இந்திய ஜனநாயக நாட்டில் மக்கள் எத்தனையோ தேர்தல்களில் எத்தனையோ வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து கவுன்சிலர்களாக, ஊராட்சி மன்றத் தலைவர்களாக, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்களாக, மேயர்களாக, சட்டப் பேரவை, மக்களவை உறுப்பினர்களாக மக்களுக்குச் சேவை செய்திட வாய்ப்புத் தந்துள்ளனர்.
இவர்களில் ஒரு பகுதியினர் தன்னலம் கருதாமல் மக்களின் நலனுக்காகச் சேவை செய்து மக்களால் பெரிதும் போற்றப்பட்டார்கள். இன்னும் ஒரு பகுதியினர் தன்னலமே பெரிது என நினைத்து தாம் எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பதையே மறந்து அரசியலை வியாபாரமாக்கி பெரிய அளவில் பொருளீட்டி பகட்டு வாழ்க்கை வாழ்பவர்கள்.
மற்றொரு பகுதியினர் பதவிகாலத்தில் தனக்கு அரசு வழங்கும் அத்தனை வசதிகளையும் அனுபவித்துவிட்டு ஆக்கபூர்வமான செயல் பாடுகள் எதுவுமின்றித் தங்கள் பதவிக்காலத்தைச் சொகுசாகக் கழித்தவர்கள். இவர்களையெல்லாம் மக்கள் ஊடகங்களின் வாயிலாக நன்கறிவர்.
போட்டியிடும் வேட்பாளர்களில் ஜாதி, மதம் கட்சிகளைக் கடந்து நல்ல வேட்பாளர்களை வாக்காளர்கள் தேர்வு செய்திட வேண்டும். இதற்கு வள்ளுவப் பெருந்தகை நல்வழிகாட்டுகிறார்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
ஒருவரிடமுள்ள நல்ல குணநலன்களையும், அவரிடமுள்ள குற்றம் குறைகளையும் சீர்தூக்கிப்பார்த்து இதில் எது மிகுந்துள்ளதோ அதை வைத்து அவர் எத்தகையவர் என்பதை முடிவு செய் என்கிறார்.
இதனை வாக்காளர்கள் மனத்தில் கொண்டு போட்டியிடும் வேட்பாளர்களில் யார் மிகுந்த நல்ல தன்மைகளைக் கொண்டவர், மக்களுக்காகச் சேவை செய்யும் உள்ளப்பாங்கு உடையவர் என்பதைத் தெரிந்து அவரைத் தேர்ந்தெடுத்தால் அவரால் மக்களுக்குப் பல நன்மைகள் விளையும்.
மேலும் வாக்காளர்களுக்குப் பணமாகவோ, பொருளாகவோ கொடுத்துப் பதவிக்கு வருவோர் நிச்சயம் செலவிட்ட பணத்துக்கும் பல நூறு மடங்கு தன் பதவிக்காலத்தில் பொருள் ஈட்டுவதிலேயே குறியாக இருப்பர் என்பதும் நாம் அறிந்ததுதான். வேட்பாளர்களில் மெத்தப் படித்தவர், குறைவாகப் படித்தவர் என்பதைப் பார்க்கத் தேவையில்லை.
மிகக்குறைவாகப் படித்த எத்தனையோ பேர் அரசியல்களத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட, நேர்மையான முறையில் மக்களுக்காகச் சேவை செய்து மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளார்கள்.
தனது பதவிக்காலத்தில் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் செய்ய வேண்டிய அவசியப் பணிகளைச் செய்தும், இன்னும் ஆற்றவேண்டிய பணிகளுக்காகச் சட்டப் பேரவையில், நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும், எளிதில் தன்னை வந்துப் பார்த்துக் குற்றம் குறைகளைக் கூற வாய்ப்புத் தருபவரும் பதவியிலிருந்தாலும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து மக்களோடு மக்களாக இருந்தவர்களை மக்கள் விரும்பி மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து அனுப்பியதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
இதற்கு மாறாகத் தனது பதவிக்காலத்தில் எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவையும் சுருட்டிக்கொண்டு மறு முறையும் போட்டியிட வாய்ப்புக்கிடைத்தால் சுருட்டிய பணத்தில் ஒரு பகுதியைத் தாராளமாகச் செலவிட்டும், வாக்காளர்களைக் கவரும் வண்ணம் பேசியும், கபட நாடகம் புரிவோரை வாக்காளர்கள் தாம் கண்டறிந்து புறக்கணிக்க வேண்டும்.
மேலும், வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள் அனைவரும் தவறாது வாக்களித்தால் மட்டுமே சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். ஏனெனில், வாக்களிக்காமல் இருந்து விடுபவர்களில் பெரும்பாலோர் கட்சி சார்பற்ற நடுநிலையாளர்கள், அவர்களின் வாக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
எனவே, அவர்கள் நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க அவசியம் வாக்களிக்கத்தான் வேண்டும். இலவசங்கள் தருவதாகச் சொல்லி வாக்குக் கேட்கும் கட்சிகள் எங்கிருந்து இலவசங்களைத் தருகின்றன என்பதை வாக்காளர்கள் நன்கு சிந்திக்க வேண்டும். அனைத்தும் அரசுப் பணம், மக்களிடமிருந்து பல்வேறு வகைகளில் பெறப்பட்டவை என்பதை அறிந்திட வேண்டும்.
மக்களிள் நலத்திட்டங்களுக்கு குறிப்பாகக் குடிதண்ணீர், சுகாதாரம், மருத்துவம், கல்வி, நீர்நிலைகளைப் பெருக்கியும், பராமரித்தும் விவசாயத்தை மேம்பாடடையச் செய்தல் போன்ற அவசியமான திட்டங்களுக்கே அரசுப் பணம் செலவிடப்பட வேண்டும்.
அரசு வருமானத்திற்காகக் கேடுகள் பலதரும் மதுவினை விற்பதும், இலவசங்களை வாரி வழங்குவதன் மூலம் பணத்தைச் செலவிடுவதும் கண்ணை விற்றுச்சித்திரம் வாங்குவதற்கு ஒப்பாகும். மதுவினால் வரும் வருவாயும் தேவையில்லை,
இலவசங்களுக்காகச் செலவிடவும் தேவையில்லை. இவை இரண்டும் உடனே நிறுத்தப்பட வேண்டிவை என்பதை மக்கள் நன்குணர்ந்து வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் அரசும் இதனை நினைவில் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் வாக்களிப்பது என்பது பொறுப்பு மிகுந்த செயலாகும். சீர்தூக்கிச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணமிது. பண பலத்தால் வெற்றி நிச்சயிக்கப்படாமல், வாக்காளர்களின் ஆரோக்கியமான சிந்தனையால் நலம் மிக்க நல்லவர்களைத் தேர்ந்தெடுத்துச் சட்டப் பேரவைக்கு அனுப்பி, அவர்கள் சுயநலமின்றித் தங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்திட வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

