சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திட்டங்களும் சட்டங்களும்

வளங்களை அழித்து வளர்ச்சியைக் காண விரும்பும் ஆளும் வர்க்கம் இயற்கைக்கு எதிராகச் செயல்படும்போது சூழல்வாதிகள் கொதித்து எழுவது இயல்பு.

News image
Updated On :2 ஜூலை 2015, 8:11 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

வளங்களை அழித்து வளர்ச்சியைக் காண விரும்பும் ஆளும் வர்க்கம் இயற்கைக்கு எதிராகச் செயல்படும்போது சூழல்வாதிகள் கொதித்து எழுவது இயல்பு. தாங்கும் நிலையைத் தாண்டிவிட்ட பூமியின் வெப்பம் இப்படி உயர்ந்து கொண்டே போனால், மண்ணுலகம் அழியும்.
 எதிர்காலத்தில் வர இருக்கும் ஆபத்துகளைப் பற்றி சூழலியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளதை ஆழ்ந்த கவலையுடன் புலன் விசாரணை செய்ய உலகில் முதன் முறையாக முன்வந்த ஐ.நா. சுற்றுச்சூழல் நிறுவனம், 1992-இல் உலக நாடுகளை ஒன்று கூட்டியது. பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நிகழ்ந்த முதல் ஐ.நா. உலகச் சுற்றுச்சூழல் மாநாடு, சூழலியல் வரலாற்றில் முதல் திருப்புமுனை என்றால் மிகையில்லை.
 பசுமையைக் காப்பாற்றாமல், ஒவ்வொரு நாடும் சூழல் நெறிகளைப் போற்றாமலிருந்தால் ஆயிரமாண்டில் உலகமே அழிந்துவிடும் என்றும், தொழில் வளர்ச்சியை மட்டுப்படுத்த வேண்டும், வரும் சந்ததிகளுக்கு இயற்கை வளத்தை மிச்சப்படுத்த வேண்டுமென்ற அடிப்படையில் உலக நாடுகளின் ஒப்புதலைப் பெற்றுச் சுற்றுச்சூழல் தொடர்பாக 8 முடிவுகளும், 21 குறிக்கோள்களும் கொண்ட ஆயிரமாண்டுத் திட்டம் (Millennium Development Goals) நிறைவேற்றப்பட்டது.
 முக்கிய முடிவுகளில் குறிப்பாக, நச்சு வாயுக்களான கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரேட் வாயு அடங்கிய குளோரோ புளூரோ கார்பன் வெளியீட்டை 1000 PPM (P.P.M. என்றால் பத்து லட்சத்தில் ஒரு பங்கு) அளவிலிருந்து 450 PPM நிலைக்குக் குறைத்து சராசரி வெப்ப நிலையை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைத்து பூமியை அதிகம் வெப்பமாதலில் இருந்து நிறுத்துவது முதல் முக்கியத்துவம் பெற்றது. பூமியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் வட துருவம் - தென் துருவப் பனிமலைகளும், ஆல்ப்ஸ், ஆண்டஸ், எவரெஸ்ட் வெள்ளிப் பனிகள் (Glaciers) இல்லாமல் போய்விடும்.
 இரண்டாவதாக, பல்லுயிர்ப் பெருக்க உடன்பாடு. விவசாயம் தோன்றிய காலகட்டத்திலிருந்து இன்னமும் எஞ்சியுள்ள முரட்டு வகைத் தாவர இனங்கள் (Wild varieties), அழிந்து வரும் பண்பட்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன ஆகியவற்றின் பல்வகை ரகங்கள் அழியாமல் காப்பாற்றுதல்.
 மூன்றாவதாக, வனப் பாதுகாப்பு. புவியியல் நிலப்பரப்பில் 30 சதவீதம் வனங்களை இருப்பில் வைப்பது. அதற்கு ஏற்ப புதிய வனப் பகுதிகளை உருவாக்குதல். கானுயிர்ப் பாதுகாப்பு அடிப்படையில் மனித நடமாட்டத்தைத் தடை செய்து சரணாலயங்களை உருவாக்குதல்.
 1992-இல் ரியோவில் கூட்டப்பட்ட முதல் சுற்றுச்சூழல் மாநாடு ஆண்டுதோறும் பல நாடுகளின் தலைநகரங்களில் மீண்டும் மீண்டும் ஒன்று கூடி ஆயிரமாண்டுத் திட்ட முடிவுகள் பற்றி விவாதித்து இருபது ஆண்டுகள் உலகம் சுற்றி 2012-இல் அதே ரியோ டி ஜெனிரோவில் மீண்டும் கூடி விவாதித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவு, திட்டத்தின் தலைப்பில் ஏற்பட்ட மாற்றமே.
 இனி "ஆயிரம் ஆண்டுத் திட்டம்' (M.D.G.) என்று பேசாமல் "வளங்குன்றா வளர்ச்சித் திட்டங்கள்' (Sustainable Development Goals) என்று பேச வேண்டுமென்று முடிவானது.
 2050}ஐ நெருங்குமுன் 17 முடிவுகளில் 129 குறி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு S.D.G. நிறைவேறத் திட்டமிடப்பட்டது. இந்த M.D.G. என்ற பழைய திட்டம் வளரும் நாடுகளுக்கு நீடிக்கும் என்றும், வளர்ச்சியுற்ற நாடுகளுக்கு S.D.G. என்றும் முடிவானது.
 ஏனெனில், ஏழை நாடுகளில் உள்ள இயற்கை வளம் (குறிப்பாக காடுகள்) பாதுகாப்பாக இல்லை என்பது வாதம். அதேசமயம் எழுச்சியுற்ற நாடுகள் என்ற பிரிவில் வரும் பிரேசில், சீனா, இந்தியா போன்ற நாடுகள் S.D.G.இல் பங்கேற்க நிர்பந்திக்கப்பட்டது. இதன் பொருள் எழுச்சியுற்ற நாடுகளுக்கு M.D.G. உதவி கிடையாது என்பதும், S.D.G.யில் உள்ள சமத்துவமின்மை என்பதும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்று இந்தியா போர்க் கொடி தூக்கியுள்ளது.
 S.D.G.யில் முக்கிய அம்சம் மாற்று எரிசக்தி பற்றியது. எரிசக்திப் பிரச்னையில் "வளங்குன்றாமை' என்றால் மண்ணில் புதைந்துள்ள நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவற்றைச் சுரண்டாமல் சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி, பயோமாஸ் மின்சக்தி, தாவர எண்ணெய், டீசல், கரும்பு எத்தனால் பெட்ரோல், மக்காச்சோள ஜின் பெட்ரோல் ஆகியவற்றின் பயன்பாடு.
 இத்தகைய மாற்று எரிசக்திப் பயன்பாட்டினால் மீண்டும் புதுப்பிக்க முடியாத நிலக்கரி, கச்சா எண்ணெய் வளம் மிச்சமாவது ஒரு நன்மை. நச்சுவாயு வெளிப்பாடு இன்மை இரண்டாவது நன்மை. ஆகவே S.D.G. அடிப்படையில் உலக நிதியத்திலிருந்து கார்பன் கிரெடிட் மாற்று எரிசக்திப் பயனுக்கு வழங்கப்படுகிறது.
 வளர்ந்த வடக்கு நாடுகளோடு ஒப்பிடும்போது மாற்று எரிசக்தித் தொழில்நுட்பம், மாசு சுத்திகரிப்பு தொழில்நுட்பம் தொடர்பான இயந்திரங்கள் / கருவிகள் / சாதனங்களின் உற்பத்தி அங்காடி வளர்ந்த நாடுகளின் ஏகபோகமாயுள்ளதால் இந்தியா போன்ற எழுச்சி நாடுகளுக்கு வழங்கப்படும் உதவி / கார்பன் கிரெடிட் போதுமானவை அல்ல.
 ஏனெனில், மாற்று எரிசக்தி - மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்களின் விலை அதிகம் என்பதால் ஒரு நாட்டின் வாங்கும் சக்தி அடிப்படையில் உதவி நிதியை உயர்த்தித் தரவேண்டுமென்று தொடர்ந்து இந்தியா குரலெழுப்புகிறது. வளர்ந்த வடக்கு நாடுகள் கேட்பதாயில்லை.
 எனினும் ஒட்டுமொத்தமாகச் சுற்றுச்சூழல் திட்டங்களில் ஆயிரமாண்டுத் திட்டமும், வளங்குன்றா வளர்ச்சித் திட்டமும் பூமியை வெப்பத்திலிருந்து எந்த அளவு காப்பாற்றும் என்பதை வருங்காலம் முடிவு செய்யும். இப்படிப்பட்ட உலகச் சூழ்நிலையில் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற இந்தியா உருவாக்கிய சில சட்டங்களை நினைவு கொள்வோம்.
 1984-ஆம் ஆண்டு போபாலில் நிகழ்ந்த விஷவாயுக் கசிவால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இப்படிப்பட்ட சோக நிகழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட நன்மை 1987-இல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அணு உலைகள், இதர பல ரசாயனப் பொருள் தொழிற்சாலைகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.
 இந்தியாவில் ஏராளமான சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள் பெருகின. மாசுக் கட்டுப்பாடு வாரியம் உருவானது. தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சாயப் பட்டறைகளின் கழிவுநீர் நிலத்தடி நீரையும் நதிகளையும் மாசாக்கும் விஷயம் வெளிச்சமானது. ஏராளமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இந்திய நகரங்களில் தோன்றின.
 இந்திய சுற்றுச்சூழல் வரலாற்றில் 1973-ஆம் ஆண்டு நிகழ்ந்த சிப்கோ இயக்கத்தின் உச்சகட்டப் போராட்ட அணுகுமுறை உலக நாடுகளை வெகுவாகக் கவர்ந்தன. அதன் விளைவுதான் 1988-ஆம் ஆண்டு முதல்முறையாக இந்திய வனக் கொள்கை (Indian Forest Policy) உருவாகி வெளியிடப்பட்டது. அடுத்த கட்டமாக 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் இயற்றப்பட்டுப் பழங்குடி மக்களின் உரிமை நிலை நாட்டப்பட்டது.
 உலகத்தையே உலுப்பி எழுப்பிய "சிப்கோ இயக்கம்' பற்றிச் சில வரிகள். தேரி இமயமலை வனப் பகுதியில் சாந்தி பிரசாத் பட் உருவாக்கிய "கிராம் சுயராஜ்ய மண்டல்' என்ற மகளிர் அமைப்பு காந்திய வழியில் வனப் பொருள்களைக் கொண்டு குடிசைத் தொழில் மூலம் ஜீவித்து வந்தது. இவர்களுக்கும் வன ஒப்பந்தக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
 மரமே எங்கள் ஜீவாதார உரிமை என்று முழக்கமிட்டு வன ஒப்பந்தக்காரர்களை மரம் வெட்ட விடாமல் தடுத்தனர். மீறி மரம் வெட்ட வந்தால் பெண்கள் மரத்தை இரு கைகளாலும் அணைத்துத் தழுவி முதலில் எங்களை வெட்டி வீழ்த்திவிட்டு மரத்தை வெட்டுங்கள் என்று முழக்கமிட்டனர்.
 இந்த இயக்கத்தில் சுந்தர்லால் பகுகுணா என்ற காந்தியவாதியும் இணைந்து "உண்ணா நோன்பு' இருந்தார். துப்பாக்கிச் சூடுகள் - கண்ணீர்ப் புகைகளுக்கும் சிப்கோ அஞ்சவில்லை.
 "சிப்கோ' என்றால் "மரத்தை அரவணைத்தல்' என்று பொருள். இந்த இயக்கத்தின் எதிரொலியாக வனப் பொருள்களில் மூங்கில் உரிமை பழங்குடி மக்களுக்குக் கிட்டியது என்பதுடன் வனப் பாதுகாப்பில் பழங்குடிக் கூட்டுறவு அமைப்பின் பங்கேற்பு உறுதியானது.
 ஏழை மக்களின் நலன் கருதி கொண்டு வரப்பட்ட நான்கு சட்ட திட்டங்கள் ஒருபுறம் ஊழலுக்கு வழிவகுத்தாலும், ஐ.நா. சுற்றுச்சூழல் நெறிமுறை ஆயிரமாண்டுத் திட்டத்தின் சமூகப் பிரச்னைகளான வேலை உரிமை, கல்வி உரிமை, மகளிர் உரிமை ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
 மகாத்மா காந்தி தேசிய கிராமிய வேலை உறுதித் திட்டம், உணவுக்கு உறுதிசெய்யும் உணவுப் பாதுகாப்புச் சட்டம், தேசிய நல வாழ்வு கமிஷன், கல்வி உறுதித் திட்டம் ஆகியவை சிறப்பானவை. ஐந்தாவதாகக் குறிப்பிட வேண்டியது மகளிர் சுயஉதவிக் குழு மூலம் சிறுதொழில் வளர்ச்சி.
 சுருக்கமாகச் சொல்வதானால், மன்மோகன் சிங் ஆட்சியில் வளர்ச்சியை மையமிட்டு தேசிய நெடுஞ்சாலை, வீட்டுவசதி, நீர் மின்சாரம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
 குறிப்பாக, நொய்டா போன்ற கட்டுமானத் திட்டங்களால் குடியிருப்பு மனைகளுக்குக் கொள்ளை விலை கிடைத்தது. நகரமயமாதலின் காரணமாக விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாறிய கால கட்டத்திலிருந்து ஒரு புதிய அரசியல் வர்க்கம், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களிலிருந்து உருவானது.
 அகில இந்தியாவிலும் 90 சதவீத எம்.எல்.ஏ. / எம்.பி.க்களின் தொழில் விவசாயம் என்ற போர்வைக்குள் ஒளிந்துள்ள ரியல் எஸ்டேட். இந்த உண்மையில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. அவர்கள் எல்லாக் கட்சிகளிலும் உள்ளனர். இவர்களை நம்பித்தான் நில கையகப்படுத்துதலில் புனர்வாழ்வு, மாற்றுக் குடியிருப்பு, நஷ்டஈடு உரிமைச் சட்டம் (The Right to Fair Compensation and Transparency in Land Aquisition, Rehabilitation and Resettlement Act 2013) கொண்டுவரப்பட்டது.
 இதன் தொடர்ச்சியாக பா.ஜ.க. கொணர்ந்த நிலம் கையகப்படுத்துதலில் சுரங்கம் - தாதுப்பொருள் வளர்ச்சி - விதிமுறைச் சட்டம் (Land Aquisition Rehabilitation Re Settlement Act (plus) Two mines and minerals Devlopment and Regulation Act) - விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
 மேற்படி சட்ட எதிர்ப்புக்கு பதிலாக, "நாங்கள் சூழல் விதிகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், சூழல் வரி விதித்து சூழல் நெறிமுறைகளை மதிக்குமாறு சுரங்க நிறுவனங்களுக்கு கட்டளை விதிப்போம்' எனறு மோடி அரசு ஆறுதல் கூறியுள்ளது.
 உண்மையில் வன உரிமைச் சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி நியாயமான நஷ்டஈடு, மறுகுடியிருப்பு, புனர்வாழ்வு ஆகியவை பழங்குடிகளுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் கிட்டுமா அல்லது இவை ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்குப் பலன் தருமா?
 இப்படி நெருடலான கேள்விகள் உண்டெனினும் இப்படிப்பட்ட சூழலியல் திட்டங்களும் சட்டங்களும் இயற்றப்படாவிட்டால் நிலைமை இன்னமும் மோசமாயிருக்குமே என்று ஆறுதல் அடைவோம்.
 மரமே எங்கள் ஜீவாதார உரிமை என்று முழக்கமிட்டு வன ஒப்பந்தக்காரர்களை மரம் வெட்ட விடாமல் தடுத்தனர். மீறி மரம் வெட்ட வந்தால் பெண்கள் மரத்தை இரு கைகளாலும் அணைத்துத் தழுவி முதலில் எங்களை வெட்டி வீழ்த்திவிட்டு மரத்தை வெட்டுங்கள் என்று முழக்கமிட்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.