திறமையான நிதியமைச்சர் தேவை!
நாடெங்குமுள்ள சமூக ஆர்வலர்களுக்கிடையே தற்போது எழுந்துள்ள விவாதம், "யார் இந்தியாவின் அடுத்த நிதி அமைச்சர்' என்பதாகும்.


நாடெங்குமுள்ள சமூக ஆர்வலர்களுக்கிடையே தற்போது எழுந்துள்ள விவாதம், "யார் இந்தியாவின் அடுத்த நிதி அமைச்சர்' என்பதாகும்.
இதற்கு முக்கிய காரணம், கடந்த பல ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 சதவீதமாக இருந்தது. ஆனால், 2013-14 நிதி ஆண்டின் 3ஆவது காலாண்டில், வளர்ச்சி 4.7 சதவீதமாக சரிந்துள்ளது. நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் பொருளாதார வளர்ச்சி 4.9 சதவீதம் என மத்திய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை - அதாவது நமது மொத்த இறக்குமதி மதிப்புக்கும், மொத்த ஏற்றுமதி மதிப்புக்கும் இடையே உள்ள பற்றாக்குறை - சில மாதங்கள் முன்புவரை கவலை அளிக்கும் வகையில் இருந்தது. இப்போது அந்த பற்றாக்குறை சற்றே கட்டுக்குள் வந்துள்ளது. இதுகூட ஏற்றுமதி அதிகரிப்பால் அல்ல. இறக்குமதி குறைப்பால், குறிப்பாக தங்க இறக்குமதி குறைப்பால் ஏற்பட்டதுதான். அரசின் கடுமையான கட்டுப்பாடுகளின் விளைவாக தங்க இறக்குமதி குறைந்துள்ளது. அதே நேரம் தங்கம் கள்ளக்கடத்தல் செய்யப்பட்டு இந்தியாவுக்குள் வந்து கொண்டு இருக்கிறது.
ஏற்றுமதியும் சரிந்துள்ளது. அமெரிக்காவில் பொருளாதாரம் ஓரளவு மீட்சி அடைந்த பிறகும் நமது ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
முக்கியமாக, விலைவாசி விஷம்போல் ஏறி, பெருவாரியான மக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கி உள்ளது.
பணவீக்க விகிதம் இப்போது இறங்கு முகத்தில் உள்ளது உண்மைதான். இது, காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள இறக்கம். இது பருவத்துக்கு ஏற்ப ஏறவும் இறங்கவும் கூடியது. காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை மீண்டும் அதிகரிக்காது என உறுதியாகச் சொல்ல இயலாது. சில மாநிலங்களில் காலம் தவறி மழை பொழிய வாய்ப்பு உண்டு. அது காய்கறிகளின் விளைச்சலையும் அதனால் விலையையும் மீண்டும் பாதிக்கும். சொல்லப்போனால் ஏற்கனவே இதை ரிசர்வ் வங்கி தனது முந்தைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி தனது "ரெப்போ' விகிதத்தை (ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்குத் தரும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை) குறைக்கும் அளவுக்கு பணவீக்கம் சீரடையவில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
தொழிற்கூடங்களின் உற்பத்தி, வளர்ச்சிக்கு பதில், கடந்த பல மாதங்களாக, வீழ்ச்சி அடைந்திருந்தது. சென்ற ஜனவரியில் தான் வீழ்ச்சியிலிருந்து மீண்டு, 0.1 சதவீத அளவு வளர்ச்சி கண்டது. இது மிக மிக சொற்ப வளர்ச்சி என்று சொல்லத் தேவையில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொழிற்கூட உற்பத்தி வளர்ச்சி 2.5 சதவீதமாக அதிகரித்திருந்தது.
மின் உற்பத்தி பொதுவாக நாட்டின் பல பாகங்களிலும், குறிப்பாக தமிழ் நாட்டிலும் பின்னடைவு கண்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருப்பது சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறது. இது ஏட்டளவில் நியாயமாக தோன்றினாலும், மானியங்களையே சார்ந்து வாழும் பெருவாரியான மக்கள் வாழும் இந்தியாவுக்கு இது பொருந்துமா? அவ்வப்போது விலை உயர்வதால், அது விவைவாசி மேலும் உயருவதற்கே வழி வகுக்கிறது. எனவே, இப்போது பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் வழிமுறையை அடுத்துவரும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
தற்போது வழங்கப்படும் மானியம், உரிய நபர்களுக்குப் போய்ச் சேருவதில்லை என்றும், இதனால் வங்கிகள் மூலம் சாதாரண மக்களுக்கும் நேரிடையாக, ரொக்கமாக, போய்ச்சேர வேண்டும் என்னும், "உங்கள் பணம், உங்கள் கையில்' திட்டம் மிகுந்த ஆரவாரத்துடன் செயல்படத் தொடங்கியது.
மக்கள் தொகையில் 50 சதவீதம் பேரே வங்கிக் கணக்குகள் வைத்திருக்கின்றனர். இதனால் "பேங்கிங் கரஸ்பாண்டென்ட்' மூலம் பணம் பட்டுவாட செய்வது என்றும் திட்டம் தீட்டப்பட்டது. ஆயினும் இந்த செயல்பாடுகள், பிரச்னையின் விளிம்பைக்கூடத் தொடவில்லை என்பதுதான் உண்மை.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின்மூலம் குறைந்தபட்சம் 100 நாள்களுக்கு வேலை வழங்குவது பல மாநிலங்களில் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. முறையாகச் செயல்படுத்தப்படும், தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் வேறுவிதமான புகார்கள் கிளம்பிய வண்ணம் உள்ளன.
இத்திட்டத்தின் விளைவாக, விவசாயப் பணிகளுக்கு ஆள் கிடைப்பதில்லை என்பதே அது. விவசாய வேலைகள் உள்ள மாதங்களைக் கணக்கில் கொண்டு இந்த நல்ல திட்டத்தை அந்தந்த மாநிலங்களில் விவசாயப் பணிகள் பாதிக்கப்படாதவாறு திருத்தி அமைக்க வேண்டும்.
சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்களுக்குப் புத்துயிர் ஊட்டுவது அவசரத் தேவை. தொழிற்கூடங்கள் உற்பத்தியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கு 45 சதவீதம். அதேபோல் மொத்த ஏற்றுமதியில் இந்த நிறுவனங்களின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. முக்கியமாக எ.ஈ.ட.யில் அதாவது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் இந்த நிறுவனங்களின் பங்கு 8 சதவீதம். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதில் தொடர்ந்து முன்னுரிமை வழங்குவதோடு, வட்டிக் குறைப்பு, வரிச் சலுகை மற்றும் ஏற்றுமதி நடைமுறைகளை எளிமைப் படுத்துதல் ஆகிய சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தை விரைந்து சரிசெய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் சராசரியாக 7.5 முதல் 8 சதவீதமாக இருந்தது. ஆனால் அதே நேரம், தொழிலாளர்கள், ஊழியர்களுக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்த ஊதியம் வெறும் 2.5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. வேலை வாய்ப்பு உருவாக்கம் உரிய விகிதத்தில் உயரவில்லை; அதிகரித்த வேலைகளுக்கும் நியாயமான சம்பளம் கிடைக்கவில்லை. கணிசமான வேலைகள் ஒப்பந்த அடிப்படையிலும், தாற்காலிக வேலை என்ற பெயரிலும் உழைப்பை உறிஞ்சிவிட்டு, குறைந்த ஊதியம் வழங்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்பதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. இந்த சோகம் களையப்பட வேண்டாமா?
அந்நிய நேரடி முதலீட்டுக்கு முதல் தேவை நிலையான ஆட்சி. அடுத்து, நிலையாக நீடிக்கக்கூடிய கொள்கை முடிவுகள். இன்று ஒன்று, நாளை வேறு ஒன்று என்ற நிலை கூடாது. இன்று இயற்றப்படும் புதிய சட்டத்தின் மூலம் கடந்த கால விதிமுறைகளை மாற்றாத நிர்வாகமாக இருக்க வேண்டும்.
வங்கிகளின் வாராக்கடன்கள் கடந்த வருடம் டிசம்பர் மாத நிலவரப்படி 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. இது மிகுந்த கவலை தரும் விஷயம். வாராக்கடன்களால் வங்கிகளின் மூலதனத்தில் ஒரு பகுதி விழுங்கப்படுகிறது. இப்படி விழுங்கப்படும் மூலதனத்தை சரி செய்திட ரூ.14,000 கோடி வரை மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் (2013-14) ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாக மாறி விடுகிறது. அடுத்த நிதி ஆண்டில் இந்த தொகை கணிசமாக அதிகரிக்கும் என்பது வெளிப்படை.
இதனால் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கப் பொருளாதார சுணக்கம் நேரும் காலங்களில், வாராக்கடன் ஓரளவு நேரக்கூடும். ஆனால், பொருளாதார சுணக்கத்தை சாக்காக வைத்துக்கொண்டு, வேண்டும் என்றே வங்கிகளிலிருந்து வாங்கிய கடனை அடைக்காமல் இருப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டும்.
இப்படியாக பல்வேறு காரணங்களால் வளர்ச்சிக் குன்றிய நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு ஒரு அனுபவம் மிக்க திறமைசாலியான நிதி அமைச்சர் நிச்சயம் தேவை.
இந்நிலையில் ஆட்சியைப் பிடிக்க முழுமூச்சுடன் செயல்படும் அரசியல் கூட்டணிகளும், கட்சிகளும், தாங்கள் பதவிக்கு வந்தால், தங்களது பொருளாதார செயல்திட்டம் என்ன என்பதை தெள்ளத் தெளிவாக மக்கள் மன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அந்த திட்டத்தை செயல்படுத்த உள்ள நிதி அமைச்சர் யார் என்பதையும் வாக்காளர்களுக்குத் தெரிவிப்பது ஒரு நல்ல ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...