ஓர் இந்தியன், தந்தை ஸ்தானத்தில் வீட்டைவிட்டு அலுவலகம் செல்லும்போது தன் தகப்பனார், தாயார், மனைவி, குழந்தைகள் மற்றும் எஜமானர், உடன் பணியாற்றுவோர் ஆகியோரிடமிருந்து பல்வேறு வேண்டுகோள்கள் வருகின்றன.
வீட்டிலிருந்து கிளம்பும்போது அப்பா, கோயிலுக்கு அழைத்துப்போ என்கிறார். அம்மா, குடும்ப சம்பந்தமான காரியத்திற்காக வெளியே போக வேண்டும் என்கிறார். மனைவி, சினிமாவுக்கு அழைத்துச் செல்லும்படிச் சொல்கிறாள். குழந்தைகளோ உணவு விடுதிக்குக் கூட்டிச் செல்லுமாறு கேட்கிறார்கள். இவை எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே காதில் வாங்கிக் கொண்டார் அவர்.
அவர்கள் வேண்டிக்கொண்ட அத்தனைக்கும் ஒப்புக் கொள்வதாக நம்பிக்கையூட்டும் வகையில் வாக்குறுதி தந்தார். அலுவலகத்தில் காலடி எடுத்து வைத்தவுடனேயே, எஜமானர் தொலைபேசியில் கூப்பிட்டு காலந்தாழ்த்தாமல் உடனடியாக ஓர் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்கிறார். தன்னையொத்த பணியாளர்கள் கூடுதல் அலுவலக உதவி வேண்டும் என்கிறார்கள்.
இதைக் கேட்டுவிட்டு மனைவியிடம் தொலைபேசியில், "இந்த வீட்டுச் சிக்கல்கள் எல்லாவற்றையும் உன்னால் சமாளிக்க முடியுமா?' என்கிறார். எந்தவிதமான ஆச்சர்யமும் பதட்டமும் இல்லாமல் இந்திய இல்லத்தரசி கவலை வேண்டாம் என்று பளிச்சென்று பதில் கூறுகிறார்.
கடமையுணர்வு உள்ள தந்தையின் நிலையில் இருந்து அருண் ஜேட்லி, அனைத்துத் துறைகளுக்கும் அவர்களுடைய முறையான ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் இதய சுத்தத்தோடு முயன்றிருக்கிறார். ஒவ்வொரு உறுப்பினரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஆவலோடுதான் இருக்க விரும்புகிறது அவருடைய நிதிநிலை அறிக்கை. விரிவாக்கப்பட்ட குடும்பத்தையும் சேர்த்துதான் பாசத்தோடு அமைகிறது.
எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற தாயுள்ளத்தோடு ஒதுக்கீடு செய்கிறது. குடும்பத்தின் அத்தியாவசியமான தேவைகள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதை உன்னிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. குடும்பத்தின் நீண்டநாளைய தாங்குசக்திக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும். உடனடியான வீட்டுக்குரிய வசதிகளுக்கு அவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய கட்டாயம் இல்லை.
இந்தியாவின் நெடுநாளைய தாங்கிக்கொள்ளும் திறன் என்பது, அதன் ஒட்டுமொத்தமான நிதித் தொகுப்பில்தான் உள்ளது. ஊரக வளர்ச்சியையும் இதனோடு இணைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நிலைப்பாடு கிட்டும்.
இந்தியாவில் உள்ள இல்லத்தரசி ஒருத்தியால்தான் இதனை நன்கு உணர்ந்துகொள்ள முடியும். கடமையுணர்வு உள்ள தாயின் இடத்தில் அமர்ந்து ஜேட்லி விடை தந்துள்ளார். இது இவருடைய நிதி குறித்த நுண்ணறிவுத் திறத்தை வெளிப்படுத்துகிறது. ஒட்டுமொத்த வளர்ச்சியில் உள்ள நிதிப்பற்றாக்குறையை, 3.5% என்ற அளவைப் பின்பற்றியதன் மூலம் அவருடைய தனித்தன்மை புலப்படுகிறது.
குடும்பத்தின் முக்கிய சொத்துக்கள் குடும்பப் பெரியோர்களாவர். குடும்பத்தின் இல்லத்தரசி எப்படி அவர்களை நன்கு கவனிப்பாளோ, அதைப்போல நம் மத்திய நிதியமைச்சர் தாயுள்ளத்தோடு இந்தியாவின் பொருளாதாரச் சொத்து (கிராமங்கள்) வளமாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்.
விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. ஜேட்லியின் பண்ணை ஒதுக்கீடுகளைப் பார்க்கும்போது இது புலனாகிறது. மின்சாரம், சாலை, வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு வழங்கல், பஞ்சாயத்து முறைகளுக்குக் காட்டப்படும் அக்கறை போன்ற ஊரகக் கட்டமைப்புகளுக்கு அவர் செலுத்திய தனித்த ஈடுபாடு, அவர் கிராம வளர்ச்சியில் கொண்டுள்ள பாசம் பளிச்சிடுகிறது.
எப்படி ஒரு பெற்றெடுத்த தாய் தன் குழந்தைகளின் தேவைகளுக்கெல்லாம் நேரடியாக இல்லையென்று சொல்லாமல், அவற்றிற்கு மாற்றாக உள்ளவற்றைச் சொல்லி மனம் மகிழ வைக்கிறாளோ, அதைப்போல நம் நிதியமைச்சரும் நடுத்தர வர்க்கத்தினரைத் திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார். இந்தியக் கூட்டமைப்புத் தொழில்துறையினரையும் முகம் சுளிக்காமல் பார்த்துக் கொண்டுள்ளார். வரிவிதிப்பு மற்றும் இதர நடவடிக்கைகள் மூலம் அவர்கள் மகிழ வித்திட்டிருக்கிறார்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்திற்குத் திருத்தத்தைக் கொண்டு வருவார் என்று நம்புகிறேன். இது குழந்தைகளுக்குப் பெற்ற தாய் தரும் பிறந்தநாள் பரிசைப் போன்றதாகும். இந்தியாவின் மேன்மைக்குரிய இல்லத்தரசி, தான் தியாகம் செய்து குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியடையச் செய்வது போல நிதியமைச்சரும் மூத்த வழக்குரைஞருமான ஜேட்லி ஒரு தியாகத்தைச் செய்துள்ளார். வரிவிதிப்பை அகலப்படுத்தி மூத்த வழக்குரைஞர்களுக்கு சேவை வரியை விதித்துள்ளார்.
ஒரு வெற்றிநடைபோடும் குடும்ப விஷயத்தில் முட்டுக்கட்டை போடும் தன்னலம் கொண்ட தூரத்து உறவினர் இருக்கத்தான் செய்வார். அது தவிர்க்க முடியாத ஒன்று. உலகத்தரம் வாய்ந்த இருபது கல்வி நிலையங்களை ஏற்படுத்த வரிக்கட்டமைப்பில் கொண்டுவந்த மாற்றத்திற்கு வணக்கம் கூறுகிறேன்.
உயர்கல்வி நிதி முகமையை ஏற்படுத்தியதற்கு நன்றி நவில்கிறேன். கட்டமைப்பு வளர்ச்சிக்காக ஆயிரம் கோடி ரூபாயைத் தொடக்கநிலை மூலதனமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்திகளில் ஒன்று. திறன்வளர்ச்சிப் பயிற்சிதரும் கல்வி நிலையங்களுக்கு ரூ.1,700 கோடி ஒதுக்கியிருப்பது இனிமையிலும் இனிமை.
வருடாந்திரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மனிதவள மேம்பாட்டு வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியெல்லாம் காலம் காலமாகச் செய்யப்படும் மரபைச் சார்ந்ததே. இத்தகு சமூகப் பிரிவு ஒதுக்கீடுகள் யாவும், கொண்டுபோய்ச் சேர்த்தல் மற்றும் விளைவுகளின் அடிப்படையில் அமைவது நல்லது. அவையாவும் வெறும் தேவைகள் என்ற அளவோடு நின்றுவிடக்கூடாது. இது நடைமுறைப்படுத்துவதில் உள்ள திறனை உயர்த்தும்.
1994-இல் டாக்டர் சாமிநாதன் குழு இந்தியக் கல்வி வளர்ச்சி வங்கியை உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. தொடக்கநிலை மூலதனமாக ரூபாய் மூவாயிரம் கோடி இருக்க வேண்டும் என்றும் கூறியது. கல்விக்கென்று தனித்த வரி விதிக்கும்போதெல்லாம் அதன்மூலம் கிடைக்கும் தொகையை இந்தியக் கல்வி வளர்ச்சி வங்கியில் செலுத்த வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு கல்வி மேம்பாட்டிற்குச் செலவிடவேண்டும் என்று அக்குழு கூறுகிறது.
இது ஒரு அருமையான தொடக்கம்தான். ஜேட்லி வரும் ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்துவார் என்று நம்புகிறேன். 1994-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட ரூ.3,000 கோடி என்பது இப்போது ரூ.1,000 கோடியாகத்தான் ஒதுக்கீட்டிற்கு ஆகியுள்ளது. நம் மத்திய நிதியமைச்சர் இதையும் கவனத்தில் கொள்வார் என்று நம்புகிறேன்.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் ஒளிவுமறைவற்ற தன்மையையும், விருப்பு வெறுப்பற்ற நடைமுறைப்படுத்தும் போக்கையும் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆராய்ச்சிக்கான நன்கொடைக்குரிய வரிச் சலுகை தற்போதைய 175% இருந்து, பின்னர் 150% ஆகக் குறையும். கடைசியில் 100% ஆகக் குறையும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வலுவான வரிச் சலுகை படிப்படியாகத் தன் நிலையில் குறையும் என்பது வேம்பாகக் கசக்கிறது. ஏற்கெனவே பட்ஜெட்டில் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட தொகை மிகவும் சொற்பமாக உள்ள சூழலில் இந்த அறிவிப்பு வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளது. இந்த வருவாய் என்பது சுண்டைக்காய் அளவுதான் இருக்கும்.
மற்ற வரிவிதிப்பின் மூலம் அரசு இழக்கும் பிற வருமானங்களைப் பார்க்கும் சூழலில் இது கடுகளவு தான். ஜேட்லி அவர்கள் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். கல்வி நிலையங்களில் தொழிலகக் கல்விக்கூட ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
குடும்பம் ஒவ்வொன்றிலும், தற்கால நடப்பைக் கடந்த காலக் கர்மவினையுடன் தொடர்புபடுத்திப் பேசும் ஜோதிடர் ஒருவர் இருப்பார். கடந்த காலச் செயல்பாடுகளுடன் கடன் சுமையையும் தாங்கிக்கொண்டு, எதிர்கால மனஉளைச்சலை எதிர்கொண்டு நம் நிதியமைச்சர் நிதிப்பற்றாக்குறையை எப்படிச் சமாளிக்கப் போகிறாரோ? ஏழாவது ஊதியக் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தல் மற்றும் அதுபோன்ற செலவினங்களையும் கருத்தில் கொண்டுதான் இந்தக்கேள்வியை முன்வைக்கிறேன்.
தவிர்க்க முடியாத செலவினங்கள் வேறு உள்ளன. சவாலே சமாளி என்ற பாட்டுத்தான் என் நினைவுக்கு உடனடியாக வருகிறது. குடும்ப ஜோதிடரின் கணிப்பு நிதியமைச்சர் மூலமாக எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சரின் ஜாதகப் பலன் நல்லபடியாக இருந்து கிரகங்கள் கூடிவந்தால் அவருக்கு யோகம் அமிர்தம் தான். மாமலையும் அவருக்கு ஒரு கடுகுதான். ஆட்டத்தில் கட்டாயம் ஜெயித்துவிடுவார்.
நம் நிதியமைச்சரின் வருவாய் மற்றும் செலவினம் பற்றிய கணிப்பு சரியாக இருக்குமா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையில் கிடந்த 10 பவுன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

அடிப்படை சவால்கள் முதல் நவீன அம்சங்கள் வரை... பிரதமரின் சுதந்திர தின உரைகள் மூலம் வெளிப்படும் நாட்டின் வளர்ச்சி!

துய்யம்பூந்துறை ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்! மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பங்கேற்பு!




