மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்

நாட்டின் பொருளாதாரத்தை சீரழிப்பதிலும், எல்லையோர பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதிலும், விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண மக்கள் பாதிப்படைவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் கருப்புப் பணத்தை

Updated On :25 நவம்பர் 2016, 1:02 am IST

நாட்டின் பொருளாதாரத்தை சீரழிப்பதிலும், எல்லையோர பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதிலும், விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண மக்கள் பாதிப்படைவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு இன்றைக்கு மறைமுகமாக அரசியல் கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவிப்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்ததும் வேண்டா வெறுப்பாக பாராட்டத் தொடங்கியவர்கள், இன்றைக்கு சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி அரசின் முயற்சியை பலவீனப்படுத்த தயாராகிவிட்டனர்.
பிரதமரின் அதிரடி அறிவிப்பால், சாதாரண மக்கள் ஒரு வாரகாலமாக பாதிப்படைந்தது உண்மைதான். ஆனால் அரசியல் கட்சிகள் கூறுவதுபோல் ஒன்றும் பெரிய பாதிப்புகள் இல்லை என்பதை சாதாரண குடிமக்கள் பலரும் அறிவர்.500, 1000 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு இருந்தாலும் அவற்றை வங்கிக் கணக்கில் போடலாம் என்றும், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள், கைவசம் வேறு தொகை இல்லாத நிலையில், பழைய நோட்டுகளை நாள் ஒன்றுக்கு ரூ.2000-த்தை எந்த வங்கிக் கிளையிலும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்தது.
வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் எண்ணிக்கை மிக சொற்பமே. அப்படி வங்கிக் கணக்கு இல்லாத சாதாரண மக்கள் அதிகபட்சம் கைவசம் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் வைத்திருக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை.
புதிதாக சேமிப்புக் கணக்குத் தொடங்கி அதில் செலுத்துவதற்கும் தடையில்லை. இணையவழி வங்கிச் சேவையில் பணமாற்றத்துக்கும் எவ்வித தடையும் இல்லை.வங்கியில் உள்ள பணத்தை தேவைக்கு எடுப்பதில்தான் இப்போதைய பிரச்னை. புதிய 500 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்.கள் மூலம் விநியோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் சாதாரண, நடுத்தர குடிமக்கள் பாதிப்பில் இருந்து விரைவாக விடுபடும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
நடுத்தர மக்கள்தான் வங்கிகளில் வரிசையில் நிற்கிறார்கள். கருப்புப் பண முதலைகள் வங்கிகளில் நிற்கவில்லை என்ற குற்றச்சாட்டும் ஏற்புடையது அல்ல. அவர்கள் கருப்புப் பணத்தை ஒட்டுமொத்தமாக எப்படி மாற்றுவது என்பதில் பல இரவுகள் தூக்கமின்றி, பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்கள்.
பணத்தாசையில் இவர்களுக்கு ஒருசில வங்கி அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ஹவாலா போன்ற மறைமுக பணச்சுழற்சியில் ஈடுபடும் சமூக விரோதிகள் உதவி வருவதும் உண்மை.
சில இடங்களில் அரசு நிர்வாகங்களில், அரசியல்வாதிகளின் நிர்பந்தம் காரணமாக விருப்பமின்றி ஊழியர்களும், அதிகாரிகளும் கருப்புப் பணத்தை மாற்றித் தரும் முறைகேட்டில் ஈடுபட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருசில தனியார் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களும் அடங்குவர்.
கோடிக்கணக்கில் பதுக்கி வைத்துள்ள சில அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ தங்களிடம் உள்ள கருப்புப் பணத்தை மாற்ற முடியாத சூழலில்தான் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கின்றனர். அவர்கள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தி கூக்குரலிடுகின்றனர் என்பது யாரும் அறியாததல்ல.
இன்றைக்கு மக்களவை, மாநிலங்களவையை முடக்குவதில் அரசியல்கட்சிகளும், அவற்றின் உறுப்பினர்களும் ஆர்வம் காட்டுவதில் இருந்தே உள்ளங்கை நெல்லிக்கனி போல சில விஷயங்களை பாமரர் கூட அறிந்துகொள்ள முடிகிறது.
என்னதான் குறுக்குவழியைக் கடைப்பிடித்தாலும் அதிகபட்சம் 10 சதவீத கருப்புப் பணத்தை மட்டுமே இன்றைய சூழலில் மாற்றக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
பதுக்கியுள்ள பணத்தை வங்கியில்தான் செலுத்த முடியும். வங்கியில் செலுத்தாமல் ரொக்கமாக மாற்ற சில குறுக்குவழிகளைக் கையாள்வதில் பலரது ஆதரவு தேவைப்படுகிறது. அவர்களில் ஒருவர் காட்டிக் கொடுத்தாலும், பதுக்கல் பேர்வழிகள் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் அபாயம் உள்ளது.
நிலமாகவோ, இடமாகவோ வாங்குவதற்கான வாய்ப்புகள் அடைபட்டுவிட்டன. இந்நிலையில், கருப்புப் பணத்தை தங்கமாக மாற்றி வைத்துக் கொள்ள பலர் முனைப்புக் காட்டி வருவதுதான் இன்றைக்கு நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அதிலும் எந்நேரமும், அவர்களை அடுத்த ஆபத்து சூழ உள்ளது என்பதும் திண்ணம்.
ஹவாலா மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் பலரும் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர். அவர்களில் சிலர் ஆபத்தை உணராமல் இன்னமும் கருப்புப் பண முதலைகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக செய்திகள் பரப்பி வருகின்றனர். அதற்கும் அரசு விரைவில் கடிவாளம் போடும்.
கருப்புப் பணத்தை பெரும் சொத்தாக சேமித்து வைத்தவர்களுக்கு வேறு வாய்ப்புகள் இன்றைக்கு இல்லாத நிலையில், ரூபாய் ஒரு கோடிக்கு வரி, 200 சதவீதம் அபராதம் என்ற அரசின் அதிரடியால் அவர்கள் கைக்கு ரூ.15.25 லட்சம் மட்டுமே வரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு, வெளி உலகில் தனிப்பட்ட மரியாதையும் குறைந்துவிடும் என்ற அச்சமும் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் வெளிப்பாடாகவே இன்றைக்கு அலறலும், அச்சுறுத்தலும், ஆர்ப்பாட்டங்களும் அரங்கேறி வருகின்றன.
காகிதங்களாக மாறியுள்ள கருப்புப் பணத்தை நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு பயன்படுத்தும் வகையில், கருப்புப் பண பதுக்கல்காரர்களுக்கு கடைசி வாய்ப்பாக, அரசின் குறிப்பிட்ட கணக்கில் ஒரே தடவையில் பணத்தை செலுத்த வாய்ப்பு அளிப்பதோடு, அவர்கள் யார் என்ற ரகசியம் பாதுகாக்கப்படும் என்ற உறுதிமொழியை அரசு அளிக்கலாம்.
இதன் மூலம் திரட்டப்படும் பணத்தை நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்துவதோடு, நாட்டை அச்சுறுத்திய கருப்புப் பணம் எவ்வளவு என்பதை கணிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.