அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மாமனிதர் மகராஜன்

ஒருவருக்கு இரு வாரிசுகள் இருப்பது உண்டு. ஆனால் இருவருக்கு ஒரு வாரிசு இருப்பதுண்டா? உண்டு. அவர்தான் காலஞ்சென்ற

Updated On :31 மார்ச் 2014, 7:38 pm

ஒருவருக்கு இரு வாரிசுகள் இருப்பது உண்டு. ஆனால் இருவருக்கு ஒரு வாரிசு இருப்பதுண்டா? உண்டு. அவர்தான் காலஞ்சென்ற நீதியரசர் மகராஜன். ரசிகமணி டி.கே.சி.யின் ரசனைக்கும் சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளையின் சொத்துக்கும் வாரிசாக நியமிக்கப்பட்டவர் அவர்.

"நமது தமிழ்க்கவிதை, பண்பாடு, சமயம் எல்லாவற்றையும் மகராஜனுக்கு உயில் எழுதி வைத்துவிட்டேன்' என்று எழுதியுள்ளார் டி.கே.சி. தமக்குப் பின் தாம் நிறுவிய அறக்கட்டளையை நடத்தும் பொறுப்பினை இவர் கையில்தான் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் ரா.பி. சேதுப்பிள்ளை. சொல்லின் செல்வரின் மனைவி ஆழ்வாரம்மாள் இறந்தபின் வீட்டில் இருந்த புடவைகளையும் வைரக்கம்மல் உள்ளிட்ட நகைகளையும் அவ்வம்மையாருக்குப் பணிவிடை செய்த வேலைக்காரப் பெண்களுக்கு மகராஜன் நன்கொடையாக வழங்கினார். இதற்கு நேரடிச்சாட்சி எழுத்தாளர் கி. ராஜநாராயணன்.

நீண்ட சதுரமான முகம், ஏறுநெற்றி, பெரிய குங்குமப்பொட்டு, கனமான லென்ஸ் பதித்த கண்ணாடி, அதன்வழியாக ஆளை ஊடுருவி அளப்பதுபோல் பாயும் பார்வை, வெற்றிலைக் காவியேறிய மாதுளைப்பற்கள், சில்க் ஜிப்பா, பட்டு வேட்டி, மாலையாய் இருபக்கமும் நீண்டு தொங்கும் மடிப்புக் கலையாத சரிகைத்துண்டு, முகமெல்லாம் பரவிக் கிடக்கும் சிரிப்பு. இப்படி அட்டகாசமாய் மேடையில் நின்று சொற்களின் உணர்ச்சிக்கேற்ப நீட்டி நிறுத்தி ஆடி அசைந்து பேசுவார். அவ்வளவுதான். அந்தச் சொற்களின் நாட்டியத்தில் அடுத்த சில நொடிக்குள் எங்கும் பரவச அலை பரவக் கிறங்கிக் கிடக்கும் அரங்கம்.

இராமகாதை, திருக்குறள், முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப் பரணி, தனிப்பாடல் எதுவாக இருந்தாலும் அவர் பேச்சு சோடை போனதே இல்லை. ஆங்கிலமும் தமிழும் அவர் இழுத்த இழுப்புக்கு வந்துநின்று கைகட்டிச் சேவகம் புரிந்தன. தமிழில் கம்பர் கவிதையும் ஆங்கிலத்தில் ஏ.ஜி.கார்டினர் கட்டுரையும் அவரைப் பெரிதும் ஈர்த்தவை. "நான் ஆனந்தத்தை விரும்பும் போதெல்லாம் தமிழ்க்கவிதையையே அதிகமாகப் படிக்கிறேன். அறிவுவளத்தைப் பெருக்க விரும்பும்போது ஆங்கில வசன நூல்களையே அதிகம் படிக்கிறேன்' என்று நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகமணியைப் போலவே இவரும் நல்லனவற்றை எல்லாம் சுவைத்து மகிழ்ந்தவர். நல்ல கவிதையைக் கேட்டால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார். தாம் பெரிய நீதிபதி என்பதெல்லாம் அவருக்கு மறந்து போகும்.

ஒருமுறை அவர் தம் குருநாதரைக் குற்றாலத்தில் சந்தித்தபோது நடந்த நிகழ்ச்சியைப் பற்றி எழுதியுள்ளார். அவர் சென்றபோது டி.கே.சி.க்கு 103 டிகிரி கடுங்காய்ச்சல். உடம்பைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லி நழுவப் பார்த்துள்ளார். அவர் விடுவதாக இல்லை. தமக்கு அவரோடு சேர்ந்து கவிதையை அனுபவிப்பதே டானிக் என்று கூறிக் கவிமணியின் தில்லைப் பதியுடையான் என்னும் கவியை எடுத்துப் பாடி ஒருமணி நேரம் விளக்கம் சொல்லியுள்ளார். பாடப் பாட அவருடைய சோர்வு பறந்துவிட்டது. மறுபடியும் வெப்பமானியை அவரது நாவுக்கடியில் வைத்துப் பார்த்தபோது 98.45 டிகிரியாக இருந்ததாம். குருநாதர் மட்டுமா இப்படி ரசித்தார்? சீடரும்தான்.

பேச்சைப் போலவே அவரது எழுத்தும் கவர்ச்சி மிக்கது. கட்டுரையின் தலைப்பே நம்மை அசத்திவிடும். ஆடத்தெரியாத கடவுள் - இப்படி ஒரு தலைப்பு. ரசாயன வித்தைகள், உருப்படி, பாட்டுநெசவு, இடக்குத்தனம், வாய்தா, இளக்காரம், தண்டா, தஸ்கா, சில்லறை காரியங்கள், ப்ரவிருத்தி போன்று வந்து விழுந்திருக்கும் முத்திரைச்சொற்கள் அவரது நடைக்கு ஜீவகளையை ஊட்டின.

பிராய்டு, ஜங், ஆட்லர் ஆகிய உளவியல் அறிஞர்களின் கருத்துகளைத் தம் எழுத்தில் அநாயாசமாகப் பரிமாறினார். ஆங்கில இலக்கியங்களைத் தமிழுக்கு இறக்குமதியும் தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்துக்கு ஏற்றுமதியும் செய்து இறவாத புகழ் எய்தினார். ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட், லியர் மன்னன், மாக்பெத் ஆகிய நாடங்களைப் பழகு தமிழில் மொழி பெயர்த்தார். தமிழ் மரபுக்கேற்ப, "பிச்சிப்பூ போன்ற வெள்ளைமுடி' என்றும் "பெண்கள் முந்தானையில் கைவைக்காதே' என்றும் மொழிபெயர்ப்புச் செய்துள்ள பாங்கினைத் தி.க சண்முகம் மிகவும் கொண்டாடி அவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள கம்பன், திருவள்ளுவர் என்னும் ஆங்கில நூல்கள் தமிழ்க்கவிஞர்களின் சிறப்பைப் பிறமொழியினருக்கு உணர்த்துவன. இராமகாதையின்மீது ஈடுபாடில்லாதவர்களைக் கூட அவருடைய எழுத்து சுண்டி இழுத்துப் பாராட்ட வைத்துள்ளது.

அவரது அறிவுக்கூர்மையை ராஜாஜியே பாராட்டிய நிகழ்ச்சியொன்று.ஒருநாள் ராஜாஜி, டி.கே.சி., மகராஜன், இன்னும் சிலர் ஒன்றாக நண்பகல் உணவு அருந்திக்கொண்டிருந்தனர். உலகம் முழுவதும் எத்தனையோ விதமான உணவுப்பழக்கம் இருந்தும் உப்பை மட்டும் எல்லாரும் பயன்படுத்துவதன் காரணம் குறித்து வினவினார் ராஜாஜி. "உப்பு இல்லாவிட்டால் சப்பென்று இருக்கும்', "உப்பு உடல் நலத்துக்கு நல்லது' என்று அவரவர் தங்களுக்குப் பட்டதைத் தெரிவித்தனர். ராஜாஜிக்குச் சரியாகப் படவில்லை. அப்போது மகராஜன், "உப்பு பதார்த்தத்தின் ருசியைக் கூட்டுவதால்தான் மேலான பங்கு வகிக்கிறது' என்று சொன்னார். அதனைக் கேட்டு மகிழ்ந்த ராஜாஜி, "மகராஜன்! சரியாகச் சொன்னீர்கள். நான் நீண்ட நாளாக யோசித்து முடிவுக்கு வராமல் இருந்ததை நீங்கள் தீர்த்து வைத்துவிட்டீர்கள். நீங்கள் நீதிபதியல்லவா இன்று நீதி கிடைத்துவிட்டது. உப்புப் பிழைத்துவிட்டது' என்றாராம்.

அவர் தந்த தீர்ப்புகள் பலரையும் வாழ வைத்தவை. ஒருமுறை, மூன்று குழந்தைகளைப் பெற்ற கல்லூரி விரிவுரையாளர் ஒருவரும் அவர் மனைவியும் மணமுறிவு கேட்டு நீதிமன்றத்தை நாடினர். மகராஜன் விசாரித்தார். முதலில் ஒருவர்மீது மற்றொருவர் குற்றம் சுமத்திக் கோபத்தைக் கொட்டினர். பின்பு சீற்றம் தணிந்தனர்.

அந்நிலையில், அவர்களின் சின்னஞ்சிறு குழந்தைகள் மூவரையும் அழைத்து அவர்கள் யாரோடு வாழ விரும்புகிறார்கள் என்பதனைத் தெரிவிக்கச் சொன்னார். அவர்கள் தாய், தந்தை இருவரோடும் சேர்ந்துவாழ விரும்புவதாகத் தெரிவித்தார்கள். அதனைக் காட்டி அவர்களை ஒத்துவாழும்படி அறிவுரை கூறி வழக்கை முடித்துவைத்தார். அவர்கள் எல்லாரும் அவர் கண்முன்னே ஒரே டாக்ஸியில் ஏறி வீடு சென்றனர்.

மூன்றாண்டுகளுக்குப்பின் ஒரு திரையரங்கில் அவர்களை எதிர்பாராமல் மகராஜன் சந்தித்தார். அப்போது அவர்களுக்கு நான்காவது குழந்தை பிறந்திருந்தது. நன்றி மறவாத அந்தப் பெற்றோர் அக்குழந்தைக்கு மகராஜன் என்று பெயர் வைத்திருந்தார்கள். இதனை அவரே பதிவு செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் தந்த தீர்ப்பால் தங்கள் சொத்துகளை மீளப் பெற்றவர்கள் தம் பிள்ளைக்கு மகராஜன் என்று பெயர்வைத்திருப்பதை இண்டியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குநர் அ. நமசிவாயம் ரயில்பயணத்தில் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்.

புதுக்கோட்டையில் அவர் நீதிபதியாக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி. அது மனிதப் பண்பின் உச்சத்தைக் காட்டுவது. மகராஜன் தன் நண்பர் ஒருவரின் காரில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போனார். நிகழ்ச்சி முடிவதற்குமுன்பே நண்பர் வேறு வேலையாகச் சென்றுவிட்டதால் இவர் நடந்தே வீடுதிரும்ப நேர்ந்தது. அன்றே சொந்த கார் வாங்க முடிவுசெய்து "லாண்டு மாஸ்டர்' என்னும் காரை வாங்கிவிட்டார்.

பொறாமை கொண்ட மற்றொரு நீதிபதி, இவர் குறுக்குவழியில் பெற்ற பணத்தைக் கொண்டு கார் வாங்கியிருப்பதாக அநாமதேயக் கடிதம் ஒன்றைச் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எழுதிவிட்டார். அதனை அறிந்த மகராஜன் ஆற்றாது அம்பாளிடம் மனமுருகித் தனக்கு ஏற்பட்ட பழிக்குத் தீர்வு வேண்டினார். ஓரிரு நாளில் வியப்புக்குரிய வகையில் மொட்டைக் கடிதம் எழுதியவரே தம் முகவரி இட்ட தாளிலேயே மன்னிப்புக் கடிதம் எழுதி அவருக்கும் தலைமை நீதிபதிக்கும் பதிவஞ்சலில் அனுப்பிவிட்டார்.

அன்றிலிருந்து மகராஜன் தம் வழிபாட்டில் அவருக்காக இறைஞ்சினாராம். "எம்மை இகழ்ந்த தீவினையால் மறுமையில் எரியும் நரகத்தில் வீழ்வார்களே என்று இரங்குவது சான்றோர் இயல்பு' என்கிறது நாலடியார்.

மகராஜன் ஒரு முழுமையான மனிதர். வாழ்த்துபவர்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்னும் கருத்தில் "மகராஜனாய் வாழ்க' என்று பொதுப்படையாக வாழ்த்துவார்கள். அதனை மாற்றி, "நீதியரசர் மகராஜனைப் போல் வாழ்க' என்று வாழ்த்தலாம். அது முன்னைய வாழ்த்தினும் சிறப்பாக அமையும். அவர் ஏப்ரல் முதல்நாள் (1-4-1913இல்) பிறந்த பண்பும் பரிவும் நிறைந்த மாமேதை!

இன்று நீதியரசர் மகராஜனின் நூற்றாண்டு நிறைவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.