இறைவன், இறைசக்தி, இறையுணர்வு என்பது மதங்களில் அடங்கி விடுவன அல்ல. மதங்களையும் கடந்து வியாபித்துள்ளன. இறைவன் மதச்சார்பற்றவர். கண்ணுக்குப் புலனாகாத இறைசக்தி பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது.
ஒவ்வொரு உயிரினுள்ளும், வெளியிலும் நிறைந்துள்ள இறைத்தன்மையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உணரலாம். மதங்கள் கைகாட்டி போலத்தான். இறைவனை அறிவதற்கான, உணர்வதற்கான உபாயங்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உரைக்கின்றன. அவரவர் ஆத்ம பக்குவம், இறைநாட்டம், இடையறாத இறைச்சிந்தனை இவற்றுக்கு ஏற்ப இறையுணர்வு பெறுகின்றனர்.
இறையனுபவம் பெற மிகுந்த செல்வாக்கோ, மெத்தப் படித்தவராகவோ வீரம் செறிந்தவராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மிகச் சாதாரண நிலையிலிருந்த, படிப்பறிவே இல்லாத எத்தனையோ மகான்கள், ஞானிகள் இவ்வுலகில் ஆங்காங்குத் தோன்றித் தாங்கள் பெற்ற இறையனுபவங்களை உலகிற்கு உணர்த்தவும் முயன்றிருக்கிறார்கள். மதங்களுக்குள் உள்ள பிணக்குகள், சண்டைகள் எல்லாம் இறையுணர்வு சற்றும் பெறாமல் வெறும் மதங்களோடு நின்று போனவர்களால்தான் ஏற்பட்டுள்ளன. தன் மதமே சிறந்தது, உயர்வானது என்றும் பிற மதங்களைத் தூற்றுவதும் இறையனுபவம் பெறாத தன்மையின் வெளிப்பாடே. வள்ளுவன் நோக்கில் இறைவன் மதங்களின் வழியாகப் பார்க்கப்படவில்லை. திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலும், வேறு எந்த இடத்திலும் மதத்தின் பெயரோ, கடவுளர்களின் பெயரோ குறிப்பிடப்படவில்லை. வாலறிவன் வகுத்தான் இலானடி என்றும், இறைவன், தெய்வம் எனவும், தனக்குவமை இல்லாதான் அறவாழி அந்தணன் உலகியற்றியான் என்றும் மிக உயர்ந்த விசாலமான நோக்கில் இறைவனைக் குறிப்பிடுகிறார்.
குறள்நெறியிலான இறைச்சிந்தனையில் மதம் குறுக்கிடவில்லை, மதத்தைச் சார்ந்தும் இல்லை, மதம் இன்றியே இறைவன் சிந்திக்கப்படுகிறான். போற்றப்படுகிறான். எந்த மதத்தைச் சேர்ந்தவர் உயர்ந்தவர் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. கடவுளே மிக உயர்ந்தவர் என்பது நேரடியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தமது அகத்தாய்வின் மூலமாகவும், மெய்யான வாழ்வியல் வழியிலும், இறைத் தேடலில் உள்ள அவாவின் தன்மையைப் பொருத்தும் இறையுணர்வு வாய்க்கப் பெறும். சிவவாக்கியர் கீழ்க்கண்ட பாடலின் மூலம் அழகாக எடுத்துரைக்கிறார்.
நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண மொணவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்கிறார்.
புறத்தேடலின் மூலம் இறையனுபவம் கிடைக்கக்கூடியது அல்ல என்பதை இப்பாடலின் மூலம் உணர்த்துகிறார். இறையனுபவம் பெற்ற ஒருவன் மதமாச்சர்யங்களோ, இனத்துவேசமோ, தன்னலமோ இன்றி மிக உயரிய பண்புகளைப் பெற்றவனாகி விடுகிறான். எதைப்பற்றி இடையறாது சிந்திக்கின்றானோ அதுவாக ஆகிறான். மதங்களின்றி இறையனுபவம் பெறலாம் என்றாலும், ஆரம்ப நிலையில் அருளாளர்களின் அனுபவங்களையும், வழிகாட்டுதல்களையும், பின்பற்றினால் எளிதாக இருக்கும். பெரும்பான்மையோர் மதத்துடன் நின்று போகின்றனர். அதனைக் கடந்து இறையுணர்வு பெறாமல் தன் மதக் கோட்பாடுகள், போதனைகள், சடங்குகள் என அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அதற்கு அப்பால் இறையுணர்வு பெறத் தவறி விடுகின்றனர். இதுதான் மிகப்பெரிய குறைபாடாகிறது. நீச்சல் தெரியாத ஒருவனுக்கு, தான் நீந்தப் பயிற்சி பெறும் வரை ஒருவரின் துணை தேவை. மிதவைக் கட்டை போன்ற உபகரணங்கள் தேவை. நீச்சல் கற்றுக்கொண்ட பின் இவை எவையும் தேவை இல்லை. தனித்து அவனால் நீந்த முடியும், நீந்த வேண்டும். இதுபோல்தான் மதங்களின் தேவையும், அருளாளர்களின் வழிகாட்டுதலும்.
மக்கள் இறைவனை வணங்குவதும், வேண்டுவதும் எதிர்பார்ப்புகளுடன் என்றாகிவிட்டது. தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் சுகம் வேண்டும், பொருள் வேண்டும், கல்வியும், நீண்ட ஆயுளும் வேண்டும் என வேண்டுதல் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். வேண்டுதல்களை நிறைவேற்றும் பணிதான் இறைவனது பணியா? ஒருவருக்கு தான் கேட்டவை அனைத்தும் கொடுத்துவிட்டால் அவன் இறைவனா? எதைக் கொடுக்க வேண்டும், எப்படிக் கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா என்ன?
வள்ளுவன் இறைவனை எப்படி எதற்காகப் பற்ற வேண்டும் என்று கூறுகிறார் பாருங்கள்.
பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் - 350)
உலகியல் பற்றுகளை விடுவதற்காக இறைவனைப் பற்றுக என்கிறார். உலகியல் பற்றுகள் கணக்கிலடங்காதவை. மனிதனின் தேவையோ மிகக் குறைவு. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிறார் புத்தர். குறள்நெறி காட்டும் இறைக்கொள்கையில் மதம் இல்லை, கதைகள், சடங்குகள் இல்லை, சட்டதிட்டங்கள் இல்லை. உருவமுமில்லை, பெயருமில்லை. இவை அனைத்திற்கும் மேலாக தூய அறிவு வடிவான, ஒப்பற்ற, உன்னதமான எங்கும் வியாபித்துள்ள இறைத் தன்மையைச் சிந்திக்கவும், உணரவும், இறையனுபவம் பெற்றுய்யவும் குறள்நெறி வழிகாட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

