், குடும்ப சூழ்நிலையும், குழந்தைகளின் மனத்தில் மனித மாண்புகளை விதைப்பதாக இல்லை. மக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் மத்தியில், கடந்த கால ஆணாதிக்க சமுதாயத்தின் சுவடுகள் இன்னமும் உள்ளன. அதனால், ஆண்கள் மத்தியில் வலிமையே சரி என்ற மனப்பான்மை உள்ளது. அதன் காரணமாக, மானபங்கம் உள்ளிட்ட கொடுமைகள் பெண்கள் மீது இழைக்கப்படுகின்றன.
ஆணாதிக்கம் நீடித்திருப்பதில் ஊடகங்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பங்குண்டு. பெண்களை போகப் பொருளாக சித்திரிப்பதுடன், பின்விளைவுகளைப் பற்றிய கவலையில்லாமல் கொடூரமான வன்முறையையும், ஆபாசத்தையும் இளம் நெஞ்சங்களுக்கு தொலைக்காட்சிகள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.
யாருமே குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையே மனிதனை குற்றம் செய்யத் தூண்டுகிறது. சமூக அறநெறிகள் குறித்து புகட்டுவதும், உணரச் செய்வதுமே இப் பிரச்னைகளுக்குத் தீர்வாகும். சக மனிதனின் வலியை ஒவ்வொருவரையும் உணரச் செய்ய வேண்டும். மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுபவரின் வேதனையையும், வலியையும் மரண தண்டனையை செயல்படுத்துபவரோ, விதிப்பவரோ உணரும்போது, வலியில்லாமல் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்தோ, மரண தண்டனையையே ஒழிப்பது குறித்தோ எண்ணத் தோன்றும்.
ஆனால், இப்பிரச்னைக்கான தீர்வு ஓரிரு நாள்களில் நிறைவேற்றப்படக் கூடியது அல்ல. இலக்கை அடைய பல தலைமுறைகள்கூட ஆகலாம். ஆனால், ஏதாவதொரு நாளில் இது தொடங்கப்பட வேண்டும். நாகரிக சமுதாயம் என்று சொல்லிக் கொள்ளும் நாம், அதை உண்மையாக்குவதற்கு இப் பிரச்னைகளின் அடிப்படை காரணம் குறித்து தீவிரமாக சிந்திக்கத் தொடங்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

