"ஜங்க்' உணவுக்குத் தடை வருமா?
சமையல் சக்கரவர்த்தி நள மகாராஜா பிறந்த பூமியில் "ஜங்க் ஃபுட்' ஏன்? "ஜங்க் ஃபுட்' என்ற ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கத் தமிழில் சொற்கள் இல்லை.


சமையல் சக்கரவர்த்தி நள மகாராஜா பிறந்த பூமியில் "ஜங்க் ஃபுட்' ஏன்? "ஜங்க் ஃபுட்' என்ற ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கத் தமிழில் சொற்கள் இல்லை. நல்லுணர்வு மட்டுமல்ல; நல்லுணவும் தமிழே. துரித உணவு, தயார் உணவு என்பதெல்லாம் உண்ணக் கூடியவை. அவல், பொறி கடலை ஆகியவை துரித உணவு. அவலைத் தண்ணீரில் ஊற வைத்தால் ஆயத்த உணவு.
ஆனால், மேகி நூடுல்ஸ் துரித உணவோ, ஆயத்த உணவோ அல்ல; அது ஜங்க்.
JUNK என்ற சொல்லின் பொருள் குப்பை, தூர எறிய வேண்டிய பொருள், ஒதுக்கப்பட்டவை, சத்தற்றது, சாரமற்றது, உண்ணக் கூடாதது என்று நிகண்டு நீண்டு செல்கிறது.
மேகி நூடுல்ஸýக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், அங்கீகாரம் பெற்ற மூன்று பரிசோதனைக் கூடங்களில் நூடுல்ஸ் மாதிரிகளை ஆய்வு செய்ய மும்பை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. ஆய்வு முடிவு வெளிவரும் வரை விற்பனை செய்யவோ, உற்பத்தி செய்யவோ இயலாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
உலக மகா உணவு நிறுவனமான நெஸ்லே தயாரிப்பான இதன் விற்பனை இப்போது இல்லை என்பதால், "இனி பயமில்லை' என்று நாம் மகிழ்ச்சியுற முடியாது. "மேகி நூடுல்ஸ்' போல் நூற்றுக்கணக்கான நச்சுணவுகள் வண்ண வண்ணப் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுச் சின்னச் சின்னக் கடைகளில்கூட தொங்கவிடப்பட்டுள்ளனவே?
பல லட்சம் கோடி டாலர் உணவு நிறுவனமான நெஸ்லேவுக்கு, மேகி நூடுல்ஸ் தடையால் சில கோடி நஷ்டம் என்றாலும், அதிவிரைவில் மேகி நூடுல்ஸ் ஏதோ ஒரு புதிய பெயரில் புதிய அவதாரம் எடுத்து, இந்தியாவில் நூடுல்ஸ் போதையில் உள்ள நுகர்வோருக்கு வழங்கப்படுவது உறுதி.
ஒரு மனிதன் எதை உண்ண வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரமே நெஸ்லேயிடம் உள்ளபோது, வரியாகவோ, நிதியாகவோ, கையூட்டாகவோ வருவதை வாங்கிக் கொண்டு அதிகாரம் உள்ள அரசுகள் அடிப்பது போல் அடித்து நெஸ்லேயை அரவணைத்துக் கொள்ளும். "அடிக்கிற கைதான் அணைக்கும்'.
நெஸ்லேயும் பெரிய பெரிய சாக்லேட்டுகளை "கேட்ஃபிரீ'யாக வழங்கும். பல் மருத்துவர்கள் "சாக்லேட் சாப்பிடாதே' என்கிறார்கள். ஊட்டச்சத்து நிபுணர்களும் தவிர்க்கச் சொல்கிறார்கள். சாக்லேட்டில் கோக்கோவுடன் சர்க்கரை அதிகம். ஊளைச்சதை வளரும்.
ஆனால், ஊழல் சதை போட்ட சில அதிகாரிகளும், சில அரசியல்வாதிகளும் மதுவை அருந்திவிட்டு மது விலக்குப் பேசுவதுபோல், சாக்லேட்டு - பிஸ்கெட்டுகளை உண்டு நூடுல்ஸ் தடையையும் ஜங்க் ஃபுட் தடையையும் பேசுவார்கள்.
பண மழையில் நனையும் பாலிவுட், கோலிவுட் நடிகர்கள், நடிகைகள் மேலும் பணம் பண்ண - கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் கைகோத்து ஜங்க் ஃபுட் விளம்பரங்களுக்கு கால்ஷீட் வழங்காமல் இருந்தாலே போதும். மக்கள் நலமுடன் வாழ ஏதுவாகும்.
ஒரு டப்பாவில் அரிசி மாவு, கோதுமை மாவு வைத்துவிட்டு மறந்ததுபோல் இருந்து 2 மாதம் கழித்துப் பார்த்தால் சுக்கான் வண்டு இழையும். அதைப் பயன்படுத்தினால் சைவர்கள் அசைவர்களாவர்.
ஆனால், பல மாதங்கள் ஆனாலும் பிஸ்கெட்டுகளில் வண்டு வருவதில்லை. அதுவும் மாவுதானே. பூச்சியைக் கொல்லும் ஏதோ ஒரு ரசாயனம் இருப்பதால்தானே பிஸ்கெட் கெடவில்லை. பூச்சியைக் கொல்லும் ரசாயனம் நம் வயிற்றில் என்ன வேலை செய்யுமோ என்ற பயத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நான் சாக்லேட்டு, பிஸ்கெட் போன்றவற்றை உண்ணுவதில்லை.
ஏதாவது தின்ன வேண்டுமென்றால் - பல்லில் பலமில்லாததால் - கடலை மிட்டாய்களைப் பொடி செய்து, பொட்டுக் கடலை மாவுடன் மிக்சியில் மிக்ஸ் செய்து உண்ணுவதுண்டு. மது அருந்துபவர்கள் மதுவின் தீமையை உணர்வதுபோல், ஜங்க் உணவுக்கு அடிமையானவர்கள் சற்று யோசித்தால் விடை கிடைக்கும்.
ஜங்க் உணவுகளைக் கெட்டியாக வைக்க ஒரு ரசாயனம். தூளாக உள்ளதைக் கட்டி தட்டாமல் இருக்க ஒரு ரசாயனம். வண்ணங்களுக்கு வானவில்லின் வர்ண ஜாலம் போல் கலர் கலராக பற்பல ரசாயனங்கள். ஒவ்வொரு வண்ணத்துக்கும் ஒரு ரசாயனம். தவிட்டுக் கலராயுள்ள மாவை வெள்ளையாக்க ஒரு ரசாயனம். கெடாமல் நீண்ட நாள் காப்பாற்றவும் பற்பல ரசாயனங்கள் உண்டு. இந்த ரசாயனங்கள் வயிற்றில் போனால் என்ன வரும்? எது வராவிட்டாலும் புற்றுநோய் வரும்.
இந்திய நுகர்வோர் முட்டாள்கள் அல்லர். நல்ல விழிப்புணர்வுடன் வாழ்வோர்களில் சிலர் தொடங்கிய தில்லி உதய் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம், 2010-இல் பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் ஜங்க் ஃபுட்டை தடை செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. மாணவ - மாணவியர் உடல் பலம் இல்லாமல் ஊளைச் சதை போட்டு குண்டாகி வருவதைக் காரணம் காட்டியது. ஜங்க் ஃபுட் பற்றிய நல வாழ்வு அறிக்கையைத் தயாரிக்க உச்சநீதிமன்றம், ஊட்டச்சத்து நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை நியமித்து ஜங்க் உணவின் நோய் விளைவுகளை எடுத்துக் கூறும்படி கேட்டது.
இப்படிப்பட்ட குழுவில் நெஸ்லே, கோக கோலா, பெப்சி சார்பாகவும் பேச உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். மாபெரும் பன்னாட்டு உணவு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்ட கருத்தின்படி, "ஜங்க் உணவு' என்று எதுவுமே இல்லை என்றும், தங்கள் தயாரிப்புகள் எல்லாமே "உண்ணும் தகுதியுள்ளவை' என்றும் அவர்கள் கூறினாலும் ஹைதராபாதை மையமாகக் கொண்ட "தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்' (National Institute of Nutrition) அவர்களது கூற்றை ஏற்கவில்லை. மேற்படி உச்சநீதிமன்றக் குழுவின் தலைமைப் பொறுப்பு தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
உலக நாடுகளில் எவையெல்லாம் ஜங்க் உணவைத் தடை செய்துள்ளன என்ற விவரமும் உச்சநீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், பள்ளிகள் மூலம் ஜங்க் உணவை வழங்குவதற்குப் பின்வரும் நாடுகள் தடை செய்துள்ளன. பல நாடுகள் ஜங்க் உணவு விளம்பரங்களைத் தடை செய்துள்ளன. எக்கச்சக்கமாக வரி விதித்துள்ளன. தடை செய்யப்பட்ட ஆண்டு விவரம் அடைப்புக் குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது.
= கனடா: விளம்பரத் தடை (1971), பள்ளித் தடை (2011).
= அமெரிக்கா: பள்ளித் தடை (2014), விளம்பரத் தடை - வரி (பரிசீலனையில்).
= மெக்சிகோ: பள்ளித் தடை (2011), விளம்பரத் தடை (2013).
= கோஸ்டாரிகா: பள்ளித் தடை (2012).
= பெரு: பள்ளித் தடை (2013), விளம்பரத் தடை (2013), வரி (பரிசீலனையில்).
= உருகுவே: வரி (2013).
= லிதுவேனியா: பள்ளித் தடை (2010), வரி (பரிசீலனையில்).
= போலந்து: பள்ளித் தடை (பரிசீலனையில்), வரி (2007).
= ஸ்காட்லாந்து: பள்ளித் தடை (2008).
= இங்கிலாந்து: பள்ளித் தடை (2007), வரி (2008).
= பிரான்ஸ்: விளம்பரத் தடை (2007), வரி (2012).
= லாட்வியா: பள்ளித் தடை (2006).
= ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ): பள்ளித் தடை (2011).
= தென் கொரியா: பள்ளித் தடை (2009), விளம்பரத் தடை (2010).
= பிலிப்பின்ஸ்: பள்ளித் தடை (2007).
ஆஸ்திரேலியா, ருமேனியா, நியூஸிலாந்து, தைவான், ஹங்கேரி போன்ற நாடுகளில் விளம்பரத் தடையும், அதிக வரி விதிப்பும் உண்டு. இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் பள்ளியில் வழங்கத் தடை உண்டு.
ஜங்க் உணவு பள்ளி, கல்லூரி உணவகங்களில் தடை செய்யப்பட காரணிகளாவன: அதிக அளவு கொழுப்பு, அதிக உப்பு, அதிக சர்க்கரை. எவற்றுக்கெல்லாம் தடை என்றால் சக்தி ஊட்டும் பானங்கள், கார்பனேட்டட் பானங்கள் - காற்று ஏற்றப்பட்ட கோக கோலா, பெப்சி போன்றவை. இனிப்பூட்டிய பானங்கள், எண்ணெயில் பொறிக்கப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்டவை. சாக்லேட்டுகள், உருளைக்கிழங்கு வறுவல், முறுவல்.
ஹைதராபாத் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் கருத்துப்படி ஜங்க் உணவு வரையறை: புரதச் சத்தோ, தாது உப்புகளோ, வைட்டமின் சத்துகளோ இல்லாமல், உப்பு, சர்க்கரை, கொழுப்புடன் மாவு (எனர்ஜி), புரதச் சத்தும், வைட்டமினும் உண்டு என்று பொய் விளம்பரம் செய்யப்படுபவை. ஜங்க் உணவில் தேவைக்கு மேல் கலோரி (எனர்ஜி) உண்டு. கொழுப்பு + சர்க்கரை + மாவு + உப்பு இணைந்து நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன், ஊழச் சதை ஏற்படுத்தும் என்று தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் கூறுகிறது.
நல்ல ஆரோக்கியம் பெற தானியங்கள், பருப்பு, பால், காய்கறி, பழங்களை அன்றாடம் தாராளமாக உண்ண வேண்டும். எண்ணெய், வறுவல், இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றை மிகவும் குறைத்து உண்ண வேண்டும். பர்கர், பீட்சா, வறுவல், எண்ணெயில் பொறித்தவை, சாக்லேட், ஐஸ்கிரீம் எப்போதாவது மாதம் ஒருநாள் குறைவாக உண்ணலாம் என்று அந்த அறிக்கையில் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் கூறியுள்ளது.
பல்லுயிர்ப் பெருக்க அடிப்படையில் உலகிலேயே அதிகப்படியான உணவுத் தாவர இன வகைகள் (நல்ங்ஸ்ரீண்ங்ள்) இந்தியாவில்தான் உண்டு. அரிசி, கோதுமை, பார்லி, சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரை வாலி போன்ற தானிய வகைகள். கொண்டைக் கடலை, துவரை, உளுந்து, பாசிப் பயறு, மசூர் பருப்பு, கொள்ளு, மொச்சை, நரிப்பயறு போன்ற புரதப் பயிர்கள்.
கூடவே எள், வேர்க்கடலை, தேங்காய். கத்தரி, வெண்டை, செüசெü, முள்ளங்கி, அவரை, புடலை, பீர்க்கை, இனிப்புக் கோவை, முளைக் கீரை, சிறு கீரை, கிள்ளுக் கீரை, பாலக் கீரை, பசலைக் கீரை, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை என்று வகை வகையான நறுமணப் பொருள்கள்.
ஒவ்வொரு மூல இன வகைக்குள் நிறத்தாலும், குணத்தாலும், கனபரிமாணத்தாலும், ருசியாலும் வேறுபடும் பல ரகங்களும் இந்தியாவில் உண்டு. உணவு சமைப்பதில் ஊருக்கு ஊர் நளபாகங்கள் உண்டு. இத்தகைய சிறப்புள்ள இந்தியாவுக்கு பன்றி, மாடு, கோழி ஆகியவற்றைப் பிரதான உணவாக உள்கொள்ளும் மிலேச்சர்கள் வழங்கும் "ஜங்க் உணவுக்கு' ரத்தினக் கம்பளம் விரித்து இந்திய மரியாதையை இழப்பது என்ன நியாயம்?
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலேயே ஜங்க் உணவுக்குப் பலவிதமான தடைகளும், வரிகளும், கட்டுப்பாடும் உள்ளபோது, இந்தியாவில் இந்த ஜங்க் உணவுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை அனுமதித்து விட்டால் இந்திய சுதந்திரம் அல்லவா பறிபோகும்! வாழ்க பாரதம்.
கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.
உணவு சமைப்பதில் இந்தியாவில் ஊருக்கு ஊர் நளபாகங்கள் உண்டு. இத்தகைய சிறப்புள்ள
இந்தியாவுக்கு பன்றி, மாடு, கோழி ஆகியவற்றை பிரதான உணவாக உள்கொள்ளும் மிலேச்சர்கள்
வழங்கும் "ஜங்க் உணவுக்கு' ரத்தினக் கம்பளம் விரித்து இந்திய மரியாதையை இழப்பது என்ன நியாயம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...