வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பட்ஜெட்
பொதுவாக பட்ஜெட்டில் மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பது, வரிச் சலுகை, விலைவாசிக் கட்டுப்பாடு, பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவற்றையே.


பொதுவாக பட்ஜெட்டில் மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பது, வரிச் சலுகை, விலைவாசிக் கட்டுப்பாடு, பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவற்றையே.
1997-ஆம் ஆண்டு, கம்பெனிகளின் வரிகளைக் குறைத்து அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்ட பட்ஜெட்டுக்குப் பிறகு அதிக அளவில் பேசப்படும் பட்ஜெட் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் பட்ஜெட்தான் என்றால் அது மிகையல்ல.
உதாரணமாக, கம்பெனிகளுக்கு வருமான வரி 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே மூச்சில், அவர்களுக்கு இதுவரை துண்டு துண்டாக அவ்வப்போது வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அரசுக்கு வருவாய் இழப்பு இல்லாமலும், தேவையற்ற தாவாக்களைக் குறைக்கும் விதத்திலும் இது அமையும். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியாவில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஊக்குவிக்கும் உத்தியாகவும் இது பார்க்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய ஜி.ஏ.ஏ.ஆர். (General Anti Avoidance Rule) அமல்படுத்துவது இரண்டு ஆண்டுகளுக்குத் தள்ளிப் போடப்பட்டிருப்பது, அடிப்படை கட்டமைப்புக்காக ரூ.70,000 ஒதுக்கீடு, தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதியில் ஆண்டுதோறும் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு, ரயில், சாலைகள் மற்றும் நீர் பாசன மேம்பாட்டுக்கு உதவும் வகையில் வரியில்லாத "கட்டமைப்பு பாண்டுகள்' வெளியீடு - ஆகியவை கட்டமைப்புப் பணிகளை முடுக்கிவிடுவதற்கு வழிவகுக்கும்.
இவை அனைத்துமே வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவக் கூடியவையே.
சிறு தொழில் நிறுவனங்களுக்குத் தலைவலியாக இருப்பது நடைமுறை மூலதன (Working capital பற்றாக்குறை. இந்த நிறுவனங்கள் சப்ளை செய்யும் பொருள்களுக்கு 90 நாள், 120 நாள் கழித்துதான் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. அதற்கு மேலும் கூட தாமதம் ஆகலாம்.
இந்த இடர்ப்பாட்டைக் களைவதற்கு, புதிய பட்ஜெட்டில் ஒரு நல்ல திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. மின்னணு மூலம் தங்கள் பில்களுக்கு முன்கூட்டியே பணம் பெற்றுக் கொள்ளக்கூடிய (Bill Discounting Scheme) வங்கிக் கடன் வசதிதான் அது. இது சிறு தொழில்களுக்கு உதவக்கூடியது.
இந்நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை மத்திய, மாநில அரசுகள் கட்டாயமாக கொள்முதல் செய்திட வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும்.
குறைந்த முதலீட்டில் நிறைந்த வேலைவாய்ப்புகளைத் தரக்கூடியவை சிறு தொழில்கள்தான்.
சின்னஞ்சிறு சில்லறை வியாபாரிகளுக்கும், அமைப்பு சாரா குறுந்தொழில்களுக்கும் (உதாரணமாக தெருவோர இட்லி கடை, தேநீர் கடை, காய்கறி, கீரைக் கடை, பெட்டிக் கடை, மூன்று சக்கர சைக்கிளில் ஐஸ்கிரீம் விற்பனை, தெருவோர செருப்புக் கடை) இந்திய வளர்ச்சி மூலம் கிடைக்கும் பங்கு என்ன?
ரூ.5,000, ரூ.10,000 அளவிலாவது அவர்களுக்கு நியாயமான வட்டியில் கடன் கிடைக்கிறதா என்றால் இல்லை. இவர்கள் தங்களின் பணத்தேவைக்கு கந்து வட்டிக்காரர்களை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை.
இவர்களுக்கு உதவும் வகையில் அறிவிக்கப்பட்டிருப்பதுதான் "முத்ரா' (Micro Units Development Refinance Agency) என்கிற மறுநிதி வங்கி.
இந்த அமைப்புசாரா குறுந்தொழில் துறையினருக்கும் தனி நபர்களுக்கும் கடன் வழங்கும், குறு நிதி நிறுவனங்களுக்கு (Micro Finance Companies) மறுநிதி வழங்கும் அமைப்புக்கு (MUDRA) ரூ.20,000 கோடி வைப்பு நிதி (Corpus Fund) மற்றும் குறுநிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் தொகைக்கு உத்தரவாதமாக ரூ.3,000 கோடி நிதியும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறு சுயதொழில் முனைவோருக்கு, பதிவு செய்யப்பட்ட தனியார் நிதி அமைப்புகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதை ஊக்குவிப்பதுதான் "முத்ரா' வங்கி திட்டத்தின் நோக்கம்.
"முத்ரா' வங்கி தனியார் குறுநிதி அமைப்புகளுக்கு (Micro Finance companies) குறைந்த வட்டியில் கடன் வழங்கும். அவர்கள் சிறிய சுய தொழில் முனைவோர்களுக்கு நியாயமான வட்டிக்கு கடன் வழங்க வேண்டும். கடனைத் திரும்ப வசூலிப்பது குறுநிதி அமைப்புகளின் பொறுப்பு. ஆக "முத்ரா' ஒரு மறுநிதி நிறுவனம்.
ஒவ்வொன்றும் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய ஐந்து மின் உற்பத்தி நிலையங்களை நாட்டின் பல பாகங்களில் நிறுவுதல், ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வதைக் குறைத்து, உள்நாட்டிலேயே பெரிய அளவில் உற்பத்தி செய்தல், 50 லட்சம் கழிப்பறைகள் கட்டுதல் - உள்ளிட்ட பல கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் பல வகை தொழிலாளர்களுக்கும், தாற்காலிக வேலையாவது நிச்சயம் கிடைக்கும்.
புதிய பட்ஜெட் அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே ரிசர்வ் வங்கி தனது ரெப்போ ரேட்டை (ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம்) 7.75 சதவீதத்திலிருந்து 7.30 சதவீதமாக குறைத்திருப்பது நல்ல அறிகுறி.
முன்னதாக ஜனவரி 15-ஆம் தேதி இதே போன்று கால் சதவீத வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்தது. பிப்ரவரி 3-ஆம் தேதி எஸ்.எல்.ஆர். எனப்படும் வங்கிகள் கட்டாயமாக ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய அரசு பத்திரங்கள் உள்ளிட்ட இருப்புத் தொகையை 22 சதவீதத்திலிருந்து 21.50 சதவீதமாக குறைத்தது.
இதனால், ரூ.45 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிகளிடம் பணப் புழக்கம் அதிகரித்தது. இவ்வளவுக்கும் பிறகு கூட ஓரிரு வங்கிகள் தவிர இதர வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கவில்லை. இந்த நிலையில், குறைந்த வட்டி விகிதத்தின் பயனாக விரைவில் வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைக்கும் என்று நம்பலாம்.
இது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளின் அடிப்படையில் பார்த்தால், வேலைவாய்ப்பு உருவாக்கம் ஏறுமுகத்தில் இருப்பது கண்கூடு.
குறிப்பாக, வங்கித் துறை, வங்கி சாராத நிதித் துறை, ஹோட்டல் துறை, ஆகாய விமான போக்குவரத்து, தோல் பொருள் ஏற்றுமதி, ஆபரணக் கற்கள், தங்க நகைகள், மருந்து உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் நடப்பாண்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
அதிலும் குறிப்பாக, ஹோட்டல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் 2015-ஆம் ஆண்டில் 40 சதவீத அளவுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நடப்பாண்டில் தனியார் வங்கித் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தியாவில் உள்ள 11.51 லட்சம் வங்கி ஊழியர்களில் 8.3 லட்சம் பேர் அரசுடைமை வங்கி ஊழியர்கள். 2005 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், உள்நாட்டு, வெளிநாட்டு, தனியார் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 1.09 லட்சத்திலிருந்து 3.2 லட்சமாக அதிகரித்து உள்ளது.
இது வியப்பளிக்கும் விஷயம். அதே காலகட்டத்தில், அரசுடைமை வங்கிகளின் ஊழியர்கள் எண்ணிக்கை வெறும் 81,445 மட்டுமே அதிகரித்துள்ளது.
தனியார் வங்கிகளில் அதிக அளவில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, வியாபார வளர்ச்சியின் விளைவாக, புதிய கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு, outsourcing எனப்படும் வெளியாரிடம் பணிகள் ஒப்படைப்பது கணிசமாகக் குறைந்துள்ளது.
இதன் காரணமாக, பொதுத் துறை, தனியார்துறை வங்கிகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்பது வெளிப்படை.
Barclays வங்கி போன்ற சில வெளிநாட்டு வங்கிகள், இந்தியாவில் தங்கள் வங்கிக் கிளைகளில் அலுவலர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்று தெரிவிக்கின்றன.
இப்படி, வங்கித் துறை நடவடிக்கைகள் பெருகும் நிலை உள்ளது. "ஜன் தன்' திட்டத்தின் பயனாக அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையில் ஊரகப்பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் வங்கிப் பணிகள் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டால், ஒட்டு மொத்த வங்கித் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
இதுபோன்ற சாதகமான அம்சங்கள் ஏராளம் என்றாலும், பாதகமான விஷயங்களும் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்கின்றன. நவீன தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் சுருங்கி வருகின்றன.
இதற்கு முக்கியக் காரணம், "ஆட்டோமேஷன்' என்கிற அதிநவீன இயந்திரங்களே. படித்த மனிதர்களின் வேலைகளை இயந்திரங்களே செய்துவிடுகின்றன. இந்த சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது ஒரு முக்கியமான கேள்வி.
இதற்கு, வேலைவாய்ப்புகளை அதிக அளவில் அளிக்கக்கூடிய சிறு, நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். அவர்களது கடன்களுக்கான நெறிமுறைகளில், அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ற மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.
புதிதாகத் தொழில் துவங்குவதற்கு அனுமதி பெற ஒற்றைச் சாளர முறையை ஏற்படுத்த வேண்டும். தொழில் துறை வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியத்திலும் அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...