தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வேலைவாய்ப்பும் வளர்ச்சியும்

இந்தியாவில் வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு ஆகிய இரு துறைகளிலும் வெளியிடப்படும் புள்ளிவிவரங்கள் நூற்றுக்கு நூறு சரியானதா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

News image
Updated On :7 அக்டோபர் 2014, 8:54 pm

எஸ். கோபாலகிருஷ்ணன்

இந்தியாவில் வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு ஆகிய இரு துறைகளிலும் வெளியிடப்படும் புள்ளிவிவரங்கள் நூற்றுக்கு நூறு சரியானதா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அதேநேரம், மக்களைப் பொருத்தவரை, அவர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. வளர்ச்சி அதிகரிக்கும்போது, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்பதே அது.

2008-இல் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படுவதற்கு முன்பு வரை, ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்தியாவில் வளர்ச்சி சராசரி 8.5 சதவீதமாக இருந்தது. அப்போது, உலக நாடுகளின் சராசரி வளர்ச்சி 4 சதவீதம் மட்டுமே.

அதிகபட்ச வளர்ச்சி கண்ட சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது. அப்போது கூட மேற்கூறிய சிறப்பான வளர்ச்சி, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியாக இருக்கவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் படிப்படியாகச் சரிந்து, இப்போது 4.75 சதவீதமாக இருக்கும்போது, வேலைவாய்ப்புகள் குறைந்ததில் வியப்பில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் என்பது பெரும்பாலான துறைகளில் கிடையாது.

அதுமட்டுமல்லாமல், ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள், தங்க ஆபரணங்கள், ஆபரணக் கற்கள், மருந்து வகை, ரசாயனப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் ஆகிய துறைகளில் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்.

விதிவிலக்காக, "கார்ப்பரேட்' மருத்துவமனைகள், நவீன நட்சத்திர ஹோட்டல்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அயல் பணி ஒப்படைப்பு, வங்கித் துறை ஆகிய சில துறைகளில் ஓரளவு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று மனித வள மேம்பாட்டு ஆய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

தகவல் தொழில்நுட்பத் துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வங்கித் துறையில் கணிசமான அளவு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று அதிகாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த நான்கு ஆண்டுகளில் இரண்டு லட்சம் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு வங்கிகளில் (பொதுத் துறை மற்றும் தனியார் துறை) ஓய்வுபெற உள்ளனர். இது அந்த வங்கிகளுக்கு ஒரு பெரும் சவாலாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல், தற்போது நாட்டில் 52 சதவீத மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. முன்னதாக, "அனைவருக்கும் வங்கிச் சேவை' என்ற திட்டத்தைச் செயல்படுத்திய முந்தைய மத்திய அரசின் முயற்சிகள் உரிய பலனைத் தரவில்லை என்பது கண்கூடு.

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்கத் தேவையில்லை; பணம் போடுதல், எடுத்தல் போன்ற அடிப்படை சேவைகள் மட்டுமே வழங்கக் கூடிய வங்கிக் கணக்குகளை (சர் ஊழ்ண்ப்ப் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ள்) எல்லோரும் தொடங்கலாம் என்பதுதான் முந்தைய அரசின் திட்டம்.

அத்துடன், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு மானியத் தொகையின் ஒரு பகுதியை பயனாளிகளின் கணக்குகளில் செலுத்தலாம்; அதன் மூலமாக சாதாரண மனிதர்களின் வங்கிக் கணக்குகளிலும் பணப் பரிவர்த்தனை நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முந்தைய அரசின் இந்த முயற்சிகள் போதிய பலனைத் தரவில்லை.

புதிய அரசு பதவியேற்றவுடன் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில், "நாட்டில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த "ஜன் தன்' திட்டம் மிகுந்த முனைப்புடன் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வங்கிக் கிளைகளில் மட்டும் அல்லாமல், 60 ஆயிரத்துக்கும் மேலான வங்கி முகாம்களுக்கு ஏற்பாடு செய்து, அங்கும் வங்கிக் கணக்குகளை தொடங்கலாம் என்பதால், கணக்கு தொடங்கும் செயல்பாடுகள் விரைவாக நடைபெறுகின்றன.

இந்தப் புதிய கணக்குகள் இயங்கா கணக்குகளாக மாறிவிடாமல் தடுப்பதற்காகவும், உயிர்த்துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வங்கிக் கணக்குகளில் குறிப்பிட்ட அளவு கடன் வசதி பெற "டெபிட் கார்டு' என்கிற பண அட்டை வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு காப்பீடு வசதியும் செய்து தரப்படும். குடும்பத்தில் எதிர்பாராமல் ஏற்படக் கூடிய இழப்புகளை எதிர்கொள்ள இந்தக் காப்பீடு வசதி ஒரு பாதுகாப்பு அரணாகத் திகழும்.

2015 ஜனவரி 26-ஆம் தேதிக்குள் 7.5 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட உள்ளன. வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே 4.5 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கணக்குகளின் மூலம் வங்கிச் சேவை, குறிப்பாக சேமிப்புக் கணக்கு, ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பணத்தை மாற்றுதல், காப்பீடு, ஓய்வூதியம் வரவு வைத்தல் ஆகியவை அடித்தட்டு மக்களைச் சென்றடைய வழி பிறந்துள்ளது.

வங்கித் துறையில் 1969-இல் நிகழ்ந்த "வங்கிகள் தேசிய மயம்' திட்டத்துக்குப் பிறகு நிகழ்ந்துள்ள புரட்சிகரமான முன்னேற்றம் இது எனலாம்.

இதன்மூலம், எளிய மக்கள் மட்டுமல்லாமல் வங்கிகளும் பயன் அடைகின்றன. குறைந்த வட்டியில் (4 சதவீதம்) நிறைந்த டெபாசிட்டுகள் கிடைக்கின்றன. இது பொருளாதாரத்துக்கும் நல்லது. கையில் உள்ள பணத்தை வங்கிக் கணக்கில் போடுவது என்ற பழக்கம் ஏற்படும்.

இந்தப் புதிய செயல்பாடுகளால், வங்கித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆக, பணி ஓய்வு பெறுபவர்களின் இடங்களை நிரப்புவதற்கும், புதிய பணிகளை மேற்கொள்வதற்கும் அனைத்து வங்கிகளும் புதிய ஆள்களை நியமிக்கும் நடைமுறைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

உதாரணத்துக்கு, பாரத ஸ்டேட் வங்கியில் இந்த ஆண்டு 1,837 புரபஷனரி அதிகாரிகளை நியமிக்கிறார்கள். இதற்காக 18.83 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதாவது, ஒரு வேலைக்கு 1,025 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அதேபோல், 5,092 எழுத்தர் பணிக்கு பெரு நகரங்களில் மாதச் சம்பளம் கிட்டத்தட்ட ரூ.17,500. பாரத ஸ்டேட் வங்கியில் தொடக்கநிலை அதிகாரிக்கு, பெரு நகரங்களில் கிட்டத்தட்ட ரூ.70,000.

மேற்கூறிய வேலைகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் என்ஜினியர்கள், எம்.பி.ஏ.கள் மற்றும் சார்ட்டர்டு அக்கவுண்டன்டுகள்.

பாரத ஸ்டேட் வங்கியில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் புதிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பாரத ஸ்டேட் வங்கி ஒரு உதாரணத்துக்காக. அனைத்து வங்கிகளிலும் (20 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் புதிய தலைமுறை தனியார் வங்கிகள், பழைய தனியார் வங்கிகள் உள்பட) ஆள் சேர்ப்பு நிலவரம் ஏறக்குறைய இதுவே.

இது இரண்டு விஷயங்களை உணர்த்துகின்றன. ஒன்று, அடுத்து வரும் ஆண்டுகளில் வங்கித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்க உள்ளன. இரண்டாவது, அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வருவது வேலையின்மையின் கடுமையைக் காட்டுகிறது.

வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு (30.9.14-ஆம் தேதி வெளியான ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கையிலும் வட்டிவிகிதம் குறையவில்லை), மந்தநிலை காரணமாக இந்திய ஏற்றுமதி சரிந்திருப்பது; உள்நாட்டில் புதிய முதலீடுகளை செய்து தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு தயக்கம் ஆகியவை ஆகும்.

இப்படியாக வேலைவாய்ப்புகளுக்கு தடைக்கற்களாக உள்ள சில அம்சங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன. முன்னேறிய மாநிலங்கள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. உதாரணமாக, தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையைக் குறிப்பிடலாம். இதுபோன்ற தடைக்கற்களை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும்.

படித்த வேலையில்லா இளைஞர்களை வேலைக்குத் தகுந்தவர்களாக மாற்றுவதற்கு பயிற்சி தேவை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு "தேசிய திறன் மேம்பாட்டுக் கழக'த்தை மத்திய அரசு அமைத்தது. இந்தத் திட்டத்தின் மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் 15 கோடி இளைஞர்கள் பயிற்சி பெறுவார்கள்.

வேலைவாய்ப்புகளை உருவாக்கம் செய்திடும் அதேநேரம், அந்த வேலைகளுக்கான, குறிப்பாக, அமைப்பு சாராத வேலைகளுக்கான ஊதியம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். தொகுப்பு ஊதியம் என்ற பெயரில், குறைந்த சம்பளம் கொடுத்துவிட்டு, உழைப்பை உறிஞ்சும் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தொழிலாளர் நல சட்டங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று இந்திய தொழில் சம்மேளனங்கள், தொழில் கூட்டமைப்புகள் கோரிக்கைகளைத் தொடர்ந்து முன் வைக்கின்றன. எந்த வடிவிலும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு முனைப்பு காட்டுவது முறையல்ல.

இந்த விஷயத்தில் மத்திய அரசு நியாயமாகச் செயல்படும் என்று நம்பலாம். சீனாகூட ஏற்றுமதிப் பெருக்கம் என்ற பெயரில், தொழிலாளர்களுக்கு கொடுத்து வந்த குறைந்த ஊதியத்தை அதிகரித்துள்ளது.

ஆக, இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும் எனில், தற்போது அடிமட்டத்தில் இருந்து வரும் தொழிற்சாலை உற்பத்தியை உடனடியாக கணிசமாக பெருக்கியே ஆக வேண்டும். இத்தருணத்தில், மத்திய அரசின் புதிய திட்டமான "இந்தியாவில் தயாரிப்போம்' (ஙஹந்ங் ண்ய் ஐய்க்ண்ஹ) என்ற அற்புதமான திட்டத்தை முன் எடுத்துச் செல்ல வேண்டும்.

சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஆதரவுக் கரம் நீட்டிட வேண்டும். சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால், 1960, 1970-களில் கிழக்காசிய நாடுகளான தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும், 1980-களில் சீனாவும் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் சென்றதற்கு முக்கியக் காரணம், அந்த நாடுகளில் தொழிற்சாலைகளின் உற்பத்தி பெருக்கியதுதான்.

அதிலும், குறிப்பாக அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய தொழில்களை தேர்ந்தெடுத்து, அதற்கான தொழிற்கூடங்களில் உற்பத்தியைப் பெருக்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

தொழில் வள நாடுகளில் இயங்கும் ஆயிரக்கணக்கான பெரு நிறுவனங்கள், இந்தியாவின் அழைப்பை ஏற்று, இந்த நாட்டை உற்பத்தி மையமாக்கிக் கொள்ளலாம். தங்கள் உற்பத்திப் பொருள்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடலாம்.

இதன்மூலம், இந்தியாவும் சம்பந்தப்பட்ட நாடுகளும் பெரும் பயன் அடையலாம். நகரங்களைச் சேர்ந்த, அடிமட்ட மக்களையும், விவசாயத்தை விட்டு விட்டு நகரங்களை நாடி வரும் எளிய மக்களையும் கைதூக்கி விடுவதற்கு, தொழிற்கூடங்களில் புதிய வேலைகளை உருவாக்குவது ஒன்றே சிறந்த வழியாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.