அடிமைத்தனம் அகலவில்லை!

இந்த நவீன காலத்திலும், உலக அளவில் மூன்று கோடி மக்கள் இப்போதும் அடிமைகளாக இருக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை அளிக்கின்றது.
Updated on
2 min read

இந்த நவீன காலத்திலும், உலக அளவில் மூன்று கோடி மக்கள் இப்போதும் அடிமைகளாக இருக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை அளிக்கின்றது. கொத்தடிமைகள், கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், கட்டாயத் திருமணம் செய்யப்பட்டவர்கள், குழந்தைத் திருமணம் செய்யப்பட்டவர்கள் என அடிமைத்தனம் இன்றும் இருப்பது கவலைக்குரியது.
 தனியார் தொண்டு அமைப்பு, உலகம் முழுவதும் 162 நாடுகளில் எடுத்த கணக்கெடுப்பில் அனைத்து நாடுகளிலும் அடிமைத்தனம் இன்றும் இருந்து கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்தியாவில் 1.4 கோடி மக்கள் இன்றும் அடிமைகளாக இருப்பதாக 2013-ஆம் ஆண்டில் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.
 அடிமைமுறை என்பது வலுக்கட்டாயமாக மனிதர்களைப் பிற மனிதர்கள் பிடித்து வைத்து, அவர்களிடமிருந்து வேலையை வாங்குவதாகும். இம்முறை நெடுங்காலமாக பல நாடுகளில் வழக்கில் இருந்துவந்துள்ளது. மனிதர்கள் அவர்களுடைய முதலாளிகளால், பிற பொருள்களைப்போல வாங்கி, விற்கப்பட்டனர்.
 அடிமை முறை தொன்மைக் காலங்களில் இனங்களிடையே போரினால் ஏற்பட்டது. தோற்ற வீரர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள். அவர்களின் பெண்களும், குழந்தைகளும் அடிமையாக்கப்பட்டனர். எகிப்தியர், போர்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப்படுத்தினர்.
 அடிமைகள் முதலில் அரசருக்குச் சொந்தம். அரசர் தனக்கு வேண்டியவர்க்கு அடிமைகளை பரிசளிக்கும் வழக்கம் இருந்தது. அடிமை முறை கிரேக்க நாகரிகத்தில் பெரும்பங்கு வகித்தது.
 இந்தியாவிலும் அடிமை முறை இருந்துள்ளது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கி வேலை செய்ய வைத்துள்ளனர். மேலும், அடிமைகளை மற்றவர்களுக்குப் பரிசாக வழங்கியுள்ளனர்.
 அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம்போல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவு சீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்று இருந்துள்ளது.
 வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களையும், தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் அடிமைகளாக இருந்துள்ளனர்.
 அடகு தொழிலாளர் முறையில் இன்றும் லட்சக்கணக்கான மக்கள் கட்டுண்டு உள்ளனர். நிலச்சுவான்தாரிடம் தன்னை அடகு கொடுத்து பெரிய வட்டியில் கடன் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தன்னையும், தன் மனைவி மக்களையும் அந்நிலச்சுவான்தாரிடம் அடகு கொடுத்து, தலைமுறை தலைமுறையாக அந்த அடிமைத் தனத்திலிருந்து மீள முடியாமல் வாடுவதாகக் கூறப்படுகிறது.
 பழங்கால வாங்கி - விற்கும் அடிமை முறை கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேல் தடை செய்யப்பட்டு இருந்தாலும், இன்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் அடிமை முறை இருந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக சூடான், மெளரிடேனியா ஆகிய நாடுகளிலும் இது நடக்கிறது.
 2-ஆம் உலகப் போரின்போது ஆசியாவின் பல நாடுகளைக் கைப்பற்றிய ஜப்பான், அப்பகுதி மக்களை அடிமைகளாக வேலை வாங்கியுள்ளது. 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் உலகெங்கும் உள்ள நாடுகளில், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அடிமை முறையை நீக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
 18-ஆம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்துதான் அடிமைமுறையை மொத்தமாக ஒழிக்க சமூக ஆர்வலர்களின் குரல்கள் எழுந்துள்ளன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்துள்ளன.
 20-ஆம் நூற்றாண்டில், கொடூர அரசுகளால் கோடிக்கணக்கான மக்களை அடிமை நிலையில் வைத்து சாகும்வரை கடும் வேலை செய்யவைத்து பிழியப்பட்டுள்ளனர். அடிமைத்தனத்தை நீக்குவதற்காகப் பல முயற்சிகள் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபை 1949-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதியை சர்வதேச அடிமை ஒழிப்புத் தினமாக அறிவித்தது.
 அடிமைத்தனத்தை அகற்ற முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். சாதாரண அடித்தட்டு, ஏழை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. பெரும்பாலும் அத்தகைய மக்கள்தான் அடிமைகளாக இருந்து வருகின்றனர். அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு, கல்வி அறிவு, பொருளாதாரம் தேவைப்படுகிறது.
 அடுத்த கட்டமாக, நவீன காலத்தில் உள்ள அடிமைத்தனத்தை அகற்றுவதற்குத் தேவையான புதிய கொள்கைகளையும், சட்டங்களையும் இயற்றுவதற்கு மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு முயற்சிகளை எடுக்க வேண்டும்.
 அரசு சாரா தொண்டு அமைப்புகள், அடிமைகளாக இருப்பவர்களை முதலாளிகளிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
 அடிமைகளை மீட்டு அவர்களுக்கு உணவு, உறைவிடம், உடைகள் ஆகிய அடிப்படைத் தேவைகளை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும். நவீன சமுதாயத்தில் அவர்கள் மற்றவர்களைப்போல சுதந்திர மனிதர்களாக வாழ்வதற்காக அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.
 வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளை வழங்கி, வேலைவாய்ப்பைப் பெற்றுத் தந்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் தங்களுடைய பொருளாதார நிலையை உயர்த்தி வாழ்க்கை நடத்துவதற்கான சுயசார்பை பெற்றுத் தர வேண்டும்.
 அப்போதுதான் அவர்கள் இந்த சமுதாயத்தில் மற்றவர்களைப்போல சுதந்திர மனிதர்களாக வாழ்க்கை நடத்துவார்கள்.
 
 டிசம்பர் - 2,
 சர்வதேச அடிமைத்தனம் ஒழிப்பு தினம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com