இந்திய வரலாற்றில், நாட்டின் விடுதலைக்காக முதன்முதலில் வேலூர் கோட்டையில்தான் 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி புரட்சி நடைபெற்றது. ஆனால், இது சிப்பாய் கலகம் என்றே வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புரட்சி நடைபெற்று 51 ஆண்டுகளுக்குப் பிறகு மீரட் நகரில் 1857 மே 10-ஆம் தேதி நடைபெற்ற கிளர்ச்சியை வரலாற்று ஆசிரியர்கள் சிப்பாய் புரட்சி என வர்ணித்துள்ளனர்.
இதைத்தான் தமிழ் ஆர்வலர்கள் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சுட்டிக் காட்டி, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு முன்னோடியான சிப்பாய் புரட்சி என்று வரலாற்றுப் பதிவில் மாற்றம் செய்யக் கோரி வருகின்றனர்.
வேலூர் கோட்டையில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டை சேர்ந்த தென்னிந்தியத் துருப்புகள் 1805-ஆம் ஆண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன. அந்த ஆண்டில், இந்தியப் படையினர் சமய அடையாளங்களை அணியக் கூடாது. தலையில் குடுமி வைக்கக் கூடாது. ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான விதிகள் விதிக்கப்பட்டன.
சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிந்து மாட்டுத் தோலால் ஆன பட்டையை அணிய வேண்டும் என்ற உத்தரவு ஹிந்து, முஸ்லிம் சமுதாயங்களைச் சேர்ந்த 1,500 வீரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.
அதனால், ஆங்கிலேயேருக்கு எதிராக ஹிந்து, முஸ்லிம் வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட முயன்றனர். கிளர்ச்சியில் ஈடுபட முயன்றவர்களுக்குத் தலா 600 பிரம்படி தண்டனை அளிக்கப்பட்டது. கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் மகன்களே கிளர்ச்சிக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள், 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி அதிகாலையில் உறக்கத்தில் இருந்த ஆங்கிலேயே அதிகாரிகள் பலரைக் கொன்றனர். 350 அதிகாரிகளில் 100 பேர் கொலை செய்யப்பட்டனர். சில மணி நேரத்தில் இந்திய சிப்பாய் புரட்சியை ஆங்கிலேயர் படைகள் அடக்கி 350-க்கும் மேற்பட்ட வீரர்களைக் கொன்றனர்.
புரட்சியில் மாண்ட வீரர்களின் சடலங்கள் வேலூர் கோட்டைக்குள் உள்ள கிணற்றுக்குள் வீசப்பட்டு அக்கிணறு மூடப்பட்டது. கொலை செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் உடல்கள் கோட்டைக்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டு, அவர்களின் பெயர்களுடன் கல்லறைகளாக இன்றும் காட்சி தருகின்றன.
உயிர் நீத்த அந்த அடையாளம் தெரியாத வீரர்களின் நினைவாக வேலூர் மக்கான் பகுதியில் நினைவுத் தூண் ஒன்றை தமிழக அரசு எழுப்பியது. 2006-ஆம் ஆண்டு 200-ஆம் ஆண்டு நிறைவு விழா நடத்தப்பட்டு சிப்பாய் புரட்சி நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் அரசின் சார்பில் இந்த நினைவுத் தூணுக்கு ஜூலை 10-ம் தேதி காலை 8 மணிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் விடுதலைப் போருக்கு வித்திட்ட வேலூர் கோட்டை இன்றைக்கு அதன் அழகையும், கம்பீரத்தையும் மெல்ல இழக்கத் தொடங்கியுள்ளது.
16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் மன்னராக இப்பகுதியை ஆண்ட பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது. கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய இக்கோட்டையின் மதில்கள், அகழி ஆகியன உறுதியான கட்டுமானங்களுக்குச் சான்றாக விளங்குகின்றன.
ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. 1921 முதல் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்கு வந்துள்ள இக்கோட்டை வளாகம், பல ஆட்சியர்களால் பராமரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டும் தோல்வியில்தான் முடிந்துள்ளது.
கோட்டையைச் சுற்றி வண்ண மின் விளக்குகள் அமைத்தல், அதைத் தொடர் ந்து இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் சிப்பாய் உருவ பொம்மைகள் அமைத்தல், கோட்டையின் ஒரு பகுதியில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்து இரவில் மின் விளக்குகளை எரியச் செய்தல், கோட்டை மதில் சுவரை சுற்றியுள்ள பாதையை சீர் செய்தல் போன்ற பணிகள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டன.
அகழியின் ஒரு பகுதி பராமரிப்புக் குறைபாடு காரணமாக தூர்ந்து போன நிலையில், மீதமுள்ள பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் படகுப் போக்குவரத்துக்கும் கூட ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், தொடர் பராமரிப்பில் சிக்கல், பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாதது போன்ற காரணங்களால் மீண்டும் முந்தைய மோசமான நிலைக்குக் கோட்டை தள்ளப்பட்டுள்ளது. இன்றைக்கு கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வளாகம் மட்டுமே பராமரிப்பில் உள்ளது. பிற இடங்கள் கட்டுப்பாட்டுகள் காரணமாகவும், கவனிப்பார் இன்றியும் சிதலமடைந்து வருகின்றன.
போதாக்குறைக்கு கோட்டையின் பின்பகுதியில் உள்ள அகழியின் சுற்றுச் சுவரின் ஒரு பகுதியைச் சீர்செய்வதும், மற்றொரு பகுதி சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்படுவதும் தொடர்கிறது. கோட்டைச் சுவர்களை சேதப்படுத்தும் அளவுக்கு பல இடங்களில் மரக்கன்றுகள் முளைத்து வருவதைத் தடுக்க முடியவில்லை.
கோட்டையைக் காப்பாற்ற மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து பயனளிக்கக் கூடிய திட்டம் ஒன்றை மாநில நிர்வாகத்தின் ஆலோசனையுடன் மாவட்ட நிர்வாகம் செய்வதன் மூலமே வேலூர் கோட்டையின் பொலிவை மீட்க முடியும்.
வரலாற்றில் சிப்பாய் புரட்சி என்று மாற்றப்படுவதுடன், கோட்டையை முறையாகப் பராமரிப்பதன் மூலமே நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிகக் கப்பல்களில் பணிபுரியச் செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அறிவுரை!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் 3 பேர் பலி

லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


