ஜனநாயக நாட்டின் முடிசூடா மன்னன்!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 125-ஆவது பிறந்த நாள் 2014 நவம்பர் 14 அன்று கொண்டாடப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 125-ஆவது பிறந்த நாள் 2014 நவம்பர் 14 அன்று கொண்டாடப்பட்டது. அரசியல் வேறுபாடுகள் குறுக்கிட்டு, மத்திய ஆளுங்கட்சித் தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் காப்பாளர்களும் ஒன்றுபட்ட பாராட்டுக் கூட்டம் நடத்த இயலாமல், தத்தம் கட்சி அளவில் நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டனர்.

ஜனநாயக அடிப்படையிலான அரசியலில், எதிர்க்கட்சியினரை ஆளுங்கட்சித் தலைவர்கள் பொது நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்வதுதான் ஜனநாயக முறையின் முதல் பாடமாகும்.

1962 பொதுத் தேர்தலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. உறுப்பினர்கள் ஏழு பேரில் நானும் ஒருவன்.

அப்பொழுது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் ஜவாஹர்லால் நேரு. 1947 முதல் சுதந்திர இந்தியாவில் பிரதமராகத் தொடர்ந்து வந்துள்ளார்.

பிரதமர் நேருவை நேரிடையாகச் சந்திக்கவும் பேசவும் 1962-இல் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

1962 முதல் தொடர் கூட்டத்தில் இந்திய அரசின் வரவு - செலவுத் திட்டத்தின் கீழ், உள்துறை அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை மக்களவைக் கூட்டத்தில் ஜூன் 5 விவாதிப்பதாக இருந்தது. அந்த விவாதத்தில் கலந்துகொள்ள தி.மு.க. உறுப்பினர் ஒருவருக்கு இடம் தரப்பட்டது. நான் அதில் கலந்து கொள்ள கட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டது.

1962-இல் 488 உறுப்பினர்கள் அடங்கிய மக்களவையில் தி.மு.க.வுக்கு இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழு. அதனால், விவாதத்தில் எனக்குத் தரப்படும் கால அளவு 10 நிமிடம் என முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ்தான் ஆட்சி மொழி இருந்தது. ஹிந்தி ஆட்சி மொழியாவதற்கான முயற்சிகளை தி.மு.க. மிகவும் தீவிரமாக எதிர்த்து வந்ததால், அதற்கான ஆதாரங்களை நான் திரட்டி வைத்திருந்தேன்.

முதலாவதாக, அரசியல் நிர்ணய சபையில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர்களான டி.ஏ. ராமலிங்கம் செட்டியார், எல். கிருஷ்ணசாமி பாரதி ஆகியோர், ஆட்சி மொழியாக ஹிந்தி வருவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எடுத்த கடும் முயற்சிகளை அவையில் முன் வைத்தார்கள்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்கட்சிக் கூட்டங்களில் ஆட்சி மொழி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டபொழுது, இருமுறை ஆதரவு - எதிர்ப்பு வாக்குகள் சரிசமமாக இருந்தனவாம். கடைசியில் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் தமது ஆதரவைத் தந்தார்.

அதனால், அரசமைப்புச் சட்டத்தில் ஆட்சி மொழியாக ஹிந்தி இருக்கும் என்பது இடம் பெற்றது. தமிழ்நாட்டின் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறிய சரிசமமான நிலைமை பற்றி அரசியல் நிர்ணய சபையில் அரசமைப்புக் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கரும் மற்றும் சிலரும் தங்கள் கட்டுரைகளில் வெளியிட்டுள்ளனர்.

மேலும், ஆட்சி மொழியாக ஹிந்தி வருவதை மேற்கு வங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் சுட்டிக் காட்டினேன்.

என்னை இடைமறுத்து காங்கிரஸ் உறுப்பினர் சிலர் ஆட்சி மொழியாக வருவது ஹிந்தியா? அல்லது ஹிந்துஸ்தானியா? கணித முறையில் அரபி எண்களா? இந்தி எண்களா? என்றுதான் பிரச்னைகள் எழுந்தனவே தவிர, மொழி அடிப்படையில் அல்ல என்று வாதிட்டனர்.

எனக்குக் கிடைத்த ஆதாரங்களை வைத்து நான் பேசினேன். இவற்றுக்கு மாறுபட்ட ஆதாரங்கள் இருந்தால், வாய்ப்பு வரும் பொழுது காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசலாம் என்று நான் கூறினேன்.

என் பேச்சு தொடங்கி 20 நிமிடம் ஆகிவிட்டது எனக் குறிப்பிடும் விதமாக அவைத் தலைவர் மணியடித்தார். கடைசியாக ஒன்றை நான் குறிப்பிட்டேன், காலப் போக்கில் ஹிந்தி கற்றவர்களாக, ஹிந்தி பேசுபவர்களாகப் பொதுமக்கள் அனைவரையும் ஆக்கிவிடுவதில் இந்திய அரசு வெற்றி பெறலாம். அப்பொழுது இந்தியா என்பது உத்தரப் பிரதேச, மத்தியப் பிரதேசங்களின் சில பகுதிகளில் அடங்கிய நாடாகத்தான் இருக்கும்.

மறுநாள் காலைப் பத்திரிகைகளில் எனது நாடாளுமன்றப் பேச்சைப் பற்றிச் செய்திகள் வெளிவந்தன. இந்து நாளிதழ் இவ்வாறு எழுதியது: ""ஹிந்தியைக் கட்டாயமாக்குவதை எதிர்த்து மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் இரா. செழியன் பேசினார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் பலவாறாக இடையூறுகள் செய்தபடி இருந்தாலும், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும் ஹிந்தி ஆட்சி மொழி ஆவதற்கு பலமான எதிர்ப்பு எழுந்துள்ளது என ஆதாரங்களுடன் இரா. செழியன் விளக்கம் தந்தார்''.

மறுநாள் பகல் 12 மணி அளவில் நாடாளுமன்றத் துறையின் அமைச்சர் சத்தியநாராயணா என்னை அழைத்து, உங்களைச் சந்தித்துப் பேச பிரதமர் நேரு விரும்புகிறார். உடனடியாக நீங்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்.

நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்த 10-ஆவது எண் அறைக்குச் சென்றேன். பிரதமரின் செயலாளர் உள்அறைக்கு அழைத்துச் சென்றார். நேரு தமது காந்தி குல்லாயை எடுத்துவிட்டிருந்தார்.

பிரகாசமான - பெருமைமிக்கத் தோற்றம், கூரிய கண்கள், கனிவான பார்வை - புன்னகையுடன் அவர் பேச ஆரம்பித்தார். "நேற்று நடைபெற்ற விவாதம் பற்றிச் சொன்னார்கள். நானும் விவாதங்களைப் படித்துப் பார்த்தேன். தேவையற்ற முறையில் இரு சார்பிலும் பேசியுள்ளனர்.

முதலாவதாக, கேரளத்தைச் சேர்ந்த நீங்கள் எப்படி தமிழ்நாட்டில் தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்?' என்று அவர் கேட்டார். எனக்குப் புரியவில்லை. "நான் தமிழ்நாட்டுக்காரன்தான்' என்றேன். அவர் கேட்டார், ""செரியன் எனப் பெயர் இருக்கிறதே''. "அது தமிழ் மொழியில் செழியன்' என்பதை விளக்கினேன்.

கடைசியாக பிரதமர் நேரு கூறினார், ""தமிழ், மலையாளம், வங்காளம், பஞ்சாப் போன்ற இந்தி பேசாத மக்களுக்கு இருக்கும் கட்டாயத்தைவிட, இந்தி மொழி பேசுபவர்களுக்குத்தான் உலக - விஞ்ஞான தொடர்புபெற ஆங்கிலம் தேவைப்படும் என்ற கட்டாயம் இருக்கிறது. அவர்களுக்கு அத்தகையத் திருப்பம் விரைவில் வந்துவிடும் என நான் மிகவும் எதிர்பார்க்கிறேன்''.

அதன்பிறகு, ஒரு நாள் தி.மு.க.வின் ஏழு உறுப்பினர்களையும் அழைத்து நாங்கள் கூறியதைப் பொறுமையுடன் கேட்டு பிரதமர் நேரு விளக்கங்களைத் தந்தார்.

எனக்கு ஏற்பட்ட வியப்பு, 15 ஆண்டுகளுக்கு மேல் சுதந்திர இந்தியாவின் பிரதமராக - இந்தியாவின் முடிசூடா மன்னராக விளங்கியது மட்டுமல்ல, தமது அரசியல் வாரிசு என மகாத்மா காந்தியாலும் அறிவிக்கப்பட்டவர் நேரு.

இந்திய அரசியலில் அப்படிப்பட்ட பேராதரவையும் பெருமைகளையும் பெற்ற நேரு, அப்பொழுது மிகவும் சிறுபான்மையராக, அதிலும் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் உறுப்பினர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும் என்று முற்பட்டது ஒரு சிறந்த பண்பாடாகும்.

மாபெரும் ஜனநாயகவாதியாகத்தான் ஜவாஹர்லால் நேரு இருந்தார் என்பதை 54 ஆண்டுகள் கழித்தும், அவருடைய 125-ஆவது பிறந்த நாள் காலத்திலும் நான் உளமாற உணர்கிறேன்.

அரசியலில் மிகவும் கடுமையாக நேருவையும் அவரது ஆட்சியையும் எதிர்த்து நின்ற தலைவர்கள்கூட ஜவாஹர்லால் நேருதான் இந்திய அரசியலில் ஜனநாயக அடிப்படையில் நாடாளுமன்ற முறைக்கு வலிமையை ஏற்படுத்தினார் என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டனர்.

மகாத்மா காந்திக்கு நெருங்கிய அறிவுசால் ஆலோசகராக விளங்கியவரும், பிரதமர் நேருவால் 1952-இல் இந்தியாவின் கவர்னர் - ஜெனரலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான ராஜாஜி, காங்கிரஸ் கட்சியிலிருந்தும் ஜவாஹர்லால் நேருவிடம் இருந்தும் விலகி 1959 ஜூன் 4 சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், ""இன்று காலையில் சுதந்திரா கட்சி என்ற பெயரில் ஓர் அரசியல் அமைப்பை உருவாக்கி இருக்கிறோம்'' என்று அறிவித்தார். கட்சியின் தலைவர் பேராசிரியர் ரங்கா, பொதுச்செயலாளர் மினு மசானி எனத் தெரிவிக்கப்பட்டது.

எவரும் எதிர்பார்க்காத முறையில், நேருவின் அரசியல் செயல்பாடுகளை நேரிடையாக எதிர்த்து ராஜாஜியின் கண்டனம் இருந்தது.

ஆயினும், 1964 மே 27-இல் ஜவாஹர்லால் நேரு இறந்ததும், ராஜாஜி மிக உருக்கமான இரங்கலைத் தெரிவித்தார். ""என்னைவிட நேரு பதினோரு வயது குறைவானவர். ஆயினும் நாட்டுக்கு பதினோரு பங்குக்கு மேலாகவே முக்கியமானவர். ஆயிரத்து நூறு பங்குக்கு மேலாக நாட்டு மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர். அவர் இறந்த செய்தி திடீரென்று வந்ததும் நான் ஆழ்ந்த துயரில் தள்ளப்பட்டேன்.

கடந்த பத்தாண்டுகளில் அவரைக் கடுமையாக எதிர்த்தேன் என்பது உண்மை. நான் தெரிவித்த பிரச்னைகளுக்கு அவர் ஒருவரால்தான் நல்ல முடிவுகளை எடுத்திருக்க முடியும். அவர் ஒருவர்தான் எனக்கு மேன்மையான, உயர்தர பண்பாடுகளுடைய இனிய நண்பர். அவர் மறைந்துவிட்டார். கடவுள்தான் இனி நாட்டைக் காப்பாற்ற வேண்டும்?''

ஜவாஹர்லால் நேருவின் 125-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதில் பிரிந்து செயல்படும், மிகவும் பெரும் பதவிகளையும் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள்கூட, ஓரளவுக்காவது நேருவின் பண்பாடுகளின் அடிப்படையிலான ஜனநாயகப் பண்பாட்டு அரசியலில் ஈடுபடுவது நாட்டுக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது!

கட்டுரையாளர்: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com