சூடு ஏறினால் நாடு தாங்குமா?
அரசியலில் இலங்கைப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை என்று எவ்வளவோ உண்டு. இப்படிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கடுகளவு முன்னேற்றம், மிளகளவு முன்னேற்றம் என்றெல்லாம் தலைவர்கள் திருப்தி அடைவதுண்டு.


அரசியலில் இலங்கைப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை என்று எவ்வளவோ உண்டு. இப்படிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கடுகளவு முன்னேற்றம், மிளகளவு முன்னேற்றம் என்றெல்லாம் தலைவர்கள் திருப்தி அடைவதுண்டு.
ஆனால், ஐ.நா. வலியுறுத்தும், புவி வெப்பமாவதைக் கட்டுப்படுத்தும் பேச்சுவார்த்தைகளில் கடுகளவு முன்னேற்றம்கூட காணப்படாமல் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது! சும்மா சொல்லக் கூடாது, உலகச் சுற்றுப் பேச்சுவார்த்தை அதன் இலக்கணப்படி உண்மையாகவே உலகை வலம் வந்து விட்டது.
1992-இல் தொடங்கிய புவி உச்சிமாநாட்டுப் பேச்சுவார்த்தையின் 20-ஆவது சுற்று டிசம்பர் 2014-இல் லைமாவில் நிகழ்ந்துள்ளது.
பிரேசிலின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் வெற்றிக்களிப்புடன் தொடங்கிய முதல் மாநாட்டில், புவி வெப்பமாவதைத் தவிர்க்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றி அடுத்தடுத்து வரும் மாநாடுகளில் விவாதிக்க வேண்டும் என்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டன.
பேச்சு பேச்சு என்று பேசிப் பேசிக் காலம் கழிந்ததே தவிர உருப்படியாகவில்லை. 20-ஆவது சுற்றில் எடுக்கப்பட்ட அற்புத முடிவு, "இனி பேசவே வேண்டாம்...' என்பதுதான்.
இந்தப் பூமியைக் காப்பாற்ற வேண்டுமானால் உலகளாவிய தொழில் வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்து புவியின் வெப்பத்தை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைக்க வேண்டும் என்பதே.
அமெரிக்கா - ஐரோப்பா தொழில் வளர்ச்சி உருவாக்கும் கரிமத் துகள் (கார்பன்) வெளிப்பாடு அதிக அளவில் ஓசோன் படலத்தை ஊடுருவுவதால், வளரும் நாடுகளுக்கு கரிமத் துகள் வெளியீட்டைக் குறைப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்க வேண்டும் அல்லது மானியம் தந்து உதவ வேண்டும் என்ற முடிவும் ரியோவில் ஒப்பந்தமானது.
வளரும் நாடுகளும் அது குறித்த நடைமுறைச் செயல் திட்டம் எதையுமே ஐ.நா.வுக்கு இதுவரை வழங்கியதாகவும் தெரியவில்லை. இதையே சாக்காக வைத்து வடக்கு நாடுகள் கை கழுவிவிட்டன.
லைமா மாநாடு கைமாவாகிவிட்ட சூட்டோடு ஒபாமா, சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் கைகுலுக்கி, சீனாவின் கரிமத் துகள் வெளியீட்டை உயர்த்த அடிக்கல் நாட்டினார். வளிமண்டலத்தில் விடப்படும் கரிமத் துகள் அளவில் சமத்துவம் என்ற சாக்கில் 2030-ஐ நெருங்கும்போது சீன - அமெரிக்க சமத்துவம் உறுதிப்படுமாம்.
அந்நிலை வரும்போது ஆண்டுக்கு ஒரு நபர் மூலம் வளி மண்டலத்தில் விடப்படும் கரிமத் துகள் 18 டன் என்ற அடிப்படையில் சீனா 14 டன் வரை உயர்த்தலாம். வளிமண்டலத்தின் தாங்கு சக்தியே 2 டன் என்கின்றபோது, இரு நாடுகளும் சேர்ந்தே 32 டன். இந்த சமத்துவப் பாதையில் ஒவ்வொரு நாடும் சென்றால் பூமியின் கதி அதோகதிதான்.
இதுநாள்வரை எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்ட இந்தியா, தனது அமெரிக்க சமத்துவத்தை நிலைநாட்ட முன்வந்ததன் விளைவே ஒபாமாவின் குடியரசு தின விஜயம். ஒபாமா ஓ.கே. சொல்லிவிட்டார். வளர்ச்சிப் பாதையில் புவியைச் சூடேற்றும் பணி இந்தியாவில் தொடங்கிவிட்டது. எப்படி?
காடுகள் என்று இருந்தால், பழங்குடி மக்களுக்கு வாழ்வுரிமை வழங்க சட்டம் ஒன்று இருக்கும். நில அபகரிப்புச் சட்டம் போட்டுக் காடுகளைத் தொழில் விற்பன்னர்களுக்கு நிலக்கரி தோண்டவும், அலுமினியம் வெட்டி எடுக்கவும், இரும்பை வெட்டி எடுக்கவும் வழங்கிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும். பழங்குடி மக்களை மொட்டையாண்டிகளாக்கும் திட்டம் "மேக் இன் இந்தியா'வில் வந்துவிட்டது.
உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி புவி வெப்பமாவதைத் தடுக்க முன்வராதபோது, ஒவ்வொரு நாட்டிலும் இயற்கையின் இடர் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். இந்தியாவில் என்ன நிகழும்? நாம் எதிர்நோக்க இருக்கும் இடர்கள் எவை? இவற்றை மண்டலவாரியாகப் பரிசீலிக்கலாம். இந்தியாவின் சூழல் பாதுகாப்பை புவியியல் அடிப்படையில் ஐந்தாகப் பிரித்து நோக்கலாம்:
1. இந்தியாவின் பாலை நிலப் பகுதி:
உலகிலேயே அதிக மக்கள் தொகையை உள்ளடக்கிய தார் பாலைவனம் - 1891-1996 கால கட்டத்தில் வெப்ப உயர்வு 0.5 டிகிரி செல்சியஸ்தான் சமாளிக்கப்பட்டது. 2021-50ஐ நெருங்கும்போது வெப்பநிலை 2.5 டிகிரி செல்சியஸ் உயரும். பருவமழை உயர்ந்தாலும் பரவல் இல்லாமல் ஒரே இடத்தில் 2 செ.மீ. கொட்டித் தீர்க்கும். விவசாயப் பயனுக்குக் கிட்டும் நீர் 13% குறையும். மானாவாரி எண்ணெய் வித்து - குறிப்பாக வேர்க்கடலை உற்பத்தி வீழ்ச்சியுறும்.
2. மத்திய இந்தியா - தக்காண பீடபூமி:
மானாவாரி விவசாயத்தின் மையமே இதுதான். பருப்பு வகை, புன்செய் தானியங்கள், பருத்தி விளையக்கூடிய பொன்னான பூமி இது. உணவு உற்பத்தியில் 40 சதவீதம் இங்கு விளைகிறது.
2021-50ஐ நெருங்கும்போது ஒரு டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும். இங்கும் பருவமழை பரவலாக இல்லாமல் வெப்பத்தால் ஏற்படும் அதிகப்படி மழை ஒரே இடத்தில் கொட்டும். கர்நாடக மாநிலத்தில் வறட்சி தலை தூக்கும். தமிழ்நாட்டுக்குக் காவிரி வரத்து நின்றுவிடும். திடீர் மழை, திடீர் வெள்ளம் எல்லாம் கடலுக்குச் செல்லும். உணவு உற்பத்தி 10% குறையும்.
3. இமயமலைப் பிராந்தியங்கள்:
2050-ஐ நெருங்கும்போது உயரும் வெப்பம் 1.5 டிகிரி முதல் 2.1 டிகிரி செல்சியஸ். இமயமலைப் பிராந்தியத்தின் தட்பவெப்ப மாற்றம் இந்தியாவின் பருவநிலை மாற்றத்தைத் தோற்றுவிக்கும். பிரம்மபுத்திரா வெள்ளம் கட்டுக்குள் அடங்காது. கங்கை வெள்ளம் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசத்தைச் சேதப்படுத்தும். முக்கியமாக வெள்ளிப் பனிமலை உருகி ஓடும். வெள்ளிப் பனிமலையில் உள்ள வெள்ளி (எப்ஹஸ்ரீண்ங்ழ்ள்) குறையும். பாசுமதி அரிசி உற்பத்தி குறையும். மண் அரிப்பால் மேய்ச்சல் நிலம் சேதமாகும்.
4. சிந்து - கங்கை சமவெளி:
இன்னும் முப்பது ஆண்டுகளில் உயரும் வெப்ப நிலை 2 டிகிரி முதல் 2.5 டிகிரி செல்சியஸ். உலகிலேயே மாபெரும் நன்செய் பூமி இது. 800 சதுர கி.மீ. பரந்து கிடக்கும் இப்பகுதியே உணவின் இதயம். இப்பகுதியில் விளையும் நெல், கோதுமையைக் கொண்டுதான் இந்தியாவில் பசிப் பிணி அகற்றப்படுகிறது.
இந்த உயிர் மண்டலம் வெப்பமானால் உத்தரப் பிரதேசம், பிகார் வறட்சியுறும். பஞ்சாப், ஹரியாணாவில் கோதுமை விளைச்சல் குறையும். விவசாயத்துக்குரிய பாசன நீர் தட்டுப்பாடு தீவிரமாகும். கங்கை - பிரம்மபுத்திரா வெள்ளம் கடலை நிரப்பும். சிறிய துறைமுகங்கள் காணாமல் போகும். உணவு உற்பத்தி குறைவதால் உபரி உணவும் குறைந்து பொது விநியோகம் ஸ்தம்பிக்கும்.
5. இந்தியக் கடற்கரை மண்டலம்:
இந்தியக் கடற்கரைகளின் நீளம் 7,519 கி.மீ. தொலைவு அரபிக் கடல், வங்கக் கடலைச் சார்ந்துள்ளது. வரும் 35 ஆண்டுகளில் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 4 டிகிரி செல்சியஸ் வரை உயருமானால், கடல் நீர் 800 மீட்டர் தரைப் பகுதியை விழுங்கும்.
குறிப்பாக, கொல்கத்தா நகரத்தைச் சுற்றியுள்ள பத்து லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் பறி போகும். 8 மீட்டர் உயரம் வரை கடல் அலை வீசும். பல சிறு துறைமுகங்கள் அழியும். அழியக்கூடிய சொத்து மதிப்பு 2,000 மில்லியன் அமெரிக்க டாலர். நெய்தல் பண்பாட்டின் நெல் உற்பத்தி குறையும். தமிழ்நாட்டில் குடிநீர் உப்பாகும். தமிழ்நாடு, ஆந்திரம், ஒரிசாவில் புயல் தீவிரமாகும். தமிழ்நாட்டுக்கு மீண்டும் சுனாமி ஆபத்து உண்டு.
ஒட்டுமொத்தமாக கவனித்தால் பூமியின் வெப்பம் மேலும் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும்போது ஏற்படக்கூடிய பெருந்தாக்கம் உணவு உற்பத்தி, குடிநீர் - பாசன நீர்ப் பற்றாக்குறை. கட்டுப்படுத்த முடியாத அளவில் சிந்து - கங்கை - பிரம்மபுத்திரா வெள்ளத்துடன் வெள்ளிப் பனிமலை உருகி இந்தியக் கடல் மட்டம் உயரப் போகிறது.
எனினும், இந்த இயற்கைப் பேரிடரை சமாளிக்க நம் கையில் வெண்ணெய் இருந்தும் நெய் எங்கே என்று தேடுகிறோம். கடல் மட்டம் உயராமல் இருக்க ஜீவ நதிகளின் குறுக்கே அணை கட்டி, வெள்ள நீரை அப்படியே நீர் வங்கியாகச் சேமித்து, கங்கை முதல் குமரி வரை நீர்வழிச் சாலையின் உருவாக்கமே அந்த வெண்ணெய்.
இதற்கான திட்டம் அப்துல் கலாம் - காமராஜர் வசம் இருந்தும் செயலாக்குவதில் தயக்கம் ஏன்? மாபெரும் நகரங்களின் உருவாக்கம், மெட்ரோ ரயில், மேக்-இன்-இந்தியா போன்ற பொருளாதாரத் திட்டங்கள் வெற்றி பெற விவசாயமும் உணவு உற்பத்தியும் உயர்ந்தால்தான் முடியும்.
விவசாயம் மேன்மையுற நீர்வளம் வேண்டும். நீர்வளம் பெற நீர்வழிச் சாலைகள் அமையாவிட்டால் சூடு ஏறி நாடு அழியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...