மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஊக்குவிப்பு தேவை

அண்மைகாலமாக வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொடர்பு சாதனங்கள், அறிதிறன்பேசி

Updated On :19 ஆகஸ்ட் 2016, 10:54 am IST

அண்மைகாலமாக வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொடர்பு சாதனங்கள், அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்) தொழில்நுட்பம், தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளும் செயலிகள் இவற்றின் காரணமாக முன் எப்போதையும்விட இம்முறை ஒலிம்பிக் போட்டி முடிவுகளை தெரிந்துகொள்வதில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியா 1900-இல் முதன்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றது. இப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றவர் நார்மன் கில்பேர்ட் பிரிட்சார்டு. இவர் மூலம் தடகளப் போட்டிகளில் இரு வெள்ளிப் பதக்கம் இந்தியாவுக்கு (முதன்முறையாக) கிடைத்தது. ஆனால், இந்தியா அதிகாரபூர்வமாக ஒலிம்பிக்கில் பங்கேற்றது 1920-இல்தான்.

அதன் பிறகு நடந்த 23 போட்டிகளில் இதுவரை இந்திய அணி ஹாக்கியில் எட்டு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது. மல்யுத்தத்தில் ஒரு வெள்ளி, மூன்று வெண்கலம், டென்னிஸ், பளு தூக்குதலில் தலா ஒரு வெண்கலம், துப்பாக்கிச் சுடுதலில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம், குத்துச் சண்டையில் இரண்டு வெண்கலம், பாட்மிட்டனின் ஒரு வெண்கலம் ஆகியவையே நம் நாட்டின் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இம்முறை இந்தியா 118 வீரர்கள், வீராங்கனைகளை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பியதில், மல்யுத்தத்தில் வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கத்தை வென்றதாலும் பாட்மிண்டனில் வீராங்கனை பி.வி. சிந்து பக்கத்தை உறுதி செய்ததாலும் நாடே உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறது.

அளப்பரிய மனித வளத்தை பெற்ற இந்தியா, ரியோ ஒலிம்பிக்கில் பதக்கமே பெறாமல் போய்விடுமோ என்ற ஆதங்கம் காரணமாக நம்மில் பலர் கொதித்துப் போய் முகநூல், கட்செவிஅஞ்சல் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற தளங்களில் கேலியும், கிண்டலும் நிறைந்த வாசகங்களை பதிவிட்டு வந்தனர்.

அதற்கும் ஒரு படி மேலே, தமிழகத்தின் பல பகுதிகளில் எங்கோ வெகுதொலைவில் மரத்தில் உள்ள குருவியையும், காக்கையும் குறிபார்த்து சுடும் குறவர்களின் திறனையும், சாலையோரத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக பல சாகசங்களை செய்து காட்டும் கழை கூத்தாடிகள், சர்க்கஸ் தொழிலாளர்களின் திறமைகளையும் ஏன் ஊக்குவிக்கக் கூடாது என்ற கேள்வி கணைகளும் எழுப்பப்பட்டன.

உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான இளைய சமுதாயத்தைக் கொண்ட நாடு இந்தியா. நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் 10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள்.

இந்த ஆற்றலை ஏன் இதுவரை நாம் சரிவர பயன்படுத்தவில்லை? இப்போதாவது அரசியல், பொருளாதார தடைகளில் இருந்து விளையாட்டு வீரர்களை மீட்டு உலகின் முன் நிறுத்த வேண்டும்.

ஒரு நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. உலக அளவில் விளையாட்டில் திறமையை வெளிக்காட்டுவதும் அவசியமாகிறது.

இன்றைக்கு உலக வரைபடத்தில் சிறிய இடத்தை பிடித்துள்ள நாடுகள்கூட விளையாட்டில் பரிணமிக்கும்போது, அபரிமித மனித ஆற்றலை பெற்றுள்ள இந்தியா சாதிப்பது ஒன்றும் முடியாத விஷயமல்ல.

கல்விக்கு காட்டும் அதே அக்கறையை விளையாட்டிற்கும் காட்ட வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தாலும், இன்றைய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர் கல்விக்கு மட்டுமே அதிக முக்கியத்துவதை அளிப்பதற்குக் காரணம், விளையாட்டுக்கு இன்னமும் போதிய அங்கீகாரமும், சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்பதுதான்.

போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை நிரூபிக்க விரும்பும் இளம் வீரர்கள் தங்கள் செலவில் பங்கேற்க வேண்டிய நிலை, பள்ளி, கல்லூரி அளவில் நீடிக்கிறது. அதேபோல் அரசின் விளையாட்டுத் துறை தொடர்பான சலுகைகள் இளம் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சென்றடையவில்லை.

பொருளாதார வசதி மிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த வீரர்களுக்கு கிடைப்பதில்லை என்ற நிலையை இனியாவது மாற்ற வேண்டும்.

விளையாட்டில் திறமையுடைவர்கள் எங்கிருந்தாலும், தேடிப் பிடித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அரசு முன் வர வேண்டும்.

பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால்தான் உயர் படிப்புகளுக்கு செல்ல முடியும் என்ற நிலையை மாற்றும் வகையிலான சலுகைகள், முன்னுரிமைகளை விளையாட்டு திறனுடைய இளைஞர்களுக்கு அளிக்க வேண்டும்.

பொருளாதார சிக்கலில் படிப்பில் பின்தங்கி தொடர்ந்து கல்வி பயில முடியாமல் போன விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்துக்கான வழிமுறைகளைக் காண வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவோருக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

விளையாட்டில் ஆர்வமுள்ள எவரும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வசதியாக அவர்களுக்கான பயணப் படிகளை அரசு வழங்க வேண்டும்.

சர்வதேச சந்தையில் களமிறங்கியுள்ள இந்திய நிறுவனங்களும், விளையாட்டு வீரர்களில் திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்களை பொருளாதார ரீதியாகவும், சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதியுடைவர்களாகவும் உருவாக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஊக்குவிப்புப் பணிகளில் ஈடுபடும் இந்திய நிறுவனங்களுக்கு சில சிறப்பு சலுகைகளையும் அரசு வழங்குவதில் தவறில்லை.

மத்திய, மாநில அரசுகள் அக்கறையோடு விளையாட்டுத் துறையில் தொலைநோக்கு பார்வை செலுத்துவதன் மூலம் நம் நாட்டின் உசேன் போல்டுகளையும், மைக்கேல் பெல்ப்ஸுகளையும் நிச்சயமாக கண்டு பிடித்து ஒலிம்பிக் களத்தில் இறக்கி வெற்றி காண முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.