காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தில்லி அரசு அறிவித்துள்ள உத்தேச வாகன இயக்க கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு வழக்கம்போல வரவேற்பும் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியுள்ளன.
காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை இயக்கக் கூடாது, பொதுப் போக்குவரத்துக்கான பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பழைமைவாய்ந்த அனல் மின் நிலையத்தை மூடுவது என ஒவ்வொரு நடவடிக்கையாக முதல்வர் கேஜரிவால் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதிதான் இந்த வாகன இயக்க கட்டுப்பாட்டுத் திட்டம்.
இதன்படி, வாகன எண்களின் கடைசி எண் அடிப்படையில், ஒற்றைப்படை எண் கொண்ட வாகனமாக இருந்தால் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், இரட்டைப் படை எண் கொண்ட வாகனமாக இருந்தால் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மட்டுமே சாலைகளில் செல்ல அனுமதி என்பதே அந்தத் திட்டம்.
இயற்கை எரிவாயுவால் (சி.என்.ஜி.) இயங்கும் தில்லியின் அரசுப் பேருந்துகள் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்தத் தடை பொருந்தாது.
ஜனவரி 1 முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என முதலில் அறிவிக்கப்பட்டாலும், பின்னர், சோதனை அடிப்படையில் 15 நாள்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் வெற்றியின் அடிப்படையில் நிரந்தரமாக அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் இத்திட்டத்துக்கு வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
"தில்லியின் காற்று மாசைக் குறைக்க நாங்களும் (நீதிபதிகள்) உதவத் தயாராக உள்ளோம். கார்களை கைவிட்டு பேருந்திலோ, நடந்தோ நீதிமன்றத்துக்கு வரவும் நாங்கள் தயார்' என அவர் கூறியிருப்பது இத்திட்டத்துக்கு கிடைத்த ஊக்கமாக இருந்தாலும், இந்தத் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமானதா, இதனால் உண்மையிலேயே காற்று மாசு குறைந்தாலும் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா எனப் பல கேள்விகளும் எழுந்துள்ளன.
இதேபோன்ற வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 2008-ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற ஒலிம்பிக்கை முன்னிட்டு அமல்படுத்தப்பட்டது. இதனால், 40 சதவீத அளவுக்கு மாசு குறைந்ததாகக் கணக்கிடப்பட்டது. ஒலிம்பிக்கிற்குப் பின்னர் இத்திட்டத்தை அரசு கைவிட்டாலும், அதன் வெற்றியைத் தொடர்ந்து, அதேபோன்ற பிற சாலைக் கொள்கைகளை அமல்படுத்தியது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 2014}ஆம் ஆண்டு மார்ச் மாதம், வாகன எண் அடிப்படையில் வாகனங்கள் சாலையில் செல்வதற்கு அனுமதி அளிக்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது. ஒரே ஒரு நாள்தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், அதற்குள் காற்று மாசு கட்டுப்பாட்டு இலக்கை அந்நாடு அடைந்துவிட்டதால் அத்திட்டத்துக்கு அவசியம் இல்லாமல் போனது.
கொலம்பியா தலைநகர் பகோட்டாவில், வாரத்தில் இரண்டு நாள்கள் "பீக் ஹவர்' எனப்படும் நெரிசலான நேரத்தில் குறிப்பிட்ட எண் கொண்ட வாகனங்களை இயக்க அரசு தடை விதித்தது.
இந்த விதிகளை மீறுவதற்காகவே மக்கள் இரண்டு கார்களை வாங்குவதைத் தடுக்கும் வகையில், தடை விதிக்கும் நாள்களையும், நேரத்தையும்கூட ஆண்டுக்கு ஆண்டு மாற்றியது. ஆனால், இத்திட்டமும் வெற்றியடையவில்லை.
தில்லியிலும் அரசு அறிவித்துள்ள புதிய திட்டத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்து வருகின்றன. சரி, இத்திட்டப்படியே வாகனங்களை இயக்குவோம் என்று வைத்துக் கொள்வோம்; பூஜ்யம் எண்ணானது ஒற்றைப்படையா, இரட்டைப்படையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பிரான்ஸில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டபோது, இதுபோன்ற குழப்பம் எழுந்தது. அப்போது பூஜ்யம் இரட்டைப்படைதான் என அறிவிக்கப்பட்டு சில மாகாணங்களில் சட்டமே இயற்றப்பட்டதாம்.
தில்லியில் பதிவு செய்யப்பட்ட 90 லட்சம் வாகனங்கள் இயங்குகின்றன. தினமும் 1,500 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டு சாலைகளில் வலம் வருகின்றன. இதனால் ஏற்படும் காற்று மாசானது அபாய அளவை எட்டியதைத் தொடர்ந்தே இதுபோன்ற புதிய யோசனைகளை தில்லி அரசு அமல்படுத்த முனைகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, தில்லியில் காற்று மாசானது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 11 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் சுவாசக் கோளாறு தொடர்பான பல்வேறு நோய்களால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படுவது தில்லியில் அதிகரித்து வருகிறது.
பருவநிலை மாறுதல், புவி வெப்பமயமாதலின் விளைவுகளை உலகமே அனுபவித்து வரும் வேளை இது. காற்று மாசுபடுகிறது என்று வெறுமனே சொல்லிக் கொண்டிராமல், இதுபோன்று ஏதாவது செய்து பார்ப்பது நல்லதுதான். என்றாலும், தனிநபர்கள் வாகனங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்தை அதிகரித்தல், குறிப்பாக, பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்தச் செய்தல் போன்ற நடவடிக்கைகள்தான் மிக அவசியம்.
இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் பார்க்க வேண்டும். சீனா, பிரான்ûஸப் பார்த்து இதுபோன்ற திட்டங்களை உருவாக்கும் நேரத்தில், அடிப்படைப் போக்குவரத்து விதிகளைக்கூட கடைப்பிடிக்க மறுக்கும் மக்களின் மத்தியில் நாம் இருக்கிறோம் என்பதையும் கவனத்தில்கொள்வது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

