அரசியல் பெருந்தன்மை!

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952-இல் நடைபெற்றபோது அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.கழகம் தேர்தலில் போட்டியிடாமல்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் அ.தி.மு.க. ஆட்சி அமைத்துள்ளது.
 சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952-இல் நடைபெற்றபோது அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.கழகம் தேர்தலில் போட்டியிடாமல் கழகத்தின் கொள்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கு ஆதரவு அளித்தது. அதன்பிறகு, 1957-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. அதில் வெற்றிபெற்ற தி.மு.க. உறுப்பினர்களின் தலைவராக அண்ணா பணியாற்றினார்.
 மேலும், சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கினார். ஏப்ரல் 29, 1957-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தலைவராக டாக்டர் யு.கிருஷ்ணா ராவ் (காங்கிரஸ்), துணைத் துலைவராக பி.பக்தவத்சலு நாயுடு (காங்கிரஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 கட்சி மாறுபாடுகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அண்ணா பேசியதாவது:
 "சட்டப் பேரவைத் தலைவர் அவர்களே, துணைத் தலைவர் அவர்களே தங்களுடைய கட்டளைக்கு அடங்கி நல்ல முறையில் தங்களுடன் ஒத்துழைத்து இந்தச் சபையின் கண்ணியத்தைக் காப்பாற்றுவதில் இந்தப் பகுதியில் அமர்ந்திருக்கிற தி.மு.க. உறுப்பினர்கள், உண்மையில் நல்ல நம்பிக்கையுடனும் இதிலே பிறருக்கும் நம்பிக்கை ஏற்படச் செய்ய வேண்டுமென்ற உறுதிப்பாடுடனும் இருப்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
 மேலும், பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யு.கிருஷ்ணா ராவின் அரசியல் நடவடிக்கைகளை நீண்ட காலமாக நான் அறிந்திருக்கிறேன். நேர்மை உள்ளம் படைத்த அவர் போட்டியின்றியே பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதுதான் பொருத்தமானது.
 என்றாலும், ஐனநாயக அமைப்பிலே சில, பல தவிர்க்கமுடியாத கடமைகளுக்கு உள்பட்டு போட்டி இருந்தது என்றும், அந்தப் போட்டியும் தங்கள் புகழை அதிகப்படுத்துவதாக முடிந்தது என்பதையும் அறிவோம்.
 எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிற நாங்கள் ஆளும் கட்சி செய்கின்ற காரியங்கள் அத்தனையும் எதிர்ப்போம் என்று அல்ல. அரசின் குறைபாடுகளை நாங்கள் எடுத்து வைக்கும்பொழுது பேரவைத் தலைவர் அருள் கூர்ந்து தங்களுடைய நியாயமான தீர்ப்புகளை வழங்கவேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்' என்று அறிஞர் அண்ணா கூறினார்.
 1949 செப்டம்பர் மாதம் 17-ஆம் நாள் தி.மு.க.வை அண்ணா உருவாக்கினார். பொதுவாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற முறையில் தி.மு.க.வினர் செயல்புரிய வேண்டும் என்று கழக உறுப்பினர்களை வலியுறுத்தினார்.
 இந்த மூன்று விதமான செயல்பாடுகளையும் அரசியல் பொதுவாழ்வில் மட்டுமல்ல, சட்டப் பேரவை உறுப்பினர்களாக பொறுப்பேற்ற நிலைமையிலும், நாங்கள் கடைப்பிடிப்போம் என்று கூறினார்.
 பொதுவாக அரசியலுக்கும், நாட்டிற்கும் ஜனநாயகத்தில் நின்று பணியாற்றவேண்டும் என்பதைத்தான் இது வெளிப்படுத்தியது. தற்காலத்தில் அரசியல் பெருந்தன்மை என்பது நம் நாட்டிற்கு மிகவும் அவசியம் என்பதை எதிர்க்கட்சி ஏற்றுக்கொண்டு பணியாற்றவேண்டும்.
 அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களும், சட்டங்களும் சட்டப் பேரவையில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட பிறகுதான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அத்தகைய விவாதங்களில் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மக்களுக்காக எதிர்க்கட்சிகள் செயல்படவேண்டும்.
 அண்ணா 1957-ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அவர் தலைமையில் தி.மு.க. மிகவும் வேகமாக மக்களுடைய பேராதரவுடன் வளர்ந்தது.
 1967-இல் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றிபெற்று முதல்வராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுது, பேரவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் மார்ச் 17, 1967 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, முதல்வர் என்ற முறையில், அண்ணா கூறியதாவது:
 "நாம் ஒருவருக்கொருவர் ரொம்பப் பற்றுக்கொண்டவர்கள். ஆகையினால், இந்த அவையின் நடவடிக்கைகளில் எந்தவிதமான முரண்பாடுகள், சிக்கல்கள் ஏற்படுவதற்கும் வழியில்லை. வழியில்லாதது மட்டுமல்ல, ஏற்கெனவே நல்ல முறைகளை இந்த அவை எடுத்துக் காட்டியிருக்கிறது.
 நம்மில் பலர் இங்குப் புதிதாக வந்திருக்கிறபோதிலும், மொத்தமாகப் பார்க்கப் போனால், நாம் வழிவழியாக வந்தவர்களே தவிர, வழி தவறி வந்தவர்கள் அல்ல. ஆகவே, இந்த அவையின் நடவடிக்கைகளில் எந்தவிதத்திலும் வழி தவறிச் சென்று தங்களுக்கு நாங்கள் எந்தவிதமான சிக்கலையும் ஏற்படுத்த மாட்டோம் என்பதை நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்', என்றார்.
 மேலும், அண்ணா கூறியதாவது: எங்கள் (தி.மு.க.) தரப்பிலே ஓர் உறுப்பினர் The Congress is dead and gone for ever  என்று கூறினார். நான் அந்தக் கருத்திலே இல்லை. என்னுடைய கட்சியினருக்கும் நான் சொல்லிக்கொள்வேன், எந்தக் கட்சியும் அப்படி மறைந்துவிட வேண்டும், இறந்துவிட வேண்டும் என்று எண்ணுவது ஜனநாயகப் பண்பாடு அல்ல.
 காங்கிரஸ் வளர வேண்டும். காங்கிரஸ் வளர்வதன் மூலம் மறுபடியும் ஒரு முறை அது ஆட்சிக்கு வருவதானாலும் நான் வரவேற்கத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
 ஏனென்றால், இவ்வளவுக்குப் பிறகும் மறுபடியும் அவர்கள் ஒரு தடவை வருவார்களானால், அவர்கள் எப்படி நடக்கிறார்கள் என்று பரீட்சை பார்க்கக்கூட அவகாசம் தர வேண்டும், உரிமை தர வேண்டும்' என்றார். இதிலிருந்து அண்ணாவின் அரசியல் பெருந்தன்மையைக் காணலாம்.
 அண்ணா 1957-ஆம் ஆண்டில் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபொழுதும் ஆளுங்கட்சியின் சார்பில் வந்த பேரவைத் தலைவரையும், துணைத் தலைவரையும், கட்சி பேதமற்ற முறையில் பாராட்டினார்.
 அண்ணா கூறிய அரசியல் பெருந்தன்மையை, தற்பொழுதைய தமிழ்நாடு சட்டப் பேரவையில் உள்ள எதிர்க்கட்சியினரும் ஆளுங்கட்சியினரும் ஒருமுகமாக கடைப்பிடிப்பார்கள் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
 
 கட்டுரையாளர்:
 நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com