மருத்துவ உலகில் எவ்வளவோ அதிசயங்கள் நிகழ்த்தப்பட்டாலும், செயற்கை ரத்தமோ, சிறுநீரகமோ இன்னும் சிலவற்றிற்கான மாற்றோ, மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை.
ஐம்புலன்களில் கண்களை உயர்வாகக் கருதக் காரணம் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பார்க்கவும் உலகின் அனைத்து அற்புதக் காட்சிகளைக் காணவும், எழுதப் படிக்கவும், அன்றாடக் கடமைகளைச் சரிவரச் செய்யவும் கண்களே பெரிதும் உதவுகின்றன. உடலில் அதிகக் கலோரியைச் செலவிடும் ஆற்றல் வாய்ந்த உறுப்பும் கண்களே.
கண்களுக்கு வரும் எத்தனையோ விதமான நோய்கள் நவீன கண் மருத்துவத்தின் மூலம் சரிசெய்யப்படுகின்றன. எதிர்பாராத விதமாகக் கண்ணில் அடிபடுவதாலும், தொற்று நோயினாலும், வைட்டமின் யு குறைவினாலும், கருவிழி பாதிப்படைகிறது.
அதற்கு மாற்றாக, செயற்கையான கருவிழி உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை இறந்தவரின் கண்களைத் தானமாகப் பெற்று அதில் உள்ள கருவிழிகளை மட்டும் எடுத்துப் பாதிப்படைந்தவரின் கருவிழிப் பகுதியை அகற்றி விட்டுப் பொருத்திப் பார்வை இழப்பு சரிசெய்யப்படுகிறது.
கண்ணின் கருவிழிப் பகுதியானது பிறக்கும் போது எப்படி இருந்ததோ அதே நிலையிலேயே கடைசிவரை இருக்கும்; வளர்வதே இல்லை. இப்போது நவீன மருத்துவத்தின் மூலம் இறந்த ஒருவரிடமிருந்து எடுக்கப்படும் இரு கண்கள் பாதிப்படைந்த 4 பேருக்குப் பொருத்திக் கண் பார்வை தரமுடிகிறது.
இறந்த ஒருவரிடமிருந்து 6 மணி நேரத்துக்குள் கண்கள் எடுக்கப்பட்டால் மட்டுமே அதனைப் பயன்படுத்திட முடியும். எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, ரண ஜன்னி, வெறிநாய்க்கடி, விஷக்கடி போன்ற நோய்களால் இறந்தவர்களின் கண்களைப் பயன்படுத்த முடியாது.
ஆண், பெண் என இருபாலரும், எந்த வயதினரும் கண்களைத் தானமாக வழங்கலாம். மேலும் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும், கண்ணாடி அணிந்தவர்களும, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களும் கண்களைத் தானம் செய்யலாம்.
ஒருவர் இறந்தவுடன் அவரது இமைகளை மூடி அதன் மேல் பஞ்சை தண்ணீரில் நனைத்து இமைகளின் மேல் வைத்திடவேண்டும். இது கண்கள் வறண்டு போகாமல் காத்திடும். இறந்தவர் வைக்கப்பட்ட அறையில் காற்றாடி சுற்றினால் நிறுத்திவிட வேண்டும். குளிர்சாதன வசதி இருந்தால் இயங்கச் செய்யலாம், தேவைப்பட்டால் குளிர்சாதனப் பெட்டியிலும் வைக்காம்.
கண்தானத்தில் ஒருவர் உயிருடன் இருக்கும் போது பதிவு செய்தவர்கள் மட்டுமே கண்களைத் தானமாகக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உறவினர்கள் மனதுவைத்தால் இறப்பு ஏற்பட்டவுடன் அருகில் உள்ள கண் வங்கிக்கோ அப்பகுதியில் இயங்கிவரும் கண்தான இயக்கத்தினருடனோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அவர்கள் உரிய நேரத்தில் வந்து கண்களைப் பெற்றுச் செல்லத் துணை புரிவார்கள்.
கண்களை எடுப்பதற்கு வரும் மருத்துவக் குழுவினர் 30 நிமிடங்களில் கண்களை எடுத்துச்சென்று விடுவார்கள். அத்துடன் இறந்தவரின் உடலிலிருந்து சிறிது இரத்தமும் எடுத்துச் செல்வார்கள். இது அவருக்குத் தொற்று நோய் எதுவும் உள்ளதா எனக் கண்டறியத்தான். இதனால் மதச் சடங்குகள் செய்திட எந்தத் தாமதமும் ஏற்படாது.
கண்தானம் செய்ய விரும்பி பதிவு செய்தவர்கள் தங்கள் வீட்டில் உள்ள நெருங்கிய உறவினர்களிடமும், நண்பர்கள் சிலரிடமும் சொல்லிவைக்கலாம், அதுவே இறப்புக்குப்பின் உரிய நேரத்தில், உரிய இடத்திற்குத் தெரிவித்திட ஏதுவாகும். இதில் மூட நம்பிக்கைக்கு இடமே இல்லை. உடல் முழுவதையும் எரிக்கவோ, புதைக்கவோ தான் செய்கிறோம். அதில் கண்களை மட்டும் தானமாக வழங்கி நான்கு பேரின் கண்களுக்குப் பார்வைத்தரச் செய்வது உயர்வானதுதான்.
புத்த மதம் உடல் உறுப்புத் தானம் தருவதை மிக முக்கியாக வலியுறுத்துகிறது. புத்த மதத்தினர் அதிக எண்ணிக்கையில் உள்ள சிறிய நாடான இலங்கையிலிருந்துதான் உலகிலேயே அதிகக் கண்கள் தானமாகப் பெறப்படுகின்றன. நம் நாட்டில் கண்தானம் செய்வது மிகக்குறைவாகவே உள்ளது. கண்தானம் செய்வதில் முதலிடம் குஜராத்துக்கும், இரண்டாமிடம் தமிழகத்துக்கும் உண்டு என்பதில் சற்றே பெருமிதம் அடையலாம்.
தமிழ்நாட்டிற்கு மட்டுமே ஆண்டுக்கு ஒரு லட்சம் கருவிழிகள் தேவைப்படுகின்றன. ஆனால், சுமார் 30 ஆயிரம் வரைதான் கிடைத்துக்கொண்டிருக்கிறது. இதற்குக் கண்தானம் பற்றிய போதிய வழிப்புணர்வு இல்லாமையே காரணம்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்புகள், பள்ளி, கல்லூரிகளில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம்,
நாட்டுநலப் பணித் திட்டம், தேசிய மாணவர் படை, சாரண இயக்கம் போன்ற அமைப்புகளின் மூலம் கண்தான விழிப்புணர்வு ஏற்படுத்திடலாம்.
ஒருவர் விரும்பிக் கண்தானம் செய்யப் பதிவு செய்திருந்தாலும் உறவினர்கள் தக்க சமயத்தில் அதனைத் தெரிவித்தால் மட்டுமே இறந்தவரின் கண்தான எண்ணம் பூர்த்தியடையும்.
எத்தனையோ நகரங்களில் கண்தான இயக்கம் நல்ல முறையில் செயல்பட்டுக் கண்களைத் தானமாகப் பெற்று வழங்கிட உதவுகின்றது.
இக்கட்டுரையின் வாயிலாக உங்கள் வீட்டில், மற்றும் உறவினர்களிடத்தில், நண்பர்களிடத்தில், தெரிந்தவர்களிடத்தில் இதன் பிரதியைக் கொடுத்துப் படித்திடச் செய்யலாம். இறந்தவர்களின் கண்கள் நான்கு பேருக்குப் பயன்படுவதையும் எடுத்துக் கூறலாம்.
இறந்தவர்களின் குடும்பத்தாருடன் கண்தானம் செய்வது பற்றிப்பேசி அவர்களின் ஒப்புதலைப்பெற்று உரிய இடத்திற்குத் தெரிவித்துக் கண்களைத் தானமாகப் பெற்றிடத் துணை புரியலாம்.
மாண்பமைந்த கண்களை மண்ணில் புதைக்காதீர்!
ஏற்றமிகு கண்களை எரித்து விடாதீர்!
பார்வையற்ற மனிதர்களுக்குப் பாதை காட்டுவதற்கு பரிவுடன் சிந்தியுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


