மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

புகைப்போர் செய்யும் கேடு

சுற்றுச்சூழல் மாசு பெருமளவில் ஏற்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் புகையினால் ஏற்படும் கேடுகளே அதிகம் எனலாம்.

Updated On :27 மே 2016, 8:17 pm

சுற்றுச்சூழல் மாசு பெருமளவில் ஏற்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் புகையினால் ஏற்படும் கேடுகளே அதிகம் எனலாம். ஆலைப்புகை, வாகனப்புகை இன்னும் எத்தனையோ வாயுக்கள் வெளியேற்றம், இதோடு மனிதன் ஊதித் தள்ளும் நச்சுப்புகை வேறு. இவற்றில் மனிதனைப் பெரிதும் பாதிப்பது புகைக்கும் புகையே.
 புகைபிடிக்கும் மனிதனை மட்டுமல்லாமல், அவன் ஊதித் தள்ளும் புகையை சுவாசிக்கும் மனிதர்களையும் அதிகமாகப் பாதிக்கின்றன என்கின்றனர் மருத்துவ அறிஞர்கள்.
 ஆம், வீட்டில் புகைத்தால் வீட்டில் உள்ள சிறுகுழந்தைகள் முதல் வீட்டில் உள்ள அனைவரும் அந்த நச்சுப்புகையைச் சுவாசித்துத்தானே ஆக வேண்டும். பொது இடங்களில் புகைத்தால் சுற்றியுள்ள ஒரு பாவமும் அறியாத குழந்தைகளும், பெரியவர்களும் அந்த நச்சு கலந்து காற்றை சுவாசித்துத்தானே தீர வேண்டும்.
 பொது இடங்களில் புகைபிடிக்கத் தடைச் சட்டம். இதனை எத்தனை பேர் மதித்துப் பின்பற்றுகிறார்கள்?
 பகுத்தறிவுள்ள மனிதன் சட்டங்களை மதித்து நடப்பதுதானே உயர்வு! இல்லையெனில், சட்டப்படி என்ன தண்டனையோ, அதையாவது கொடுக்க வேண்டாமா? இரண்டும் இல்லாத நிலையில் புகைக்கும் பழக்கமே இல்லாத பலரும், குறிப்பாகப் பெண்களும், குழந்தைகளும் பாதிப்புக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது அல்லவா?
 என்னதான் சிகரெட் பெட்டிகளில் புகைப்பதால் ஏற்படும் கேட்டினை அச்சிட்டாலும் அதனை யாரும் பொருள்படுத்துவதாகத் தெரியவில்லை. தொலைக்காட்சிகளில், புகைப்பதால் ஏற்படும் கேட்டினை இன்னும் அதிக அளவில் மக்கள் மனதில் படும்படியாக உணர்த்த வேண்டும்.
 இன்றைக்கும் வேலூர் மாவட்டம் அருகம்பாக்கம் ஊராட்சி, தேவனாம்பட்டு என்ற கிராமத்தில் உள்ள யாரும் மது அருந்துவது, புகையிலை உபயோகிப்பது, பீடி, சிகரெட் புகைப்பது போன்ற பழக்கங்கள் முற்றிலும் இல்லாமல் இருந்து வருகின்றனர்.
 இது தலைமுறை தலைமுறையாகப் பெரியோர்களால் வழிகாட்டப்பட்டு அதனை அப்படியே பின்பற்றிவருவதாக அந்தக் கிராம மக்கள் கூறுகின்றனர். இது போற்றுதலுக்குரிய ஒரு முன்மாதிரி கிராமம் தான்.
 மது, பீடி. சிகரெட்டுக்கு எவ்வளவுதான் கூடுதலாக வரி விதித்து அதன் மூலம் அரசுக்குக் கூடுதலான வருவாய் கிடைத்தாலும், அதற்கும் மேலாக அதனால் ஏற்படும் கேட்டினைப் போக்க அதைவிட கூடுதலாக பணம் செலவிட வேண்டிய நிலை அரசுக்கு ஏற்படுகிறது.
 மதுப் பழக்கமும், புகைப் பழக்கமும் தங்கள் இளம் வயதிலேயே நண்பர்களின் வற்புறுத்தலினால் ஏற்பட்டதாகவே பலரும் கூறுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டே வள்ளுவப் பெருமான் நட்பு, நட்பாராய்தல், கூடா நட்பு, தீ நட்பு என்ற நான்கு அதிகாரங்களைத் தந்து நட்புக்குக் கூடுதலான முக்கியத்துவம் கொடுத்துள்ளார் போலும்.
 சிறந்த நண்பன் என்பவன் தன் நண்பன் தவறு செய்யுமிடத்து அதனை இடித்துரைக்க வேண்டுமே தவிர ஆதரிப்பது அல்ல என்பதைச் சற்றே சிந்திக்க வேண்டும். வீட்டில் தந்தை புகைப்பிடிக்கிறார் என்றால், அதனைக் காணும் பையன் ஒரு நாள் காணாமல் புகைத்துத்தான் பார்ப்போமே என்று தொடங்கிப் பின்னாளில் அதனையே பழக்கமாக்கியவர்கள் பலர் உண்டு.
 உலகிலேயே நல்ல பண்புகளும்,பழக்க வழக்கங்களும் உடைய பெண்கள் நம் நாட்டுப் பெண்களாகத்தான் இருக்கமுடியும். ஆம். மேலைநாட்டில் புகைக்கும் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் பெண்கள் பலரிடம் இருப்பதாகவே அறிகிறோம். அந்த வகையில் நம் நாட்டுப் பெண்கள் பெருமைக்குரியவர்கள்தாம்.
 பெண்கள் நினைத்தால் மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ள தன் வீட்டு ஆண்களை, உறவினர்களை நிச்சயமாக அன்பாகச் சொல்லி மாற்றிடமுடியும்.
 இந்தப் பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் கூட தங்கள் பெண் குழந்தைகளுக்கு வரன் பார்க்கும் போது பையன் மதுவும், புகைப்பழக்கமும் இல்லாத ஒழுக்கமுள்ளவனாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். அவர்களது எண்ணம் முற்றிலும் சரியே. ஏனெனில், அதன் கேட்டினை அவர்கள் நன்குணர்ந்தவர்கள் அல்லவா?
 இளம் பெண்கள் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கும் முன் வெறும் புறத்தோற்றத்தையும், அவர்கள் பெறும் ஊதியத்தையும், அந்தஸ்தையும் மட்டுமே பார்க்காமல் அவரது பழக்கவழக்கங்கள், அவரது நட்புறவு எத்தகையது? அவரது உடல், உள்ள ஆரோக்கியம் எப்படி என்பதைக் கண்டு, கேட்டுத்தெரிந்து கொண்டே பின்பே முடிவு எடுத்தல் வருமுன் காக்கும் புத்திசாலித்தனமாகும்.
 நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஊரில் மிகச் சிலரிடமே புகைக்கும் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்ததாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். அவர்களைக் கூட சமுதாயம் குற்றவாளிகளைப் போலவே பாவித்து வந்தது. வீடுகளிலும் அவர்களுக்கு அவ்வப்போது கண்டனக்குரல் எழுப்பப்பட்டது.
 ஆனால், இன்றைய நிலையோ வேறு! விலங்குகள் கூடத் தனக்கு உணவு அல்லாதவற்றை எந்த நிலையிலும் உண்பதே கிடையாது. ஏன் நுகர்ந்து கூடப்பார்ப்பதில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் இதனை நன்கு உணர்ந்து மதுவும், புகையும், புகையிலையும் மனிதனுக்கு உணவல்ல; மனதையும், உடலையும், உயிரையும் வருத்தி அழிக்கக் கூடியது என்பதை நன்கு உணர்தல் வேண்டும்.
 புகைப்பவர் தனக்கும், பிறருக்கும் ஆரோக்கியக் கேட்டினை உண்டுபண்ணும் புகையைத் தவிர்த்தல் நல்லது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.