புதிய தங்க முதலீட்டுத் திட்டம்...
உலகிலேயே தங்கம் அதிகமாக வாங்குவது இந்தியாவில்தான். ஆண்டுக்கு சராசரியாக 850 முதல் 900 டன் வரையிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி


உலகிலேயே தங்கம் அதிகமாக வாங்குவது இந்தியாவில்தான். ஆண்டுக்கு சராசரியாக 850 முதல் 900 டன் வரையிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. துல்லியமாகச் சொல்வதென்றால், 2014-ஆம் ஆண்டில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் 843 டன்.
உலக தங்க சபையின் (World Gold Council) இந்தியக் கிளையின் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் பொதுமக்கள் கையில் 22,000 டன் தங்கம் நகைகளாகவும், நாணயங்களாகவும், பென்டென்ட்களாகவும் (Pendants), தங்கக் கட்டிகளாகவும் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலான மக்கள் நகைகளாகத்தான் வைத்துள்ளனர்.
எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் சிறிதளவாவது தங்கம் இல்லாமல் அரங்கேறுவது இல்லை. ஆபரணத்துக்காக, அந்தஸ்துக்காக, திருமணங்களுக்காக, முதலீட்டுக்காக என ஏதேனும் ஒரு காரணத்துக்காக மக்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப தங்கத்தை வாங்குகிறார்கள்.
இந்தியாவின் தங்க விற்பனையில் 75 சதவீதம் திருமணக் காலங்களிலும், பண்டிகைக் காலங்களிலும் விற்பனை ஆகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை முன் எப்போதையும்விட அதிக ஏற்ற, இறக்கத்தில் இருப்பது கண்கூடு. 2001-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை இந்தியச் சந்தையில் 6 மடங்கு அதிகரித்தது. 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,300 என உச்சத்தைத் தொட்டது. பிறகு 2013-ஆம் ஆண்டு ஒரு கிராம் தங்கம் ரூ.2,900-ஆக திடீரெனச் சரிந்தது. 2014-ஆம் ஆண்டு முதல் விலை சிறிதளவு உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால், அது நமது பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கிறது. நமது இறக்குமதி மதிப்பு அதிகமாகவும், ஏற்றுமதி மதிப்பு குறைவாகவும் இருப்பதற்கு தங்க இறக்குமதிதான் காரணம்.
கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம் தான் அதிக அளவில் இறக்குமதியாகிறது. கடந்த சில ஆண்டுகளில் தங்கம் இறக்குமதிக்கான வரி 2 சதவீதத்திலிருந்து 10 சதவீமாக உயர்த்தப்பட்டுள்ளது. அப்படியும் தங்கம் இறக்குமதி ஓரளவு மட்டுமே குறைந்துள்ளது.
தங்கம் இறக்குமதி மேலும் குறைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2015 - 2016ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு திட்டத்தை அறிவித்தார். அதுதான் தங்கம் டெபாசிட் திட்டம் (Gold Monetistaion Scheme).
இந்தத் திட்டத்தின் வரைவு நகல் கடந்த மே மாதம் மூன்றாவது வாரத்தில் பொதுமக்களின் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தங்கம் வாங்குபவர்கள், தங்க வியாபாரிகள், தங்கம் இறக்குமதியாளர்கள் உள்ளிட்டவர்கள், பொதுமக்கள் தங்கள் கருத்தைத் தெரிவிப்பதற்கு கால அவகாசம் தரப்பட்டது.
வீட்டில் முடங்கிக் கிடக்கும் தங்கம் நாட்டுக்குப் பயன்பட வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் அடிநாதம். இதன் முக்கிய அம்சங்கள்: தனி நபர்கள், ஆலயங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் கைவசம் உள்ள உபரித் தங்கத்தை வங்கிகளில் மற்றும் மத்திய அரசு நிர்ணயிக்கும் வங்கிசாரா அமைப்புகளில் முதலீடு செய்யலாம். அந்த முதலீட்டுக்குக் குறிப்பிட்ட சதவீத வட்டி கிடைக்கும்.
குறைந்தபட்சம் 35 கிராம் தங்கம் முதலீடு செய்யலாம் என்று இப்போதைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் எவ்வளவு காலத்துக்கு முதலீடு செய்திட வேண்டும், வட்டி எவ்வளவு என்பன போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
நாம் முதலீடு செய்யும் தங்க நகைகள் முதலியன உருக்கப்பட்டு, அதன் தூய்மைத் தன்மைக்கு ஏற்ப, நாம் எவ்வளவு தங்கம் முதலீடு செய்கிறோமோ, அதே அளவு தங்கம் தீர்வு காலத்துக்குப் பிறகு திரும்பக் கொடுக்கப்படும். வட்டியும் தங்கமாகவே தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படித் திரட்டப்பட்ட தங்கம், தங்க வியாபாரிகளுக்கு வங்கிகள் கடனாக வழங்கப்படும். இதனால், தங்க வியாபாரிகள் தேவைக்கு தங்கத்தை இறக்குமதி செய்வதைத் தவிர்க்கலாம்.
பொருளாதார நடவடிக்கைக்கு வராமல் வீட்டில் அல்லது பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள தங்கம், புதிய திட்டத்தின்படி தங்க வியாபாரிகளின் பயன்பாட்டுக்கு வரும். இறக்குமதி இதனால் குறையும். அன்னியச் செலாவணி கையிருப்பு குறையாது. தங்கம் முதலீடு செய்பவர்களுக்கு வட்டி வருவாய் கிடைக்கும். கடந்த காலங்களில் பல்வேறு விதமான தங்க முதலீட்டுத் திட்டங்கள் அறிமுகம் ஆயின. கடைசியாக அறிமுகம் ஆனது 1999-இல் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் திட்டம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
திருப்பதி போன்ற பெரிய ஆலயங்கள் மட்டுமே அந்தத் திட்டத்தில் பங்கேற்றன. பொதுமக்களின் ஈடுபாடு குறைவாகவே இருந்தது. இதற்கு முக்கியக் காரணங்கள், முதலீடு செய்யக்கூடிய தங்கத்தின் குறைந்தபட்ச அளவு 500 கிராமாக இருந்தது. வட்டி விகிதம் முக்கால் சதவீதம் ஒரு சதவீதமாக இருந்தது. இதனால், 40 டன் அளவுக்கு மட்டும்தான் 1999-ஆம் திட்டத்தின் மூலம் தங்கம் திரட்ட முடிந்தது.
உத்தேச திட்டத்தில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. உதாரணமாக, குறைந்தபட்ச தங்க முதலீட்டின் அளவு 35 கிராமாகக் குறைக்கப்படுகிறது. தீர்வு காலம் 5 முதல் 7 ஆண்டுக் காலமாகவோ அல்லது மேலும் குறைந்த காலமாகவோ இருக்கும் என்று தெரிகிறது. வட்டி வருவாய்க்கு வரிச் சலுகை கிடைக்க உள்ளது.
இந்தச் சலுகைகள் மட்டும் போதாது. முக்கியமாக வட்டி விகிதம் கணிசமாக உயர்த்தப்பட வேண்டும். இந்தியாவில், மக்கள் தங்க நகைகளைப் பொருளாதார அடிப்படையில் மட்டும் அல்லாமல், பாட்டி போட்டிருந்த நகை, அம்மா அணிந்திருந்த நகை என்று உணர்வுபூர்வமாகவும் பாதுகாத்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் நகைகள் உருக்கப்படுவதை ஏற்பார்களா என்ற கேள்வி எழுகிறது. புது யுகத்தில், பெண்களிடையே அதுபோன்ற உணர்வுகளின் தாக்கம் நாளுக்கு நாள் படிப்படியாகக் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நகைக் கடன் வாங்கும் பழக்கம் சமூகத்தில் வேரூன்றி உள்ளது. குறிப்பாக, கிராமப்புற விவசாயிகள் வங்கிகளின் பயிர்க் கடனைவிட, நினைத்த மாத்திரத்தில் வாங்கக்கூடிய நகைக் கடனைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். இது நகர்ப்புற எளிய மக்கள், நடுத்தர மக்கள் ஆகியோருக்கும் பொருந்தும். வங்கிகளேகூட, பல மாநிலங்களில் நகைக் கடன் கொடுப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றன.
இதுபோன்ற சூழலில் புதிய திட்டம் வெற்றிபெற வேண்டுமானால், மூன்று விஷயங்களில் முன் முயற்சி மேற்கொள்வது நல்லது.
முதலாவதாக, வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்பது வெளிப்படை என்றாலும், அது கணிசமாக உயர்த்தப்பட வேண்டும். மக்களின் மனப்போக்கை மாற்றவல்லது அது. வட்டிக்கு வருமான வரி விலக்கு அளிப்பது வரவேற்கத்தக்கதுதான்.ஆனால், அது ஆலயங்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும் நன்மை பயக்குமே தவிர, நடுத்தர மக்களுக்கு அதனால் பலன் அதிக அளவில் இருக்க வாய்ப்பில்லை.
இரண்டாவதாக, தீர்வு காலம் 5 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 7 ஆண்டுகள் என்பது சற்று அதிகம்.
மூன்றாவதாக, தங்க நகைகளை உருக்குவதற்கும், தரம் நிர்ணயிப்பதற்கும், முதல் கட்டமாக 350 மையங்கள் (Hallmarking centres) அமைக்கப்பட உள்ளன என்று தெரிகிறது. இது மிகவும் குறைவான எண்ணிக்கை என்று பல நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
புதிய திட்டத்தில் முதலீடு செய்யப்படவுள்ள தங்கத்தை உருக்கி அதன் தரத்தை நிர்ணயிக்கும் மையங்கள், கூடுதல் எண்ணிக்கையிலும், குறிப்பிட்ட மக்கள்தொகை கொண்ட அனைத்து நகரங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.
ஏற்கெனவே 2000-கும் அதிகமான வங்கிக் கிளைகள், தங்க நகைகளைக் கையாளுகின்ற வசதி பெற்றுள்ளன. தேவையானால் இதுபோன்ற வங்கிக் கிளைகளில் தற்போது உள்ள தங்க நாணய வசதிகளை நவீனமயமாக்கவோ, மேம்படுத்தவோ வேண்டும். தேர்வு செய்யப்பட்ட வங்கிசாராத அமைப்புகளையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம்.
தங்க நகைகளை உருக்குதல், தரம் நிர்ணயித்தல், பிறகு சான்றிதழை வங்கியில் கொடுத்து ரசீது பெறுதல் உள்ளிட்டதங்கம் நவீனமயத் திட்டம் தொடர்பான அனைத்து செயல்பாடுகளும், முதலீட்டாளர்கள் அலைகழிக்கப்படாமல், எளிமையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நிகழ வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும் ஆகும்.
தொடக்கத்தில் குறைவான ஹால்மார்க்கிங் மையங்கள் அமைக்கப்படுவதன் காரணமாகவோ, இதர நடைமுறைச் சிக்கல்களாலோ, வாடிக்கையாளர் சேவையில் குறைபாடு நேராமல் அல்லது நிகழாமல் பார்த்துக் கொள்வது, புதிய திட்டத்தின் வெற்றிக்கு இன்றியமையாதது ஆகும்.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).
நாம் முதலீடு செய்யும் தங்க நகைகள் உருக்கப்பட்டு, அதன் தூய்மைத் தன்மைக்கு ஏற்ப, நாம் எவ்வளவு
தங்கம் முதலீடு செய்கிறோமோ, அதே அளவு தங்கம் தீர்வு காலத்துக்குப்பிறகு திரும்பக் கொடுக்கப்படும்.
வட்டியும் தங்கமாகவே தரப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...