வேதனையில் சாதனை
நமது நாட்டில் எந்தத் துறையுமே ஒழுங்காகச் செயல்படுவதில்லை என்று நாம் எதற்காக வருத்தப்பட வேண்டும்? நாம்


நமது நாட்டில் எந்தத் துறையுமே ஒழுங்காகச் செயல்படுவதில்லை என்று நாம் எதற்காக வருத்தப்பட வேண்டும்? நாம் ஏன் வித்தியாசமாக சிந்தித்து, நம்மை நாமே திருப்திப்படுத்திக் கொள்ளக் கூடாது.
÷நாட்டின் பல துறைகள் ஒழுங்காகத் தங்களது பணிகளைச் செய்யாமல் இருப்பதாலேயே நம்மால் பல புதிய சாதனங்களைக் கண்டுபிடித்து, அவற்றை உற்பத்தி செய்து, சந்தைப்படுத்தி, வேலைவாய்ப்புகளைப் பெருக்கி சாதனை படைக்க முடிகிறது என்பதை எப்பொழுதாவது யோசித்துப் பார்த்தீர்களா?
÷நமது அத்தியாவசியத் தேவையான குடிநீரையே எடுத்துக் கொள்வோம். நமது வீட்டுக் குழாய்களில் வரும் நீரை நமது குடிநீர் வாரியங்கள் சீராகத் தூய்மைப்படுத்தி அனுப்புகிறது என்ற நம்பிக்கை யாருக்குமே கிடையாது.
அதன் பயனாக இன்று எல்லோர் வீட்டுச் சமையல் அறையையும் அலங்கரிக்கும் சாதனம் குடிநீர் வடிகட்டிகள். எந்த ஒரு வளர்ச்சி அடைந்த நாட்டிலும் காண முடியாத வஸ்து இது.
÷அவ்வப்பொழுது புதிய புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி நவீனமயமாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் இந்த மின்சார குடிநீர் வடிகட்டிகளை திரைப்பட நடிகையும், மக்களவை உறுப்பினருமான ஹேமமாலினியும், ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கரும் பல்வேறு ஊடகங்களின் மூலம் நமக்குப் பரிந்துரை செய்து கொண்டிருக்கிறார்கள்.
÷இந்தச் சாதனங்களை வாங்கினால் மட்டும் போதாது. வருடாந்திரக் கட்டணம் செலுத்தி அவற்றுக்கு சேவை செய்ய வேண்டும்.
இப்படி, குடிநீர் வடிகட்டிகளின் உற்பத்தியாளர்கள், விளம்பரதாரர்கள்,
விநியோகஸ்தர்கள், பராமரிக்கும் மையங்கள் என்று நாம் வேலைவாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டுதானே இருக்கிறோம்?
÷இதுமட்டுமா? இப்பொழுதெல்லாம் பயணம் செல்லும் எல்லோருமே பாட்டிலும், கையுமாகத்தான் காணப்படுகிறார்கள்.
நான் டாஸ்மாக் பாட்டிலை சொல்லவில்லை. தாக சாந்திக்கென்று சந்தையில்தான் எத்தனை விதமான குடிநீர் பாட்டில்கள், எத்தனை குடிநீர் நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், விளம்பரதாரர்கள். இவை நமது பொருளாதாரத்தை வளர்க்கவில்லையா?
÷நமது நாட்டில் ஆங்காங்கே குப்பைக்கூளங்கள், திறந்தவெளி சாக்கடைகள், அசுத்த நீர் தேங்கிக் கிடக்கும் குட்டைகள் போன்றவற்றைக் கண்டு அருவருப்படையாதீர்கள். இவை இல்லையென்றால் கொசுக்கள் எப்படி உற்பத்தியாகும்?
÷கொசுக்கள் உற்பத்தியாகாவிட்டால் தொன்றுதொட்டு புழக்கத்தில் இருக்கும் கொசு வலையிலிருந்து, கொசுக்களை விரட்டும் வத்திகள், திரவங்கள், உடலில் தடவிக் கொள்ளும் களிம்புகள் என்று விதவிதமான பொருள்களை நம்மால் உற்பத்தி செய்ய முடியுமா, விற்பனை செய்ய முடியுமா?
÷இந்தக் கொசு விரட்டிகளின் விலை நம் கையைக் கடித்தாலும், கொசு நம்மைக் கடிக்காமல் நிம்மதியாகத் தூங்கினால் போதும் என்று நாமும் மாதாந்திர பட்ஜெட்டில் இதற்கென்றே ஒரு தொகையை ஒதுக்கத்தானே செய்கிறோம்?
÷மக்களை இந்தப் பொருள்களை வாங்க வைக்க என்றே கொசு விரட்டி வத்திகளைக் கொளுத்தி பிறந்த நாள் கொண்டாடும் விளம்பரங்கள், மேல் சட்டையைக் கழற்றி எறிந்து கொசு விரட்டியின் சக்தியை வெளிப்படுத்தும் விளம்பரங்கள் என்று தொலைக்காட்சியின் எந்த அலைவரிசையைத் திறந்தாலும் கொசுவிரட்டி விளம்பரங்கள்தான்.
÷ஆக, கொசுக்கள் தங்கள் எண்ணிக்கையையும் பெருக்கிக்கொண்டு நாட்டின் வேலைவாய்ப்புகளையும் பெருக்க உதவிக் கொண்டுதானே இருக்கின்றன?
÷மின் வெட்டு விஷயத்தில் எந்த மாநிலமும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. கோடைக் காலம் வந்து விட்டால் கடைத் தெருக்களில் டீசல் வாசனையுடன் ஜெனரேட்டர்களின் ஓ என்ற இரைச்சல், வீடுகளுக்குள்ளேயோ மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட உடனே ஓசைப்படாமல் தனது வேலையைத் தொடங்கும் இன்வெர்ட்டர்கள் என்று மின் வெட்டை வெட்டும் சாதனங்கள்.
÷இந்த இன்வெர்ட்டர்களையும் சச்சின் டெண்டுல்கர்தான் நமக்குப் பரிந்துரை செய்ய வேண்டியிருக்கிறது. மின்சாரம் இல்லாத காலத்தை நினைவூட்டும் ஹரிகேன் விளக்குகள், கைவிசிறி, மெழுகுவர்த்தி போன்றவற்றின் காலம் போய், இன்று ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் போன்றவற்றை உற்பத்தி செய்யும் அளவுக்கு நாடு முன்னேறித்தானே இருக்கிறது?
÷இப்படியே ஒவ்வொரு துறையிலும் நமது நாட்டின் சாதனையைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். எனவே, குறைகளைக் கண்டு வேதனைப்படாமல், குறைவிலும் நிறைவைக் காணப் பழகிக் கொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...