பேரவைத் தேர்தலில் புதிய சாதனை

நாடாளுமன்ற உறுப்பினராக 1962-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 1984 வரை நான் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினராக 1962-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 1984 வரை நான் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறேன். ஆனால், இதற்கு தனிப்பட்ட முறையில் நான் எந்த வகையிலும் தகுதிபெற்றவன் என்று கூற வரவில்லை. எனக்குக் கிடைத்த தேர்தல் வெற்றிகள் அனைத்தும் அறிஞர் அண்ணா தலைமையில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தைத்தான் சாரும்.
 இந்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி என்னுடைய 94-ஆவது வயது துவங்கியிருக்கிறது. தமிழக சட்டப் பேரவையின் அடுத்த தேர்தல் 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான். அப்பொழுது நான் எப்படி இருந்தாலும் இத்தேர்தலில் தமிழக சட்டப் பேரவைக்கு ஏற்பட்டுள்ள பல புதிய வரலாற்று சாதனைகளைக் காண்கிறேன்.
 என்னுடைய வாக்குரிமை சென்னை அண்ணா நகரில் இருந்த காரணத்தினால் வாக்களிக்க இரண்டு நாள்கள் முன்னதாகவே சென்னை சென்றுவிட்டேன். அப்பொழுது என்னைவிட வயது முதிர்ந்தவர்கள் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் தேர்தலில் நின்றதுடன் அதைவிட அதிகமாக அ.தி.மு.க.வின் வெற்றிக்காக இரவும் பகலும் அயராது உழைத்தது கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
 1947 ஆகஸ்டு 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதன் பிறகு இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அப்பொழுது பொதுத் தேர்தல் என்பது நாடாளுமன்றம், மாநில சட்டப் பேரவைகள் இரண்டுக்கும் சேர்த்து நடைபெற்றது.
 அப்பொழுது பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு, இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்துக்கும் சென்று காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரசாரம் செய்தார்.
 இந்தியாவின் பிரதமர் மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் குறிப்பிடப்பட்ட தலைவர்களில் ஒருவராக ஜவாஹர்லால் நேரு விளங்கியதால், காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தது. குறிப்பாக, தமிழக சட்டப் பேரவையில் பின்வரும் வகையில் தேர்தல் முடிவுகள் வந்தன.
 காங்கிரஸ் கட்சி வெற்றி வரலாறு:
 1952 (மொத்த இடங்கள் 375): வெற்றி பெற்ற இடங்கள்:152; 1957 (மொத்த இடங்கள் 205): வெற்றி பெற்ற இடங்கள்:151; 1962 (மொத்த இடங்கள் 206): வெற்றி பெற்ற இடங்கள்:139; 1964-ஆம் ஆண்டு மே மாதத்தில் நேரு மறைந்தார். அதன் பிறகு பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி வாய்ப்பு பலம் சீர் குலைந்தது.
 தமிழ்நாட்டில் 1967 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அண்ணா தலைமையில் இருந்த தி.மு.க. ஏற்படுத்திய கூட்டணியில், ராஜாஜி (சுதந்திரா), காயிதே மில்லத் (முஸ்லிம் லீக்), பி.இராமமூர்த்தி (இடது சாரிகள்) ஆகியவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. முடிவாக, தி.மு.க.விற்கு பெரும்பான்மையாக 137 இடங்களில் வெற்றி கிடைத்தது. 1967-இல் அண்ணா தலைமையில் தி.மு.க.வின் அமைச்சரவை அமைக்கப்பட்டது.
 இந்தத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி என்பது தமிழகத்தில் அறவே அடக்கப்பட்டுவிட்டது.
 தற்போது நடைபெற்ற 2016 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்தார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் (2016, மே 6-ஆம் தேதி) நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் அவருடைய கட்சியளவில் பேசியிருந்தால் கூட பரவாயில்லை. அவர் அந்தக் கூட்டத்தில், "கடந்த சில ஆண்டுகளாக தி.மு.க.-அ.தி.மு.க. இரண்டு திராவிடக் கட்சிகளிடம் சிக்கி தமிழக இளைஞர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது,' என்று சொல்லியிருக்கிறார்.
 இந்தக் குற்றச்சாட்டு தேவையற்றது மட்டுமல்ல, பாரதிய ஐனதா கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டவர்கள் அனைவரும் மகத்தான தோல்வியைக் கண்டுள்ளனர். மேலும், மாநில முதல்வராக வருபவர் என்று ஒருவர் பெயரை பிரமாண்டமாக முன்கூட்டியே வெளியிட்ட கட்சி, ஒரு இடத்தைக் கூடப் பெறமுடியாத ஒரு மகத்தான தோல்வியைப் பெற்றது. கூட்டணி அமைத்தும், அமைக்காமலும் மற்றக் கட்சிகளும் ஓர் இடத்தில்கூட வெற்றி பெறாமல் தோல்வியைக் கண்டுள்ளன.
 பிரதமர் மோடி எந்த இரு திராவிடக் கட்சிகள் பற்றி குற்றம்சாட்டி, மக்களின் ஆதரவைத் திரட்ட முற்பட்டாரோ, அந்தக் குற்றச்சாட்டுகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சி அமைப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
 இந்த சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் ஜெயலலிதா மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். அடுத்தடுத்துச் சென்ற இடங்களெல்லாம் காத்துக்கொண்டிருக்கும் மக்கள்தொகை பெருகிக்கொண்டிருந்தது. அதன் விளைவு: தேர்தல் முடிவில் முதல்வர் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெறுவார் என்ற கருத்தோட்டம் இருந்தது.
 இந்தத் தேர்தலில் மட்டுமல்ல, இதற்கு முன்பு வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் சட்டப் பேரவை ஜனநாயக அமைப்பை பற்றி அவர் சிறப்பாக பேசியிருக்கிறார். குறிப்பாக, 2012 தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா மலரில் ஒரு சிறப்பான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
 அதில் அவர் குறிப்பிட்டதாவது: "நீண்ட நெடிய பாராம்பரியத்தையம், மரபுகளையும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்நாடு சட்டப் பேரவையில், தன்னலமின்றி தமிழக மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, அல்லும் பகலும் அயராது அரும்பணியாற்றிய காமராஐர், ராஜாஜி, அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற எண்ணற்ற தலைவர்களை இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவுகொள்ளவேண்டும்'.
 இதுபோல் அ.தி.மு.க.வை உருவாக்கிய தலைவர்கள், அண்ணா, எம்.ஜி.ஆர். மட்டுமல்ல, மற்ற கட்சித் தலைவர்களையும் மிகவும் மதித்து ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
 தற்பொழுது நடைபெற்ற தேர்தலின் முடிவு, ஜெயலலிதா 6-ஆவது முறையாக முதல்வராக வருவது தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையாகும்.
 
 கட்டுரையாளர்:
 நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com