நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேடப்படும் வாடகைத் தாய்

மக்கட்பேற்றினை திருவள்ளுவர் போற்றிப் புகழ்ந்தார். குழலிசையை விட, யாழிசையை விட, குழந்தையின் மழலை மொழி இனியது என்றார்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2015, 8:14 pm

மயிலை.சிவ.மாசிலாமணி

மக்கட்பேற்றினை திருவள்ளுவர் போற்றிப் புகழ்ந்தார். குழலிசையை விட, யாழிசையை விட, குழந்தையின் மழலை மொழி இனியது என்றார். இத்தகைய இன்ப நிலை சிலருக்கு வாய்ப்பதில்லை. அவர்கள் மன வேதனைச் சுழலில் சிக்கி வேதனையில் மருகுவார்கள். இதிலிருந்து மீள ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்வார்கள். இதையும் தாண்டி, இப்போது வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெறும் நிலை சில நாடுகளில் உள்ளது.
 சங்க காலத்தில் ஐந்து வகையான தாய்கள் இருந்திருக்கிறார்கள். நற்றாய், செவிலித் தாய், ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓலுறுத்துவாள் என்று அவர்கள் சொல்லப்பட்டனர். இன்று ஆறாம் தாயாக வாடகைத் தாய் அறிமுகமாகியுள்ளார். வேறு ஒருவரின் கரு முட்டையைத் தன் கருவறையில் வைத்து வளர்த்துக் குழந்தை உருவில் உரியவரிடம் ஒப்படைக்கும் அரும்பணியை அவர் செய்கிறார்.
 ஒரு பெண் வாடகைத் தாய் ஆவதற்குப் பல காரணங்கள் வழிகாட்டுகின்றன. கணவனை இழந்த பெண், வருமானம் தேடும் நிலையில் வாடகைத் தாய் ஆகிறார். பொருளியலில் வாடிக் கிடக்கும் தாய், தன் மகனுக்குக் கல்விச் செல்வம் தருவதற்காக இச் செயலில் ஈடுபடுகிறார்.
 மறுமணம் செய்து கொண்ட வயது முதிர்ந்த தாயின் மகிழ்ச்சிக்காக, அவளது சொந்த மகளே வாடகைத் தாயாக மாறிய நிகழ்வும் உண்டு. தொண்டு என்ற முறையில், உயர்ந்த நோக்கம் கொண்டு வாடகைத் தாயாக உதவி செய்பவரும் உண்டு.
 வாடகைத் தாயாக மாறும் நிலையில் சில சிக்கல்களும் பக்கம் வந்து நிற்கும். பாலுறவு இல்லாத நிலையில் யாரோ ஒருவருடைய கருவைத் தாங்குவது இல்லறம் மீறிய செயலாகச் சிலரால் கருதப்படும். சீர்கேடான அவமதிப்பு சுமத்தப்படும் நிலையும் அமையக் கூடும். தனிப்பட்ட மருத்துவ அகத்தில் (கிளினிக்கில்) சில காலம் தங்கும் நிலை ஏற்படும்போது, குடும்பக் கடமைகளைச் செய்ய முடியாத நிலையும் உருவாகும்.
 பல முறை வாடகைத் தாயாக இருக்க உடன்பட்டால், உடல் நலம் கெடும். விருப்பம் இல்லாவிடினும், மருத்துவர் தரும் மருந்துகளை சாப்பிட வேண்டும். மருத்துவரின் கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு நடக்க வேண்டும். பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையைப் பார்க்க முடியாத நிலை, மன உளைச்சலை விளைவிக்கக் கூடும். முகவர்கள் (ஏஜென்டுகள்) தருவதாகச் சொன்ன தொகையைக் குறைத்துக் கொடுக்கலாம் அல்லது ஏமாற்றியும் விடலாம்.
 வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கும் சில காரணங்கள் உள்ளன. கருப்பை இல்லாமல் இருக்கும் பெண்களும் உண்டு. நோய் காரணமாகக் கருப்பை நீக்கப்பட்ட பெண்களும் இருப்பார்கள். தன் இயல்பாகவே அடிக்கடி கருக் கலைவுற்று வாடும் பெண்களும் உண்டு. இதய நோய் காரணமாக கருக் கொள்ளக் கூடாது என மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டவரும் உண்டு. வளரும் குழந்தையைத் தாங்க முடியாத - பலமற்ற கருப்பை கொண்டவரும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் வாடகைத் தாயைத் தேடும் நிலைமையைப் பெறுவார்கள்.
 வாடகைத் தாய் முறையை எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்வதில்லை. சில நாடுகள் அனுமதிக்கின்றன. பல நாடுகள் மறுக்கின்றன. இந்தியா, ரஷியா, ஜார்ஜியா, உக்ரைன் ஆகிய நாடுகள் இந்த முறைக்கு இடம் தந்துள்ளன. ஸ்பெயினில் வேறு நாட்டு வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்று வளர்த்துக் கொள்ள ஏற்பிசைவு தரப்பட்டுள்ளது. அமெரிக்காவில், சில மாநிலங்களில் மட்டும் இந்த நடைமுறை இருக்கிறது.
 பிரிட்டனில் அனுமதி உண்டு. ஆனால், வாடகைத் தாய்க்குப் பணம் தரக் கூடாது. மருந்துச் செலவுக்கு மட்டும் பணம் வழங்கலாம். இஸ்ரேலில் ஒவ்வொரு முறையும் அரசின் அனுமதியைப் பெற வேண்டும். ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்வீடன், ஃபின்லாந்து, பாகிஸ்தான், சுவிட்சர்லாந்து, சவூதி அரேபியா, செர்பியா, ஹங்கேரி முதலிய நாடுகள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கவில்லை.
 வாடகைத் தாய்மை முறையில், இந்தியா தலைமை இடம் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதற்குச் செலவிடப்படும் தொகை இங்குக் குறைவாக உள்ளது. அமெரிக்காவில், இம்முறையில் குழந்தையைப் பெற ஆகும் செலவு ஏறக்குறைய ஒரு லட்சம் டாலர். ஆனால், இந்தியாவில் இதற்கு ஆகும் செலவு 25,000 டாலர் மட்டுமே.
 அது மட்டுமல்ல, இங்குப் பல பெண்கள் வாடகைத் தாய் ஆவதற்கு முன் வந்து உதவி செய்கிறார்கள். எனவே, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வாடகைத் தாயைத் தேடி இந்தியாவுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு மருத்துவர்களும் துணை புரிகிறார்கள்.
 இந்தியாவில் முதல்முறையாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் நிகழ்வு சென்னை அரசுப் பொது மருத்துவமனையில்தான் அரங்கேறியது. ஆந்திர தொழிலதிபர் வேண்டிக் கொண்டதனால் 1994-இல் இது நிறைவேற்றப்பட்டது.
 பால் உற்பத்தியில் முதல் இடம் பெற்றுள்ள குஜராத் மாநிலத்தின் ஆனந்த் என்ற நகரமே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதில் இன்று முதலிடத்தில் உள்ளது. சென்னையிலும் தற்போது, வாடகைத் தாய் மருத்துவ அகங்கள் (கிளினிக்குகள்) சுமார் முப்பது உள்ளன. இந்தியாவில் இத்தகைய மருத்துவ அகங்கள் சுமார் 3,000 இருக்கின்றன என்று ஐ.நா. புள்ளிவிவரம் கூறுகிறது.
 வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு (இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்) பின்வரும் விதிமுறைகளை வகுத்துள்ளது:
 "வாடகைத் தாய்க்குரிய வயது வரம்பை அரசு நிர்ணயித்துள்ளது. அப்பெண் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெற்றோர், முழு மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். வாடகைத் தாய்க்கும் பணம் தர வேண்டும் (இத் தொகை ரூ.2 லட்சமாக இருக்கலாம். அதற்கு மேலும் இருக்கலாம்).
 எக்காரணம் கொண்டும், பெற்ற குழந்தை மீது வாடகைத் தாய் உரிமை கொண்டாடக் கூடாது. அவள் சொந்தக் குழந்தை உள்ளிட்ட, ஐந்து முறைகளுக்கு மேல் கரு தாங்கக் கூடாது. அந்தக் குழந்தை, அயல்நாட்டுப் பெற்றோருக்கு உரியதாக இருந்தால், அந்த நாட்டுக் குடியுரிமை அந்தக் குழந்தைக்குத் தரப்பட வேண்டும். மருத்துவ ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு அவர்கள் உடன்பட வேண்டும். அவர்களின் பெயர்களே குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் குறிக்கப்பட வேண்டும்.'
 இந்த விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்கு மசோதா (Assisted Reproductive Technology (Regulation) Bill) 2008-இல் நடைமுறைக்கு வந்தது.
 இந்திய மகப்பேறு சங்கமும் வாடகைத் தாய்மை முறையில் சில நடைமுறைகளை வகுத்துள்ளது. அயலகப் பெற்றோர் 50 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. அவர்கள் சட்டப்படி ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அந்தக் குழந்தைக்குரிய தங்கள் நாட்டுக் குடியுரிமையை அவர்களே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அச் சங்கம் அறிவித்துள்ளது.
 வாடகைத் தாய்மை முறையில், ஜப்பான் ஒரு படி முன்னேறி உள்ளது. உயர்திணை மனிதருக்குரிய இதனை, அஃறிணையிலும் அது பயன்படுத்தியுள்ளது. அங்கே யாமேம் சால்மன் என்ற ஒரு வகை மீன் வாழ்கிறது. இது அரிய வகை மீன். இது அழியும் நிலையில் உள்ளது. இந்த மீனின் முட்டைகளை வேறு ஒரு மீனின் உடலில் வைத்து, வாடகைத் தாய்மை முறையில் குஞ்சுகளை உற்பத்தி செய்துள்ளது. டோக்கியோ பல்கலைக்கழகத்தின் கடலியல் அறிவுத் துறைப் பேராசிரியரான கோரோ யுஷிசாகி இதை அறிவித்துள்ளார்.
 வாடகைத் தாய்மை, தொன்மைக் காலத்திலேயே நம் நாட்டில் நிகழ்ந்துள்ளது என இலக்கிய ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். கொடிய மன்னனான கம்சன், தன் தங்கை பெற்றெடுத்த ஆறு குழந்தைகளைக் கொன்றார். தங்கை தேவகி ஏழாம் குழந்தையைக் கருக்கொண்ட போது, யோக மாயா என்ற தெய்வ மகளை கடவுளர் அழைத்தனர். தேவகியின் கணவன் வசுதேவன், அவரது மற்றொரு மனைவி ரோகிணி. இவருடைய கருப்பையில் தேவகியின் கருவை வைக்கும்படி, யோக மாதாவைப் பணித்தனர். அவர் அதை நிறைவேற்றினார். ரோகிணி வாடகைத் தாய் ஆனார். சகோதரியான யசோதாவுடன் வாழ்ந்து வந்த ரோகிணி, பலராமனை ஈன்றார் என்கிறது பாகவத புராணம்.
 வாடகைத் தாயைப் பற்றி அண்மையில் ஒரு நூல் வெளிவந்தது. "குழந்தைத் தயாரிப்பாளர்கள்' (பேபி மேக்கர்ஸ் - Baby Makers) என்பது அந்த நூலின் பெயர்.
 இந்தியாவில் வாடகைத் தாய்மை முறையைப் பற்றி இது தெரிவிக்கிறது. வாடகைத் தாய்களை நேர்முகம் கண்டு அவர்களைப் பற்றித் தெரிவிக்கிறது. இந்த முறைமை அதிகரித்து வருவதையும் எடுத்துரைக்கிறது. தாய்லாந்து, செக் குடியரசு நாடு ஆகியவற்றில் உள்ள நடைமுறை விதிகளை எடுத்துக் காட்டியுள்ளது. இதுதொடர்பான வழக்குகள் பற்றியும் சொல்கிறது.
 வாடகைத் தாய் மூலம் பெறும் குழந்தையின் வளர்ப்புப் பெற்றோர் இன்பம் கொள்கின்றனர். குழந்தையைக் கொஞ்சி மகிழ்கின்றனர். அவர்களின் சந்ததியும் வளர்கிறது.
 அயல்நாட்டுப் பெற்றோர் சிலர் நன்றி தெரிவிக்கும் முறையில் தம் குழந்தைகளுக்கு அர்ஜுன், லட்சுமி போன்ற இந்தியப் பெயர்களைச் சூட்டுகின்றனர். புதிய முறையில், அறிவியல் நிலையில் சமுதாயத் தொண்டு புரியும் இந்திய வாடகைத் தாயைத் தேடி, அயலகப் பெற்றோர் இங்கே வருவதால் மருத்துவச் சுற்றுலாத் துறையும் வளர்கிறது; வளம் பெறுகிறது.
 
 கட்டுரையாளர்:
 தலைமைச் செயலக முன்னாள் நூலகர்.
 அமெரிக்காவில், இம்முறையில் குழந்தையைப் பெற ஆகும் செலவு ஏறக்குறைய ஒரு லட்சம் டாலர்.
 ஆனால், இந்தியாவில் இதற்கு ஆகும் செலவு 25,000 டாலர் மட்டுமே.எனவே, பல நாடுகளிலிருந்தும்
 வாடகைத் தாயைத் தேடி இந்தியாவுக்கு வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.