தில்லியில் அண்மையில் நடைபெற்ற சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழாவில் பிரபல நடிகர் ஆமிர் கான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த நிகழ்ச்சியின்போது அவரிடம் எடுக்கப்பட்ட சிறப்பு நேர்காணலில், நாட்டில் பாதுகாப்பின்மை உணர்வு அதிகரித்துவிட்டதாக ஆமிர் குறிப்பிட்டதுதான் நாடு முழுவதும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.
உண்மையில், அந்த நேர்காணலில் ஆமிர் கான் அற்புதமான நல்ல பல கருத்துகளைக் கூறியிருந்தார். அவை எதுவும் தலைப்புச் செய்தியாகவில்லை. "நான் இந்தியனாகவே கருத்துத் தெரிவிக்க விரும்புகிறேன்: இஸ்லாமியனாக அல்ல' என்ற அவரது கருத்து மிகவும் நேர்மையானது; துணிச்சலானது.
"இஸ்லாமியர்களின் மறையான திருக்குர்ஆன் வன்முறையைப் போதிக்கவில்லை; அப்பாவிகளைக் கொல்வதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. அப்பாவிகளை மதத்தின் பெயரால் கொல்பவர்களை இஸ்லாமியர்களாகக் கருத முடியாது; அவர்கள் பயங்கரவாதிகளே. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சிந்தனையை என்னால் ஏற்க முடியாது...' - என்று, பத்திரிகையாளர் தவ்லீன் சிங் எழுப்பிய கேள்விக்கு ஆமிர் கான் பதில் அளித்தார். அதுதான் நேர்காணலின் கடைசிக் கேள்வியும் கூட. நியாயமாக, தற்போதைய உலகச்சூழலில் ஆமிரின் இந்தப் பதில் தான் தலைப்புச் செய்தியாகி இருக்க வேண்டும். ஆனால் என்ன நிகழ்ந்தது?
இந்த நேர்காணலில் ஆமிர் கான் கூறிய நல்ல பல கருத்துகள் மறைக்கப்பட்டு, அவர் இந்தியாவை விட்டு வெளியேற மனைவி கிரணுடன் திட்டமிடுவதாகத்தான் செய்திகள் வெளியாகின.
ஆமிர் கான் வெறும் நடிகர் மட்டுமல்ல. அவர் சமூக சேவகராகவும் மக்களிடம் பெயர் பெற்றிருக்கிறார். விடுதலை வீரரும், முதல் கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆசாத்தின் உறவுமுறைப் பேரன் அவர்.
கடந்த 30 ஆண்டுகளாக, இந்தியத் திரையுலகில் நடிகர், இயக்குநர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் எனப் பல முகங்களுடன் உலா வரும் அவருக்கு, இந்த நேர்காணலில் தெரிவித்த கருத்துகள் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரியாதா? ஆமிர் கானின் அரசியல் வெறுப்புணர்வு, அவரது நடுநிலையை வென்றதன் அடையாளம் தான், சகிப்புத்தன்மை குறித்த அவரது பதில்.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே அவரை அறிவுஜீவிகள் பலர் எதிர்த்தனர். நர்மதை அணையின் உயரத்தை அதிகரிக்கும் குஜராத் மாநில அரசின் திட்டத்தை எதிர்த்து சமூக சேவகர் மேதா பட்கர் போராடியபோது, அவருடன் துணை நின்றவர் ஆமிர் கான். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு அணையின் உயரத்தை அதிகரிப்பதற்குச் சாதகமானது.
அதற்குப் பிறகும், டீஸ்டா செதல்வாட், சபனா ஆஸ்மி, தருண் தேஜ்பால் உள்ளிட்ட அறிவுஜீவி சகாக்களுடன் இணைந்து மோடிக்கு எதிரான பிரசாரங்களில் ஆமிர் கான் பங்கேற்றிருக்கிறார். அது ஆமிர் கானின் தனிப்பட்ட உரிமை.
ஆயினும் கூட, பிரதமர் மோடியால் தூய்மை பாரதத் திட்டத்துக்கு விளம்பரத் தூதராக ஆமிர் அறிவிக்கப்பட்டார். தன்னை எதிர்த்தவர் என்பதற்காக ஆமிரை மோடி புறந்தள்ளவில்லை. மாறாக, ஆமிரின் பிராபல்யத்தை அரசின் திட்டம் வெற்றியடையச் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளவே முயன்றார். இதுவா சகிப்புத்தன்மையற்ற அரசு?
பிரதமரைத் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, ஒட்டுமொத்த நாட்டையும் கேவலப்படுத்தக் கூடாது; அது அறிவுள்ள செயலாக இருக்க முடியாது. ஆனால், அதைத்தான் பல எழுத்தாளர்களும், கலைஞர்களும் செய்தார்கள்.
அவர்களும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் அமைதியாகிவிட்டார்கள். இப்போது அந்த அறிவுஜீவிகள் எதிர்பார்த்த சகிப்புத்தன்மை நாட்டில் நிலைநாட்டப்பட்டு விட்டதா?
இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும்போதுதான் ஆமிர் கான் சறுக்கினார். எழுத்தாளர்கள் விருதுகளைத் திருப்பி அளிப்பது முன்யோசனையற்ற தன்மையாகத் தெரியவில்லையா? என்பதே கேள்வி. அதற்கு அஹிம்சை முறையிலான எந்தப் போராட்ட வடிவமும் சரியே என்று கூறினார் ஆமிர்.
"பாதுகாப்பின்மை உணர்வு பல காலங்களிலும் இருந்திருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் இது நிகழ்ந்திருக்கிறது. ஆனால், 1984 தில்லி கலவரங்களைக் காட்டி இப்போதைய நிகழ்வுகளை நியாயப்படுத்தக் கூடாது' என்றும் ஆமிர் சொன்னார். அத்துடன் அவர் நின்றிருந்தால் சிக்கலில்லை.
"நானும் அந்தப் பாதுகாப்பின்மையை தற்போது உணர்கிறேன். எனது மனைவி கிரணுடன் பேசிக் கொண்டிருக்கையில், எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிப்பின்றி இருக்க வெளிநாடு சென்றுவிடலாமா என்று கேட்டாள்' என ஆமிர் போட்ட குண்டுதான் இப்போது வெடித்துக் கொண்டிருக்கிறது.
தனது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியவுடன் ஆமிர் கானே விளக்க அறிக்கையை வெளியிட்டார். "நானும் எனது குடும்பமும் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதில்லை. நான் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இதற்கு யாருடைய நற்சான்றும் எனக்குத் தேவையில்லை' என்று அவர் விளக்கம் அளித்தார். அதற்குள் அவர் ஏவிய வெடி, அவர் எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்திவிட்டது.
ஆமிர் கானின் கருத்து வெற்று அரசியல் கருத்தாக மாறிவிட்டது. மக்களின் மனநிலையையும், இயல்பு நிலையையும் உணராத வறட்டு அறிவுஜீவித்தனத்தின் குரலாகவே ஆமிரின் கருத்து முடங்கிப்போனது.
உலகளாவிய அளவில் ஒரு மார்க்கத்தின் பெயரால் பேரழிவுகள் நிகழ்த்தப்படும் இந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் பாதுகாப்பில்லை என்று உணர்வதாக ஆமிர் குறிப்பிட்டது அவல நகைச்சுவையாகிவிட்டது.
ஆமிரின் உள்ளரசியல் அவர் நேர்காணலில் கூறிய நல்ல பல கருத்துகளையும் வீணாக்கிவிட்டது. ஒருகுடம் பாலில் ஒரு துளி விஷம் என்று சும்மாவா சொன்னார்கள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்

பொன்னமராவதி நகரில் இன்று மின்நிறுத்தம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் பணி: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

