புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெருப்பு என்றால் சுட்டு விடாது!

உலகில் அன்று முதல் இன்றளவும் எல்லா உயிரினமும் இருத்தலுக்காகப் போராடுகின்றன. சூழலுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும்

News image
Updated On :11 ஏப்ரல் 2016, 10:30 pm

சா. பன்னீர் செல்வம்

உலகில் அன்று முதல் இன்றளவும் எல்லா உயிரினமும் இருத்தலுக்காகப் போராடுகின்றன. சூழலுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் உயிரினம் மட்டுமே நீடிக்கின்றது என்றார் டார்வின். தற்போது உலகளவில் மார்க்சியமும், இந்திய அளவில் இந்தியத் தேசியமும் தத்தம் இருத்தலுக்குப் போராடிக் கொண்டிருக்கின்றன.
 முதலில், மார்க்சியம் என்னும் உயிரியின் போராட்டத்தைக் கவனிப்போம். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்கிறார் திருவள்ளுவர். மாறும் என்பது தவிரப் பிற எல்லாமும் மாறும் என்றார் காரல் மார்க்சு. அவர் வழி வந்த மார்க்சியவாதிகள் இரண்டையும் திருத்திக் கொள்கிறார்கள்.
 திருக்குறளை, காரல் மார்க்சு தவிர யார் யார் வாய்க்கேட்பினும்- எனவும், காரல் மார்க்சு கூறியதை, மாறும் என்பதும் மார்க்சியமும் தவிரப் பிற அனைத்தும்- எனவும் திருத்திக் கொள்கிறார்கள். இதனால், தகவமைத்துக் கொள்ளுதலில் மார்க்சியம் தடுமாற்றத்திற்குள்ளாகிறது.
 குறிப்பாக, இந்திய சமூக அமைப்பு உலகில் வேறெங்கும் காணமாட்டாத தனித்தன்மையானது என்பதைக் காரல் மார்க்சு புரிந்து கொள்ளவில்லை. காரணம் அவர் காலத்தில் இந்தியாவைப் பற்றி அவருக்குக் கிடைத்த செய்திகளும், வரலாற்றுச் சான்றுகளும் மிகக் குறைவு. அதனைக் கருத்தில் கொள்ள மறுக்கும் மார்க்சியம் இருத்தலுக்கான போராட்டத்தில் நாளும் தொய்வடைகிறது.
 ஸ்டாலினுக்குப் பின்னர் சோவியத் ஒன்றியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலராகவும், அதன் பின்னர் ஒன்றிய அதிபராகவும் இருந்த குருச்சேவ், கட்சியின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்வொன்றில், ஸ்டாலின் காலத்திய அடக்குமுறைக் கொடுமைகளை விவரித்தார்.
 கூட்டத்தின் மையப் பகுதியில் "அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்' என்றொரு குரல் எழுந்தது. உடனே குருச்சேவ், "யாரது, எழுந்திரு' என அதட்டினார். யாரும் எழவுமில்லை; வாய் திறக்கவுமில்லை. குருச்சேவ் சிரித்துக் கொண்டே, அப்போது நானும் இதைத்தான் செய்து கொண்டிருந்தேன் என்றார்.
 இப்போதும் சீனாவிலும், கியூபாவிலும் குருச்சேவ்கள் அதையேதான் செய்ய முடியும். சர்வதேச மார்க்சியவாதிகள் அதனைக் கண்டு கொள்ளமாட்டார்கள். அதேசமயம், தத்தம் நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள்.
 தங்க ஊசியால் தொடையில் குத்தினால் புண்ணாகாதா என்பர் கிராமத்துப் பெரியோர். ஆனால், நம்மூர் மார்க்சியவாதிகள் தங்க ஊசியால் தொடையில் குத்தினால் புண்ணாகாது; அப்படிப் புண் ஏற்பட்டாலும் அதனால் உடல் நலப் பாதிப்பேற்படாது என்கிறார்கள்.
 அதாவது, மகாராஷ்டிர மாநிலம் செய்தாபூரில் அமெரிக்க உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கும் முயற்சியை எதிர்க்கும் மார்க்சியவாதிகள், தமிழ்நாட்டில் ரஷியாவால் அமைக்கப்படும் அணுமின் நிலையத்தை ஆதரிக்கிறார்கள். இது ரஷியா அமைப்பதாகையால் விபத்து ஏற்படாது. அப்படி விபத்து நேரிட்டு அணுக்கதிர்வீச்சு பரவினாலும் குற்றால அருவியிலே குளித்தது போல உடல், உள்ளம் இரண்டிற்கும் இதமாக இருக்கும் என்கிறார்கள்.
 அன்றைய சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியான உக்ரைன் மாநிலம் செர்னோபில் என்னுமிடத்தில் சோஷலிச ரஷியா அமைத்த அணுமின் நிலையம் விபத்திற்குள்ளானதையும், ஆயிரக்கணக்கானோர் மாண்டொழிந்ததையும், இன்றளவும் ஆயிரக்கணக்கானோர் உடல்நலப் பாதிப்புக்குள்ளாவதையும், அந்த அணுமின் நிலையத்தில் பிரித்தெடுக்கப்பட்ட இயந்திரங்களே கூடங்குளத்தில் இணைக்கப்படுகின்றன என்பதையும் மார்க்சியப் போர்வையால் மூடி மறைக்கிறார்கள்.
 சீனாவில் தியானன்மென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நசுக்கியழிக்கப்பட்டதையும், இலங்கையில் ஈழத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதையும் மார்க்சியவாதிகள் கடுகளவும் கண்டுகொள்ளவில்லை. காரணம், சீனா சோஷலிச நாடு; இலங்கை அதன் நட்பு நாடு என்கிறார்கள்.
 தினமணியின் முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன் ஒருமுறை கல்வி வள்ளல் காமராஜர் பற்றி எழுதும்போது, காமராஜரின் சோஷலிசம் அவருடைய மனிதாபிமானத்தின் விளைவு எனக் குறிப்பிட்டார். மார்க்சியம், கம்யூனிசம், சோஷலிசம் என எப்படிக் குறிப்பிட்டாலும் அடிப்படையாவது மனிதநேயம் எனக் கருதிக் கொண்டிருக்கிறோம். தோழர்கள் அதையும் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.
 இனி, இந்தியத் தேசியம் என்பதைக் கவனிப்போம். பாகிஸ்தானின் இறையாண்மையை உடைத்துக் கிழக்கு வங்கத்தைத் தனி நாடாக்குவதில் இந்தியத் தேசியவாதிகள் அனைவரும் ஒருங்கிணைந்தார்கள்.
 இலங்கையில் தமிழரின் உரிமைப் போராட்டத்தை - வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்குவதில் இந்தியத் தேசியவாதிகள் அனைவரும் ஒருங்கிணைகிறார்கள். கிழக்குப் பாகிஸ்தானுக்குள் இந்திய ராணுவத்தை அனுப்புவதில் ஏன் தாமதம் காட்டுகிறீர்கள் என அதட்டினார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பாய்.
 இலங்கைக்கும் இந்திய ராணுவம் சென்றது. தமிழர்களுக்கு உதவியாக அல்ல; தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு உதவியாக. கேட்டால், இலங்கையின் இறையாண்மையைக் காப்பது முக்கியம் என்கிறார்கள். பாகிஸ்தானுக்கு ஒரு நியாயம், இலங்கைக்கு ஒரு நியாயமா? வங்காளிகளுக்கு ஒரு நீதி, தமிழர்களுக்கு ஒரு நீதியா? இந்த உணர்வலைகள் பாகிஸ்தானிலும் ஏற்படத்தானே செய்யும்?
 வங்காளிகளைப் போல ஈழத் தமிழர்களும் இந்துக்களே என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்பில் தனிச் சிறப்பு வழங்கப்படும் என்னும் நிபந்தனையின் அடிப்படையில்தான் ஜம்மு-காஷ்மீர்ப் பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
 அதன்படியே, இந்திய அரசியலமைப்பின் 370-ஆவது பிரிவில் காஷ்மீருக்குச் சில கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அந்தச் சிறப்பு நிலையை நீக்க வேண்டுமெனும் முழக்கமே காஷ்மீர் தீவிரவாதக் குழுக்கள் தோன்றவும் வளரவும் நோய் முதலாகின்றது.
 உயரிய தார்மீக நெறி பேசும் இந்தியா ஏற்றுக் கொண்ட உடன்படிக்கையைத் தன்னிச்சையாக முறிக்க வேண்டுதல் தவறல்லவா? காஷ்மீரின் தனி அதிகாரங்களை நீக்குதல், பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுதல், பொது உரிமையியல் சட்டம் எனும் மூன்று முழக்கங்கள் கூடக் கூட முஸ்லிம் மக்களிடையே பாதுகாப்பற்ற அச்சவுணர்வு கூடுகின்றது. விளைவு - எதிர்மறையாகின்றது.
 அடுத்து, இந்தி மொழி மட்டுமல்லாது, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் - எந்தப் பிரிவினரிடையிலும் அன்றாட வாழ்வியலில் பயன்படாத வட மொழியையும் இந்தியா முழுமைக்கும் பொது மொழியாக்கும் முயற்சி தாய்மொழி உணர்வாளரிடையே அச்சவுணர்வை ஏற்படுத்துகிறது. இந்த இரு வகையான அச்சவுணர்வுகளின் வெளிப்பாடுகளே இந்தியத் தேசியத்திற்கெதிரான முழக்கங்களாகத் தோற்றப்படுகின்றன. உண்மை அதுவல்ல.
 இந்தியா முழுதும் இந்தியத் தேசியத்திற்கான எதிர்ப்பு மிகக் குறைவு. அதேசமயம், இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்து, ஒரு நாடு - ஒரு மொழி - ஒரு மதம் என்னும் இந்துத் தேசியத்திற்கான எதிர்ப்பு மிக அதிகம். எனவே, இந்தியா ஓழிக என்பதன் பொருள் இந்து இந்தியா ஒழிக என்பதன்றி பன்முகத்தன்மையான இந்தியா ஒழிக என்பதல்ல.
 வெவ்வேறு மொழியாளர்க்கும், சமயத்தார்க்கும் நமது மொழி நலன், நமது சமய நலன் பாதுகாக்கப்படும் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்துதலே இந்திய தேசியத்தின் சரியான தகவமைப்பாக அமையும்.
 இந்தியத் தேசியத் தாய் ஒருமைப்பாடு என்னும் பாலை ஒடுக்குமுறை எனும் தடியாலடித்து ஊட்ட முற்படுகிறாள். தடியடிக்கு ஆளாகி அலறும் குழந்தையால் எப்படிப் பால் குடிக்க முடியும்? இந்தியா ஒழிக என்றால் இந்தியா ஒழிந்து விடுமா? மாபெரும் இந்தியா அவ்வளவு பலவீனமானதா?
 மார்க்சியம், இந்தியத் தேசியம் இரண்டையும் ஒப்பிடும்போது ஒன்றைச் சுட்டிக் காட்டுதல் பொருத்தமும் அவசியமுமாகின்றது. சர்வ தேசியம் பேசும் இடதுசாரிக் கட்சிகளும், இந்தியத் தேசியத்தை இந்துத் தேசியமாகக் குறுக்க முற்படும் பாரதிய ஜனதாக் கட்சியும் வேற்றுமையில் ஒற்றுமை எனுமாறு, ஒரே தலைமை, வாரிசு அரசியல் இரண்டையும் தவிர்த்தல் பாராட்டத்தக்கது.
 உண்மையில் இந்தியத் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தாவது வேறொன்றில் இருக்கிறது. சர்வம் சிவமயம் என்பர் சைவ சமயவாதிகள். சர்வம் அன்னியர் மயம் என்பதிலும் இந்திய தேசியவாதிகள் அனைவரும் ஒன்றுபடுகிறார்கள்.
 இனி, நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் இடையூறாகும் சூழலை மாற்றுதற்குச் செய்ய வேண்டுவன சிலவுள. மாணவர்களின் முதலாவது கடமை படிப்பு; இரண்டாவது கடமை படிப்பு; மூன்றாவது கடமை படிப்பு - என்றார் தலைவர் லெனின். பெற்றோர் தம் பிள்ளைகளைப் படிப்பதற்காகவே பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள்; பொதுப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கல்ல.
 எனவே, மாணவர்கள் வெளியார் தலைமையில் இயங்கும் அமைப்புகளில் பங்கு பெறுதல், தங்களின் படிப்புக்கும் படிக்கும் கல்வி நிலையச் செயற்பாடுகளுக்கும் தொடர்பில்லாத பொதுப் பிரச்னைகளுக்கும் போராடுதல் இரண்டையும் சட்டபூர்வமாகத் தடை செய்ய வேண்டும்.
 அடுத்து, போராட்டம் எதுவும் நடத்த விரும்புவோர் போராட்டத்தில் பங்கு பெறுவோர் யார் யார், போராட்ட அமைப்பாளர் யார் யார் என்னும் பெயர்ப் பட்டியலுடன் முன் அனுமதி பெறுதலையும், போராட்டத்தின்போது ஏற்படும் பொருள் சேதங்களுக்குப் போராட்டக்காரர்களே பொறுப்பாதலையும் கட்டாயப்படுத்தும் சட்டம் தேவை. திடீர்ப் போராட்டம், திடீர்ச் சாலை மறியல் என்பன சட்டவிரோதமாக வேண்டும்.
 இறுதியாக ஒன்று. குற்றஞ்சாட்டப்பட்டோர், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டோர் அனைவருமே குற்றவாளிகளுமல்ல. குற்றஞ்சாட்டப்படாத, நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாத அனைவரும் குற்றமற்ற நேர்மையாளருமல்ல என்பதுதான் உண்மை. முருங்கைக்காய் என்றால் பத்தியம் முறிந்துவிடாது. நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து விடாது.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.