பொருளாதார முன்னேற்றமும் திவால் சட்டமும்
நீண்ட காலமாகப் பேசப்பட்டு வரும் புதிய திவால் சட்டம் (இன்ஸால்வென்ஸி மற்றும் பேங்க்ரப்ட்ஸி சட்ட மசோதா) அண்மையில் நாடாளுமன்றத்தில்


நீண்ட காலமாகப் பேசப்பட்டு வரும் புதிய திவால் சட்டம் (இன்ஸால்வென்ஸி மற்றும் பேங்க்ரப்ட்ஸி சட்ட மசோதா) அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தொடரின் இரண்டாம் பகுதியில் இது நிறைவேற்றப்பட உள்ளது.
ஒரு வணிகக்கூட்டாண்மை (கார்ப்போரேட்) நிறுவனமோ, லிமிட்டெட் கம்பெனியோ, பார்ட்னர்ஷிப் எனப்படும் பங்குதாரர் நிறுவனமோ, தனிநபரோ வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல், திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டால், அந்த தருணத்தில் கடன் பெற்றவர், கடன் கொடுத்தவர் எதிர்கொள்ளும் நிலைமையைக் கையாளுவதற்கு இந்தியாவில் விரிவான, எளிமையான ஒற்றைச் சட்டம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சட்டங்களை நாடவேண்டி உள்ளது. வாராக்கடனைக் கட்டுப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட சர்ஃபாசி சட்டம் 2002, நிறுவனங்கள் சட்டம் 2013 ஆகியவை இதில் அடங்கும். வழக்குகள் அதீத காலதாமதம் ஆவதற்கு இதுவும் ஒரு காரணம்.
திவால் பிரச்னைகளில் தீர்வு காண்பதில் உலகில் 189 நாடுகளில் இந்தியா 136-ஆவது இடத்தில் இருக்கிறது. புதிய திவால் சட்டத்தில், பல்வேறு சட்டங்களின் பிரிவுகளை ஒருங்கிணைப்பது மட்டும் அல்லாமல் காலமாற்றத்துக்கு ஏற்ப புதிய திருத்தங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், 6 மாதங்கள் அல்லது அதிபட்சமாக 9 மாதங்களில் திவால் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்பது தான் புதிய சட்டத்தின் சிறப்பம்சம்.
புதிய சட்டத்தின் மூலம் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் என்று சட்டத்தின் "நோக்கங்களில்' ஒன்றாகக் கூறப்பட்டிருக்கிறது. அது எப்படி சாத்தியம் என்று பார்ப்போம்.
திவால் தொடர்பான பிரச்னைகளுக்கு எவ்வளவுக்கெவ்வளவு விரைந்து தீர்வு காண்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு, தொழில் துறையினருக்கு தங்குதடையில்லாமல், கடன் வசதி கிடைக்கும். பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் மட்டும் அல்லாமல், என்.பி.எஃப்.சி. எனப்படும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தனியார் நிதி அமைப்புகள் ஆகியவை போட்டிப் போட்டுக் கொண்டு தொழில்துறையினருக்கு கடன் வழங்குவதில் கூடுதல் ஆர்வம் காட்டுவார்கள்.
இதனால், தொழில்முனைவோர் ஊக்குவிக்கப்படுவர். புதிய தொழில்கள் தொடங்குவதற்கும், ஏற்கெனவே இயங்குகின்ற தொழில்சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கும் வாய்ப்புகள் உருவாகும். தொழில் புரிவது எளிமை ஆகும். ஆக மொத்தம், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். அந்த வகையில், புதிய திவால் சட்டம் நம் நாட்டுக்கு அவசியம்.
புதிய திவால் சட்டத்தின்படி, ஒரு வணிகக்கூட்டாண்மை நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வங்கியோ அல்லது, நிதி நிறுவனமோ அல்லது தனிநபரோ கடனை வசூல் செய்வதற்காக அந்த வணிகக்கூட்டாண்மை நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கையைத் தொடங்கலாம். இதைக் கையாளுவதற்கு தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (நேஷனல் கம்பெனி லா டிரிப்யூனல் (NCLT) என்கிற அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இந்த அமைப்பு உயர்நிலை தீர்ப்பாயமாக (Adjudicating Authority) இருக்கும்.
இதன் செயல்பாடுகளை வழி நடத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் இன்ஸால்வென்ஸி மற்றும் பேங்க்ரப்ட்சி போர்டு ஆஃப் இந்தியா என்கிற ஒரு வாரியமும் அமைக்கப்படும். திவால் நடவடிக்கையை கடன் வாங்கியவர் தொடங்கினாலும் சரி, கடன் கொடுத்தவர் தொடங்கினாலும் சரி.. இந்த செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு திவால் நிபுணர் (Insolvency Professional), தீர்வு நிபுணர் (Resolution Professional) மற்றும் Bankruptcy Trustee (திவால் அறங்காவலர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். ஆக, அரசு அதிகாரிகளை விட, துறை சார்ந்த நிபுணர்களின் பங்கு இதில் அதிகம்.
கடன் பெற்றவருக்கு உடனடியாக 6 மாத அவகாசம் வழங்கப்படுகிறது. இந்தக் கால அவகாசத்தின் போது எவ்வித நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. சர்ஃப்ரஸி சட்டப்படியான நடவடிக்கையும் நிறுத்தி வைக்கப்படும்.
அதேபோல், கடன் வாங்கியவர் தன் சொத்துகளை விற்பது, கையிருப்பு பணத்தை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றுவது, புதிதாக கடன் வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் வினியோகம் தடை செய்யப்படமாட்டாது. குறிப்பிட்ட நிறுவனம் திவால் தீர்வு நடைமுறையில் இயங்குகிறது என்பது குறித்து செய்தித்தாள்களில் பொது அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்த நிறுவனத்திடமிருந்து கடன் தொகை வசூலிக்க வேண்டியவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நிறுவனத்தின் இயக்குனர் குழுவின் அதிகாரம் முடக்கி வைக்கப்படும். நிர்வாக அதிகாரங்களைத் தீர்வு நிபுணர் (Resolution Professional) மேற்கொள்வார்.
கடன்பெற்ற நிறுவனத்துக்கு பலர் கடன் கொடுத்திருந்தால், அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய குழு (Committee of Creditors) அமைக்கப்படும். இரு தரப்பினருக்கும் சுமுகமான தீர்வு காண்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். அந்த முயற்சி தோல்வியுற்றால் வாரியத்தின் வழிகாட்டுதலின் பேரில் முறைப்படி, சொத்துகள் விற்கப்பட்டு, அந்தத் தொகையைக் கொண்டு கடன் கொடுத்தவர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படும்.
முதலில், திவால் நடவக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுத் தொகை எடுத்துக் கொள்ளப்படும். இரண்டாவதாக, செக்யூர்டு கிரெடிட்டார்கள் (Secured Creditor) எனப்படும் வங்கிகளுக்கும், நிறுவனத்தின் ஊழியர்கள், அலுவலர்கள் முதலானோரின் கடந்த 12 மாத சம்பள பாக்கியும் வழங்கப்படும். மூன்றவதாக, முன்னாள் ஊழியர்கள், அலுவலர்களின், திவால் அறிவிப்புக்கு முந்தைய, 12 மாதங்களுக்கான சம்பள பாக்கி வழங்கப்படும்.
நான்காவதாக, இதர கடன் வழங்கியவர்களின் (unsecured creditors) கடன் பாக்கி தரப்படும். ஐந்தாவதாக, மத்திய, மாநில அரசுகளின் வரிகள் செலுத்தப்படும். ஆறாவதாக, முன்னாள் ஊழியர்களுக்கு ஏற்கெனவே விட்டுப்போன தொகை ஏதேனும் இருந்தால் (அதாவது 12 மாதங்களுக்கு முந்தைய பாக்கி இருந்தால்) அது பட்டுவாடா செய்யப்படும்.
இதை நீர்வீழ்ச்சி நியதி (Waterfall Concept) என்கிறார்கள். அதாவது,மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிட்டால், கடை மடைக்கு வருவதற்குள் நீர் வற்றாமல் இருக்கும்பட்சத்தில் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும் அல்லவா? அதுபோல், மேற்கூறிய வரிசைக்கிரமத்தில் பணம் வழங்கப்படும்.
மேற்கூறிய விதிமுறை விஜய் மல்லையாவுக்குப் பொருந்துமா என்ற கேள்வி எழும். ஒன்று, இது தற்போது மசோதா வடிவில் உள்ளது; சட்டமாகவில்லை. சட்டமான பிறகு, புதிய சட்டப் பிரிவுகளின்படி, புதிய திவால் சட்டத்தைப் பயன்படுத்தி King Fisher Airlines மீது திவால் நடவடிக்கை மேற்கொண்டு வங்கிகளுக்குச் சேர வேண்டிய பணத்தை வசூல் செய்யலாம்.
அதேசமயம், இப்போது கடன் வசூல் தீர்ப்பாயங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அந்த வழக்குகளையெல்லாம் அந்தந்த DRT-களில் எந்தெந்த சட்டங்களின் பிரிவுகள்படி வழக்குத் தொடரப்பட்டுள்ளனவோ, அதன்படி வழக்குகளைத் தொடர்ந்து நடத்துவது தான் சரியாக இருக்கும் என்பது சட்ட வல்லுனர்களின் கருத்து.
அதேநேரம், மல்லையாவின் மீதான சொந்த உத்தரவாதப் பத்திரத்தின் (Personal Gurantee) மீது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்துவதற்குப் புதிய சட்டத்தில் இடம் இருக்கிறது.
தனி நபர்கள், பங்குதாரர் நிறுவனங்களின் மீதான திவால் நடவடிக்கைக்கு தற்போதுள்ள கடன் வசூல் தீர்ப்பாயம் மற்றும் கடன் வசூல் மேல்முறையீடு தீர்ப்பாயம் பொருந்தும்.
சில மாவட்டங்களில் DRT செயல்படாத பட்சத்தில் சிறப்பு அமர்வுகள் இடம் பெறும். அதாவது மாவட்டந்தோறும் தீர்ப்பாய வசதி இருக்கும். நலிந்த பிரிவினருக்கு புதிய திவால் சட்டம் நிவாரணம் அளிக்கிறதா? நிச்சயமாக அளிக்கிறது.
உதாரணமாக, ஒரு எளிய விவசாயிக்கு கடன் தொகை ரூ.35,000-க்குள் இருக்கிறது. அவரது ஆண்டு வருமானம் ரூ.60,000 மட்டுமே. சொத்து மதிப்பு ரூ.20,000-க்குள் உள்ளது; சொந்தமாக வீடு இல்லை. அப்படி என்றால், இவருக்கு நிச்சயமாக நிவாரணம் உண்டு.
அவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவருக்கு கடன் தொல்லையிலிருந்து உடனடி விடுதலை கிடைக்கும். எனவேதான், இத் திட்டத்திற்கு Fresh Start Process என்று பெயர். சிலருக்கு, சில சூழ்நிலைகளில், தங்கள் கடனைத் திரும்பச் செலுத்த இயலாது என்கிற யதார்த்தம் புதிய சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல; விவசாயியின் வாழ்வாதாரமான, ஏர் கலப்பை, ஏர் உழும் மாடுகள், மாட்டு வண்டிகள் ஆகியவற்றையும் ஜப்தி செய்திட முடியாது. விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் சூழலில் இந்த சட்டம் வரவேற்கத்தக்க ஒன்று.
வணிகக்கூட்டாண்மை நிறுவனங்கள், லிமிடெட் கம்பெனிகள், பங்குதாரர் நிறுவனங்கள், சிறு தொழில்கள், தனி நபர்கள், நலிந்தோர் என அனைவரையும் உள்ளடக்கியதாக புதிய திவால் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு எதிர்பார்க்கும் நன்மைகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...