மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வோர் அரசியல் கட்சியும் மக்களைக் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வோர் அரசியல் கட்சியும் மக்களைக் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகின்றன. மக்களுக்கான தேவைகள், வளர்ச்சித் திட்டங்கள் பற்றி மக்களைக் கேட்காமல் தயாரிக்கும் தேர்தல் அறிக்கைகள் எப்படி முழுமையானதாக இருக்கும்? மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் என்ன?
 ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் தேர்தல், தாங்கள் யாரால் ஆளப்பட வேண்டுமென மக்கள் முடிவெடுக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்கிறது. தேர்தலின்போது மக்களின் நம்பிக்கையைப் பெற்று அதன் மூலம் அவர்களது கணிசமான வாக்குகளை வாங்கி ஆட்சியமைக்கத் துடிக்கும் அரசியல் கட்சிகள் மக்கள் மனத்தில் இடம் பிடிக்கப் பயன்படுத்தும் வலுமிக்க முதல் கருவி தேர்தல் அறிக்கை. ÷
 மக்களின் அன்றாடப் பிரச்னைகளைக் களையும் விதத்திலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் விதமாகவும் தேர்தல் அறிக்கைகள் அமைய வேண்டியது அத்தியாவசியம்.
 பொது மக்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக அறிஞர்கள் என அனைவரும் தேர்தல் அறிக்கையில் இருக்க வேண்டியதாக கருதுவன: ஜாதி, மத, இன பேதங்களின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி முதல் தரமான கட்டாய இலவசக் கல்வியைத் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கவேண்டும்.÷அரசு மற்றும் தனியார், ஆரம்பப் பள்ளிச் சேர்க்கை, குழந்தைகளின் குடியிருப்பிற்கு அருகில் அமையும் வண்ணம் செயல் திட்ட அறிக்கை வேண்டும்.
 தாய் மொழிக்கொள்கை: தமிழ் மொழியை இந்திய ஆட்சி மொழியாக்கும் திட்டம் தேர்தல் அறிக்கையில் வேண்டும். கணினித் தமிழ் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான வரைவு செயல் திட்டங்கள் அறிவிக்கப்படவேண்டும். தமிழ் மொழிக் கொள்கையின் அழகு என்பது ஆரம்பப் பள்ளி முதல் பட்டமேற்படிப்பு வரை தமிழ்வழிக் கல்வியைத் தேர்தல் அறிக்கையில் உறுதி செய்யவேண்டும்.
 குழந்தைத் தொழிலாளர்கள்: குழந்தைகளைப் பணியில் அமர்த்துவதை அரசு கண்காணித்து அந்தப் பணியிட முதலாளிகளுக்குக் குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம்-1986இன் படி உரிய தண்டனை அளிக்கவும் அக்குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கேற்ற கல்வியை அளிக்கவும் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்க வேண்டும்.
 சுகாதாரம்: அரசு மருத்துவமனைகள் தரமற்றுச் செயல்படுவதால் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலை உருவாகியுள்ளது. எனவே, உலகத் தர இலவச மருத்துவம் தொடர்பாக தேர்தல் அறிக்கையில் செயல் திட்டம் தேவை.
 வேலைவாய்ப்பு: தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான செயல் திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறவேண்டும்.
 விலைபோகும் விளைநிலங்கள்: விவசாய நாடான இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வேளாண்மைத் தொழில் அழிக்கப்பட்டு வருகிறது. விளைநிலங்கள் எல்லாம் தொழில் வளர்ச்சி என்னும் பெயரில் பறிக்கப்படும் சூழலைத் தடுக்க வேண்டும். உழவர்கள் வேளாண்மையைப் புறந்தள்ளி, கூலிகளாக நகரத்து வீதிகளில் அலைகின்றனர்.
 அரசு, தனியார் நிறுவனங்கள் ஆகியவை விவசாய நிலங்களை விலைக்கு வாங்குவதைத் தடுக்க தேர்தல் அறிக்கையில் செயல் திட்டங்கள் வேண்டும்.
 பேருந்துத் திட்டம்: தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்கு முழுமையான இலவசப் பேருந்துத் திட்டம்.
 விலைவாசி உயர்வு: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, சமையல் எரிபொருள்கள் விலை உயர்வு போன்றவை சாதாரண மக்களை வெகுவாகப் பாதித்துள்ளன. பெருமுதலாளிகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் மானியம் வழங்குவதை நிறுத்திவிட்டுச் சாதாரண மக்களுக்குக் கட்டண உயர்வின்றி அடிப்படைத் தேவைகள் நிறைவேற வழிவகை செய்ய தேர்தல் அறிக்கையில் திட்டம்வேண்டும்.
 வாழ்வாதார உரிமைகள்: தமிழ்நாட்டில் உள்ள வைகை, காவிரி, பாலாறு, தாமிரபரணி, வைப்பாறு போன்ற ஆறுகளில் அரசியல்வாதிகளாலும் அரசு அதிகாரிகளாலும் ஆற்று மணல் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட தேர்தல் அறிக்கையில் திட்டங்கள் வேண்டும்.
 கட்டாய ஆக்கிரமிப்பு அகற்றுதலின்போது கடைப்பிடிக்க வேண்டிய ஐ.நா.சபையின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது அங்கு வசித்த மக்களுக்கு மாற்று வசிப்பிடம் ஏற்பாடு செய்யப்பட தேர்தல் அறிக்கையில் திட்டங்கள் வேண்டும்.
 சமத்துவ உரிமைகள்: ஒடுக்கப்பட்ட மக்கள் மீது, தீண்டாமை வன்கொடுமை புரிவோர் மீது கறாராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நிவாரணமும் வழங்கப்பட தேர்தல் அறிக்கையில் செயல் திட்டங்கள் வேண்டும்.
 கலைகள்: பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கவும் நலிந்த கிராமியக் கலைஞர்களுக்கு அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தும் வகையில் ஒரு தேர்தல் அறிக்கையில் செயல் திட்டங்கள் வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 முனைவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com