அணை நிரம்பியது; பொய்மை தோற்றது!

பெரியாறு அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மிகப் பழைமையான இந்த அணை எந்த நேரத்திலும் இடிந்து விழலாம். அவ்வாறு நேர்ந்தால் கேரளத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள் பல இலட்சம் மக்கள் உயிரிழப்பார்கள்' என 1963-ஆம் ஆண்டில் மலையாள வாரஇதழ் ஒன்று முற்றிலும் பொய்யான செய்தியைப் பரப்பியது.
Updated on
3 min read

பெரியாறு அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மிகப் பழைமையான இந்த அணை எந்த நேரத்திலும் இடிந்து விழலாம். அவ்வாறு நேர்ந்தால் கேரளத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள் பல இலட்சம் மக்கள் உயிரிழப்பார்கள்' என 1963-ஆம் ஆண்டில் மலையாள வாரஇதழ் ஒன்று முற்றிலும் பொய்யான செய்தியைப் பரப்பியது. இதற்குப் பின்னணியில் கேரள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இருந்தார்கள்.

கேரள அரசின் முறையீட்டிற்கு செவிசாய்த்த இந்திய அரசு, மத்திய நீர்ப்பாசன ஆணையத் தலைவர் தலைமையில் கேரள - தமிழக தலைமைப் பொறியாளர்கள் கொண்ட ஒரு குழுவை அனுப்பி, அணையின் நிலைமையை ஆராயச் செய்தது. இக்குழுவினர் அணையை சோதித்துப் பார்த்து, அணை நல்ல நிலைமையில் இருப்பதாக அறிக்கை அளித்தனர்.

ஆனால், மீண்டும் 1978-ஆம் ஆண்டு கேரள அரசு இதே பொய்யானப் புகாரை எழுப்பியது. இந்திய அரசு அணையைப் பரிசோதிக்க மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் அதிகாரியை அனுப்பியது. அந்த அதிகாரி திருவனந்தபுரத்திலிருந்து பெரியாறு அணையை நோக்கிச் சென்ற வழிநெடுகிலும், பெண்கள் திரண்டு வந்து, அழுது புலம்பினர்.

இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்பதை உணராத அந்த அதிகாரி, அணை நல்ல நிலைமையில் இருந்த போதிலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையின் நீர் மட்டத்தை 152 அடி உயரத்திலிருந்து 145 அடியாக குறைக்கும்படி கூறினார். அதை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டு அவ்வாறே செய்தது.

1979-ஆம் ஆண்டு மீண்டும் இதே பொய்மைக் கூப்பாட்டை கேரளம் எழுப்பியது. மத்திய பாசன ஆணையத்தின் அப்போதைய தலைவர் டாக்டர் கே.சி. தாமஸ் பெரியாறு அணைக்கு வந்து அதைப் பரிசோதித்தார். அணை உறுதியாக இருந்தபோதிலும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையை மேலும் வலுப்படுத்த சில யோசனைகளை கூறினார்.

அணையை வலுப்படுத்தும் வேலைகள் முடியும் வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க வேண்டும் என அவர் கூறிய அறிவுரையை ஏற்று தமிழக அரசும் அணையின் நீர்மட்டத்தைக் குறைத்தது.

ரூ.12.5 கோடி செலவில் அணையை வலுப்படுத்த தமிழக அரசு செய்த முயற்சிகளுக்கு, தொடர்ந்து கேரள அரசு முட்டுக்கட்டை போட்டது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

உச்சநீதிமன்றம் தலையிட்டு, "அணையை பலப்படுத்தும் வேலையைத் தடுக்கக்கூடாது. மத்திய நீர்வள ஆணையம் அளித்தப் பரிந்துரையில் அணையை மேலும் பலப்படுத்த தமிழக அரசுக்கு நாங்கள் அனுமதி அளிக்கிறோம். அதற்குக் கேரளம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என ஆணைப் பிறப்பித்தது. தமிழக அரசு 10 ஆண்டு காலத்திற்கு மேலாக பணி செய்து அணையை வலுப்படுத்தியது.

கேரள அரசியல்வாதிகள், பெரியாறு அணைப் பகுதியில் சிறிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதைப் பயன்படுத்தி, மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டால் அணை தகர்ந்து எந்த நேரமும் பேரழிவு ஏற்படலாம் என்ற அச்சத்தை மக்களிடையே பரப்பினர்.

அதுமட்டுமல்ல, நில நடுக்கம் ஏற்பட்டு அதன் விளைவாக அணை இடிந்து வெள்ளப் பெருக்கில் இலட்சக்கணக்கான மக்கள் செத்து மிதப்பது போன்ற பொய்யான குறும்படம் ஒன்றைத் தயார் செய்து மக்களை அதிர்ச்சியடைய வைத்தார்கள்.

உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டார்கள். உச்சநீதிமன்றம் அமைத்த குழு மீண்டும் அணைப்பகுதியை சோதனை செய்து 12-12-2000 அன்று ஏற்பட்ட நில நடுக்கத்தின் விளைவு பெரியாறு அணையிலோ அங்குள்ள மற்ற கட்டடங்களிலோ உணரப்படவில்லை என்ற உண்மையை உணர்ந்து, கேரள அரசின் பித்தலாட்டத்தை கண்டித்தது.

அதன் பின்னர், கேரள அரசியல்வாதிகள் பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை கட்டுவதுதான் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என கூற ஆரம்பித்தார்கள். தமிழகத்திற்கு அளிக்கப்படும் தண்ணீரை கொஞ்சம்கூட குறைக்காமல் அளிப்பதாகவும் வாக்குறுதி வழங்கினார்கள். 999 ஆண்டுகளுக்கு செய்யப்பட்ட உடன்பாட்டையே மதிக்க மறுத்தவர்கள், அந்த உடன்பாட்டைச் செல்லாததாக்க, இந்த குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார்கள்.

கேரள அனைத்துக் கட்சித் தூதுக்குழு இந்தியப் பிரதமரை சந்தித்து புதிய அணை குறித்து தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாகக் கூறினர். அதை ஏற்று பிரதமரும் பேச்சு நடத்துமாறு தமிழகத்திற்கு கூறினார்.

ஏற்கெனவே, 50 தடவைகளுக்கு மேல் கேரளத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணாத நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் முன்வந்தது. ஆனாலும், பயன் எதுவும் விளையவில்லை.

எனவே உச்சநீதிமன்றம் தலையிட்டு, முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் மூவர் குழு ஒன்றை அமைத்தது. இதில் கேரளத்தைச் சேர்ந்த நீதிபதி கே.டி. தாமஸூம் அங்கம் வகித்தார்.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்த உயரதிகார குழு, பெரியார் அணையை 5-1-2011 அன்று பார்வையிட்டது. பிறகு, இக்குழு மத்திய மண் விசை இயல் ஆராய்ச்சியின் மூலம் பெரியாறு அணையில் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளையும் ஆராய்ந்து ஏற்றுக்கொண்டது.

"எல்லா வகையிலும் பெரியாறு அணை வலிமை மிக்கதாக இருக்கிறது. எனவே அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம்' என இக்குழு உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது.

அதை ஏற்றுக்கொண்டு 27-2-2006 அன்று அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்சநீதிமன்றம் ஆணை வழங்கியது. ஆனால், அதை உடனடியாக நிறைவேற்றாமல் தமிழகம் மெத்தனம் காட்டியதால் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டன.

இந்தத் தீர்ப்பை தமிழகம் நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டையாக, கேரளம் நதிநீர்ப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றியது. இச்சட்டம் செல்லாது என மறுபடியும் நாம் உச்சநீதிமன்றத்தில் முறையிட நேர்ந்தது.

அதன் விளைவாக எட்டு ஆண்டுகள் காலதாமதம் ஏற்பட்டு இறுதியாக 142 அடி உயரத்திற்கு நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்ற தீர்ப்பை நாம் பெற்றோம்.

இந்தச் சூழ்நிலையில், நீர்மட்டத்தை நாம் உயர்த்தி அது 142அடியை நெருங்கியபோது அதைத் தடுக்க கேரளம் மறுபடியும் உச்சநீதிமன்றத்தையும் இந்திய அரசையும் ஏமாற்றும் முயற்சிகளில் இறங்கியது.

1. பெரியார் அணையின் நீர் மட்டம் 142 அடி உயரத்தை எட்டிவிட்டால் மிகைநீரின் அழுத்தம் காரணமாக பலவீனமான அணை உடைந்துவிடும் என இதுவரை கேரளம் கூறிய காரணம் பொய்த்துப் போகும். எனவே இதைத் தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் முறையிட கேரளம் முடிவு செய்துள்ளது.

2. அணை உறுதியாக இருக்கிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டுவிடும். அதைத் தொடர்ந்து 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம், என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுவிடும்.

3. 136 அடியாக நீர்மட்டம் குறைக்கப்பட்டபோது, அணையின் உள்பக்கத்தில் தங்கும் விடுதிகளையும், கேளிக்கை விடுதிகளையும் அமைத்துக்கொள்ளுமாறு கேரள தொழிலதிபர்களைத் தூண்டி அவர்களும் அவ்வாறே அமைத்தார்கள்.

இப்போது 142 அடியாக நீர்மட்டம் உயர்ந்துவிட்டபிறகு அந்தக் கட்டடங்கள் நீரில் மூழ்கத் தொடங்கியிருக்கின்றன. அப்படியானால் அவையெல்லாம் அணையின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவை என்பது நிரூபணமாகிவிடும்.

இதற்கிடையில் 17-11-2014 அன்று பெரியாறு அணைப் பகுதிக்குள் கேரள சட்டமன்ற பெண் உறுப்பினரான பிஜுமோள் தலைமையில் ஒரு கூட்டம் புகுந்து தமிழக அதிகாரிகளைத் தாக்கிவிட்டு பேபி அணையை சேதப்படுத்த முயன்றுள்ளனர். கேரள போலீசார் அதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இந்திய அரசு இனியும் வேடிக்கைப் பார்க்காமல் உடனடியாக மத்திய

காவல்படையை பெரியாறு அணைப் பகுதிக்கு அனுப்பி அதைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கச் செய்ய வேண்டும்.

35 ஆண்டு காலமாக தமிழகம் பொறுமையுடன் சட்டரீதியான முறையிடல்களில் தனது உரிமையை நிலைநாட்ட முயற்சி செய்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வெற்றிபெற்றிருக்கிறது.

அந்த வெற்றியை காலித்தனத்தின் மூலம் தட்டிப்பறிக்க கேரள அரசியல்வாதிகள் முயல்கிறார்கள். பெரியாறு அணைக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கு கேரள அரசியல்வாதிகளே பொறுப்பாவார்கள்.

கடந்த 35 ஆண்டு காலமாக தமிழகம் பேரிழப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்ட பிறகு பாசனத்திற்கு நீரில்லாமல் தரிசாக மாறிய நிலப்பரப்பு 38ஆயிரம் ஏக்கர்; இருபோகமாக இருந்து ஒருபோக சாகுபடியான நிலப்பரப்பு 26 ஆயிரம் ஹெக்டேர்; ஆழ்துளைப் பாசனத்திற்கு மாறிய பாசனப் பரப்பு 53 ஆயிரம் ஏக்கர்; விவசாய உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு ரூ.55 கோடி; மின்னுற்பத்தி இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடி.

பயன்படுத்தாத நிலப்பரப்புக்கு கூடுதல் குத்தகைப் பணம், கேரள போலீஸாருக்கு ஊதியம், வழக்குச் செலவு இவை எல்லாவற்றையும் சேர்த்தால், கடந்த 35 ஆண்டு காலத்தில் தமிழகம் ஏறத்தாழ

6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழந்திருக்கிறது.

இந்த இழப்பை ஈடு செய்ய வேண்டிய பொறுப்பு கேரளத்திற்கு உண்டு. அதை இந்திய அரசு தலையிட்டு பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அது இந்திய அரசின் கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com