தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வன்முறை வேண்டாம்

நாடு சுதந்திரம் பெற்றது முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர்

News image
Updated On :16 மார்ச் 2015, 10:07 pm

இராம. பரணீதரன்

நாடு சுதந்திரம் பெற்றது முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் உண்ணாவிரதம், சத்தியாகிரகம் எனப் பல்வேறு வழிகளில் போராடி தங்களின் அமைதி வழிப் போராட்டத்தால் வெற்றி கண்டனர்.

ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இத்தகைய அறப் போராட்டங்களில் வன்முறை புகுந்துவிட்டதைக் காணமுடிகிறது. நாட்டில் விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்கள் பெருகி வருவது மறுக்க முடியாத உண்மை.

பழிக்குப்பழியாக நடைபெறும் கொலைகள், சாதி, மதக் கலவரங்கள், இரு கிராமத்தினரிடையே, இரு பிரிவினரிடையே மோதல், வெவ்வேறு சமூகத்தினரிடையே ஏற்படும் காதல், அதனால் நிகழும் கொலை, எதிர்பாராமல் நடைபெறும் விபத்து உள்ளிட்ட எந்தவொரு குற்றச் சம்பவமாக இருந்தாலும் உடனே அப் பகுதியில் பதற்றம் பற்றிக் கொள்கிறது.

குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களோ, சாதியினரோ உடனே சாலைகளில் அமர்ந்து குற்றச் சம்பவத்தால் உயிரிழந்தவரின் சடலத்தை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டம், மறியல் எனத் தொடங்கி, இறுதியில் வன்முறையில் களமிறங்கி விடுகின்றனர். இதற்குப் பின்னால் சாதீய அமைப்புகளும், கட்சிகளும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

இத்தகைய குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர காவல் துறையினரும் பாடுபட்டுதான் வருகின்றனர்.

ஆனால், காவல் துறையினர் விசாரணை நடத்தவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் உரிய கால அவகாசம் அளிப்பதுதானே முறையாகும்.

அதை விடுத்து உடனே குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் எனக்கூறி மறியலில் ஈடுபடுவது, அப்பகுதி வழயே செல்லும் பேருந்துகள் கல்வீசித் தாக்கி கண்ணாடிகளைச் சேதப்படுத்துவது, வாகனங்களை தீயிட்டுக் கொளுத்துவது என பொதுமக்களே சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் அப் பகுதியில் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. போலீஸார் குவிக்கப்படுகின்றனர். அப்பகுதி மக்களின் நிம்மதி குலைகிறது. எப்போது என்ன நடக்குமோ என்ற ஒரு பதற்றமான சூழல் ஏற்படுகிறது.

அதிலும், குறிப்பாக தென் மாவட்டங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. 

இத்தகைய வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்படுவது தாங்கள்தான் என்பதையும் உணரக்கூட முடியவில்லை.

அவர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதால் அவர்களின் குழந்தைகள் கல்வி கற்க பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல முடியாது.

அவர்களின் நண்பர்களும், உறவினர்களும் உடல் நலக்குறைவு, அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்குச் செல்ல இயலாது என்பதை மறந்து, தங்களின் வரிப் பணத்தில் வாங்கப்பட்ட அரசாங்கச் சொத்துகளைச் சேதப்படுத்தி தங்களின் கோபத்தைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

அதிலும், குறிப்பாக உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இத்தனை லட்சங்களை இழப்பீடாக வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர்களின் மிரட்டல் கோரிக்கைகள் நீள்கின்றன. இதற்கு பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும்  துணை போகின்றன. 

இன்னும் ஒரு சிலரோ, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் சென்று தீக்குளிக்கப் போவதாக மிரட்டி காரியம் சாதிக்க முயல்கின்றனர்.

மக்களின் போராட்ட அணுகுமுறைகள் தற்போது தலைகீழாக மாறிவிட்டன. வன்முறையின் மூலமாகவும், மிரட்டியும், தங்களின் காரியத்தை சாதிக்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

மக்களின் மனதில் அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற குணங்கள் குறைந்து கோபம், வீம்பு, வன்முறை எண்ணங்கள் தலைதூக்கி நிற்பதைக் காண முடிகிறது.

உலகத்துக்கே அகிம்சை எனும் அற்புத குணத்தைக் கற்றுக் கொடுத்த பூமியில், இன்று வன்முறை தலைவிரித்தாடுகிறது.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் மக்களை வழிநடத்தவும், அன்பை போதிக்கவும், அகிம்சையைக் கற்றுத் தரவும் தகுதிமிக்க தலைவர் எவரும் இன்று இல்லை என்பதே.

இப்போதுள்ள தலைவர்கள் தங்களின் சாதி, மதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகின்றனரே தவிர, மக்களின் நலனுக்காக சிந்திப்பதில்லை.

மக்களின் இத்தகைய எதிர்மறை சிந்தனையைப் போக்கி, அவர்களை நல்வழிப்படுத்த நீதித் துறையின் விரைவான செயல்பாடுகள் பயன்தரும். மக்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் தாமதமின்றி நியாயம் கிடைத்தாலே பாதி பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும்.

மேலும், கலவரங்களில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களை கைது செய்தால், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதத்தை ஈடுகட்ட அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவேண்டும்.

அப்போதுதான் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தும் நபர்களின் மனதில் அச்சம் ஏற்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக மக்களிடையே சமத்துவம் வளரவும், சகோதரத்துவம் பெருகவும், வன்முறை எண்ணங்கள் நீங்கவும் தேவையான ஆலோசனைகளை வழங்கவும், வழகாட்டவும் அரசு முயற்சி எடுக்கவேண்டும்.

அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இத்தகைய குணங்களை உருவாக்க கல்வித் துறை முயற்சி எடுக்கவேண்டும்.

ஏனெனில், கடந்த தலைமுறையின் தவறுகளை நீக்குவது கடினம். ஆனால், வருங்காலத் தலைமுறையை சரியான முறையில் உருவாக்குவது எளிது. அதற்கான முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.