பட்டாசு இல்லாமல் தீபாவளியா? வெடிகள் வெடிக்காமல் பண்டிகையா? எனப் பொதுவாக நினைக்கக்கூடிய காலமிது.
80 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களிடம் நீங்கள் சிறு வயதில் பட்டாசுகள் வெடித்த அனுபவங்கள் உண்டா என்று கேட்டால், பெரும்பாலும் இல்லை என்ற பதிலே வரும்.
சீனர்கள்தான் அதிக லாபம் தரும் பட்டாசுகளை உலகெங்கும் அறிமுகப்படுத்தியவர்கள். இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களில் சிலர் சீனாவிற்குச் சென்று பட்டாசுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களை அறிந்து வந்து இந்தியாவில் பட்டாசுத் தொழிற்சாலைகளைத் தொடங்கினர்.
அதில் குறிப்பாகத் தமிழகத்தில் சிவகாசிப் பகுதியில் அதிகளவில் சிறிய, பெரிய பட்டாசுத் தொழிற்சாலைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
பட்டாசுத் தொழிலாளர்கள் எவ்வளவுதான் கவனமாக வேலை செய்தாலும், உற்பத்தி செய்யும் இடங்களில் அவ்வப்போது வெடி விபத்துகள் ஏற்பட்டுப் பெரும் உயிர்ச்சேதமும், தீக்காயங்கள் பட்டு நிரந்தரமாக வேலை செய்ய இயலாத நிலையும் தொழிலாளர்களுக்கு ஏற்படுவதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.
அவரவர் வசதிகளுக்குத் தகுந்தவாறு தீபாவளி நாள்களிலும், மற்ற பண்டிகையின் போதும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்குப் பட்டாசுகளை வாங்கி வெடிக்கின்றனர்.
காசைக் கரியாக்குவது என்ற பழமொழி கிராமப் பகுதிகளில் சொல்லப்படுவதுண்டு. அந்தப் பழமொழி பட்டாசுகளை விலை கொடுத்து வாங்கி வெடித்துச் சிதறடிப்பதற்கு முற்றிலும் பொருத்தமானதாகும்.
காசு கரியாவது மட்டுமல்ல காற்று மண்டலத்தையே மாசுபடுத்தி விடுகிறது. அதிகப்படியான சப்தத்தால் ஒலி மாசும் ஏற்பட்டு வீட்டில் பச்சிளங் குழந்தைகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர் எனப் பலருக்கும் பட்டாசுச் சப்தத்தால் பெருந்துன்பமே விளைகிறது.
நகரங்களில் தெருக்களிலும், சாலைகளிலும் வெடிகளை வெடித்துப் போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் பெரிய அளவில் இடையூறுகள் ஏற்படுவதையும் காண்கிறோம்.
பட்டாசுகளை வெடிக்கும்போது சிறுவர் முதல் பெரியவர் வரை எவ்வளவுதான் கவனமாக வெடித்தாலும் எதிர்பாராவிதமாக வெடித்துச் சிதறி வெடிப்பவர்களுக்கும் அருகில் நின்று பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுத் துன்புறுவது உண்டு.
சீனப் பட்டாசுகள் பெருமளவில் இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. விலை மலிவு என்ற காரணத்துக்காக மக்கள் அதனை வாங்குகின்றனர். அதில் சற்றும் பாதுகாப்பில்லாத அம்சங்கள் நிறைந்துள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இப்போதெல்லாம் திருமணம், சடங்கு, கோயில் விழாக்கள், அரசியல் கூட்டங்கள், இறுதி ஊர்வலங்கள் என அனைத்திலும் பட்டாசுகள் வெடிப்பது அதிகரித்து விட்டது.
திருமண வைபவத்தில் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேள்விப் புகை மணக்க, மங்கல நாண் கட்டுகின்ற நேரத்தில் மண்டபத்திற்கு முன்பாகப் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சரவெடிகளை வெடித்துச் சிதறடித்துப் பெருஞ் சப்தத்தையும், நச்சுப் புகையினையும் உண்டு பண்ணுவது சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அமங்கலமான செயல் அல்லவா?
அமைதியாகச் செல்ல வேண்டிய இறுதி ஊர்வலத்தின் முன்பாகப் போக்குவரத்தையோ, மக்கள் நலன் பற்றியோ சற்றும் சிந்திக்காமல் நடுரோட்டில் சரவெடிகளைப் பரப்பி வெடித்துக் கொண்டே செல்வதென்பது பகுத்தறிவுக்குச் சற்றும் உகந்ததாகத் தெரியவில்லை.
பல்லாயிரக்கணக்கான டன் காகிதங்கள் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு மறு சுழற்சி செய்ய முடியாமல் வெந்து சாம்பலாகிப் பயன்படாத குப்பைகளாகின்றன.
விலங்குகள், பறவைகள் சரணாலயங்கள் உள்ள பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தாங்களே முன்வந்து தீபாவளி போன்ற பண்டிகையின் போதும், மற்ற எந்தத் தருணங்களிலும் பட்டாசுகள் வெடிப்பதை முற்றிலும் தவிர்த்தும், வேறு இடையூறுகள் எதுவும் அவற்றிற்குத் தராமல் பறவைகள் தொடர்ந்து ஆண்டுதோறும் அந்தப் பகுதிக்கு வருவதை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் கடந்து வெளிநாடுகளிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் இப்பகுதி நீர்நிலைகளில் உள்ள மரங்களிலும், வீடுகளுக்கு அருகில் உள்ள மரங்களில் கூட பயமின்றி கூடுகள் கட்டிக் குஞ்சுகள் பொரித்து இரையூட்டிச் சுதந்திரமாக பறவைகள் அப்பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.
தீபாவளித் (தீப ஒளித்திருநாள்) திருநாளையும், மற்ற பண்டிகைகளையும் கோயில் விழாக்களையும் நம் முன்னோர்கள் வீண்பகட்டு, ஆடம்பரமின்றி எளிய, இனிய முறையில் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். புத்தாடைகள் உடுத்தி உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்புகள் வழங்கித் தங்களது அன்பையும், மனித நேயத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
திருமண வீடுகளில் பட்டாசுகளை முற்றிலும் தவிர்த்து அதற்குச் செலவிடும் பணத்தில் மரக்கன்றுகளை வாங்கித் தாம்பூல பைகளில் வைத்துக் கொடுக்கலாம். இவ்வாறு சிந்தனையை வளமாக்குவோம்.
ஆபத்துகள் நிறைந்த, சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடிய பட்டாசுகளைத் தவிர்த்துச் சூழல் காக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போமாக.
பல்லாயிரக்கணக்கான டன் காகிதங்கள் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு மறு சுழற்சி செய்ய முடியாமல் பயன்படாத குப்பைகளாகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

