மந்திய அரசு இந்தியாவைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுவதும் அதற்கான முயற்சியில் முனைப்போடு ஈடுபடத் தொடங்கியிருப்பதும் செவியில் தேனாய்ப் பாயும் செய்தி. இந்த முயற்சியில் வெற்றிபெற வேண்டுவது நம் நல்வாழ்வுக்கும் நம்மைப் பிறநாட்டினர் மதிப்பதற்கும் இன்றியமையாதது.
இதற்கு நடுவண் அரசு மட்டும் முயன்றால் போதாது. மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டும். ஒவ்வொருவரும் நான் என் நாட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்வேன் என்னும் உறுதி பூண வேண்டும். ஊர்கூடித் தேர் இழுக்க வேண்டும். ÷
சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளும் அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளும் தங்கள் நாடுகளைத் தூய்மையாக வைத்திருக்கும்போது நம்மால் முடியாதா என்ன? மனம் வைத்தால் வெற்றி நிச்சயம்.
ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக்குப்பைகளை அடுத்தவீட்டுப் பக்கம் ஒதுக்கி வைப்பதைத் தவிர்த்தல் முதற்கடமை. தன் வீடு மட்டும் தூய்மையாக இருந்தால் போதும் என்று எண்ணும் குறுகிய மனப்போக்கைக் கைவிட்டு அண்டை வீடுகளும் தூய்மையாக இருந்தால்தான் தெரு தூய்மையாக இருக்கும், தெருக்கள் தூய்மையாக இருந்தால்தான் ஊர் தூய்மையாக இருக்கும் என்னும் பரந்த எண்ணத்தோடு செயற்பட வேண்டும்.
வீடுதோறும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் இவற்றைத் தனித்தனியே சேகரித்து வைப்பதற்கு மூடியிட்ட இரு குப்பைத் தொட்டிகளை வீட்டின் எண் எழுதி உள்ளாட்சி அமைப்புகள் வழங்குவது அவசியம். இதற்கு என்று ஒரு சிறு தொகை வசூலித்தால்கூடப் பிழையில்லை. அவற்றை அன்றாடமோ, வாரம் இருமுறையோ எடுத்துச் செல்வதற்கு நகராட்சிக் குப்பை வண்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் வருவது தவறக் கூடாது.
சிங்கப்பூரில் வீடுகளில் நீர் தேங்கினாலோ கொசு உற்பத்தியானாலோ தண்டனை தருகிறார்கள். அமெரிக்காவில் வீட்டைச் சுற்றியுள்ள புல்வெளிகளை வெட்டிப் பராமரிக்காவிட்டால் பொறுப்பில் உள்ளவர்களே வெட்டிவிட்டு அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள். அத்தகைய ஒழுங்குபடுத்தும் முறையை நம் நாட்டிலும் கொண்டுவரலாம்.
நம் ஊர் தெருக்களில் கட்டுப்பாடின்றி எருமைகளும் பன்றிகளும் திரிவது கண்ணை உறுத்துகிறது. நாய்கள் சுற்றித்திரியாத தெருக்களே இல்லை.
தூய்மையோடு திகழும் நாடுகளில் கால்நடைகள் ஊருக்கு வெளியே பண்ணைகளில்தான் வளர்க்கப்படுகின்றன. இங்கேதான் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் தெருக்களைக் கழிப்பிடங்களாக எண்ணி, அவற்றைப் பிடித்து வந்து தெருவோரங்களில் விட்டு அழைத்துச் செல்கிறார்கள்.
மற்ற நாடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றைப் பூங்கா போன்ற இடங்களுக்கும் அழைத்துச் செல்லும்போது கையில் பைகளோடு செல்கிறார்கள். அவற்றின் கழிவினை அவற்றில் அள்ளி அருகில் உள்ள குப்பைத்தொட்டியில் போடுகிறார்கள். செல்லப் பிராணிகளை வளர்ப்போர்களிடம் இதனைக் கடைப்பிடிக்க வற்புறுத்த வேண்டும். தவறுவோர்க்கு ஒறுப்புக் கட்டணம் விதித்தாலும் தகும்.
இந்திய நாட்டில்தான் மக்கள் சாலையோரங்களையும் திறந்த வெளிகளையும் கழிப்பிடங்களாக்கிக் கொள்ளும் இழிநிலை உள்ளது. இதனைக் காணும் வெளிநாட்டினர் நம்மை நாகரிகமில்லாதவர்களாகக் கணிக்கிறார்கள். கழிப்பறை இல்லாத வீடே இல்லை என்னும் நிலையை உருவாக்க அரசுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியன. அதில் இன்னும் கூடுதல் முனைப்புக் காட்டுவது நல்லது.
வணிக வளாகம், பூங்கா போன்ற பொது இடங்களில் விசாலமான, தூய்மையான கழிப்பிடங்கள் இருத்தல் வேண்டும். வெளிநாடுகளில் கோயில்களில்கூடத் தூய கழிப்பறைகள் உண்டு. கடற்கரைகளிலும் கூட்டங்கள் திருவிழாக்கள் நடைபெறும் இடங்களிலும் நகரும் கழிப்பறைகளை வைப்பது தூய்மைக்கு வழிவகுக்கும்.
பேருந்து நிலையங்களிலும், பேருந்துகள் வழியிடை நிற்கும் இடங்களிலும் வசதியான கழிப்பிடங்கள் அமைத்துப் பராமரிப்பது அரசின் கடமை. அங்கங்கே கட்டணக் கழிப்பிடங்கள் இருப்பதால் அநியாயக் கொள்ளைகளும், அவர்கள் கேட்கும் கட்டணத்தைத் தர விருப்பமில்லாதவர்கள் அங்குள்ள ஒதுக்குப்புறங்களைக் கழிப்பிடங்களாக்கிச் சுற்றுப்புறத்தைக் கெடுப்பதும் வாடிக்கையாகிவிட்டன.
பல இடங்களில் கட்டணக் கழிப்பிடங்கள் தூய்மையாகப் பராமரிக்கப்படுவதில்லை. அவர்களை யாரும் தட்டிக் கேட்கவும் முடியாது. எந்த நாட்டிலும் பேருந்துப் பயணிகள் தங்கள் இயற்கை அழைப்புகளை நிறைவேற்றிக் கொள்ள இப்படிக் கட்டணம் தரும் நிலை இல்லை.
கட்டணக் கழிப்பிடங்கள் அரசின் அக்கறையின்மையின் அடையாளங்கள். மேலை நாடுகளில் உள்ளதுபோல் நெடுஞ்சாலைகளில் இடை இடையே உணவுக்கடைகளும் கழிப்பிடங்களும் இருக்கும் இளைப்பாறும் இடங்களை அரசு அமைத்தால் பயணிகளின் இன்னல்கள் தீரும்.
நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி நிதியை இதற்காக ஒதுக்கினாலேயே பேருந்து நிலையக் கழிப்பிடச் சிக்கல் தீர்ந்துவிடும்.
எல்லாத் தொடர்வண்டிகளிலும் கழிப்பிடங்கள் ஓரளவு தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் உணவுப்பொட்டலங்கள், வெற்றுத் தண்ணீர்ப்பாட்டில்கள், பழத்தோல்கள் இவற்றைப் போடுவதற்கு எல்லாப் பெட்டிகளிலும் குப்பைத்தொட்டி இல்லை. உயர்வகுப்புப் பெட்டிகளில் மட்டும் உள்ளது.
இதனால் பயணிகள் குப்பைகளை வெளியில் வீசுகின்றனர். இருப்புப்பாதையின் இருமருங்கும் வண்டி வண்டியாகக் குவிந்துகிடக்கும் தாள்களையும் நெகிழிப் பொருள்களையும் கண்டாலே நெஞ்சம் துணுக்குறுகிறது. அவற்றால் அருகில் இருக்கும் வயல்கள் பாழாகின்றன. நாற்றம் மூச்சை அடைக்கிறது.
ஈக்களும் கொசுக்களும் பெருகுகின்றன. இந்த நிலை மாறுவது பயணிகளின் கையில்தான் உள்ளது. எந்தக் குப்பையையும் தொடர்வண்டி நிலையங்களில் உள்ள குப்பைத் தொட்டியில்தான் போடுவது என்னும் நோன்பினைக் கைக்கொண்டால் போதும்.
உழுவுத் தொழிலுக்காகவும் குளிப்பதற்காகவும் குடிநீருக்காகவும் நீர்நிலைகளை எடுத்த தமிழர்கள் அவை எதற்காக ஏற்பட்டுள்ளன என்பது விளங்கும்படி அவற்றிற்குப் பெயரிட்டுள்ளார்கள். ஏர்த்தொழிலுக்குப் பயன்படுவது ஏரி. குளிப்பதற்குப் பயன்படுவது குளம். ஊராரால் உண்பதற்குப் பயன்படுவது ஊருணி.
கோயில் குளங்களில் குளித்தால் நோய் நீங்கும் நிலை இருந்தது. சுந்தரமூர்த்தி நாயனார் திருத்துருத்தித் (குத்தாலம்) திருக்குளத்தில் நீராடிப் பிணிநீங்கி அக்கணமே "மணியளிசேர் திருமேனி பெற்றார்' என்கிறது பெரிய புராணம். திருக்குளங்களின் இன்றைய நிலை என்ன? கால் பதிப்பதற்கே கூச்சமாக இருக்கிறது.
சில திருக்குளங்களில் இறந்தவர்களுக்கு இறுதிக் கடன்கள் செய்துவிட்டு முடிவில் துணிகளையும் இலைகளையும் பூக்களையும் கொட்டி அவற்றை மாசுநீர்த் தேக்கமாக்கிப் பாழடிக்கிறார்கள்.
மேலை நாடுகளில் குடியிருப்புப் பகுதிகளில் குளங்களைப் பாதுகாத்து நீர் வளத்தையும் இயற்கையழகையும் போற்றிக் காத்துவருகிறார்கள். நாமோ முன்னோர்கள் வெட்டிய குளங்களைக் குப்பைகளால் தூர்த்துச் சுற்றுச்சூழலையும் அழகையும் அழித்துவருகிறோம்.
வாகனங்களை நிறுத்துவதற்கும் உள்ளே சென்று வழிபடுவதற்கும் கட்டணம் வசூலித்து வழிபாட்டுத் தலங்களை வணிகத்தலமாக்கும் அரசு, திருக்குளங்களைத் தூய்மையாக்க அத்தொகையினைப் பயன்படுத்தலாகாதா? குளங்குட்டைகள் கொசுப்பண்ணைகளாக இருக்கும் நிலை மாற அவ்வப்பொழுது மருந்துகளைத் தெளித்துப் பராமரிக்கலாமே!
நம் நாட்டில்தான் ஆறுகளைத் தெய்வமாக வழிபடுவதும் அவற்றின் புனித நீரில் ஆடினால் இம்மை மறுமைக்கு நன்மை உண்டாகும் என்று கருதி யாத்திரை மேற்கொண்டு நீராடுவதும் உண்டு. ஆனால், இன்று நம் நாட்டில் ஆறுகள் மாசுபடுத்தப்படுவதுபோல் எந்த நாட்டிலும் மாசுபடுத்தப்படுவதில்லை.
முன்பு சுவை மிக்க குடிநீராக இருந்த பாலாற்று நீர் இன்று தோற்கழிவுகளால் தொடுவதற்குக்கூடத் தகுதியற்றதாகிவிட்டது. ஆறுகளைச் சாயக்கழிவும் தோற்கழிவும் வீட்டுக்கழிவும் ஓடும் சாக்கடைகளாக மாற்றிவைத்துள்ளோம்.
காசியில் ஓடும் தூய கங்கையில் எரிந்தும் எரியாமலும் மிதக்கும் உயிரற்ற உடல்களைப் பார்த்தால் நீராடவே மனம் அஞ்சுகிறது.
நகரங்களின் நடுவே ஓடும் ஆறுகள் பாய்களும் தோற்பொருள்களும் மிதக்கும் திறந்துகிடக்கும் நாற்றச் சாக்கடைகளாக உள்ளன.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஆறுகளின் குறுக்கே இரும்பு வேலிகள் அமைத்துக் குப்பைகளை ஓடாமல் தடுத்து அப்புறப்படுத்தி நீரோட்டத்தை ஒழுங்குபடுத்துகிறார்கள். அதனை நம் நாட்டிலும் பின்பற்றலாம்.
எல்லாம் அரசின் வேலை என்று கருதாமல், நாமும் அரசின் ஓர் உறுப்பு என்று கருதி ஒவ்வொருவரும் உழைத்தால் நல்ல சுற்றுப்புறத்தில் உறைந்து, இனிய நீரை உண்டு, தூய காற்றைச் சுவாசித்து, "விசையுறு பந்தினை'ப் போன்ற உடலைப் பெற்று வலிமையான பொன்னொளிர் பாரதம் படைக்கலாம்.
கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

