ஒரு திருடன் திருடும்போது பார்ப்பவர், கொள்ளையடித்த பணத்தில் பங்கு வேண்டும் என கேட்கலாம். ஆனால், திருடனைவிட அவர் வலிமையானவர் என்பதை நிரூபித்தால் மட்டுமே பணம் கிடைக்கும். இல்லையென்றால் உதைதான் கிடைக்கும்.
அதுபோலவே, கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள "வருமானம் தெரிவிக்கும் திட்டம் - 2016'இன் வெற்றி - தோல்வி அரசின் வலுவான செயல்பாடுகளில்தான் அடங்கி உள்ளது.
அரசின் எச்சரிக்கைகளைப் புறக்கணிப்பதற்கு எதிராகவும், கருப்புப் பணத்தைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உள்ள திறமையை எடைபோடும் அதேநேரம், கருப்புப் பணத்தை தெரிவித்தாலோ தெரிவிக்காமல் இருந்தாலோ ஏற்படும் லாப - நஷ்ட கணக்குகளையும் வரி ஏய்ப்பாளர்கள் ஆய்வு செய்வார்கள்.
கருப்புப் பணத்தையோ, சொத்து விவரங்களையோ தெரிவிக்காவிடில் அரசு கைது செய்யுமா, அதுபோன்றதொரு எண்ணமும், திண்ணமும் இருந்திருந்தால் அரசு இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதால் கிடைக்கும் ஆதாயங்கள், கருப்புப் பணத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் ஆதாயத்துக்கு இணையாக இருக்குமா என்பன போன்ற பல கேள்விகள் வரி ஏய்ப்பாளர்கள் மனதில் எழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்தத் திட்டம் குறித்து தனது நிதிநிலை அறிக்கை தாக்கல் பேச்சின்போது, நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டதன் சாராம்சம்:
"கடந்த கால வரி ஏய்ப்பை சரி செய்துகொள்ள குறுகிய திட்டம் ஒன்றை முன்மொழிகிறேன். அதன்படி, மறைக்கப்பட்ட வருமானம் குறித்தோ, சொத்துகள் குறித்தோ தகவல் தெரிவிப்போர், அந்த வருமானத்தின் அல்லது சொத்தின் மதிப்பில் 30 சதவீதம் வரி, 7.5 சதவீதம் கூடுதல் வரி, அபராதம் 7.5 சதவீதம் செலுத்தி நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கலாம்.
அப்படி தெரிவிக்கப்படும் வருமானம் அல்லது சொத்து குறித்து வருமான சரி சட்டம் அல்லது சொத்து வரி சட்டத்தின் கீழ் ஆய்வோ, விசாரணையோ நடத்தப்படாது. அவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது.
ஒரு சில நிபந்தனைகளுக்குள்பட்டு, பினாமி பரிவர்த்தனை (தடுப்பு) சட்டம் 1988}இன் கீழும் நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தடுக்க பின்வரும் திட்டம் முன்மொழியப்படுகிறது. 2016 ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை "வருமானத்தை தெரிவிக்கும் திட்டம்' அமலுக்கு வருகிறது. ÷அவ்வாறு கருப்புப் பணத்தை அறிவித்த பின் அதற்கான வரி, அபராதத்தை 2 மாதங்களுக்குள் செலுத்தலாம். (இந்த 2 மாத கால அவகாசம் பின்னர் 2017 செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது). நமது பொருளாதாரத்தில் இருந்து கருப்புப் பணத்தை அறவே அகற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
இந்த ஒரு வாய்ப்புக்குப் பின்னும் தங்களது வருமானத்தைத் தெரிவிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் வசம் இருக்கும் எல்லா வழிமுறைகளும் பரிசீலிக்கப்படும்.'
தங்களின் கருப்புப் பணம் குறித்து தகவல் தெரிவிப்போரிடம், அந்தப் பணத்தின் ஆதாரம், வரி செலுத்துதல், கூடுதல் வரி, அபராதம் குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று கடந்த ஜூன் 30-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
கருப்புப் பணம் குறித்து தகவல் தெரிவிப்போர் செலுத்தும் வரியும் கருப்புப் பணமாக இருப்பின், உண்மையான வரி என்பது 31 சதவீதம் என சிலர் பொருள் கற்பிக்கின்றனர். உதாரணமாக, ஒருவர் தன்னிடம் ரூ.100 கருப்புப் பணம் உள்ளது என அறிவித்தால், அவர் செலுத்த வேண்டிய வரி 45 சதவீதம் ஆகும்.
அதை அவர் கருப்புப் பணத்தில் இருந்தே செலுத்தினால், அவரது கருப்புப் பணம் ரூ.145 ஆகும். அதில் ரூ.45 என்பது மொத்த கருப்புப் பணத்தில் 31 சதவீதமே. இது குறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
எப்படி இருப்பினும், கருப்புப் பணத்தை வெள்ளையாக்க ஏராளமான சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. அதன் பின்னரும் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க விரும்புகிறது. வருமானத்தை மறைப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரதமரும், நிதியமைச்சரும் குறிப்பாக எச்சரித்துள்ளனர்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் சிறையில் தள்ளவும் நேரிடும் என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.
இதற்கு முன்பு வாய்ப்புகள் அளிக்கப்பட்டபோது, இதுபோன்ற எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்த எச்சரிக்கை உண்மையிலேயே செயல்படுத்தப்படும் என்பதை வரி ஏய்ப்பாளர்கள் உணரும்வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக இது அவ்வளவு சுலபமானது அல்ல.
இதற்கு முன் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் எல்லாமே வெற்று சவடால்களாகவே ஆகின என்பதை கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன. கருப்புப் பணம் எவ்வளவு உள்ளது என்று தோராயமாக சொல்லப்படும் தொகைக்கும், வெளிவரும் தொகைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருந்துள்ளது.
இதற்கு முன் கொண்டு வரப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்துக்கான கருப்புப் பணம் (மறைக்கப்பட்ட அந்நிய வருவாய் மற்றும் சொத்துகள்) மற்றும் வரி விதிப்பு - 2015 சட்டம் தோல்வியையே தழுவியது. அதன்மூலம் வெளிவந்த கருப்புப் பணம் ரூ.2,600 கோடி மட்டுமே. இது அந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட வரியில் ஒரு சதவீதம் மட்டுமே.
கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பாஜக தலைவர்கள் பேசும்போது, வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்ட கருப்புப் பணத்தை வெளிக் கொணர்ந்தால், நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் அளிக்கப்படலாம் என்று குறிப்பிட்டனர். ஆனால், வெளிவந்த கருப்புப் பணமோ ரூ.2,600 கோடி மட்டுமே.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டத்துக்கு முன், கருப்புப் பணத்தை வெளிக்கொணர 14 முறை வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவில், 1951-இல் முதன்முறையாக அளிக்கப்பட்ட வாய்ப்பில், ரூ.11 கோடி மட்டுமே வெளிவந்தது.
1965-இல் கொண்டு வரப்பட்ட நிதி சட்டம், கருப்புப் பணத்தை தாங்களே வெளியிட்டு, 60 சதவீதம் வரி செலுத்தினால், 40 சதவீதத்தைத் தாங்களே வைத்துக் கொள்ளலாம் என்பதுடன் தண்டனையிலிருந்தும் தப்பலாம் என்று அறிவித்தது. ஆனால், அதன் மூலம் அரசு கஜானாவுக்கு கிடைத்தது வெறும் ரூ.29 கோடி மட்டுமே.
இந்தத் திட்டம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் இந்தத் திட்டத்தை மார்ச் 1966 வரை அரசு நீட்டித்தது. இதன் மூலம் ரூ.20 கோடி கிடைத்தது. அடுத்து, நான்காவதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தால் ரூ.18 கோடியும், ஐந்தாவதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தால் ரூ.70 கோடியும் வெளிவந்தன.
1975-இல் அறிவிக்கப்பட்ட ஆறாவது திட்டத்தின் மூலம் ரூ.738 கோடி கணக்கில் வராத பணமும், ரூ.790 கோடி மதிப்பிலான சொத்துகளும், அதன் மூலம் ரூ.241 கோடி வரியும் கிடைத்தன. 1978-இல் அறிவிக்கப்பட்ட ரூ.1000 மதிப்பிலான நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. 1981-இல் அறிவிக்கப்பட்ட எட்டாவது திட்டத்தின் மூலம் ரூ.964 கோடி வெளிவந்தது.
1985-86இல் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் ரூ.700 கோடி கிடைத்தது. 1991-இல் தேசிய வீட்டுவசதி வங்கியில் வைப்புத் தொகை வைக்க அனுமதி அளிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் ரூ.60 கோடி மட்டுமே வெளிவந்தது.
1991-இல் அந்நியச் செலாவணி நெருக்கடியின்போது, அறிவிக்கப்பட்ட இரு திட்டங்களின் வாயிலாக ரூ.6,700 கோடியும், 1993-இல் வெளியிடப்பட்ட தங்கப் பத்திரத் திட்டத்தின் மூலமாக ரூ.1,807 கோடி மதிப்பிலான 41 டன் தங்கமும் வெளிவந்தன. 1997-இல் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் 4.75 லட்சம் பேர் ரூ.33,600 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துகளை அறிவித்தனர். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 0.79 சதவீதம் மட்டுமே ஆகும்.
இதன் மூலம் அரசுக்கு ரூ.9,500 கோடி வரி வருவாய் கிடைத்தது. ஜிடிபியில் 75 சதவீதம் கருப்புப் பணம் என சில மதிப்பீடுகள் கூறுகின்றன. ஆனால், இதுவரை வெளிவந்த கருப்புப் பணத்தின் அளவுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையே உள்ளது. கணக்கில் வராத பணம் என்பதால், இவ்வளவு கருப்புப் பணம்தான் இருக்கும் என யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது.
யானை அளவுக்கு உள்ள கருப்புப் பணம், சுண்டெலி அளவுக்கே வெளிவந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நேர்மையற்றவர்கள் லாபம் அடையும் வகையிலேயே அரசுகளின் நடவடிக்கைகள் உள்ளன. கருப்புப் பணம் தொடர்பாக அடுத்தடுத்து திட்டங்கள் வெளியிடப்படுவதால், இதைவிட சிறந்த திட்டம் அறிவிக்கப்படட்டும் என வரி ஏய்ப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.
நமது நாட்டில் ஊழலும், மற்ற குற்ற நடவடிக்கைகளுமே கருப்புப் பணத்துக்கு வழிகோலுகின்றன.
ஒன்பது லட்சம் பெரும் பண பரிவர்த்தனைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் தயார் செய்துள்ளது. இதில் ஒரு லட்சம் பரிவர்த்தனைகள் ரூ.1 கோடிக்கும் அதிகமானவை.
அதேபோல, வருமான வரித் துறையில் 22 ஆயிரம் புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இரு நடவடிக்கைகளின் வாயிலாக வரி ஏய்ப்பாளர்களின் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
புள்ளிவிவரங்களுடன் ஆள்பலமும் உள்ளதால், தண்டனையிலிருந்து தப்பிக்க இந்த "கடைசி' வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வரிகள் வாரியம் அறிவுறுத்தி வருகிறது.
இந்த மோசடியைக் கையாள தொழில்நுட்பமும், ஆள்பலமும் அரசுக்கு உள்ளது. ஆனால், இதை நிறைவேற்றுவதற்கான மன உறுதி உள்ளதா என்பதுதான் இப்போதைய கேள்வி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


