தேவை தன்மதிப்புணர்வு!
மனிதனின் ஆளுமைப் பண்புகளுள் மிக முக்கியமானது தன்மதிப்புணர்வு (நங்ப்ச் உள்ற்ங்ங்ம்) என்பது ஆகும்.


மனிதனின் ஆளுமைப் பண்புகளுள் மிக முக்கியமானது தன்மதிப்புணர்வு (நங்ப்ச் உள்ற்ங்ங்ம்) என்பது ஆகும். தன்மதிப்பு என்பது ஒருவன் தன் சுயத்தன்மையை உள்முகமாக நோக்கி சிந்தித்து மதிப்பீடு செய்து கொள்வதாகும். ஒரு தனி மனிதன் தன்னைப் பொறுப்புணர்வு உடைய குடிமகனாக உருவாக்கிக் கொள்ள வேண்டுமாயின், அவன் முதற்கண் தன்னைத் தன்மதிப்பு உடையவனாக உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
சில போழ்து தேக்க நிலையில் இருந்தாலும், தன்மதிப்புணர்வைச் செயற்கையாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது ஒருவனின் தலையாய கடமை ஆகும். நம்மை மற்றவர்கள் மதிக்க வேண்டுமானால், முதற்கண் நமது மதிப்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்மதிப்பு உணர்வு நிறைந்த மக்கள் மிகுதியாக வாழும் நாடு உலகின் பார்வையில் மிக உயர்வான நாடாகத் திகழும்.
ஒரு தனி மனிதனின் தன்மதிப்பு உணர்வானது, சமுக உறவு மேம்படுவதற்கும் மக்களிடையே ஒற்றுமை மேலோங்கவும் உதவியாக இருக்குமே தவிர, சமூகத்திற்குத் தீமையை ஏற்படுத்தி விடாது. ஆணவமற்ற தன்மதிப்பு உணர்வு சிறப்பான பங்கினைப் பெறப்பெறச் சமூகம் நீதிநெறிமுறை நிரம்பியதாகத் திகழும்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற உளவியல் அறிஞரான ஆபிரகாம் மாஸ்லோ என்பவர் மனித ஆளுமைகள், நடத்தைகள் பற்றிய தம் முடிவுகளை 1960-களில் வெளியிட்டார். "மனிதன் தன்னிறைவு பெற்றவனாக மாறுவதற்குத் தன் மதிப்பு உணர்வு மிகவும் இன்றியமையாதது' என்று கூறினார்.
தன்மதிப்புத் தேவையினால் ஒருவன் எப்போதும் உந்துதல் பெற்றுக்கொண்டே இருக்கிறான். சமுதாயத்தினால் மதிக்கப்படுதல், சமுதாயத்திற்குப் பயன்படுதல் என்ற இரண்டு நிலைகளில் தனிமனிதனின் தன்மதிப்பு உணர்வு செயல்படுகிறது
தன்மதிப்பு உணர்வை ஒருவன் எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பதற்கு மாசுலோ, "சிறந்த பொதுமைச் சிந்தனைகள், தூய உணர்வுகள், தரமான தர்க்க ரீதியான கருத்துக்கள் முதலியவற்றைத் தனக்குள் ஒருவன் வளர்த்துக் கொண்டால் காலப்போக்கில் தன்மதிப்பு உணர்வு ஒருவனின் ஆளுமையில் இடம் பெற்றுவிடும்' என்று கூறுகிறார்.
தன்மதிப்பு உணர்வு அற்ற மனிதர்களின் எண்ணிக்கை ஒரு சமூகத்தில் மிகுதியாகி விட்டால் அது இழிவான சமூகமாக மாறியிருக்கும். தன்னை நம்பியவருக்குத் துரோகம் இழைத்தல், பிறர் உழைப்பைச் சுரண்டுதல், லஞ்சம் வாங்குதல், பிறர் பொருள் மீது அளவு கடந்த ஆசை வைத்தல், ஒழுக்கக் கேடுகள், முறையற்ற வணிகம், கலப்படம் செய்தல், சுயநலம் முதலான கீழ்மைப் பண்புகளின் புகலிடமாக ஒரு சமூகம் மிக விரைவாக மாறிவிடும்.
ஆபிரகாம் மாசுலோவை உலகத்தின் அறிவுஜீவிகள் இன்றளவும் கொண்டாடுகிறார்கள். இதே கருத்துக்களைத் தமிழ் மொழியின் செவ்வியல் இலக்கிய கர்த்தாக்கள் இலக்கியங்களில் ஏராளமாகக் கூறியுள்ளனர் என்பது நமக்குப் பெருமை தரக்கூடிய செய்தியாகும்.
தன்மதிப்பு உணர்வு முதற்கண் ஒருவனைத் தீமை செய்வதினின்றும் தடுக்கிறது. வறுமையைக் காரணம் காட்டித் தவறு செய்யாதே என்று சான்றோர்கள் கூறியதை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். வள்ளுவர்,
ஈன்றாள் பசி காண்பானாயினும்
செய்யற்க
சான்றோர் பழிக்கும் செயல்
என்று கூறியுள்ளமை மிக முக்கியமான கருத்தாகும். தன்மதிப்பு உணர்வின் உச்சம் என்று இதனைக் குறிப்பிடலாம்.
தன்மதிப்பு உணர்வு, ஒருவனைத் தன் இயலாமையை, வறுமையை வெளியில் புலப்படுத்திக் கொள்வதிலிருந்து காப்பாற்றுகிறது. சாதாரண மனிதர்கள் தங்கள் பிரச்னைகளை எளிதில் வெளியே காட்டி விடுவார்கள் ஆனால் தன்மதிப்பு உணர்வு உடைய ஒருவன் தன் இன்னல்களை வெளிப்படப் புலப்படுத்த மாட்டான்.
சங்க இலக்கியத்தில் வறுமையை மறைத்துக்கொண்ட ஓர் இசைக் கலைஞன் காட்டப்படுகின்றான். வீட்டில் பல நாட்களாக அடுப்பு பற்ற வைக்கப்படவில்லை என்றாலும் வீட்டின் தலைவி வறுமையை வெளியில் காட்டிக்கொள்ளாமல் குப்பையில் வளர்ந்திருந்த ஒரு வகைக் கீரையைப் பறித்து உப்பில்லாமல் வேகவைத்து உணவாகப் பகிர்ந்து அனைவருக்கும் கொடுக்கிறாள். தங்கள் வறுமையைப் பிறர் அறிந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் வீட்டின் கதவை அடைத்து விடுகிறாள். "சிறுபாணாற்றுப்படை' என்ற இலக்கியத்தில் இது கூறப்படுகிறது.
ஒருவன் தன் மதிப்பு உணர்வுடன் சமூகத்தில் வாழும்போது அவனுடைய வறுமையே அவனது திறமைகளைப் பட்டை தீட்டுகிறது. இன்றைய நாட்களில் கூட சமூகத்தில் மேலான இடத்தை அடைந்தவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் நமக்கு இதனைக் காட்டும்.
தன்மதிப்பு உணர்வு இருக்கும் ஒருவன் தன் தகுதிக்குக் குறைபாடு ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட மாட்டான். பண்டைய நாட்களில் புலவர்கள் எவ்வளவு கொடிய வறுமையில் இருந்தபோதும், மன்னர்களின் ஆதரவை எதிர்நோக்கியிருந்தபோதும் அவர்களைத் தேவையில்லாமல் பாராட்டியதில்லை.
வன்பரணர் என்ற புலவர் நள்ளி என்னும் வள்ளலைச் சந்தித்தபோது "பிறர்க்குக் கொடுக்கும் பண்பில்லாத மன்னர்களைப் புகழ்ந்து ஒருநாளும் நாங்கள் பாட மாட்டோம்' என்று மன்னனின் முகத்துக்கு நேரே கூறுகிறார் (புறநானூறு 148).
இத்தகைய மனிதர்களிடம் பெரும் மன்னர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரும் நட்பு கொள்ள விரும்பினார்கள். பாண்டிய மன்னன் ஒருவன், தான் போரில் தோற்றால், மாங்குடி மருதன் போன்ற புலவர்களின் நட்பை இழப்பதாகச் சூளுரைக்கிறான்.
தன்மதிப்பு உணர்வு ஒருவனை இறுதி வெற்றிக்குக் கொண்டு செல்கிறது. சிலப்பதிகாரத்தில் கணவனைப் பிரிந்து தனிமையில் வாழ நேர்ந்தபோதும் கண்ணகி தனது தன்மதிப்பு உணர்வைக் கைவிடவில்லை.
தன் துன்பத்தினைப் பிறர் - முக்கியமாகக் கோவலனின் பெற்றோர் - உணர்ந்து விடக்கூடாது என்று கருதித் துன்ப உணர்வுகளை மறைத்துக் கொண்டாள். "யான் அகத்தொளித்த நோயும் துன்பமும்' என்று கண்ணகி தன் வாக்குமூலமாகவே தன் துன்ப உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டதைப் பற்றிக் கூறுகிறாள்.
கண்ணகியிடம் தன்மதிப்பு நிறைந்திருந்ததால் கோவலன் மனம் வருந்தி கண்ணகியிடம் மன்னிப்புக் கோரும் சூழல் உருவாகிறது. இது கண்ணகிக்குக் கிடைத்த வெற்றி அல்லவா?
கண்ணகியின் தோழியான தேவந்தி கணவனைப் பிரிந்திருப்போர் மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டுமானால் சோமகுண்டம், சூரிய குண்டம் என்ற குளங்களில் மூழ்கி எழ வேண்டும் என்று கூற, கண்ணகி ஒரே வார்த்தையில் "பீடன்று' என்று மறுத்து விடுகிறாள்.
தன் மீது அவளுக்கு அத்தனை நம்பிக்கை. கண்ணகி இளமையும் அறியாமையும் உடைய பெண்ணல்ல; தனித்தன்மை மிக்க, விடுதலை பெற்ற நவயுகப் பெண்மையின் குறியீடு.
தன்மதிப்பு உணர்வு சமூக உறவுகளை மிகவும் வளர்த்துச் செல்கிறது. வள்ளுவர் கூறும் ஒப்புரவு - அதாவது ஒருவர் தாமே விரும்பி மற்றவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல் - என்ற உயர் பண்பு ஒரு சமூகத்தில் இணக்கமான வாழ்க்கைச் சூழலை உருவாக்குகிறது.
சங்கப் புலவர்கள் தன்மதிப்பு உணர்வை மிகுதியாகக் கொண்டிருந்ததால் பிறர்க்கு உதவும் ஒப்புரவுப் பண்புடையவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களின் தன்மதிப்பு உணர்வு எதுவரை செல்கிறது தெரியுமா? தாங்கள் வறுமையில் வாடிய போதும் தங்கள் திறமைக்குக் கிடைத்த பரிசுகளைத் தாங்களே வைத்துக்கொள்ளாமல் துன்பத்தில் வாடும் மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்கும் மனநிலையைப் பெற்றிருந்தனர்.
தன்மதிப்பு உணர்வு சமூக அவலங்களுக்கு எதிராக ஒருவனைக் கிளர்ந்தெழச் செய்யும். மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை இதற்குத் தக்க சான்றாகும். தென்னாப்பிரிக்காவிற்குத் தொழில் புரியச் சென்ற மோகன்தாஸ் கரம் சந்த் காந்தியின் மனத்திற்குள் கனன்று கொண்டிருந்த தன்மதிப்பு உணர்வுதான் காலப்போக்கில் அவரை மகாத்மா காந்தியாக உயர்த்தியது.
இன்று எங்கு பார்த்தாலும் ஏதோ பயனை, உதவியை எதிர்பார்க்கும் முகங்கள். அலுவலகங்களில், உணவகங்களில், கார் நிறுத்தும் இடங்களில், கோவில் வாசல்களில், முடிதிருத்தும் நிலையங்களில், கோவில் கருவறைகளின் முன்னே கற்பூரத் தட்டுடன் நிற்பவரின் முகத்தில் என்று அனைத்து இடங்களிலும் பயனை எதிர்பார்த்து நிற்கும் மனிதர்கள் நமக்கு கூறுவது, நாம் தன்மதிப்பு உணர்வு என்ற உயர் பண்பினை இழந்து விட்டு நிற்கிறோம் என்ற செய்தியைத்தான்.
எனவே, இன்று வளர்நிலையில் உள்ள சிறார்களுக்குத் தன் மதிப்பு உணர்வின் தேவையை எடுத்துக் கூறுவதுதான் நமது தலையாய பணியாகும். தன் மதிப்புணர்வை வளர்ப்போம் நாம் நாட்டின் முகத்தோற்றத்தை மாற்றியமைப்போம்.
கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...