அரசின் எந்தவித செயலும் சட்ட விரோதமாக இருக்காது என்று கருதி, அதன் வழியை நீங்கள் தேர்ந்தெடுத்துப் பின்பற்றினால், "மன்னன் எவ்வழி, மக்கள் எவ்வழி' என்ற பழமொழியை நிரூபிக்கும் விதமாக, சாலையிலோ அல்லது வேறிடத்திலோ உங்களுக்கு விலை மதிப்புள்ள ஏதாவது ஒரு பொருள் திடீரென கிடைத்தால் அதன் உரிமையாளர் யார் என்பது பற்றிக் கவலைப்படாமல், காவல் துறைக்கும் தெரிவிக்காமல் நீங்களே அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மக்களுக்குச் சேர வேண்டிய, ஆனால், கேட்பாரற்றுக் கிடக்கும் பணத்தை அரசு அப்படித்தானே நினைக்கிறது. பொது மக்கள் வருங்கால வைப்பு நிதியில் (பி.பி.எஃப்) ரூ.3,000 கோடியும், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியில் (இ.பி.எஃப்) ரூ.6,000 கோடியும் கேட்பாரற்று தொகுப்பு நிதியாக உள்ளன. இந்த நிதியை ஏழைகளுக்கான நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று மத்திய அரசு கருதுகிறது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசியபோதுகூட இதைக் குறிப்பாக உணர்த்தியுள்ளார். உண்மையில் இப்படிக் கேட்பாரற்று கிடக்கும் மக்கள் பணம் கூடுதலாகக்கூட இருக்கலாம்.
ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அரசின் ஆளுகைக்கு உள்பட்ட வேறு சில துறைகளிலும் இதுபோல் கேட்பாரற்றுக் கிடக்கும் மக்கள் பணம் கணிசமாக உள்ளது. ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வருடாந்தரக் கணக்கு (2012-2013) அறிக்கையின்படி, 2013 மார்ச் 31 வரை ரூ.26,496.61 கோடி கோரப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: "செயல்படாத கணக்குகள், அசல் தொகை, அதற்கான வட்டி எவ்வளவு என்பது குறித்து பி.எஃப். நிறுவனம் குறிப்பிடவில்லை.' இதற்கு, "செயல்படாத கணக்குகள் எவ்வளவு என்பது உறுதியாகத் தெரியவில்லை' என்று பி.எஃப். நிறுவனம் விளக்கம் தந்துள்ளது.
அதாவது, செயல்படாத கணக்குகள் எத்தனை என்பது குறித்துத் தங்களுக்குத் தெளிவாகத் தெரியாது என்று தெரிவித்துள்ளது. எப்படியிருந்தாலும் அதன் எண்ணிக்கை குறைவாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம். ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியத்தின் வலைதளத்தில் சென்று பார்த்தால், இவற்றின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கும் என்பது உறுதியாகிறது.
எனவே, செயல்படாத கணக்குகளில் கேட்பாரற்று இருக்கும் பணம் அரசு சொல்வதைவிட நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். இதே நிலை நீடித்தால் இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது. 2014-ஆம் ஆண்டு மத்தியில் கோரப்படாமல் இருக்கும் மக்கள் பணம் ரூ.32,000 கோடி என்று சொல்லப்படுகிறது.
ஊழியர்கள் வருங்கால வைப்புநிதித் திட்டம் 1952 விதி 72(6)-ன் கீழ், (1) ஓர் ஊழியரின் பெயரிலான கணக்குகள் முடித்து வைக்கப்பட்டபிறகு (செட்டில்மென்ட்), அவரது கணக்கில் சேர வேண்டிய நிலுவைத் தொகை ஏதாவது இருந்து அதை அந்த நிறுவனம் செலுத்தியிருந்து ஊழியரின் முகவரி தெரியாமல் இருந்தால் அது செயல்படாத கணக்கில் சேர்க்கப்படும்.
(2) ஊழியர்கள் எவராவது பணியைவிட்டு நின்று தனக்குச் சேர வேண்டிய தொகையைக் கோராமல் இருந்தால் அல்லது ஊழியர்கள் இறந்துபோய் 36 மாதங்களாகியும் அந்தத் தொகையைக் கோராமல் இருந்தால் அல்லது திருப்பித் தரப்படாமல் இருந்தால் அதுவும் செயல்படாத கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும். மேலும் இவற்றுக்கு வட்டி கிடைக்காது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் செயல்படாத கணக்குகளின் கதை இப்படி இருக்க, வங்கிகள் மற்றும் காப்பீட்டு (இன்சூரன்ஸ்) நிறுவனங்களில் இவ்வாறு கேட்பாரற்றுக் கிடக்கும் மக்கள் பணமும் கோடிக்கணக்கில் உள்ளது.
2013 டிசம்பர் 31 நிலவரப்படி அனைத்து வர்த்தக வங்கிகளிலும் பத்தாண்டுகளுக்கு மேலாக கோரப்படாமல் இருக்கும் வைப்புத் தொகை ரூ.5,124.98 கோடி என்று மாநிலங்களவையில் அரசு தெரிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும்.
இதேபோல, காப்பீட்டு நிறுவனங்களில் கோரப்படாமல் இருக்கும் மக்கள் பணம் 2014 மார்ச் நிலவரப்படி ரூ.5,848 கோடி எனத் தெரியவந்துள்ளது. இந்தத் தொகையும் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் தொகை 136 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கேட்பாரற்றுக் கிடக்கும் பணம் எவ்வளவு என்பதைக் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது நிதி அறிக்கையில் தனியாகக் குறிப்பிட வேண்டும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் அதைத் தங்கள் சொத்தாகக் கருதக் கூடாது என்றும் காப்பீடு கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.) கூறியுள்ளது.
பொதுமக்கள் வருங்கால வைப்புநிதி, ஊழியர்கள் வருங்கால வைப்புநிதி, வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் மக்கள் பணம் ரூ.64,000 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால்கூட இதன் மதிப்பு ரூ.40,000 கோடி இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.
இப்படிக் கோரப்படாமல் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு உரியவர்கள் யார் என்று கேட்டால், சேமிப்புதாரர்களும், அவர்களின் சட்டப்படியான வாரிசுகளும்தான். இந்தப் பணத்தை முறைப்படி அதன் உரியவர்களிடம் சேர்ப்பதுதான் சரியான அணுகுமுறையாகும். ஆனால், அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் அணுகுமுறை அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.
பொது மக்கள் வருங்கால வைப்புநிதியிலும், ஊழியர்கள் வருங்கால வைப்புநிதியிலும் கேட்பாரற்று இருக்கும் வைப்புத் தொகைகள் பற்றி ஆராய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் எச்.ஆர்.கான் தலைமையில் ஒரு குழு 2014 செப்டம்பரில் அமைக்கப்பட்டது.
கேட்பாரற்று இருக்கும் பணம் யாருடையது, அதன் உரிமையாளர் யார் என்று தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் அதைச் சேர்ப்பிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்துவதற்காக இந்தக் குழு அமைக்கப்படவில்லை.
மாறாக, இவ்வாறு கேட்பாரற்று இருக்கும் மக்கள் பணம் எவ்வளவு என்பதை மதிப்பிடுதல், அந்தத் தொகையை தொகுப்பு நிதியில் சேர்ப்பதற்கான நடைமுறைகள் குறித்து ஆலோசனை கூறுதல், இதற்கு சட்டரீதியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரைத்தல், அந்தப் பணத்தை மூத்த குடிமக்களின் நலனுக்குச் செலவிடுவதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைத்தல் ஆகியவையே அந்தக் குழுவின் பணிகளாக வரையறுக்கப்பட்டன.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் தனது பட்ஜெட் உரையில், இவ்வாறு கேட்பாரற்று இருக்கும் மக்கள் பணத்தை ஒரு தொகுப்பு நிதியாகப் போட்டு அதிலிருந்து ஒரு பகுதியை முதியோர் உதவித் தொகை, ஏழைகள் நலத் திட்டங்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள் நலனுக்குச் செலவிட திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்
திருந்தார்.
இதற்கு முன்னதாகவே ரிசர்வ் வங்கி, வங்கிகள் கட்டுப்பாட்டுச் சட்டம், 1949 பிரிவு 26 ஏ-யின் கீழ், வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் கோடிக்கணக்கான வைப்புத் தொகையை ஒரு தொகுப்பு நிதியாக்கி "வங்கி சேமிப்புதாரர்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வுத் திட்ட'த்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை ரிசர்வ் வங்கி 2014 மே 24-இல் அறிவித்தது.
இதன்படி, பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்படாத கணக்குகளை இந்தத் திட்டத்தில் சேர்க்குமாறு வங்கிகள் கூறின. அதாவது, இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, 2014 ஜூன் 30-இல் இதற்கான தொகை சேர்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் இப்படி செயல்படாத கணக்குகளின் தொகையை அதாவது சேமிப்புதாரர்களின் கோரப்படாத வைப்புத்தொகைகள், ஈவுத் தொகைகளை இந்தத் திட்டத்தில் சேர்க்குமாறு வங்கிகளைக் கேட்டுக்கொண்டது.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் அளித்துள்ள பதிலில், சேமிப்புதாரர்களால் கோரப்படாத பணம், முதிர்வடைந்த வைப்புத் தொகைகள் மற்றும் கடன் பத்திரங்களின் தொகை 2014 மார்ச் 31 நிலவரப்படி ரூ.3,454.29 கோடியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதாவது, சேமிப்புதாரர்களால் கோரப்படாமல் 7 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் பணத்தை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியில் சேர்க்குமாறு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.
பொதுமக்கள் வருங்கால வைப்புநிதி, ஊழியர்கள் வருங்கால வைப்புநிதி, வங்கிகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் செலுத்தப்பட்டுள்ள பொதுமக்கள் பணத்தை அதன் உரிமையாளர்களைக் கண்டுபிடித்துச் சேர்ப்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் அரசும் அதன் சார்பு நிறுவனங்களும் தங்கள் விருப்பப்படி பயன்படுத்த நினைக்கின்றன என்பதையே அரசின் செயல்கள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.
சேமிப்புதாரர்கள் அல்லது பயனாளிகளின் சரியான இருப்பிட முகவரி தெரியவில்லை என்று வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பொது மக்கள் வருங்கால வைப்புநிதி நிறுவனங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படியெனில், தங்களிடம் கடன் பெற்றவர்களின் சரியான இருப்பிடம் தெரியவில்லை என்று வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் கடனைத் தள்ளுபடி செய்துவிடுமா என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு அவர்களால் ஆம் என்ற உறுதியான பதிலைச் சொல்ல முடியாது. கடன் வாங்கிய நபரின் உண்மையான இருப்பிட முகவரியை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து கடன் பாக்கியை வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் முழுமையாக வசூலித்து விடுகின்றன என்பதுதான் உண்மை.
"சேமிப்புதாரர்களுக்குச் சேர வேண்டிய பணத்தை நாங்கள் முடக்கிவிடவில்லை. ஒரு தொகுப்பு நிதியில்தான் செலுத்தி வைத்துள்ளோம். அதை எப்போது வேண்டுமானாலும் கேட்டுப் பெறும் உரிமை அவர்களுக்கு உள்ளது' என்று அதை நிர்வகிப்பவர்கள் கூறலாம்.
ஆனால், இதெல்லாம் நடக்கிற விஷயமா? வங்கியிலோ, வருங்கால வைப்புநிதியிலோ பணம் செலுத்தியவர்கள் அதைப் பற்றிய அறியாமையினாலோ அல்லது போதிய தகவல் இன்மையினாலோதான் பல ஆண்டுகளாக அதைக் கோராமல் உள்ளனர். இந்த நிலையில், புதிய ஓர் அமைப்பிடமிருந்து அவர்கள் தங்கள் பணத்தைக் கோருவார்கள் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது.
எனவே அரசும், இந்தப் பணத்தை நிர்வகிப்பவர்களும் இனியும் தாமதம் செய்யாமல் பொதுமக்களுக்குச் சேர வேண்டிய பணத்தை அசல் மற்றும் வட்டியுடன் உண்மையான உரிமையாளர்கள் யார்
எனக் கண்டுபிடித்து அவர்களிடம் சேர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டுமே தவிர, அப்பாவிகள் மற்றும் ஏழை மக்களின் பணத்தைக் கபளீகரம் செய்ய நினைக்கக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

