வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

உதட்டளவில் மட்டுமே கூட்டாட்சி முழக்கம்

கூட்டாட்சி முறை பற்றி மத்திய ஆட்சியாளர்கள் இப்போது பேசத் தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. பொதுவான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள், உள்ளூர் நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே இதன் பொருள்.

Updated On :14 ஏப்ரல் 2015, 8:14 pm

கூட்டாட்சி முறை பற்றி மத்திய ஆட்சியாளர்கள் இப்போது பேசத் தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. பொதுவான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள், உள்ளூர் நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே இதன் பொருள். ஆனால், மத்திய அரசின் கொள்கைகளும், செயல்களும் இதற்கு ஏற்றது போல இல்லை என்பதே இப்போதைய நிலையாகும். தொடக்கத்திலேயே இதைச் சரிசெய்யாவிட்டால் இது எதிர்விளைவுகளை உண்டாக்கும் திறன் வாய்ந்தது.

மாநிலங்கள் நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்றால், நல்ல எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கேற்ப நிதி உதவியும் தேவைப்படுகிறது. காரணம், மாநிலங்களால் ரூபாய் நோட்டு அச்சடிக்க முடியாது. மேலும், நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவைவிடக் கூடுதலாக கடன் வாங்கவும் மாநிலங்களால் முடியாது.

சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை இலக்குகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மாநிலங்கள் தங்கள் நிதியாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வரிகளையும் உயர்த்த முடியாது. ஏற்கெனவே, சாதாரண மனிதனைக் கசக்கிப் பிழியும் அளவுக்கு பல்வேறு வரி விதிப்புகள் உள்ளன.

மின் வாரியத்துக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் அளிக்கும் மானியத்தை நிறுத்தினாலோ அல்லது பெட்ரோலிய பொருள்களின் மீதான விற்பனை வரியை உயர்த்தினாலோ அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வு சாதாரண மனிதனுக்கு மேலும் சுமையை அதிகரிக்கவே செய்யும். அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம் போன்ற தவிர்க்க முடியாத செலவினங்கள் அரசுக்கு உள்ளன. அத்துடன் ஏழைகளுக்கான கல்வி உதவித் தொகை, மருத்துவத்துக்கான உதவித் தொகை போன்றவற்றையும் அரசு அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இத்தகைய அத்தியாவசிய, தவிர்க்க முடியாத செலவினங்களுக்குப் பிறகு மாநில அரசுகளுக்கு எஞ்சி நிற்பது சொற்பத் தொகையே. இந்த சூழ்நிலையில், மின்சார மானியத்தையோ, போக்குவரத்துக் கழக மானியத்தையோ நிறுத்தினால், அது வறுமையை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

இதெல்லாம் மத்திய அரசுக்குத் தெரியாததல்ல. மாநில அரசுகளுக்கு அதிக நிதியாதாரம் தேவை என்பதை அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகளில் மத்திய அரசு ஒப்புக் கொள்கிறது. அதே நேரம், இந்த விஷயத்தில் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குச் செய்துவருவது போன்ற தோற்றத்தை மத்திய அரசு உண்டாக்கி வருகிறது.

14-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையை ஏற்று, ஒரே நடவடிக்கையின் மூலம், வரி வருவாயில் மாநிலங்களின் பங்கை 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு பெருமையுடன் பறைசாற்றிக் கொள்கிறது. 14-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையை மேலோட்டமாகப் பார்த்தால், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அதிக நிதி உதவியை மத்திய அரசு அளிக்கிறது போன்ற தோற்றம் உள்ளது.

2014-15இன் திருத்திய மதிப்பீட்டின்படி, வரி வருவாயில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஓராண்டில் ரூ.3,37,808 கோடி வழங்கும் என்று மதிப்பிடப்பட்டது. மத்திய அரசின் முடிவால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி 2015-16இல் ரூ. 5,23,958 கோடியாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1,86,150 கோடி அதிகமாகும். ஆனால், இது ஓராண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் ஓர் ஒப்பீடே ஆகும்.

பொதுவாக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படுபவை அந்த ஆண்டின் இறுதியில் திருத்தி அமைக்கப்படும். ஆனால், உண்மையான தொகை என்பது நிதிநிலை அறிக்கை, திருத்தப்பட்ட மதிப்பீடு ஆகிய இரண்டிலிருந்தும் வேறுபட்டதாக இருக்கும்.

எனவே, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதையே ஒப்பிடுவோம். அதன்படி, 2015-16இல் அறிவிக்கப்பட்ட தொகை ரூ. 5,23,958 கோடியாகும். 2014-15இல் அறிவிக்கப்பட்டது ரூ.3,82,261 கோடியாகும். இதன் வேறுபாடு ரூ. 1,41,742 கோடியாகும். உண்மையில், வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு மிகக் குறைந்த அளவாக ரூ.44,408 கோடிதான் அதிகரித்துள்ளது.

இருந்தபோதும், இந்த குறைந்த அளவிலான உயர்வுகூட கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது மிகவும் அதிகமானதே. ஆனால், எந்த அளவுக்குப் பிரசாரம் செய்யப்படுகிறதோ, அந்த அளவுக்கு மாநிலங்கள் இதனால் பயன் அடையவில்லை என்பதைத்தான் இதில் ஒளிந்துள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து அதிகமான பங்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என 14-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அத்துடன் கூடவே சில நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டு வந்த நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது.

எனவே, வரி வருவாயில் அதிக ஒதுக்கீடு என்பதே உண்மையான முழுச் சித்திரத்தையும் உணர்த்துவதாக இல்லை. வரி வருவாயில் அதிக பங்குடன், ஏற்கெனவே அளிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளும் கணிசமான அளவில் உயர்த்தப்படும்போதுதான் மாநிலங்கள் உண்மையிலேயே பயன் அடைய முடியும்.

2015-16இல் நாட்டின் மொத்த வருவாயில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ. 8,42,963 கோடி பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஆவணம் தெரிவிக்கிறது. முந்தைய ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதுபோன்று ஒதுக்கப்பட்ட தொகை ரூ.7,78,966 கோடியாகும். இந்தத் தொகை பின்னர், ரூ.6,83,966 கோடியாகத் திருத்தப்பட்டது.

முந்தைய ஆண்டு நிதிநிலை அறிக்கையை விட இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ரூ.63,997 கோடியே கூடுதலாகும்.

உண்மையிலேயே கூடுதல் ஆதாயம் என்பது காட்டப்பட்டதைவிட பாதியே ஆகும். இதில் கடன்கள் மற்றும் முன்பண உதவித் தொகைகள் ரூ.12,579 கோடியும் அடங்கும்.

நிதிநிலை அறிக்கையை ஆழ்ந்து ஆய்வு செய்தோமானால், ஒரு கையால் கொடுப்பது போல கொடுத்து, நிதி ஒதுக்கீட்டைக் குறைத்தும், ஒரு சில திட்டங்களில் இருந்து மத்திய அரசு விலகியும் மறுகையால் எடுத்துக் கொள்வது வெட்டவெளிச்சமாகிறது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், மாநிலங்கள் மீது பொருளாதாரச் சுமையை மத்திய அரசு ஏற்றியுள்ளது.

இதுவரை 63 திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்து வந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற 31 திட்டங்களுக்கு மட்டுமே மத்திய அரசு இனி முழு நிதி உதவி அளிக்க உள்ளது. 24 திட்டங்களின் செலவினம் முழுவதும் மாநில அரசின் பொறுப்புக்கு விடப்பட உள்ளது.

இதைவிட மாநில அரசுகளுக்கு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், தேசிய மின் ஆளுமைத் திட்டம், பின்தங்கிய பகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு, காவல் துறை நவீனமயமாக்கல், ராஜீவ் காந்தி பஞ்சாயத்துகளை மேம்படுத்தும் இயக்கம், ஏற்றுமதிக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவி, 6 ஆயிரம் மாதிரிப் பள்ளிகளை ஏற்படுத்தும் திட்டம், உணவுப் பதப்படுத்துதல் தேசியத் திட்டம், சுற்றுலாத் துறை உள்கட்டமைப்பு ஆகிய திட்டங்களை மத்திய அரசு "கைகழுவ' உள்ளது. இந்தத் திட்டங்களைத் தொடருவதா அல்லது முழுமையாகக் கைவிடுவதா என்பது மாநில அரசுகளின் முடிவுக்கு விடப்பட உள்ளது.

2014-15ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது மத்திய அரசின் நிதி உதவி நிறுத்தப்பட்ட திட்டங்களுக்கான தொகையின் மதிப்பு ரூ.56,595.03 கோடியாகும். ஓராண்டில் ஒரே நடவடிக்கையின் மூலம் இவ்வளவு பெரிய தொகை நிறுத்தப்பட்டுள்ளது.

திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதால், இந்தத் திட்டங்கள் தொடர்ந்தால் இதற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை இதைவிட அதிகமாகவே இருந்திருக்கும். மாநிலங்களின் தோள்களில் ஏற்றிவைக்கப்பட்ட சுமையை விட 14-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின்பேரில் அதிகரித்த தொகை குறைவுதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.

பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தினாலும் கூட, அதை ஈடு செய்யும்விதமாக நிதிக் குழுவின் பரிந்துரையை ஏற்று அதிக நிதியை மத்திய அரசு வழங்குகிறது என்று மத்திய அரசின் கொள்கைகளை ஆதரிப்போர் கூறுகின்றனர். தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசுக்கும் நிதி தேவை என்று அவர்கள் வாதிடுகின்றனர். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், மத்திய அரசு தனது திட்டங்களை மாநிலங்கள் மீது திணிக்காமல், மாநில அரசுகள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

துரதிருஷ்டவசமாக, நிதியாதாரத்தை நிறுத்தியதால் இந்தத் தத்துவம் நடைமுறையில் செயல்பாட்டுக்கு வரவில்லை. கூடுதல் நிதி கிடைக்காததால் மாநில அரசுகளுக்கு சுமைதான் கூடியுள்ளது. 2015-16இல் மத்திய அரசு நிதி ஒதுக்காததால் சில திட்டங்களைக் கைவிட சில மாநில அரசுகள் முடிவு செய்துள்ளதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன. நிதி உதவி இல்லாமல் மாநிலங்களுக்கு வெறும் அதிகாரத்தை மட்டும் அளிப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். இதனால், நேரடியாகப் பாதிக்கப்படப்போவது மக்கள் நலன்தான்.

அணுகுமுறையிலும், கொள்கையிலும் உள்ள குறைபாடுகளையே இவை சுட்டிக்காட்டுகின்றன. இது தொடர்பாக முழுவதுமாக மறு சிந்தனை செய்வதே இப்போதைய உடனடித் தேவை. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உடை, கல்வி, சுகாதாரம் அளிப்பது ஜனநாயக அரசின் தவிர்க்கமுடியாத கடமையாகும்.

கூட்டாட்சித் தத்துவத்தை உண்மையிலேயே நடைமுறைப்படுத்தி இலக்குகளை அடைய வேண்டுமானால் மத்திய, மாநில அரசுகளுடன் உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து ஒரே திசையில் பணியாற்ற வேண்டியது அவசியமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.