அன்னிய மண்ணில் தமிழும் தமிழரும்

இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள நட்பு நாடுகளில் மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் தனி இடம் உண்டு.
Updated on
3 min read

இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள நட்பு நாடுகளில் மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் தனி இடம் உண்டு. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளில் இந்தியாவைப் போலவே மலேசியாவும், சிங்கப்பூரும் அடக்கம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு விடுதலையடைந்த இந்த இரண்டு நாடுகளும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றன.

இந்த இரண்டு நாடுகளிலும் தமிழ் மக்கள் மிகுதியாக வாழ்வது மட்டுமல்ல, ஆட்சி அதிகாரங்கங்களிலும் பங்கு பெற்றுள்ளனர். இந்நாடுகளில் தமிழர்கள் மிகுதியாக வாழும் பகுதிக்கு "லிட்டில் இந்தியா' என்றே பெயர் சூட்டியுள்ளனர்.

சிங்கப்பூரில் தமிழ் மொழி ஆட்சிமொழியாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் இவை நாட்டின் ஆட்சியினரால் சமநிலையில் பாவிக்கப்படுகின்றன. சிங்கப்பூர் குடியரசுத் தலைவராக இருக்கும் நாதன் என்பவர் தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை.

உலக அரங்கில் சிங்கப்பூரைத் தூக்கி நிறுத்தியது லீ குவான் யூ என்ற வித்தியாசமான அரசியல் தலைவரின் தலைமையும், வழிகாட்டலுமே! மலேசியாவிற்கு மகாதிரின் தலைமை மிகப்பெரிய பலமாகவும், பாலமாகவும் அமைந்தது. இப்போது பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் வெற்றிகரமாக கூட்டணியரசை வழிநடத்துகிறார்.

1965 ஜூலை 17 அன்று அண்ணாவும், இரா. செழியனும் கிழக்காசிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றனர். அப்போது அவர்கள் முதலில் சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் சென்றனர். இரண்டு நாடுகளிலும் கட்டுங்கடங்காத கூட்டம்.

"பல நாடுகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள்...' என்றார் அண்ணா. "மலேசியாவில் மலாய்க்காரர்களும், சீனர்களும் வெற்றிலையும், பாக்கும் போன்றவர்கள் என்றால், சிறிதளவே இருக்கும் சுண்ணாம்பு போன்றவர்கள் தமிழர்கள். சுண்ணாம்பு இல்லாவிட்டால் தாம்பூலம் சுவைக்காது, சிறக்காது...' என்று அவர் அன்று பேசியது மலேசிய தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத பக்கங்கள்.

மலேசிய நாடு அண்மைக் காலத்தில் இரண்டு விமான விபத்துகளால் உலக நாடுகளின் ஒட்டுமொத்த அனுதாபத்தையும் பெற்றுள்ளது. 2014 மார்ச் 8 அன்று எம்.எச்.370 எம்.ஏ.எஸ். போயிங் விமானம் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குப் புறப்பட்டபோது நடுவானில் 239 பேருடன் மாயமானது.

இந்தச் சோகம் முடிவதற்குள் ஜூலை 17ஆம் நாள் மலேசிய ஏர்லைன்ஸ் எம்.எச்.17 விமானம் 298 பேருடன் நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்டது. உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினரின் ஏவுகணைத் தாக்குதலில் வெடித்துச் சிதறி, விமானத்திலிருந்த அனைவரும் மாண்டனர்.

நான் இலக்கியச் சுற்றுலாவாக மலேசியா சென்றிருந்தபோது நாடே துக்கம் கொண்டாடிக் கொண்டிருந்தது. தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. எங்கும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. தொலைக்காட்சி, வானொலி மற்றும் பொது இடங்களில் இதுபற்றியே பேச்சு.

எனது ஒரு மாத காலப் பயணத்தில் அங்குள்ள மக்களிடம் உரையாடி அவர்களின் சமூக, அரசியல், பொருளாதார நிலைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன்.

அங்கு அவர்களது அரசியல் விழிப்புணர்வுக்கு பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமிழ் நேசன், தினக்குரல், தாய்மொழி முதலிய தினசரிகள் நாள்தோறும் தகவல்களைத் திரட்டி "சுடச்சுடத்' தருகின்றன.

இந்தப் பத்திரிகைகளில் இந்தியா - குறிப்பாகத் தமிழ்நாட்டுச் செய்திகள் 2 பக்கங்களும், திரைப்படச் செய்திகள் 2 பக்கங்களும் தவறாமல் இடம்பெறுகின்றன. ஞாயிறுமலரில் கவிதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும், வண்ணங்களில் இடம் பெறுகின்றன.

தமிழ் இலக்கிய அமைப்புகள் செயல்படுவது போலவே சமய ஆன்மிக அமைப்புகளும் இடைவிடாமல் செயல்படுகின்றன. "தமிழ் இலக்கியக் கழகம்' என்ற அமைப்பு நாடு முழுவதும் தமிழ் வகுப்புகள் நடத்தி தமிழ்மணி, புலவர் மணி போன்ற பட்டங்களும், விருதுகளும் வழங்குகின்றன.

நான் அங்கு இருந்த போதுதான் 7.8.2014 சிறந்த தமிழறிஞராகப் போற்றப்படும் சீனி நயினார் முகம்மது காலமானார். இறையருட் கவிஞர் என்றும், தொல்காப்பியத் தந்தை என்றும் மதிக்கப்பட்ட இவர் அந்நாட்டில் தமிழ் மரபினைக் கட்டிக் காத்து வந்தவர்.

மலேசியாவின் மூத்த கவிஞராக இவர், மலேசியச் செம்மொழி சிறப்பு மலரை வெளியீடு செய்து தமிழுக்குச் சிறப்புச் செய்தவர். "உங்கள் குரல்' என்ற தூய தமிழ் ஏட்டைத் தொடர்ந்து நடத்தி வந்தவர்.

அங்கு தமிழ்ப் பள்ளிகள் கட்டுவதற்கும், செயல்படுத்துவதற்கும், புதுப்பிப்பதற்கும் அரசாங்கம் மானியங்களை அள்ளித் தருகின்றன. கோயில்கள் கட்டுவதற்கும், குடமுழுக்கு செய்வதற்கும் பணக் கொடைகளைத் தருகிறது.

இந்த மானியங்கள் முறையாகச் செலவழிக்கப்படவில்லை என்பது பெரும் விவாதமாக நாடெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு நாடுகளிலும் தமிழ் மக்களின் உழைப்பும், உயர்வும் இணை கோடுகளாகவே இருக்கின்றன. ஆங்கிலேயர் அடிமைப்படுத்தி ஆட்சிபுரிந்த நாடுகளையெல்லாம் தமிழர்களைக் கொண்டே வளமாக்கினர். இலங்கையிலும், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் இப்படித்தான்.

ஆதியில் மலேசியாவின் ரப்பர் தோட்டத்தில் உழைத்து உலக அரங்கில் மலேசியாவைத் தூக்கி நிறுத்தியவர்கள் இன்னும் தோட்டப்புறங்களில் அப்படியேதான் இருந்து வருகின்றனர்.

மலேசியாவின் முன்னேற்றத்தோடு அவர்கள் முன்னேற்றமும் இணைய வேண்டாமா?

""கரும்புத் தோட்டத்திலே-- அவர்

 கால்களும் கைகளும் சோர்ந்து

விழும்படி

 வருந்துகின்றனரே!...''

என்று பாரதி பாடியது எல்லா நாட்டு உழைக்கும் மக்களுக்கும் பொருந்தும்.

இலங்கையில் கரும்பு தோட்டமாக இருக்கலாம்; மலேசியாவில் ரப்பர் தோட்டமாக இருக்கும், அவ்வளவுதானே!

வியர்வையும், இரத்தமும் வழிய வழிய அவர்கள், "விம்மி விம்மி விம்மி விம்மி அழுங்குரல்' இன்னும் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறது!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மலேசியாவும், சிங்கப்பூரும் ஒரே நாடாகவே இருந்தது. "மலேயா' என்று அப்போது அழைக்கப்பட்டது. வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றபோது, சிங்கப்பூர் தனி நாடாக இருப்பது என்று முடிவு செய்தது.

லீ குவான் யூ என்ற மக்கள் தலைவர் சிங்கப்பூரைத் தூக்கி நிறுத்தினார். சட்டம் படித்த வழக்குரைஞராக அவர் திட்டம் போட்டு ஆட்சியைப் பிடித்துக்கொண்டார்.

எந்த இயற்கை வளமும் இல்லாத ஒரு தீவினை உலகம் வியக்க உயர்த்திவிட்ட ஆட்சித் திறமையை என்னென்பது?

அவர் ஊழலை ஒழிக்கப் போவதாகப் பேசிக் கொண்டிருக்கவில்லை; ஆனால், ஆட்சியிலும், அலுவலகங்களிலும் ஊழல் இல்லாமல் செய்துவிட்டார் என்றால் வியப்பாக இருக்கிறது. அவர் அதிகம் பேசுவது இல்லை. அந்நாட்டின் சட்டம் மட்டுமே பேசுகிறது.

அவர் விளம்பரம் தேடுவது இல்லை. உலக நாடுகள் எல்லாம் அந்நாட்டுச் சந்தையைத் தேடுகின்றன. அந்த அதிசயங்களைப் பார்க்க உலகமெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் வானளாவிய கட்டட அமைப்புகளும், போக்குவரத்து வசதிகளும் மெச்சும்படியாக இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளைக்

கவர்வதற்கு இது போதாதா?

சீனாவும், ஜப்பானும், பிற நாடு

களும் போட்டிப் போட்டுக் கொண்டு

இந்நாடுகளின் சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளுகின்றன.

"மலேசியாவில் மன்னர் ஆட்சியா? மக்கள் ஆட்சியா?' என்று கேட்டால் இரண்டும்தான் என்று சொல்ல வேண்டும். மன்னர் ஆட்சியின் பிரதிநிதிகளாக சுல்தான்கள்; மக்கள் ஆட்சியின் பிரதிநிதிகளாக பிரதமரும், அமைச்சர்களும், பேரவை உறுப்பினர்களும். வேடிக்கையாக இருக்கிறதா?

எப்படி இருந்தால் என்ன? மக்களுக்கு வேண்டியது நல்லாட்சிதானே! ஊழலும், கொசுக்களும் இல்லாத நாட்டை எல்லோருமே விரும்புவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com