'ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்படும்'- பிரிட்டன் பிரதமராக மீண்டும் வெற்றி பெற்ற பின்னர் டேவிட் கேமரூன் வெளியிட்ட முதல் அறிவிப்பு இது.
÷ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டும் என பிரிட்டன் கருதும் அளவுக்கு அப்படி என்னதான் நடந்துவிட்டது?
÷28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பிரிட்டன் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகிறது.
ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவில் தஞ்சம் புகும் அகதிகள் பிரச்னையே இதற்குப் பிரதான காரணம். லிபியா, சிரியா போன்ற ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உள்நாட்டுப் போர் காரணமாக வெளியேறும் லட்சக்கணக்கான அகதிகள் மத்திய தரைக்கடலைக் கடந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.
÷கடந்த ஆண்டு மட்டும் 6 லட்சம் பேர் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பிரான்ஸ் 64,310 பேருக்கும், இத்தாலி 64,625 பேருக்கும், பிரிட்டன் 31,745 பேருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளன. நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.
÷இந்த அகதிகளை ஏற்றுக் கொள்வதில் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகள் ஒரு நியாயமான, சரிசமமான பங்களிப்பை அளிக்கும் வகையில், ஒரு நிரந்தரமான திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் கவுன்சில் விரும்புகிறது.
அதன்படி, பிரிட்டனின் வலிமையான பொருளாதாரச் சூழல், வேலைவாய்ப்பின்மை பிரச்னை குறைவு போன்ற காரணங்களால், பிரிட்டன் அதிக அளவு, அதாவது ஆண்டுக்கு 65,000 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க வேண்டும் என்ற ஒரு வரையறையை முன்வைத்துள்ளது. இது சராசரியாக பிரிட்டன் புகலிடம் அளிக்கும் எண்ணிக்கையைவிட இரு மடங்கு அதிகம்.
÷ஆனால், இதை பிரிட்டன் விரும்பவில்லை. மாறாக, தாங்கள் தஞ்சமளிக்கும் அகதிகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதே அதன் எண்ணம்.
÷மேலும், அகதிகளாக வருவோர் 4 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை உள்ளிட்ட எந்தப் பலனையும் கோரக் கூடாது; வெளிநாட்டில் வசிக்கும் அவர்களது குழந்தைகளுக்கான நிதிப் பலனை கோரக் கூடாது; புலம்பெயர்ந்து வருவோர் 6 மாதங்களுக்குள் ஒரு வேலையைத் தேடிக் கொள்ளாவிட்டால் அவர்களைத் திருப்பி அனுப்பும் உரிமை வேண்டும்; ஐரோப்பிய யூனியனின் சட்டங்களைத் தடுக்க தேசிய நாடாளுமன்றத்திடம் அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட சீர்திருத்தங்களை ஐரோப்பிய யூனியன் கவுன்சில் மேற்கொள்ள வேண்டும் என்பது பிரிட்டனின் நிபந்தனைகள்.
÷தகுதி வாய்ந்த சுமார் 4.15 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வரிச் சலுகையாக மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.36 ஆயிரம் கோடியை பிரிட்டன் செலவிடுகிறது.
÷புலம்பெயர் தொழிலாளர்களின் சில சலுகைகளைத் தடுப்பதன் மூலம், அவர்கள் பிரிட்டனை விரும்பி நாடுவதையும் தடுக்கலாம் என்பது கேமரூனின் திட்டம்.
வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள கவுன்சில் கூட்டத்தில் இந்த நிபந்தனைகளை முன்வைக்க பிரதமர் டேவிட் கேமரூன் திட்டமிட்டுள்ளார்.
÷கேமரூனின் இந்தப் புதிய யோசனைகளுக்கு அயர்லாந்து, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா உள்ளிட்ட சில நாடுகள் ஆதரவு அளித்துள்ளன என்றாலும், இவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை.
ஏனெனில், ஐரோப்பிய யூனியன் கவுன்சிலின் சட்ட திட்டங்களில் சிற்சில மாற்றங்களைச் செய்யலாம் எனக் கூறும் ஜெர்மனி, பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
கேமரூனின் யோசனை ஏற்றுக் கொள்ளப்படுவது மிகவும் சிரமம் என ஐரோப்பியன் கமிஷன் முன்னாள் தலைவர் ஜோஸ் மனுவேல் பொரோúஸôவும் குறிப்பிட்டிருக்கிறார்.
÷பிரிட்டனின் இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றப்படாவிட்டாலும் ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டுமா, வேண்டாமா என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நடத்துவது என பிரதமர் கேமரூன் தீர்மானமாக உள்ளார்.
÷அதேவேளையில், பிரிட்டன் அரசு தீர்மானித்துள்ள கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை எவ்வளவு விரைவாக நடத்த வேண்டுமோ அத்தனை விரைவாக நடத்த வேண்டும் என்பது பிரிட்டன் தொழிலதிபர்களின் கருத்து.
"ஏனெனில், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுமா, இல்லையா என்ற நிலையற்ற தன்மை தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும்' என்கிறார் பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஆளுநர் மார்க் கார்னி. "ஐரோப்பிய யூனியனுடன் சேர்ந்து இருப்பதே பிரிட்டனின் தொழில் வளர்ச்சிக்கு நல்லது' என்றும் அவர் சொல்கிறார்.
÷பிரிட்டனின் மிகப் பெரிய தொழில், வர்த்தகச் சந்தை ஐரோப்பா. ஐரோப்பாவின் பெரும் முதலீடுகள் பிரிட்டனில்தான் செய்யப்பட்டுள்ளன. ஆதலால், பிரிட்டன் வெளியேறினால் அதன் முக்கிய சந்தையை இழக்க நேரிடும் என்கிற கருத்தும் எழுந்துள்ளது.
ஆனால், பிரிட்டனின் அரசியல் தலைவர்கள் சிலர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரிட்டன் வெளியேறினால் ஐரோப்பிய யூனியனுக்குதான் இழப்பு என்றே வைத்துக் கொண்டாலும், பிரிட்டனுக்கு லாபம் என்றும் சொல்வதற்கில்லை.
÷கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சுதந்திர நாடு கோரிக்கை ஸ்காட்லாந்தில் வலுத்தபோது, ஸ்காட்லாந்து பிரிட்டனுடன் இருக்க வேண்டுமா, தனி நாடாக வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை பிரிட்டன் நடத்தியது. அதில் வாக்களித்த ஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டனுடனே இருக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை அளித்தனர்.
ஐரோப்பிய யூனியனுடன் இருக்க வேண்டுமா, வேண்டாமா... இப்போது, பிரிட்டன் மக்களுக்கான நேரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.