தமிழ்நாட்டில் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது சில மரபுகள் பின்பற்றப்படுகின்றன. குல தெய்வம், திருத்தல தெய்வம், அம்பிகை பெயர்கள் வைக்கப்படும். தாத்தா - பாட்டி பெயர்கள் வைக்கப்படும்போதும் தெய்வப் பெயர் வைக்கப்படுவது தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது.
குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதையே பொருளாகக் கொண்டு, பல்லாண்டு ஆராய்ச்சி செய்து பெயர் அகராதி வெளியிட்டவர் மேனகா காந்தி. மரங்கள் பற்றியும், விலங்குகள் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் மேனகா நிறைய நூல்களை எழுதியுள்ளார்.
ஆங்கிலத்தில் அவர் எழுதிய நூலின் பெயர் "இந்தியப் பெயர்கள்'. 20,000 பெயர்கள் உள்ளன. எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் பெயர் அகராதியை உருவாக்கினார்? இதன் அவசியம் என்ன என்று கேட்போருக்கு இந்த நூலில் விடை உண்டு.
முதலாவதாகத் தனக்கு ஏன் அப்பெயர் என்ற தேடல் உருவானது. மேனகா என்ற சொல்லின் பொருள் "மனதில் பிறந்தவள்' என்பதுதான். மேனகா, ஆறு அப்சரஸ் (அ) கந்தர்வக் கன்னியரில் ஒருத்தி. ரிக் வேதக் குறிப்பின்படி, மன்னன் விருஷ்ணாஸ்வரின் புதல்வி.
விஷ்ணு புராணத்தின்படி ஸ்வதா பெற்றெடுத்த மூன்று மலை மகளிர்களில் மேனகாவும் ஒருத்தி. மற்ற இருவர் கங்கா, பார்வதி. ரிக் வேதக் குறிப்பின்படி விசுவவசு என்ற கந்தர்வன் மூலம் பிரமாத்வருக்குத் தாய். காளிதாசரின் சாகுந்தலத்தில் விசுவாமித்திரர் மூலம் சகுந்தலைக்குத் தாயானவள்.
பொதுவாக இந்தியப் பெயர்கள் எல்லாமே காவிய - புராணப் பெயர்களே. ஆனால், ஒவ்வொரு பெயரிலும் ஒளிந்துள்ள புராணக் குறிப்புகளைத் தேடிப் பிடிக்க மேனகா பயின்ற சம்ஸ்கிருதம் உதவியது.
நமது முன்னோர்கள் வேதமந்திரங்கள் முழங்க நாமகர்ணம் செய்வதற்கு மேனகா வழங்கும் விளக்கம் இதுவே: "அன்று வைக்கப்படும் பெயரின் பொருளறிந்து கொண்டு அக்குழந்தை வளர வளர நற்குணங்களைப் பெற்றுப் பண்புகள் நிறைந்த நல்ல குடிமகனாகவும், அச்சம் தவிர்த்து வீர தீரத்துடன் நம்பிக்கையுள்ள மானிடனாகவும் வாழ்வாங்கு வாழ்வான்'.
சமயப் பற்றில்லாத நேரு குடும்பத்தில் சமய உணர்வுடன், வாழ்ந்து வரும் மேனகா காந்தி தலைசிறந்த ஆங்கில நூலாசிரியர். சுற்றுச்சூழல் பற்றியும், மரங்கள் பற்றியும், விலங்குகள் பற்றியும் ஏராளமாக நூல்கள் எழுதியுள்ளார்.
இவர் நூல்களில் உள்ள சிறப்பு இந்திய புராணக் கதைகளை மரம், மலர், பூச்சி, விலங்கு, இயற்கை ஆகியவற்றோடு அழகு மிளிர இணைப்பதுதான். இந்திய இதிகாசங்களையும், மகாபாரதம், ராமாயணம், அனைத்துப் புராணங்கள், வேத - உபநிடதங்கள், கதாசரித சாகரம், சாகுந்தலம், குமாரசம்பவம், பஞ்சதந்திரம், மிருச்சிகடிகம் என்று இவர் கற்றுள்ள இலக்கியப் பட்டியல் நீண்டது.
அந்த பலத்தைக் கொண்டுதான் இந்தியப் பெயரகராதியை உருவாக்கியுள்ளார். இதற்குக் காரணம், இவர் தங்கையின் வயிற்றில் வளர்ந்த சிசுவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தங்கை கேட்டதுதான். இந்த நூலை எழுதக் காரணமான ஆரியமானுக்கு இந்நூல் பரிசு என்று குறிப்பிட்டுள்ளார்.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற குறளின் அடிப்படையில் இந்திய புராணவியல் தத்துவத்தில் ஆதி என்பவள் அதிதி. பகவன் என்பவர் காஷ்யபர். அதிதியின் பிள்ளைகளை ஆதித்யர்கள் என்பர்.
மொத்தம் 33 ஆதித்யர்கள். இந்த 33 ஆதித்யர்களும் முப்பத்து முக்கோடி (33 கோடி) தேவர்களுக்குத் தந்தைகள். மூத்தவன் இந்திரன். கடைக்கோடி இளையவன் வாமனன்.
இந்த 33 ஆதித்தியர்களில் தாதா, ருத்ரா, மித்ரா, ஆர்யமான், வருணா, சூர்யா, பாகா, வைவஸ்வதா, பூசன், தக்ஷன், சகரன், அனுஷன், சவிது, த்வாஷ்டன், விஷ்ணு ஆகியோர் பிரபலமான தெய்வங்கள். ஆரியமானும் ஒரு ஆதித்யன்.
அனிதா, டீனா, லீனா போன்ற பெயர்கள் இந்தியப் பெயர்கள் இல்லை என்று கூறும் மேனகா, புல்வதி, புல்ராணி, சோனா, சோனலிகா, பியாரி ஆகிய பெயர்களுக்கு சம்ஸ்கிருதத்திலோ, பாலி அல்லது வேறு செம்மொழிகளிலோ வேர் இல்லை என்கிறார்.
1991-92 காலகட்டத்தில் மேனகா பெயர்ச்சொல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது சோனியா காந்தி அரசியலில் இல்லை. சோனியாவுக்கு இந்தியத் தொடர்பு ராஜீவ் உறவால் ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை. இந்தியில் சோனா என்ற பெயர்ச்சொல்லுக்கு தங்கம் என்று பொருள். அது வினையானால் "தூக்கம்' என்று பொருள்.
இஷா என்றால் அறிவு, உபநிடதம். இஷ்திகா, இஷ்தகா என்றால் ஹோமகுண்டம். இலிசா, இலிகா என்றால் புவி. ஹன்சிகா என்றால் அன்னம், பகீரதனின் பெண். கவுத்ச மகரிஷியின் தர்மபத்னி. மேற்படிப் பெயர்களில் சினிமா நட்சத்திரங்கள் உள்ளனர்.
சிம்ரன், சின்ஹா எல்லாம் சிங்கமுகங்கள். ஹர்ஷா என்றால் தர்மத்தின் வாரிசு. ஹர்ஷா ஆண்பால். சோமனுக்கும் காமனுக்கும் தம்பி. நந்தி என்றால் நந்தி வாகனம். சிவனின் சேவகன். நந்தினி என்றால் பசு. காமதேனுவின் புதல்வி. மாத்ருவின் புதல்வி. 20,000 நல்ல நல்ல பெயர்களில் சில உதாரணங்கள் இவை.
மேனகாவின் இந்தியப் பெயர் அகராதியைப் படித்தபோது எனக்கு உ.வே.சாமிநாத அய்யரின் "திருத்தல வரலாறு' நூல் நினைவுக்கு வந்தது. அதிலும் ஏராளமான புராணப் பெயர்கள் உண்டு.
நம்மில் சிலர் பெயர் வைக்கும்போது நல்ல பெயரைத் தேட டெலிஃபோன் டைரக்டரியைப் புரட்டுவதுண்டு. அவ்வாறு புரட்டிப் பார்த்தால் பக்கம் பக்கமாக ஒரே பெயர் தொடரும்.
சுப்பிரமணியம், கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், கிருஷ்ணசாமி, ராமசாமி, சங்கரன், ஸ்ரீனிவாசன், ராமநாதன், ஷண்முகம், முருகன், முருகேசன் என்று பல உதாரணங்களைச் சொல்லலாம். இவை யாவுமே தலபுராணப் பெயர்களே.
யாரை மறந்தாலும் திருப்பதி வெங்கடாசலபதியை மறக்க முடியாது. வெங்கட்ராமன், வெங்கடரமணன், திருவேங்கடம், வெங்கட சுப்பிரமணியம், வெங்கடாசலம் ஆகிய பெயர்களும் தமிழ்நாட்டில் நிறைய உண்டு.
தென்னிந்தியாவில் பொதுவாக ஆண்கள் பெயரில் அய்யா, அப்பா, அண்ணா போன்ற விகுதிகள் உண்டு. ராமய்யா, பாலய்யா, கோபாலய்யா, குமரய்யா, குமரப்பா, கன்னியப்பா, சாமியப்பா, ராமண்ணா, ராஜண்ணா, சுப்பண்ணா, சுப்பைய்யா, கருப்பையா.
பெண்ணென்றால் அம்மா, ஆத்தா என்ற விகுதி உண்டு. மாரியம்மா, காளியம்மா, சுப்பம்மா, குப்பம்மா, பொன்னம்மா, பொன்னாத்தா, சின்னாத்தா.
வட இந்தியப் பெயர்களுக்கும் தென்னிந்தியப் பெயர்களுக்கும் உள்ள ஒற்றுமை - வேற்றுமை சிறப்பானது. இரு மொழிகளிலும் உள்ள பெயர்களில் இருக்கும் சம்ஸ்கிருதம் ஒற்றுமையைக் குறிக்கிறது. வேற்றுமை எதுவெனில், வட இந்தியப் பெயர்கள் வேதகாலத்தவை.
வியாசர், வசிஷ்டர், வால்மீகி, காஷ்யபர், பாரத்வாஜர், பார்கவர், ஆங்கிரஸர், கவுதமர் போன்ற பல பெயர்கள் மௌரியர் காலத்திலிருந்து ஹர்ஷவர்த்தனர் (கி.பி.640) காலம் வரை எழுதப்பட்ட காவிய இதிகாசப் பெயர்கள்.
அதேசமயம் தென்னிந்தியப் பெயர்களில் அதிகபட்சமாக ஹம்பியில் சாளுக்கியர், விஜயநகரத்தில் ஹரிஹரர் - புக்கர் உருவாக்கிய நாயக்கர் சாம்ராஜ்ஜியம், தஞ்சையில் விஜயாலய சோழர்கள் காலத்திற்குப் பின் கட்டப்பட்ட கோயில் திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள சுவாமி - அம்பிகை பெயர்கள் அதிகம்.
இந்திய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஒளரங்க சீப் (கி.பி.1700) காலம்வரை வடக்கில் இந்துக் கோவில் எதுவும் கட்டப்படவில்லை. மேற்படி காலகட்டத்தில் தென்னிந்தியாவில் மட்டுமே ஏராளமான இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன.
வட இந்தியாவைவிட தென்னிந்தியாவில் (மகாராஷ்டிரம் உள்பட) பக்தி இயக்கம் வளர்க்கப்பட்டதன் சான்றாகத் தென்னிந்தியத் திருநாமங்கள் உள்ளன.
தென்னிந்தியாவில் எழுப்பப்பட்ட உயரமான கோயில்கள் ஆரிய - திராவிட கலாசார ஒற்றுமையின் எடுத்துக்காட்டாக வரலாற்று அறிஞர்கள் எடுத்துக்காட்டுவதுண்டு. எனினும், மேனகா காந்தி எழுதியுள்ள நாம கர்ண அகராதியில் திராவிடப் பெயர்கள் குறைவு. அந்தக் குறையை உ.வே.சா.வின் "திருத்தல வரலாறு' இட்டு நிரப்புகிறது.
தமிழ்நாட்டில் திராவிடப் பெயர்களில் 1940 - 50-களில் பிரச்னை வந்தது. திராவிடப் பெயர்களில் உள்ள சம்ஸ்கிருதம் பிடிக்காமல், சூரியநாராயண சாஸ்திரி தன்னை பரிதிமால் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார். வேதாசலம் மறைமலை அடிகளானார். நடராஜன் ஆடலரசரானார். பகவத் நாமாவைத் தமிழில் சொன்னால் என்ன? சம்ஸ்கிருதத்தில் சொன்னால் என்ன?
இன்றைய தமிழ்நாட்டில் நீளமான பெயர் வைக்கும் மரபு அழியத் தொடங்கி வட இந்தியப் பெயர்கள் அதிகமாகிவிட்டன. டாக்சி ஓட்டும் என் நண்பர் அன்பழகன் தன் மக்களுக்கு "தர்ஷன்' "தர்ஷினி' என்று பெயர் வைத்துள்ளார்.
இவ்வாறே ஆனந்த், அசோக், அரவிந்த், சிவா, மகேஷ், ரமேஷ், சதீஷ், விஜய், விமல், கிஷண், கண்பத், சித்தார்த், ராஜா, ராஜேஷ், விஷ்ணு, ரவி, சூர்யா, அர்ஜுன் ஆகியவை சாதி, மொழி, இனம் தாண்டிய இந்திய சமத்துவப் பெயர்களாகிவிட்டன.
பல தலைமுறைகளாகவே பெண்களின் பெயர்களிலும் இந்திய சமத்துவம் உண்டு. லக்ஷ்மி, துர்கா, சரஸ்வதி, பார்வதி, ருக்மணி, யசோதா, கோகிலா, சசிகலா, கலைவாணி, உஷாராணி, சாயா, ஸ்ரேயா, சிம்ரன், அபர்ணா, மது, மதுபாலா, மஹா, ஜோதி, அனு, அனுபமா, அமலா என்று நிறைய உண்டு.
தமிழ்நாட்டில் "லக்ஷ்மி' தனிப் பெயராகவும் கூட்டுப் பெயராகவும் ஆண், பெண் இருபாலாரிடமும் உண்டு.
கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.